மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
கோலாலம்பூரில் அண்ணா - கோலாகல வரவேற்பு

 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களும், திரு.இரா.செழியன் அவர்களும் 17.7.65 பிற்பகல் 1:30 மணிக்கு விமான மூலம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் வந்து சேர்ந்தனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் விமான நிலையத்தில் வானோங்க வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றார்கள்.

'அண்ணா வாழ்க!' 'தென்னாட்டு பெர்னாட்ஷா வாழ்க!' 'இங்கர்சாலே வருக வருக!' என்று பொது மக்கள் புன்னகை புரிந்தவாறு கைகூப்பி வணக்கஞ் செய்தவாறு வந்தார் அண்ணா.

நீலக்கரைத் துண்டும், கறுப்பு - சிவப்புக் கரைபோட்ட வேட்டியும் அணிந்திருந்தார் அண்ணா.
பச்சைக் கரையுள்ள வேட்டியும், துண்டும் அணிந்திருந்தார் இரா.செழியன்.

மகிழ்ச்சி வெறி!
அண்ணா அவர்களைப் பார்த்ததும் 'மகிழ்ச்சி வெறி' கொண்ட பலர், அவர் வந்த திக்கை நோக்கி விரைந்து ஓடினர்; சிலர் கரங்கள் இரண்டையும் தலைமேல் குவித்துக் கொண்டு, 'எங்கள் அண்ணலே' என்று ஆனந்தக் கூத்தாடினர்.

அறிஞர் அண்ணா அவர்களும், திரு.இரா.செழியன் அவர்களும் விமானத் திடலில் நிருபருக்குப் பேட்டி அளித்தனர். பேட்டி அரைமணி நேரம் நடந்தது. ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் அண்ணா கேட்விகளுக்குப் பதில் கூறினார்.

விமான நிலையத்தில் அண்ணா அவர்களுக்கு நகர வரவேற்புக் குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், இத்தலைவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவித்தனர்.

கொளுத்தும் வெயிலில் குழுமி நின்ற மக்கள்!
அண்ணா அவர்களின் கோலாலம்பூர் நிகழ்ச்சிப் பட்டியல்படி அவர் இன்று காலை 9:15 மணிக்கு இங்கு வந்து சேருவதாக இருந்தார். காலை 8 மணி முதல் விமானத் திடலைத் தமிழர்கள் முற்றுகையிடத் தோடங்கினர். பிற்பகல் ஒன்றரை மணிக்கு அவர் வந்து சேரும் வரை அவர்கள் கலையாமல் அப்படியே இருந்தார்கள். கொளுத்தும் வெயிலில் அண்ணா அவர்களைப் பார்க்கும் ஆவலோடு பெண்கள் குழுமியிருந்தனர்.

அண்ணா அவர்களை வரவேற்க உள்ளூர்ப் பிரமுகர்களும், இந்தியத் தூதரகத் தகவல் அதிகாரி திரு.சுக்ளாவும் வந்திருந்தனர்.

இன்று காலை குறிப்பிட்ட நேரத்தில் அண்ணா அவர்கள் சிங்கப்பூரில் விமானம் ஏறத் தாமதம் ஆகியதால், அவருடைய கோலாலம்பூர் வருகை தாமதப்பட்டது.

அண்ணா எப்போது வருவார்? எப்போது வருவார்? என்ற விமான நிலையத்தில் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு, அண்ணா அவர்கள் வந்த விமானம் 1:34 மணிக்குத் தரை இறங்கிக் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கூட்டத்தைக் கடந்து அண்ணா அவர்களையும் செழியனையும் காரில் ஏற்றுவதற்குப் போலீசார் மிகவும் உதவி புரிந்தார்கள்.

போலீஸ் தடியடி!

உற்சாக மிகுதியில் அண்ணா அவர்களை நோக்கி நெருக்கியடித்துக் கொண்டு வந்த சிலர் மீது போலீசார் தடியடிப் பிரயோகம் செய்து நிலைமையைச் சீர்ப்படுத்தினார்கள்.

பிற்பகல் 2:05 மணிக்கு அப்பாங் ரோட்டிலுள்ள பிலாய் உணவு விடுதியில் தி.மு.க. தலைவர்கள் வரவேற்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்டார்கள்.

இந்தியத் தூதுவருடன் சந்திப்பு

3:30 மணிக்கு இந்தியத் துணை தூதர் திரு.மெஹ்பூப் அகமத் இல்லத்தில் அவரை அறிஞர் அண்ணா அவர்களும் திரு.இரா.செழியனும் சந்தித்து உரையாடினர்.

அண்ணா அவர்களையும், செழியனையும் அகமலர்ந்து வரவேற்ற துணைத் தூதர், அண்ணாவுக்கும், செழியனுக்கும் உடன் சென்ற குழுவினர் அனைவருக்கு குளிர்பானம் வழங்கி, மலேசியத் தலைமையமைச்சர் துங்குவின் சிறந்த ஆட்சியையும் நாட்டின் கிராம வளர்ச்சித் திட்டத்தையும் விளக்கினர்.

அவர் மேலும் கூறுகையில் குறிப்பிட்டதாவது:-
மலேசிய நாட்டிற்கு ஏற்படும் எந்த ஆபத்தும், இந்தியாவுக்கும் சார்ந்ததாகவே அமையும். ஏனெனில் கிழக்காசியாவில், மலேசியாவுக்கு அருகில் இருப்பது இந்தியாவே. மலேசியாவுக்கு ஓர் அடி விழுந்தால் அது இந்தியாவின் இதயத்தில் அடித்த அடியாகும்"

இந்நாட்டின் வளர்ச்சியையும், கலை - கலாசாரத்தையும், உபசரிக்கும் பண்பையும் மிகத் தெளிவாகத் துணைத்தூதர் விளக்கியதைக் கேட்டு அண்ணா அவர்களும் செழியனும் மிகவும் மனத்திருப்திக் கொண்டு, நன்றி கூறிக்கொண்டு விடைபெற்றனர்.

- 'தமிழ் முரசு', சிங்கப்பூர்

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai