குளுவாங்கில் உள்ள வைர விழா மண்டபத்தில் 24.7.65 மாலை 6 மணிக்கு, நகர மக்கள் சார்பில் வரவேற்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திரு. நா.முத்துசாமி தலைமை வகித்து அறிஞர் அண்ணாவின் அறிவாற்றல், அரசியல் மேம்பாடு, மக்கள் செல்வாக்கு முதலியவற்றை எடுத்து விளக்கினார்.
அண்ணா அவர்களுக்கு ஏராளமான மாலைகள் அணிவிக்கப்பட்டன. அப்போது ஒரு சுவையான நிகழ்ச்சி! அண்ணாதுரை என்னும் இரண்டு வயதுச் சிறுவன் மாலையணிவித்த போது மண்டபமே கையொலிகளால் அதிர்ந்தது. முரதொலி மாறன் என்னும் இளைஞன் மாலையணிவித்தது மற்றொரு சுவையான நிகழ்ச்சியாகும்.
இரட்டை ஸ்டியரிங் ஓட்டாதீர்
அண்ணா அவர்கள் பேசியதாவது:
"இங்கே வாழ்கின்ற மக்களில் சீனர்கள் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்றார்கள். அந்தச் சுறுசுறுப்பு வாழ்க்கைத் தரத்தில் நல்ல விறுவிறுப்பைக் கொடுக்கிறது. அந்த அளவுக்குத் தமிழ்பேசும் மக்களும் உற்சாக மிக்கவர்களாக மாறவேண்டும்.
"ஒரு மோட்டார் காரில் இரண்டு ஸ்டியரிங் வைத்தால் ஒரு டிரைவர் எப்படி ஓட்ட முடியும்? அதேபோல் மலேசியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் நாட்டுப் பற்று விஷயத்தில் இரட்டை ஸ்டியரிங் மோட்டாரை ஓட்ட எண்ணக்கூடாது.
ஒருமைப்பாட்டு உணர்ச்சி
"அமைத்து நாட்டிலும் மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்; தொழில்வளம் சிறக்க வேண்டும்; செல்வம் வளரவேண்டும்; வளருகின்ற செல்வம் ஓரிடத்திலேயே தங்கியிராமல் பல இடங்களுக்கும் பரவ வேண்டும்; உழைப்பின் பலனை உழைப்பவர்கள் பெறவேண்டும்; உழைப்பவர்களைத் தாழ்வாக நினைக்கின்ற மனப்பான்மை ஒழிக்கப்படவேண்டும்; அனைவரும் ஒரே மக்கள் என்ற ஒருமைப்பாட்டு உணர்ச்சி ஏற்படவேண்டும்; இவைகளே எல்லா நாட்டுக்கும் ஏற்ற அரசியலாகும்.
தமிழை நீங்கள் நல்ல முறையில் பேணிக் காத்து வருகிறீர்கள் என்பதைக் காண்கின்றபோது உங்களுக்கெல்லாம் நன்றி செலுத்திக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தலைவர் அவர்கள், 'நீண்ட நாட்களாக அண்ணா அவர்களின் வரவை எதிர்பார்த்திருந்தோம்' என்று கூறினார். ஆனால் அன்பர்களே! நீங்கள் இப்பொழுது என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்? 'தமிழக அரசியலையோ, இந்திய அரசியலையோ இங்கு கொண்டு வருவதற்குத் தேவை இல்லை. இங்குள்ள அரசியல் பிரச்சினையில் என்னைச் சிக்க வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் உண்டு.
அமெரிக்கருக்கு அங்கே ஒருவிதமான அரசியல் இருக்கிறது. மலேசியாவில் ஓர் அரசியல் இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு நாட்டிற்கும் அந்தந்த நாட்டிற்கேற்ப அரசியல் இருக்கிறது.
இருந்தபோதிலும் கூட, பொதுவான பண்புகள் என்று ஒரு சில உண்டு; அது என்னவென்றால் செல்வம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதுதான்!
உழைப்பின் பயனை எல்லோரும் பெற்றிருக்க வேண்டும். எல்லோருக்கும் சீரிய வாழ்வும் நல்வாழ்வும் கிட்டவேண்டும்.
இது எல்லா அரசியல் முறைகளுக்கும் ஒத்த பண்பு நலன்களாகும். ஆகவே, இந்த முறையிலே இந்த நாட்டு அரசியலை நோக்குகின்றபோது, 'மக்களுக்கு நல்வாழ்வு கிடைத்திருக்கின்றது!' என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு - பண்டைய சிறப்பை மேலும் நிலைநாட்டிக் கொள்வதற்கு முயல வேண்டும்.
நம்மிலே பத்துப் பேரை நாம் அரசாள அமர்த்துகிறோம். அவர்கள்தான் நமக்கு நல்வாழ்வு தரவேண்டுமே தவிர, அதைத் தருவதற்கென்று உலகத்திலே இல்லாத சக்தி வேறு இடத்தில் இருக்குமென்று கருதத் தேவையில்லை.
ஆண்டவன் தந்துவிட்டான்
உலக்திற்கு அப்பாற்பட்டு இருக்கிற சக்தி, மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்குத் தேவையான சக்தியையும் கொடுத்துவிட்டிருக்கிறது. 'ஆண்டவன்' என்று வைத்துக்கொண்டாலும், 'பரமண்டலத்தில் இருக்கிற பிதா' என்று வைத்துக் கொண்டாலும் அல்லது எல்லாவற்றையும் 'இயக்குகின்ற தெய்வம்' என்று வைத்துக் கொண்டாலும், உலகத்திற்குத் தர வேண்டியதைக் கடவுள் நிரம்பக் கொடுத்திருக்கிறார்! ஒளி உண்டாக்கச் சூரியனைக் கொடுத்திருக்கிறார்.
உலகத்தில் செழிப்பாகவும் சிறப்பாகவும் வாழ்வதற்கு 'ஆண்டவன்' தேவையானவற்றை யெல்லாம் தந்திருக்கிறான். 'அவன்' மழை பொழிவதற்காக மேகத்தைத் தந்திருக்கிறான். இருந்தபோதிலும்கூட, எல்லா மேகங்களையும் 'அவன்' மழை முகில்களாக ஆக்கி விடவில்லை. அந்த முகில்களிலும் செம் முகில்கள், மழை முகில்கள் என்று விதவிதமாக இருக்கின்றன.
இதற்குக் காரணம், எல்லா மேகங்களுமே 'மழை முகில்களாக' இருக்குமேயானால் அதனால் ஏற்படும் வெள்ளக் காட்டில் உலகம் அழிந்துவிடாதா?
அதுபோலத்தான், காடுகளை எல்லாம் ஒரே நாட்டிலே 'ஆண்டவன்' படைத்து விடவில்லை. எங்கெங்கே எப்படியெப்படி காடுகள் அமைய வேண்டுமோ அப்படி அப்படி 'ஆண்டவன்' அமைத்துத் தந்திருக்கிறான். இது மட்டுமல்ல; வாழ்க்கைக்கு இன்னும் என்னென்ன தேவையோ அவைகளையெல்லாம், ஆங்காங்கே அவ்வவற்றிற்கு ஏற்ற விதத்தில் 'ஆண்டவன்' தந்திருக்கிறான்.
இவ்வளவும் தந்துவிட்ட ஆண்டவனிடத்தில் இன்னும் நாம் 'அதைக் கொடு; இதைக் கொடு' என்று கேட்பது சரியல்ல; 'ஆண்டவன்' கொடுத்ததை நாம் சரியாகப் பயன்படுத்தி வருகிறோமா என்பதுதான் இப்பொழுது கவனிக்கப்பட வேண்டியது. இதற்கு எடுத்துக்காட்டாக, நான் ஓர் உவமை சொல்ல விரும்புகிறேன்.
திருமண வீட்டுக்குப் போய் விருந்து சாப்பாடு சாப்பிடுகிறவன், முதலில் பருப்புப் போட்டுச் சாப்பிடுவான்; பின்னர் சாம்பார் போட்டுச் சாப்பிடுவான்; அடுத்து மோர் போட்டுச் சாப்பிடுவான். ஆனால் மோர் கலந்து சாப்பிட்டுவிட்ட பின்னர், மறுபடியும் சாதம் போடு - அதிலே சாம்பாரும் போடு' என்று சொன்னால் அது சிரிப்பாக இருக்காதா?
அதுபோலத்தான் 'ஆண்டவன்' கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுத்து விட்ட பிறகு, அவனிடம் 'அதைக் கொடு; இதைக் கொடு' என்று கேட்டால் அது முறையல்லவே!
ஆகவே, 'அவன்' கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு ஒழுங்காகச் செயல்படுகிறோமா என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்"
இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட 236 டாலர் 11 காசுகளை நாட்டுத் தற்காப்பு நிதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜியாஎங்டியிடம் அண்ணா வழங்கினார்.