"சமூகத்தில் ஊழல்களை எடுத்துக் காட்டி, சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தும் நாடகங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது"என்று அறிஞர் அண்ணா அவர்கள் மலேசிய வானொலிக்கு, பினாங்கு நிலையத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
"இந்தியாவில் புரட்சி வசனங்களைக் கொண்ட நாடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.
"திறமை வாய்ந்த எழுத்தாளர்களால் எழுதப்படும் நாடகங்கள், இந்தியாவில் எல்லா மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இதில் தமிழ் எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கின்றனர்" என்றார் அண்ணா.
தமது இளம் வயதில் தாம் பல நாடகங்களில் நடித்திருப்பதாகவும் நடிப்பின்போது உண்மையாக ஏற்கும் பாத்திரமாகவே மாறி நடித்ததாகவும் கூறிய அண்ணா, இப்போது 24 மணி நேரமும் அரசியலில் மூழ்கி இருப்பதால் நாடகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்றார்.
எதிர்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றிக் கேட்டபோது, 'உலகிலேயே பல இலக்கியங்களைப் பெற்றுள்ள பழமையான - செல்வாக்கு மிகுந்த மொழி தமிழ்; எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி மிகப் பெரியதாக இருக்கும்' என்றார்.
'கற்பனை வளம் பெற்ற திறமை வாய்ந்த எழுத்தாளர்களில் எண்ணிக்கை இப்போது பெருகிவருகிறது' என்றார்.
'அவர்களின் மூலம் தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சியுடன் பிரகாசிக்கும்' என்றார்.