அறிஞர் அண்ணா அவர்களுக்கு 19.7.65 மாலை 4 மணிக்கு கூலிம்கிம்வா அரங்கில் வரவேற்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
திரு.கே.ஆர்.சோமசுந்தரம் தலைமை வகித்து அண்ணா அவர்களின் சிறப்பியல்புகளைப் பாராட்டினார்.
அண்ணா அவர்கள் மலர் தூவப்பட்ட வண்ணம் அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கூலிம் நகரம் கண்டிராத அளவுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களுமாகத் தமிழர்கள் கூடியிருந்தனர்.
பல பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாலைகள் அணிவித்து, வாழ்த்துப் பத்திரங்கள், தங்கப் பதக்கங்கள் ஆகிவற்றை அறிஞர் அண்ணா அவர்களுக்கு வழங்கினர்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஒருமணி நேரம் நகைச் சுவையோடும் உணர்ச்சியோடும் பேசினார்கள்.
உலகில் மற்ற எந்தத் தலைவருக்கும் இல்லாத அரசியல் பெருந்தன்மை உங்கள் நாட்டு ஒப்பற்ற தலைவர் துங்கு அப்துல் ரகிமான் அவர்களிடம் இருக்கிறது" என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
"மலேசியாவில்தான் தமிழர்கள் நல்வாழ்வு பெற்று வாழ்கிறார்கள். தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு மலேசியாதான். பத்து இலட்சம் தமிழர்கள் இங்கு வாழ்கிறார்கள். அத்தனைப் பேரையும் மகிழ்ச்சியோடு மலேசியா ஏற்றுக்கொண்டிருக்கிறது.
"மலேயாக்காரர்கள் - சீனர்கள் - தமிழர்கள் ஆகிய மூன்று இன மக்களுக்கும் மலேசியா உரியது என்ற பெரு நோக்கத்தில் தமிழர்களை இந்நாட்டு மக்களாக ஏற்றுக்கொண்டிருக்கும் உங்கள் தலைவர் துங்குவுக்கு என் சார்பிலும் என் நாட்டின் சார்பிலும், தமிழ்மொழியின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
"இந்த அரசியல் பெருந்தன்மை மற்றவர்களுக்குச் சுலபத்தில் வரக்கூடியதல்ல. நம் வீட்டுத் திண்ணையில் புதியவர்கள் படுத்துத் தூங்கினால் வெளித் திண்ணையில் தானே தூங்குகிறார் - இருந்து விட்டுப் போகட்டுமே, என்று நாம் இருந்து விடமாட்டோம்; கதவைத் திறந்தால் உள்ளே வந்துவிடுவார் என்று கருதி, சன்னலை மட்டுமே திறந்து, "யாரய்யா?" என்று கேட்போம்.
"இராப்பொழுது படுத்துவிட்டுப் போகிறேன்" என்று அவர் சொன்னாலும், 'அதோ தெருக்கோடியில் சத்திரம் இருக்கிறது. அங்கு போய்ப்படுத்துக் கொள்ளுங்கள்' என்போம். சத்திரத்தை நாமே கட்டியவர்கள் போல சொந்தம் கொண்டாடுவோமே தவிர, நாம் இடம் கொடுக்க மாட்டோம். இது மனித இயல்பு.
ஆனால் துங்கு அவர்கள் இரக்க மனம் படைத்தவராக இருப்பதால்தான் பத்து இலட்சம் தமிழ்மொழி பேசும் மக்களை 'மலேசியர்'களாகத் தாராளமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். எந்தத் தலைவரிடமும் இந்த பண்பைக் காண்பது அரிது." என்றார் அண்ணா.