மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேட்டிகள்
கோலாலம்பூர் செய்தியாளர்களிடை அண்ணா

 

"இந்தியா இப்பொழுது இரட்டை ஆபத்துகளை எதிர்நோக்கியிருக்கிறது; ஒன்று கட்ச்ரான் பகுதி குறித்த பாக்கிஸ்தானின் மிரட்டல்! மற்றொன்று இமாலயப் பகுதியிலிருந்து சினாவின் பேராபத்து! இவற்றை மனத்திற்கொண்டே தி.மு.கழகம் தனது நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை - திராவிட நாட்டுக் கோரிக்கையை முற்றிலுமாகக் கைவிட்டது."

"பதினான்கு வட்டார மொழிகளையும் இந்திய ஆளும் கட்சியான காங்கிரசு, ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விஷயத்தில் தி.மு.கழகம் விடாப்பிடியாக இருந்து வருகிறது."
- என்று அறிஞர் அண்ணா அவர்கள் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

"அடுத்து வரும் ஆசிய ஆப்பிரிக்க மாநாட்டில், மலேசியா இடம்பெறுவதற்கு இந்தியா எல்லா ஏற்படுகளையும் செய்துதரும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்; நான் இந்திய அரசாங்கத்தின் சார்பாகப் பேசவில்லை; ஆனால் எனது மனதில் தோன்றிய எண்ணத்தை இங்கு குறிப்பிடவே இதைச் சொல்கிறேன்; ஆசிய ஆப்பிரிக்கா மாநாட்டில் மலேசியாவின் நுழைவுக்கு இந்திய அரசாங்கம் எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் என்பதே எனது கருத்தாகும்."

கேள்வி: "மலேசியா நவகாலனித்துவ அமைப்பு என்ற முறையில் இந்தோனேசியா பலவிதமான குற்றச் சாட்டுக்ளைச் செய்திருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?"

அண்ணா: அதிபர் சுகர்ணோவும், அவர்தம் சகாக்களும் மலேசியாவை மட்டும் "நவகாலனித்துவ நாடு" என்று குறிப்பிடவில்லை. இந்தியாவையும், அவரும் அவர் குழுவினரும் 'நவகாலனித்துவ நாடு' என்றுதான் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்."

கேள்வி: கம்யூனிஸ்டுச் சீனா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவரும் 'இவ்வேளையில் அணு ஆயுதங்களை செய்யப் போவதில்லை' என்று இந்தியா கூறியுள்ளதே - அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அண்ணா: "ஒரு முறை நாம் இந்த அணு ஆயுதப் போட்டியில் நுழைந்து விட்டோமானால் நாம், 'அரசியல் இராணுவத் தத்துவத்தில் இறங்கிவிட்டோம்' என்றுதான் பொருள்படும். ஆகவே இந்தப் போட்டியில் ஈடுபட இந்தியா ஒருகாலும் விரும்பாது என்று தனிப்பட்ட முறையில் நானும், மற்றும் எனது இந்தியச் சகோதரர்கள்ளும் பலரும் கருதுகிறோம்.

கேள்வி: மாபெறும் போர் ஏற்படும் பட்சத்தில் அதனால் உருவாகும் மோசமான விளைவிகளை இந்தியா இந்த அணு ஆயுதப் போராட்டத்தில் சேராது போனால் தாக்குப் பிடிக்க முடியுமா?
அண்ணா: இந்தத் துறையில் இந்தியா அவ்வளவு அதிகமாகப் பாதிக்கப்படாது; அதற்காக அது வருந்தவும் செய்யாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

மலேசிய - இந்தியர்கள்

கேள்வி: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மலேசியர்களின் சரியான பணி எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அண்ணா: இந்நாட்டிலிருந்து வரும் இந்தியர்கள், இங்கு பிறந்திருந்தாலும் சரி - அல்லது இந்நாட்டைத் தங்கள் வாழ்க்கைக்குரிய நாடாக ஏற்றுக்கொண்டாலும் சரி - அவர்கள் தங்களது முழு விசுவாசத்தையும் இந்நாட்டிற்கே தெரிவித்துக்கொண்டு, அதன்படி நடந்து வர வேண்டும். அவர்களுக்கு இந்நாடுதான் சொந்த நாடு; அவர்கள் இந்நாட்டின் குடிமக்களாவர். ஆகவே, அவர்கள் இந்நாட்டின் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழ்ந்து வர வேண்டும்.

இந்தோனேசியா வலுத்தாக்குதல்
"நேற்று சிங்கையில் குறிப்பிட்டதுபோல், நான் எனது நாட்டின் தூதனாக மற்றொரு நட்பு நாட்டுக்க வந்திருக்கிறேன். எனது நாட்டின் பரிவையும், ஆதரவையும் மலேசியாவுக்குத் தெரிவித்துக் கொள்ளவும், ஓர் அண்டை நாட்டின் அநாவசியமான - தான்தோன்றித்தனமான வலுத்தாக்குதல் மீது இந்தியா கொண்டுள்ள வெறுப்பினைத் தெரிவித்துக் கொள்ளவுமே நான் இங்கு வந்திருக்கிறேன்.

பன்மையில் ஒருமை
"பன்மையில் ஒருமை" என்ற கொள்கைக்கு மலேசியா சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பல்வேறு இன மக்களைக் கொண்ட ஒரு நாடு ஒன்றுமையுடன் திகழ்ந்து வருகிறது என்பதில் மலேசியா தனி இடத்தைப் பிடித்திருக்கிறது.

உங்களுடைய மாபெரும் தலைமையமைச்சர் கனம் துங்கு அப்துல்ரகிமான் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பினைப் பெறமுடியாது போனதுதான் எனக்குப் பெருங்குறையாக இருக்கிறது.

"இந்தியா மற்றொரு ஆக்கிரமிப்பாளாரால் தாக்கப்பட்டபோது, எங்கள் நாட்டுக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்க முன்வந்த முதலாவது இராஜதந்திரி துங்குவாக இருப்பதால், இந்தியாவில் உள்ள நாங்கள் உங்கள் துங்குவுக்கு என்றும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்,

"எனக்குக் கிடைத்த செய்திகளிலிருந்தும், நான் கேட்டறிந்த வகையில் உங்கள் நாட்டுத் தலைமையமைச்சர் மிகவும் அடக்கமான குறிப்பிடத் தகுந்த அரசியல் அறிவு படைத்த - மாபெரும் தலைவராக இருந்து வருகிறார் என்பதை உணருகிறேன்.

பாகிஸ்தானும், சீனாவும்

இந்தியாவில் நாங்கள் இரண்டு ஆபத்துகளை எதிர் நோக்கியிருக்கிறோம். ஒன்று, கட்ச்-ரண்ணில் பாகிஸ்தான் - மற்றொன்று, இந்திய எல்லையில் சீனா. இந்த இருதரப்புகளிடமிருந்தும் நாங்கள் மிகவும் தொல்லையான எல்லைப் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளோம்.

"சீனா, கொழும்பு, ஆலோசனைகளை ஏகமானதாக ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடந்து கொள்ளுமானால் அந்நாட்டுடனான எமது தகராறு சுமுகமாகத் தீர்வு பெற்றுவிடும்."

ஒரு நிருபரின் கேள்வியொன்றுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பதிலளித்ததாவது:

எனது கட்சி தனி நாட்டுக்காகக் கோரிக்கை எழுப்பி வந்ததே தவிர, 'கூச்சலிடவில்லை'. ஆனால் இப்போது இரு கடும் வெளிமிரட்டல்களை எதிர்நோக்கி வருவதால் நாங்கள் எங்களது கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். இப்போது தி.மு.கழகத்திலுள்ள நாங்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கிணங்கவே ஒரு கட்சியாக இயங்கி வருகிறோம்.

"இங்கு தி.மு.கழகம் ஓர் அரசியல் கட்சியாக மட்டுமன்று, பண்பாட்டுக் கழகமாகவும் பணியாற்றி வருகிறது."



 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai