வரவேற்புக்கு நன்றி கூறி அண்ணா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
"இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் மலேசியாவுக்கு வருவேன் - தமிழகத்து அரசியல் அதற்கு இடம் கொடுத்தால்!
கடந்த இரண்டு வாரங்களாக, இந்த நாட்டிலே நான் கண்ட கட்சிகளும், தமிழ் உள்ளங்களின் அன்பும் என்னை நெக்குருக வைத்துவிட்டன! மனத்தில் ஏக்கத்துடனேயே உங்கள் பொன்னாட்டைவிட்டு இன்னும் இரண்டு நாட்களில் பிரிகிறேன்.
உங்களுக்கு நல்லெண்ணத்தைக் கொண்டு வந்தேன்; ஆனால் நான் வழங்கிய நல்லெண்ணத்தைவிட உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நல்லெண்ணம்தான் அதிகம்.
மலேசியத் தமிழ் மக்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். உங்களைப்பற்றியே நான் தாயகம் திரும்பியதும் வாரக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பேன்.
தமிழகத்தில் உள்ளவர்கள் என்னிடத்தில் வந்து 'அண்ணா, நாங்கள்தானே உங்களை நேசித்துப் போற்றுகிறோம்' என்று கூறுவார்களாயின், அவர்களிடம், மலேசியாவுக்குப் போய் பாருங்கள் - அங்குள்ள தமிழர்களின் அன்பையும், வாஞ்சையையும்' என்று கூறுவேன்.
எப்படி நான் மலேசியத் தமிழர்களுக்கு நன்றி கூறுவேன்? அவர்களின் அன்புக்கு ஈடாக நான் எனது நல்லெண்ணத்தைத் தவிர வேறு எதைக் கொடுப்பேன்?"
மாற்றுக் குறையாத மலேசியத் தமிழர்
துறைமுகப் பகுதித் தமிழர்களின் சார்பில் தங்கக் கப்பல் பரிசாக அளிக்கப்பட்டது பற்றி அண்ணா குறிப்பிட்டுப் பேசியதாவது:
"மலேசியத் தங்கம் மாற்றுக் குறையாதது. தமிழ் நாட்டில் தங்கத்தின் மாற்றைக் கூட 14 காரட்டாக்கிவிட்டார்கள் (மொரார்ஜி தேசாய் கொண்டு வந்த தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத்தான் அண்ணா இவ்வாறு குறிப்பிட்டார்).
அதேபோல் மலேசியத் தமிழர்களும், தமிழன்னை பெற்றெடுத்த மாற்றுக் குறையாது - தரத்தோடு மிளிர்கின்றனர்! மலேசியாவில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தது ஒர் இன்பக் கனவு போன்றிருக்கிறது; இதைவிட்டு உங்களையெல்லாம் விட்டுப் பிரிய நினைக்கும்போது ஏக்கம் பீரிடுகிறது!
குழந்தையை அரவணைத்து முத்தமிட்டு, ஆலையை நோக்கி, வேலைக்குப் புறப்படும் அன்னையைப் போன்று - அவள் தயங்கித் தயங்கிச் செல்வதைப் போல் - நான் மலேசியத் தமிழர்களை விட்டுப் பிரிகிறேன்.
நல்லெண்ணத்தைப் பெற்றுத் திரும்புகிறேன்
தங்கமும் வைரமும் ஒரு காலத்தில் மதிப்பிழந்துவிடும்! ஒரு நாட்டின் ஆடை மற்ற நாட்டில் விரும்பப்படுவதில்லை. ஒரு நாட்டின் இசை மற்ற நாட்டில் எடுபடுவதில்லை.
ஆனால், அமெரிக்கா முதல் அலாஸ்கா வரை - ஆஸ்திரேலியா முதல் மலேசியா வரை - மலேசியா முதல் தமிழகம் வரை நல்லெண்ணம் வரவேற்கப்படுகிறது. அந்த நல்லேண்ணத்தை உங்களுக்கு வழங்கி, நீங்கள் வழங்கிய நல்லெண்ணத்தை ஏற்றுக் கொண்டு இம்மலேசியப் பொன்னாட்டை விட்டுப் புறப்படுகிறேன்.
உங்களிடமிருக்கும் 100 வெள்ளியில் 50 வெள்ளி என்னிடம் தந்தால் உங்களிடமிருப்பதில் 50 வெள்ளி குறையும்; ஆனால் உங்களிடமிருக்கும் நல்லெண்ணத்தில் ஒரு பிடி எனக்கு வழங்குவதானாலும், நான் வழங்கும் ஒரு பிடி நல்லெண்ணத்தை நீங்கள் பெறுவதானாலும் யாருக்கும் இழப்பு ஏற்படுவதில்லை."
திருநாள் பற்றி அண்ணா
இக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றுகையில் 'திருநாள்' பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டதாவது:
"அறுவடைத் திருநாளாக - உழைப்பின் பயனை உணர்த்தும் திருநாளாக இருக்கும் பொங்கல் திருநாள், தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான தமிழர் திருநாள் ஆகும்.
இந்த நாட்டில் இத்திருநாள், ஒரு பிரச்சினை ஆகியிருப்பதுதான் பெரும் பிரச்சினையாகும். எங்கள் நாட்டில் இந்தப் பிரச்சினை கிடையாது.
ஒன்றை உங்களுக்குச் சொல்லிக் கொள்வேன் - திருநாள் நல்லது - அது எந்தத் திருநாளாக இருந்தாலும்!
திருநாள் என்றால் என்ன? பொருள் புரியாமல் பயன்படுத்தப்படும் பல சொற்களில் ஒன்றாகத்
'திருநாள்' இருக்கிறது. 'திருநாள்' என்பது மகிழ்ச்சி தருவது. 'அவருக்கென்ன - நாளெல்லாம் திருநாள்' என்று கஷ்டப்படுகிறவன் சொல்லக் கேட்கிறோம்; இதிலிருந்து என்ன தெரிகிறது? மகிழ்ச்சிப் பயனைத் தருவதுதான் திருநாள்! மகிழ்ச்சி வேண்டாம் என்று யாரும் சொல்வதற்கில்லை!
திருநாளைக் காரணமாகக் காட்டி, 'என் காலில் விழு; ஆறு பேருக்கு சோறு போடு' என்றெல்லாம் கூறுவது திருநாள் ஆகாது! அது பண்டிகை!
தீபாவளிப் பண்டிகை - கார்த்திகைப் பண்டிகை - நவராத்திரிப் பண்டிகை - சிவராத்திரிப் பண்டிகை - இப்படிப் பல பண்டிகைகள் இருக்கின்றன! 'இப்படி இப்படி நடந்தால் இது, இது கிடைக்கும்' என்று கூறுபவை இந்தப் பண்டிகை!
பழந்தமிழர்கள் அறத்தினை வியாபாரம் செய்யவில்லை! 'இங்கே கொடுத்தால் அங்கே கிடைக்கும்' என்ற முறையில் நடந்து கொள்ளவில்லை.
'இம்மையில் செய்தது மறுமைக்க ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்'
என்பது பழந்தமிழர் போக்கைக் காட்டும் பாடலாகும். எங்கோ, எதுவோ கிடைப்பதற்காக இங்கே, 'இதனைக் கொடுப்போம்' என்ற நிலை அன்றில்லை. 'இதைச் செய்தோம் - இது கிடைத்தது' என்று தெரிய வேண்டும். இதுதான் திருநாளாகும். பொங்கல் திருநாளையே தமிழர் திருநாளாக நாங்கள் கொண்டாடி வருகிறோம்.
முதலில் பொங்கல் திருநாள் தமிழ் மக்களுக்குப் பொதுவான திருநாள் என்று பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் கா.நமசிவாய முதலியார் குறிப்பிட்டார். அவர் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.
தமிழர் திருநாள்
கொள்கையிலே மறுமலர்ச்சி கண்ட தி.மு.க. தோழர்கள், இதனை ஒன்றுபடும் திருநாளாகக் கொண்டனர்! இந்தப் பொங்கள் திருநாள் இப்போது தமிழ்த் திருநாளாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது; எல்லா மதத்தினரும் இதில் கலந்து கொள்கின்றனர்.
'இது முஸ்லிம் திருநாளல்ல' என்று கூறப்படுகிறது. அவர்கள் மதத்தால் - மார்க்கத்தால் இஸ்லாமியர் என்றாலும் பொழியால் தமிழர்கள்! இன்னும் சொல்லப்போனால், தமிழகத்திலுள்ள திருநெல்வேலிச் சீமையில் முஸ்லிம்களும் மற்றவர்களும் 'மாமன் மைத்துனன்' முறையில் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வதும் உண்டு! அந்த அளவிற்கு நெருங்கிய பிணைப்பு!
வட இந்தியாவில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டபோது கூட, தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான நல்லுறவுகளுக்குக் குந்தகம் ஏற்படவில்லை. காரணம் முஸ்லிம்கள் மார்க்கத்தால் இஸ்லாமியர் - மொழியால் தமிழர் - கலாசாரத்தால் திராவிடர். அதுபோலவே கிறிஸ்துவர்களும். உதாரணத்திற்கு ஒன்று - கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகத் தனிநாயகம் அடிகளார் இருக்கிறார். இவர் மதத்தால் கிறிஸ்தவர்; தனித்தமிழ்ப் பெயர் கொண்ட இவர் மொழியால் தமிழர்!
இவரிடம் 'நீங்கள் எந்த இனத்தவர்?' என்றால் 'தமிழர்' என்பார். 'எந்த ஊர்?' என்றால் 'யாழ்ப்பாணம்' என்பார். 'எந்த மதத்தவர்?' என்றால் 'கிறுஸ்தவர்' என்பார். இப்படி மொழியால் தமிழர்களாக இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் 'நாங்கள் தமிழர் அல்லர்' என்று கருதிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் கூட, இப்போது 'நாங்கள் தமிழர்கள் அல்லவா?' என்று கேட்பதைப் பார்க்கிறோம்!.
வியாபாரம் செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றன. தமிழையும் வியாபாரப் பொருள் ஆக்கிவிடக் கூடாது.
பொங்கல் திருநாள் என்பது அறுவடைத் திருநாள்; தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பாமொழி! ஏனெனில் அப்போதுதான் அறுவடை ஆன பொருளை விற்றுப் பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் பணமும் பொருளும் இருக்கும்.
கழனி திருத்தி, விதை தெளித்து, நாற்று நட்டு, பயிர் வளர்த்து, களை களைந்து, கதிர் முற்றியதும் அறுத்துக் களம் சேர்த்த - மணிகள் குவித்து, புடைத்து - மூட்டை கட்டி, விற்றுப் பணமாக்குகிறான் உழவன்!
அந்தப் பணத்தோடு அங்காடிக் கடைக்குச் செல்லும் அவன், மனைவிக்குச் சேலையும், பழங்களும், வாசனைப் பொருள்களும் வாங்கிக் கொண்டு வீடு வருகிறான் அதாவது அந்த உழைப்பாளி கடைகளில் செய்த அறுவடையுடன் வீடு வருகிறான் அதுதான் பொங்கல்!
உழைப்பின் பயனை உணர்த்துகிற இந்தத் திருநாள் பல நாடுகளில் பல வகைகளில் பல முறைகளில் கொண்டாடப் படுகின்றது.
நல்ல நிலம் பார்த்து - தக்க காலமறிந்து, பதமாக - பக்குவமாக, விதைதூவி, பயிர் விளைவிக்கும் முயற்சியிலே ஆணுடன் பெண்ணும் பங்கு கொள்கிறாள். இருவரின் உழைப்பின் பயனும் களஞ்சியம் போய்ச் சேருகிறது. ஆகவே, பெண்ணுக்குள்ள பங்கையும் புலப்படுத்துவது இந்தத் திருநாள்!
ஆகவே, இத்திருநாள் கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ முரணானது அல்ல!"
அண்ணாவின் ஆசை!
அறிஞர் அண்ணா அவர்கள் சிங்கப்பூர் வந்து சேர்ந்த அன்று ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பெற்ற அன்னைக்கு, அண்ணாவிடம் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை!
தேசிய அரங்கில் சிறப்புக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அந்தத் தமிழ்த்தாய், தம் பச்சிளம் சிசுவைக் கரத்தில் ஏந்தியவாறு மேடையில் ஏறி விட்டார்!
அச்சிசுவை அன்புடன் பெற்றுக் கொண்ட அண்ணா அந்த அம்மையாரின் மனங்குளிர 'நல்லதம்பி' எனப் பெயர் சூட்டினார்.
அண்ணா உள்ளத்தைக் கொள்ளை கொண்ட எழிற்காட்சி!
சிங்கப்பூர் தேசிய அரங்கில் தமிழர்கள் வெள்ளம் போல் கூடியிருந்த காட்சியைக் கண்ட அண்ணா, தமது பேருரையில் அதைப் பற்றி வர்ணித்தார்:
எழில் மிக்க இந்த அரங்கு தம்மை 2000 ஆண்டுகளுக்கு முத்திய சிரேக்கத்துக்கே கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.
அங்குதான் இத்தகைய அரங்கு அமைத்து, இயல் - இசை - கூத்து நடத்தியதாகத் தாம் வரலாறு படித்ததாகவும், அத்தகைய ஒரு காட்சியை தேசிய அரங்குக் கூட்டம் தம் முன் கொணர்வதாகவும் அறிஞர் அண்ணா வர்ணித்தார்.
"அரங்குக்கு எதிரில் மலை! பச்சைப் பசேலென இயற்கைப் பின்னணி! மலையிலிருந்து ஓடிவரும் வெள்ளருவி போன்ற அலை அலையாக நற்றமிழர் வரிசை!
அவர்களின் வெண்ணிற ஆடை அருவியில் கொப்பளிக்கும் நுரையை எனக்கு நினைவூட்டி, கற்பனை உலகுக்கே இட்டுச் செல்கிறது! இக்காட்சி என் உள்ளத்தை விட்டு என்றும் நீங்காது!" என்றார் அண்ணா.