அறிஞர் அண்ணாவுக்கு மாநிலத் தமிழ் மக்களின் சார்பில் கூபு ஸ்டேடியத்தில் 23.7.65 அன்று பகல் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
டாக்டர் எஸ்.தம்பிப்பிள்ளை மலாக்கா மாநிலத் தமிழ் மக்களின் சார்பில் அறிஞர் அண்ணாவுக்கு மாலை யணிவித்தார்.
மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு பொது நிறுவனங்களின் சார்பாக மாலைகள் அணிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திரு. மா.கு.மாணிக்கம் "அண்ணா அவர்கள் தமிழால் தமிழுலகத்திலுள்ள மக்களைக் கொள்ளை கொண்டவர்; அரசியல் தலைவர்களுக்கு ஆசான்; ஆயிரமாயிரம் தம்பிகளைக் கவர்ந்த ஏந்தல்" என்று புகழ்ந்துரைத்தார்.
தாய்மொழி மறந்த தமிழ் இனத்தார்
அண்ணா அவர்கள் பேசியதாவது:
இங்கே தமிழ்ப் பண்பாடுகளைத் தங்கள் வாழ்க்கையில் அனுசரிக்கக்கூடிய பழந்தமிழ் இனத்தைச் சேர்ந்த மலாக்கா செட்டியார்கள் வாழ்கிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு தமிழ்மொழி தெரியாது என்றும், இங்குள்ளவர்கள் சொன்னார்கள். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இத்தகைய நிலை ஏற்படுவதற்குக் காரணம், அவர்கள் தமிழ் இனத்தவர்களைச் சேர்ந்தவர்களாக இருந்தும், தங்கள் தாய்மொழியோடு கொண்ட தொடர்பை இடைக்காலத்தில் விட்டதுதான்.
ஆனால் அவர்கள் இப்பொழுது தமிழ் படிப்பதிலே ஆர்வமும், தங்கள் பிள்ளை குட்டிகளைத் தமிழ்ப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதிலே நாட்டமும் கொண்டிருப்பதாக அறிந்தேன். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
தமிழர்கள் தங்கள் தாய்மொழியோடு கூடிய பற்றைக் காப்பதற்கும், தமிழகத்திலிருந்து வரும் எங்களைப் போன்றவர்களின் வருகை மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்.
தமிழ் மணம் வீசுகிறது!
தமிழார்வம் இங்கு மலர்ந்து மணம் வீசுகிறது. தமிழ்ப் பண்பாடுகளை நீங்கள் கட்டிக் காத்து வருகிறீர்கள். ஒவ்வொரு ஊரிலும் எங்களை வாழ்த்தி வரவேற்று, உபசரிக்கும் பான்மை அதை மெய்ப்பிக்கிறது. உண்மையாகச் சொல்லப் போனால் இப்போது நான் தமிழகத்தின் ஒரு பகுதியில் இருப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன்.
மலேசியத் தமிழர்களிடையே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக அதிகமாக வேண்டும். தமிழகத்தை அடுத்து அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற மலேசிய நாட்டில், தமிழ் பேசும் மக்கள் பத்துப்பேர் பார்த்து மகிழத்தக்க நிலையில் வாழ்கிறார்கள்.
பழந்தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்ட குறிஞ்சியின் மலைவளத்தைத் தற்போதைய தமிழகத்தில் காண முடியவில்லை. ஆனால் அந்த வளமான குறிஞ்சியைப் பசுமை மிகுந்த மலையகத்திலே காண முடிகிறது.
மலேசியத் தமிழர்களின் ஒரு பற்று இன்னொரு பற்றைக் கெடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்வு தேட வந்த தமிழர்கள் 'இங்கே வாழ்ந்துவிட்டுப் போவோம்' என்று நினைத்திருக்கலாம். ஆனால் இந்தத் தலைமுறையில் இங்கே வாழ்கின்ற மக்கள் அப்படி கிஞ்சிற்றும் நினைக்கவில்லை. இங்கேயே வாழ்ந்து தீரவேண்டும் என்பது அவர்கள் நிலை. போன தலைமுறையினருக்கு மலைநாடு ஒரு ரயில்வே ஜங்ஷனைப் போல் இருந்திருக்கிறது.
ஓர் இரயில்வே ஜங்ஷன்; அதன் கூரையிலே ஓட்டை விழுந்து விடுகிறது; அது இன்னமும் பழுது பார்க்கப்படவில்லை. அந்த நிலையிலே அங்கு தங்கும் பிரயாணி அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவது கிடையாது. பழுது பார்க்கப்படவேண்டும் என்ற எண்ணம்கூட அவர்களுக்கு வராது. ஏனெனில் இன்னும் அரைமணி - ஒரு மணி நேரத்தில் இங்கிருந்து இரயிலில் போய்விடுவோம் என்ற எண்ணம்தான்!
இந்தத் தலைமுறையின் கடமை
அத்தகைய போக்கில் போன தலைமுறையினர் இங்கே இரயில்வே ஜங்ஷனைக் கண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தத் தலைமுறையினர் நிலை வேறு! இந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழ வேண்டியவர்கள்.
தாய்மொழி தமிழாக இருக்கலாம், எனினும் வாழ்கின்ற நாடுதான் அவர்களுக்குத் தாயகம்! 'வந்த நாடு இது; சொந்த நாடு அது' என்ற நிலை நீடிக்குமானால், தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் நிலையற்றதாகிவிடும்.
நீருக்கும் நிலத்திற்கும், வீட்டிற்கும் வாசலுக்கும், கடைக்கும் கண்ணிக்கும் ஒவ்வொரு தமிழனும் சொந்தக்காரன் ஆகவேண்டும். தங்கள் அடுத்த தலைமுறையினர் சிறப்பாக வாழ வேண்டும் என்று இங்குள்ள தமிழ் மக்கள் கருதினால், இந்தத் தலைமுறையினர் தங்களின் சொந்த ஆசை - ஆவல் - இச்சை - விருப்பங்களைக் கொஞ்சம் அடக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தத் தலைமுறையினர் வீணாகச் செலவழிக்கும் ஒரு வெள்ளி, அடுத்த தலைமுறையினருக்குப் பத்து வெள்ளி நட்டத்தை உண்டு பண்ணும்.
மண்ணில் மரம் அசையாமல் இருக்கிறது. ஆனால் கொடி நாலா பக்கமும் அசைகிறது, அலைகிறது. காரணம் மரத்தின் வேர், எல்லாப் பக்கங்களிலும் ஓடிப் பரவியிருப்பதன் காரணமாகத்தான் பலத்த காற்றுக்கும் மரம் தப்பி விடுகிறது.
அதைப்போல, மரதின் எல்லாப் பக்கங்களிலேயும் வேர் ஊடுருவி இருப்பதுபோல் தமிழர்கள் இந்த நாட்டில் தங்கள் வாழ்வைப் பல துறைகளிலேயும் செலுத்தி அமைத்துக் கொண்டால் எப்படிப்பட்ட புயலுக்கும் எதிர்காலதில் தப்பி விடலாம்.
தோட்டம் வாங்கும் நிலை வரேவேண்டும்!
இங்கே தமிழர்கள் வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமன்றி, சொந்த உடைமையுடையவர்களாகவும் வளரவேண்டும். இன்றே, இப்பொழுதே எல்லோரும் தோட்டம் வாங்குங்கள் என்று நான் சொல்லவில்லை.
இங்கேயுள்ள பெரும்பாலான ரப்பர் தோட்டங்கள் வெள்யைருக்குச் சொந்தம் என்று கேள்விப்பட்டேன். அப்படி அவை மாறினாலும் சீனரிடம்தான் போய்ச் சேரும்.
'வெள்ளையர் தோட்டத்தை விட்டுவிட்டால் அடுத்து எங்கே போய் வேலை தேடுவது?' என்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள் அடுத்த தலைமுறையினர். இந்த நிலைமையிலிருந்து அவர்கள் மாறவேண்டும்.
அற்ப மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்
கடல் கடந்து வாழும் தமிழர்கள், சில உல்லாச விளையாட்டுகள் விளையாடுவதன் மூலம் ஊதாரிகளாக இருக்கிறார்கள். அந்த விளையாட்டுகளை நான் விளக்கத் தேவையில்லை! அதில் ஈடுபடுகிறவர்களுக்கு ஐந்து நிமிடம் பூமியில் கால் நிலைக்காது! எதிரே நிற்கும் அண்ணனுக்கும் - தம்பிக்கும் - தோழனுக்கும் வேறுபாடு தெரியாது! இது ஓர் அற்ப மயக்கம். இதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்த நாட்டிற்கு அமைந்துள்ள அதிர்ஷ்டங்களில் ஒன்று மக்கட் தொகை குறைவாக அமைந்திருப்பது. தேவைக்கு மீறிய செல்வ வளமும் இருக்கின்றது. ஆனால் இந்நாட்டின் பெரும் செல்வம் என்று கருதப்படும் இயற்கை ரப்பருக்கு உலக நாடுகளிடமிருந்து பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.
பிளாஸ்டிக் மற்றும் போலி ரப்பர்களும் அதிகமாக மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால், ரப்பரால் கிடைக்கும் வருமானத்தை நிலையாகக் கொள்ள முடியாது. ஆகவே, தமிழர்கள் எல்லாத் தொழில் துறைகளிலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்நாட்டில் தமிழ் மக்கள் சொந்தத்தில் வீடு உடையவர்களாக இருக்கவேண்டும். காலப் போக்கில் மண்ணின் மதிப்பு எவ்வளவு தூரம் உயர்கிறது என்பதை உணரவேண்டும்.
முன்னொரு காலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலுள்ள ஆமதாபாத் என்னுமிடத்திலுள்ள பஞ்சாலையில் வேலை செய்வதற்காக 1500 தமிழர்கள் குடியேறினார்கள். அப்போது குடியிருக்க, ஐம்பது, அறுபது ரூபாய் விலைகளில் தங்கள் நிலத்தைத் தமிழர்களிடம் விற்க, அங்கே உள்ளவர்கள் முன்வந்தார்கள். அதைப் புறக்கணித்த தமிழர்கள் எவ்வளவு பேர்! 'ஒரு நாளைக்கு மூன்றரை ரூபாய் வாடகையா? அதைக் கூடக் கொடுத்துவிட்டு நாங்கள் வாடகைக்கே இருந்துவிடுகிறோம்' என்று கெட்டிக்காரர்களைப் போல் சொன்னார்கள். காலம் அவர்களுடைய கெட்டிக்காரத்தனைத்தை விளக்கியது.
ஆமதாபாத்தில் அப்போது ரூ.50 மதிப்புள்ள ஒரு நிலப் பகுதியின் விலை இப்போது ரூ.50,000 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் நான் இங்கு எப்பொழுது வருவேன் என்பது எனக்குத் தெரியாது. இரு நாட்டு அரசாங்கங்களும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைகைப் பொறுத்த விஷயம் அது. நான் அடுத்தமுறை வரும்பொழுது இங்குள்ள தமிழர்களெல்லாம் சொந்த வீட்டில் வாழ்ந்தால் மகிழ்ச்சியடைவேன்.
அண்ணாவுக்கு அன்பளிப்பு
கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு திரு.ரெ.சு.பிரகாசம் வெள்ளிப் பூண்போட்ட மலாக்கா ரோத்தான் ஊன்றுகோல் ஒன்றையும் எழுதுகோல் ஒன்றையும் வழங்கினார்.
ஜாசின் வட்டாரத் தமிழ் மக்கள் சார்பாகப் பால் வெட்டும் உளியின் சின்னம் பொறித்த கேடயம் அளிக்கப்பட்டது.