"பாராளுமன்ற சனநாயகத்தில் ஆள்காட்டி விரலாக இருப்பது சுண்டு விரலாகிவிட முடியும். எப்படியென்றால், இன்று ஆள்காட்டி விரலாக ஆளும் கட்சியையும், சுண்டு விரலாக எதிர்க்கட்சியும் நாம் கொள்வோமேயானால், எதிர் காலத்தில் எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாகவும், ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாகவும் ஆகிவிட முடியும்!
"ஆகவே, கையில் உள்ள வித்தியாசம் நிரந்தரமானது என்றாலுங்கூட, கட்சிகளுக்கிடையிலான வித்தியாசம் நிரந்தரமானதல்ல! இன்று ஆளும் கட்சியாக இருக்கின்ற கட்டைவிரல் நாளை எதிர்க்கட்சி என்னும் சுண்டு விரலாக ஆகிவிட முடியும்.
"பாராளுமன்ற சனநாயகத்திலே இத்தகைய நிலைமைகள் ஏற்படுவது இயல்புதான்! ஆகவே மக்கள், இந்நாட்டிலே இருக்கிற கட்சிகளிடத்திலே அக்கறை காட்டி வரவேண்டும்"
என்று அறிஞர் அண்ணா அவர்கள், கோலாலம்பூர் மெட்டேக்கா விளையாட்டரங்கில், ஏறத்தாழ பதினைந்தாயிரம் பேர்களடங்கிய கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள்.
இக் கூட்டத்திற்கு, மலேசிய அமைச்சர் டத்தோ சம்பந்தம் அவர்கள் தலைமை தாங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது; அவர் வேறு ஓர் அலுவல் காரணமாகப் பிரதமருடன் மலாக்கா செல்ல நேர்ந்ததால், அவருக்குப் பதில் தொழிளாலர் அமைச்சர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார்.
அறிஞர் அண்ணா அவர்கட்கு, பொது நிறுவனங்கள் சார்பிலும், தனியார் சார்பிலும் ஏராளமான மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
அரங்கைச் சுற்றி அண்ணா பவனி
அண்ணா அவர்கள் உரையாற்றுவதற்கு முன் அரங்கைச் சுற்றிலும் மக்களுக்குக் காட்சி அளித்தவண்ணம் பவனி வந்தார்.
அப்போது, திரண்டிருந்த மக்கள் கையொலி எழுப்பியும் 'அண்ணா வாழ்க!' என்று முழக்கமிட்டும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அண்ணா அவர்கள் பேசியதாவது:
சுதந்திரம் பெறுவதற்குப் பாடுபடுகின்ற பாட்டைக் காட்டிலும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கப்படுகின்ற பாடுதான் அதிகம்.
குழந்தை பெறுகின்றபோது துன்பம் அனுபவித்தபோதிலும் அதனைப் பேணி வளர்க்கின்றபோது அதிகத் தொல்லைகளையும், அதிகச் சிரமங்களையும் எப்படி எதிர்நோக்க வேண்டியிருக்கிறதோ, அதுபோல சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் படுகின்ற சிரமத்தைவிட, பெற்ற பிறகு பேணிக் காப்பதுதான் அதிகத் தொல்லையும் சிரமமும் தரக் கூடியதாகும்.
சுதந்திரம் அடைந்திருக்கும் மலேசியா என்னும் புதிய அமைப்பு நின்று நிலைபெறுவதற்குத் தமிழர்கள் தங்கள் பங்கைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிவர வேண்டும். அத்தோடு அரசாங்கம் காட்டுகின்ற பாதையில், தீட்டுகின்ற திட்டங்களுக்கு உங்களுடைய ஆதரவை அவர்களுக்கு முழுமையாகத் தெரிவித்துவர வேண்டும்!
மலேசிய அரசுக்கு நன்றி!
நான் அரசாங்கங்களுக்கு நன்றி கூறிப் பழக்கப்பட்டவன் அல்லேன். அப்படி இருந்தபோதிலும்கூட, மலேசிய அரசாங்கத்தின் சாதனைகளையும், பணிகளையும் கேள்விப்பட்டு அதனால் கவரப்பட்டு, இந்தத் துரைத்தனத்தாருக்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரே மாதிரியான அரசியலமைப்பு நிலவுகிறது. அங்கும் பாராளுமன்ற சனநாயகம் பேணப்படுகின்றது. அதுபோல இங்கும் பாராளுமன்ற சனநாயகம் பேணப்படுகின்றது. ஆகவே, இருநாட்டு அரசாங்கங்களுக்கிடையேயும் நிகழ்கின்ற காரியங்களை இருதரப்பினரும் கவனித்து அதனால் பயன் பெறவேண்டியது அவசியமாகின்றது.
வேற்றுமையில் ஒற்றுமை
கையில் ஐந்து விரல்கள் அழகாக அமைந்திருக்கின்றன. நாம் நினைக்கும்போது அவற்றை நன்றாகச் சேர்த்து விட முடியும். இருந்தபோதிலும்கூட, 'மோதிர விரல்' என்றும் 'ஆள்காட்டி விரல்' என்றும் 'கட்டை விரல்' என்றும் 'பாம்பு விரல்' என்றும் 'சுண்டுவிரல்' என்றும் ஐந்தாகப் பிரிப்பது நம்முடைய நன்மைக்காகத்தான்.
இப்படி ஐந்து விரல்களும் தனித்தனியாக இருந்தாலும் அவை ஒன்று சேருகின்றபோதுதான் நாம் எதனையும் உருப்படியாகச் செய்ய முடிகிறது. ஆகவே, ஆண்டவன் கூட, ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு வேற்றுமையைக் கண்டிருக்கிறான்.
பாராளுமன்ற சனநாயத்தில் பல கட்சிகள் இருப்பது நன்மைதான் என்றாலும், அந்தக் கட்சிகள் எல்லாம் நாட்டு நலனையே தங்கள் நலனாகக் கொண்டிருக்க வேண்டும்.
பாராளுமன்ற சனநாயத்திலே பல குறைபாடுகள் இருக்கலாம். இன்று பாராளுமன்ற சனநாயத்திற்குச் சிறப்பாக விளங்குகின்ற இங்கிலாந்திலும், சனநாயத்தின் பிறப்பிடமாக விளங்கிய கிரேக்கத்திலும் பார்த்தாலும் கூடக் குறைபாடுகள் இருப்பது தெரியும். இது இயல்புதான்.
ஆனால் குறைபாடுகளைக் குறைத்துக் கொண்டு பாராளுமன்ற சனநாயகம் சிறப்படைவதற்கு வழி செய்ய வேண்டும்.
மலேசியத் தமிழர்கள் பெற்ற பேறு!
மலேசியாவில் பத்து லட்சம் தமிழ்பேசும் மக்கள் சிறப்புடன் - கண்ணியமாக - கௌரவமாக வாழ்வதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.
உலகத்தில் பற்பல பாகங்களில் தமிழர்கள் பிரிந்து வாழ்ந்தபோதிலும்கூட, மலேசியாவில் அவர்கள் பெற்றிருக்கின்ற தகுதியை வேறுநாடுகளில் பெற்றிருக்கவில்லை. வேறு நாடுகளிலெல்லாம் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருந்கின்ற நிலையில், மலேசியாவில் அவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதைக் கண்டு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன்.
தாமிழர்கள் பொறுப்பை உணர்ந்து நாட்டு நல்வாழ்வுக்குத் தங்களுடைய பணியை ஆற்றுவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.
நான் மலேசியாவுக்கு வந்தது தமிழர்களை மட்டும் காணவேண்டும் என்பதற்காக அல்ல; முடியுமானால் எனக்கு வாய்ப்பளிக்கப்படுமானால், நான் மலாய் மக்களையும் சீன மக்களையும் கண்டு பேச விரும்புகிறேன்.
தோட்டத் தொழிலாளர் முன்னேற்றத் திட்டம்
தோட்டங்களில் இருக்கிற மக்களையும் நான் காணுகின்ற வாய்ப்பு ஏற்பட்டது.
'தோட்டக் காடுகளில் வேலை செய்கின்ற மக்களை, தொழிலாளிகளாக இருக்கின்ற மக்களை, முதலாளிகளாக ஆக்கவேண்டும் என்ற திட்டத்திற்காகத்தான் தேசியத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது' என டத்தோ சம்பந்தம் என்னிடம் கூறியதோடு, அதுபற்றிய விளக்க நூல் ஒன்றையும் கொடுத்தார்கள்.
உண்மையிலேயே நான் அதை ஆழப் படிக்கின்ற அளவுக்கு எனக்கு அவகாசம் கிடைக்காவிட்டாலும் கூட, இந்தத் திட்டம் நல்ல திட்டம் என்று மொத்தமாக உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னைக் காட்சிப் பொருளாக்கி விட்டீர்களே!
எனக்கு அதைப் படிக்கின்ற அளவுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனதற்குக் காரணம், நீங்கள் காட்டுகின்ற பேராதரவுதான்.
மலேசியாவுக்கு வந்திருக்கிற எங்களை நீங்கள் காட்சிப் பொருளாக்கிவிட்டீர்கள்! நான் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுதுகூட, என்னைச் சிலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது!
தலைமை வகித்துப் பேசிய அமைச்சர் மாணிக்கவாசகம் அவர்கள் குறிப்பிட்டார்கள் - "திருஞானசம்பந்தன் (டத்தோ சம்பந்தன்) வராத காரணத்தால், மாணிக்கவாசகம் தலைமை தாங்க வந்திருக்கிறேன்" என்று.
திருவாசகத்துக்கு உருகாதார்!
நான் இந்த நேரத்தில்லே கூறிக்கொள்வேன் - 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று ஒரு பழமொழி உண்டு. நமது மாணிக்கவாசகத்தின் உருக்கமான உரையைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
இதற்காக நான் மகிழ்வது மட்டுமல்ல; இன்னொரு வகையிலும் - அவர் தலைமை தாங்க நேர்ந்ததற்காக நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். காரணம் என்னவென்றால், அவர் தொழிலாளர்களுக்கு அமைச்சராக இருக்கின்றார்.
ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படை தொழிலாளர்கள் ஆவார்கள். நாட்டின் நல்வாழ்விற்கு அவர்கள்தான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.
ஏனென்றால், தொழிலாளர்களுக்கு மத்தியிலே வறுமை நிலவுமேயானால், அதனால் ஏக்கம்தான் அதிகரிக்கும்; ஏக்கம் ஏற்படுமானால் பெருமைக் குறைவு ஏற்படும்; பெருமைக் குறைவு உண்டாகுமானால் உழைப்புக் குறையும்; உழைப்புக் குறையுமானால் வளம் குன்றும் - நாடு சீர்கெடும்.
ஆகவே தொழிளார் மத்தியிலே, நடுத்தர மக்களுக்கு மத்தியிலே நிம்மதியும் நிறைந்த வாழ்வும் நிலவினால்தான் நாட்டிலே சுபிட்சமும் செழிப்பும் நிலைபெற முடியும்.
நாட்டின் முதுகெலும்பு
அந்த வகையில் நாட்டின் முதுகெலும்பாக விளங்குகின்ற தொழிலாளர்களுக்கு அமைச்சராக இருக்கின்ற மாணிக்கவாசகம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதிலே நான் பெருமிதம் கொள்கிறேன்.
நீங்கள் தமிழ் நாகரிகமும், தமிழரின் பண்பாடும் திகழக்கூடிய அளவுக்கு நன்கு நாழ வேண்டும்.
தமிழ்ப் பண்பாட்டை நிலைக்கச் செய்வது மட்டுமல்ல; அதைப் பின்பற்றுவது மட்டுமல்ல - அதனுடைய சிறப்பியல்புகளை மற்றவர்களும் உணரச் செய்ய வேண்டும்.
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
என்பது தமிழர் மரபு.
ஆகவே அந்த மரபினையொட்டி, நாம் பெற்றிருக்கின்ற இந்த அரிய செல்வங்களை, ஏனைய இனத்தவர்களுக்கும் தெரியப்படுத்துவதற்கு நாம் தயங்கக் கூடாது.
பகுத்தறிவும் பகைத்தறிவும்!
அதுமட்டுமல்ல; இந்த நாடு உங்கள் நாடு. இந்த நாட்டிற்கு உங்கள் உழைப்பை நீங்கள் நல்கி வந்திருக்கிறீர்கள். ஆகவே இந்த நாட்டை உங்கள் நாடாகக் கொண்டு நீங்கள் வாழவேண்டும். இந்த நாட்டின் குடிமக்களாக நீங்கள் திகழ வேண்டும்.
நான் இன்னொன்றையும் உங்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். பகுத்தறிவுதான் தமிழ் அறிவு. தமிழறிவுதான் பகுத்தறிவு. ஏனென்றால் நாம் பழந்தமிழ் இலக்கியங்களைக் காணுகின்றபோது, அறிவுக்கு ஒத்த கருத்துக்கள் அவற்றில் திகழ்வதைக் காணலம். ஆனால் இன்று பகுத்தறிவுக்குப் 'பகைத்தறிவு' என்று கொள்ளப்படுகிறது. உண்மையிலேயே பகுத்தறிவு 'பகையறிவு' அல்ல.
வள்ளுவர் கூறியது என்ன?
இந்த நேரத்தில் நான் வள்ளுவரின் இரு குறட்பாக்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
இந்த இடத்தில் வள்ளுவர்,
'எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
என்று கூறிவிடவில்லை.
'மாறாக எப்போருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்று அவர் இருமுறை யார் - யார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு யார், யாரைக் குறிக்கிறதென்றால் அதைக் கேட்கின்றவர்களைக் குறிக்கின்றது.
இங்கே சொல்கிறவர் யார் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; இங்கே கேட்கின்றவர் யார் என்றால் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள்!
ஆகவே, யார் எதைச் சொன்னாலும் - அதைக் கேட்கின்றவர்கள் யாராக இருந்தாலும், அதிலுள்ள மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்பதுதான் வள்ளுவருடைய நோக்கமாகும். இதுதான் தமிழரின் பகுத்தறிவுக் கொள்கையுமாகும்.
அது போலத்தான்,
'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
என்று வள்ளுவர் கூறியிருக்கிறார்.
ஒரு பொருளின் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடக் கூடாது. பார்வைக்கு ஒருவிதமாகத் தோன்றலாம். அதன் தன்மை வேறுவிதமாக இருக்கலாம். ஆகவே, தோற்றத்தைக் கண்டு - அலங்கரத்தைக் கண்டு மயங்கி விடாமல் அதில் ஆழப் பதிந்திருக்கின்ற கருத்தைத்தான் நாம் உணர்ந்து பார்த்தாக வேண்டும்.
அதற்குத்தான் வள்ளுவர் சொன்னார் - 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்று.
இந்த முறையிலே, தமிழிலுள்ள கருத்துக்களில் எது நல்லது - எது, எந்த நேரத்தில் செய்யப்பட வேண்டியது - எது எவர் செய்ய வேண்டியது என்று பகுத்து உணர்ந்து செய்வார்களேயானால், அவர்களுக்கு வாழ்வு சிறக்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழிலுள்ள நற்கருத்துக்களை நாம் மற்றவர்களுக்குத் தர முயலுதல் வேண்டும். அப்பொழுதுதான் நாம் அடைகின்ற இன்பத்தை அவர்கள் பெறச் செய்தவர்கள் ஆவோம்.
ஒரு சமுதாயத்துக்கு உரிமையும் கடமையும் பிரிக்க முடியாத இரண்டு அம்சங்களாகும். உரிமையைப் பெறுவதற்குக் கடமையையும் செய்ய வேண்டும், உரிமையைப் பெறுவதற்கு நாம் தயங்கக் கூடாது.
அதே நேரத்தில், கடமையைச் செய்வதற்கும் நாம் தயங்கக்கூடாது. இதில் எந்த ஒன்றையும் விட்டு விட முடியாது.
ஆகவே, இங்கு வாழ்கின்ற நாம் நமது உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். அதே நேரத்தில் கடமைகளையும் ஆற்றி வருகின்றோம். இந்த நிலை தொடர்ந்து நீடித்து வரவேண்டும்.
----------------------------------------------------
அதுமட்டுமல்ல; அறிஞர் அண்ணா அவர்கள் இருக்கின்ற நேரத்தில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
உலகத் தமிழ் மன்றம், மலேயாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு ஒன்று அடுத்த ஆண்டு ஏப்ரலில் இங்கு நிகழ இருப்பது தமிழர்களுக்குப் பெருமை தரக் கூடியதாகும்.
இது நமக்குப் பெருமை தருவதுபோல், அறிஞர் அண்ணா அவர்களுக்கும் பெருமை தரும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
இந்தக் கருத்தரங்கு இங்கு நடைபெறுகிற அளவுக்குப் பெருமை ஏற்பட்டதற்கு மலேசியாவில் வாழ்கின்ற அமிழர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள்தாம்"
- தமிழ் மலர் - சிங்கப்பூர்
[அமைச்சர் மாணிக்கவாசகம் குறிப்பிட்ட கருத்தரங்குதான் கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாடு. அடுத்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரானதும் தமிழ்நாட்டில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது]