"மலேசியத் தமிழர் எந்த அளவுக்குத் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் தங்களுடைய வருமானத்தை அவர்கள் எந்த அளவுக்கு மிச்சம் பிடித்துக் கொள்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேண்டும்.
"ஒரு நாளைக்கு இருபது வெள்ளி வருவாய் வந்தால், அந்த இருபது வெள்ளியையும் செலவழித்துவிட்டால், எதிர்காலம் ஒளிமயமாக இருக்காது. அவர்கள் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். அவர்கள் அலட்சியமான காரியங்களிலே பொருளைச் செலவழிக்கக் கூடாது. வருகின்ற வருமானத்தின் ஒரு பகுதியைச் சிக்கனப்படுத்தித் தங்கள் குடும்பத்தின் எதிர்கால நல்வாழ்வுக்காக அவர்கள் மிச்சப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஒரு செம்மையான சமுதாய அமைப்பை அவர்கள் பெறமுடியும்"
- என்று அறிஞர் அண்ணா அவர்கள், கிள்ளானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மலேசியத் தமிழர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் ஆற்றிய முழு விவரம் வருமாறு:-
முதலில் ஆதரவுக் கரம் நீட்டிய துங்கு!
இந்தியாவில் ஆக்கிரமிப்பு ஏற்பட்ட நேரத்திலே நாங்கள் 'ஆதரவுக் கரம் நீட்டுவோர் யார்?' என்று உலகை நோக்கினோம். அப்போது, இதயசுத்தியோடும் அஞ்சாநெஞ்சத்தோடும் அரசியல் யூகத்தோடும் எங்களுக்கு முதன் முதலில் ஆதரவு தந்தவர் பிரதமர் துங்குதான்.
ஆதரித்து அறிக்கை விட்டதோடு துங்கு நின்றுவிடவில்லை. நிதியுதவியும் செய்தார். அவர் இந்தியாவுக்கு உற்ற நண்பராக விளங்கினார்.
ஆக்கிரமிப்புக்கு அதிராக எங்களுக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும்கூட இப்பொழுது உதவி செய்கின்றன. அதே நேரத்தில் எங்களது எதிரிக்கும் அவை உதவுகின்றன.
ஆனால் அப்படியில்லாமல் எங்களுக்கு முழு அளவில் ஆதரவு தந்த முதல் நாடு மலேசியாதான்.
எங்களை அழைக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. அதேபோல் அதை ஏற்கும் கடமை எனக்கும் இருக்கிறது. மறுக்கக்கூடிய துணிவு எனக்குக் கிடையாது. ஆகவேதான், உங்களுடைய அன்பு அழைப்பை ஏற்று நான் இங்கு வந்திருக்கிறேன்.
என்னுடைய விருப்பமெல்லாம் உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்துக் கைகுலுக்கி அளவளாவ வேண்டும் என்பதுதான். ஆனால் எனக்கு இருக்கின்ற குறுகிய நாட்களோ இதனை அனுமதிக்கவில்லை.
தவிரவும், அவசரகாலம் நடைமுறையில் இருப்பதால் திறந்த வெளிகளிலும், வெட்ட வெளிகளிலும் கூட்டம் நடத்த முடியாத நிலை இருப்பதால் கட்டிடங்களுக்குள்ளே கூட்டம் நடக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆகவே, திரளான மக்கள் உள்ளே வந்து அமருவதும், பெருங் கூட்டத்தைக் கண்டு களிக்கக் கூடிய ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது.
என்னைப் பற்றிய ஐயம் ஏன்?
என்னுடைய வருகை குறித்து அரசியல் வட்டாரங்களிலே ஓர் ஐயப்பாடு இடம்பெற்றது. "தமிழகத்தில் அரசியல் குழப்பத்தில் ஈடுபட்டிருப்பவனாயிற்றே இந்த அண்ணாதுரை; இந்த அண்ணாதுரை இங்கே வருகிறார். இங்கேயும் அதனைச் செய்வானே" என்ற பேச்சு அடிபடுகிறது.
ஆனால் உண்மையிலேயே நான் குழப்பத்தை மூட்டுகிறவன் அல்ல; அது எனது இயல்புக்கு அப்பாற்பட்டது. மாறாக சீரான ஓர் அரசியலுக்கு நான் வழிவகுத்துச் செல்பவன்.
தாய்மார்களைக் கேட்டால் சொல்வார்கள் - குழம்பு சமைக்க வேண்டுமானால் கத்தரிக்காயைப் பதமாகக் கழுவி நறுக்கி முறையாக அதற்கு மசாலா சேர்த்துச் சமைத்தால்தான் சரியான குழம்பு கிடைக்கும். அப்படி இல்லாமல் கத்தரிக்காயை அப்படியே போட்டு வேக வைத்தால் குழம்பு ஆகிவிடாது.
அதுபோல அரசியல் கருத்துக்களைப் பக்குவமாகத் தேர்ந்தெடுத்துப் பதமாகச் சொல்கின்ற போதுதான் அது சரியான குழம்பாகச் சமுதாயத்தில் அமையும். இல்லாவிட்டால் அது அவ்வளவு சிறந்து குழம்பாக இருக்காது.
குழப்பத்தைத் தவிர்க்க விரும்புபவன்
ஆகவே, நான் கூறிக்கொள்வேன்; நான் அரசியலிலே குழப்பவாதியல்ல; மாறாக அரசியல் குழப்பத்தைத் தவிர்க்க விரும்புகிறவன்.
மலேசியாவின் அரசியலிலே தலையிடுவதும், அல்லது அதைப் பற்றிக் கருத்துரைப்பதும் என் கடமையல்ல; ஏனென்றால் எனக்கு எனது நாட்டிலேயே அரசியல் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, இங்கு கிளம்புகிற அரசியல் பிரச்சினைகளிலே நான் சம்பந்தப்பட விரும்பவில்லை.
இங்கேயுள்ள அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தகுதி வாய்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
அரசியலை மறந்திருக்கவே வந்தேன்!
உண்மையிலேயே நான் ஏன் இங்கு வந்தேன் என்றால் ஒரு பதினைந்து இருபது நாள் அரசியலை மறந்திருக்கலாமே என்ற நோக்கத்தோடுதான் வந்தேன்.
அரசியலில் தலையிடக்கூடிய உத்தேசம் எனக்கு அறவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பல கருத்து வேறுபாடு இருந்த போதிலும் கூட ஒற்றுமை காணக்கூடிய மனப்பக்குவம் ஏற்படவேண்டும். எனக்கு இன்று திரு.பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் விருந்தளித்தார்கள்; அப்பொழுது நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்ச்சியை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
திரு. பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் இறைச்சி சாப்பிடக் கூடியவர்; ஆனால் அவர் துணைவியாரோ அதைச் சாப்பிடாதவர்.
அப்படியிருந்தும்கூட அவருடைய துணைவியார் என்னை நோக்கிக் கூறினார், 'அதிகமாக மாமிசம் சாப்பிடுங்கள்' என்று; ஆனால் எனக்குக் கொஞ்சம் தயக்கம்.ஏனென்றால் 'மாமிசம் சாப்பிடாத ஓர் அம்மையார், நம்மை மாமிசம் சாப்பிடச் சொல்கிறார்களே . அவர்கள் முன் மாமிசம் சாப்பிட்டால் அநாகரிகமாக இருக்குமே என்ற எண்ணத்தோடு, நான் இருந்துவிட்டேன்.
இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இறைச்சி சாப்பிடுகின்ற பெரியகருப்பன் செட்டியாரும், இறைச்சி சாப்பிடாத அவர் துணைவியாரும் ஒன்றுபட்டுக் குடும்பத்தை இன்புற நடத்தி வருகின்றனர். அவர்களுக்கிடையே வேற்றுமை இருந்த போதிலும்கூட, அது ஒரு குடும்பத்தில் சுமூகத்தைக் குலைக்கவில்லை.
மலேசியா உங்கள் நாடு
அதுபோலத்தான் அரசியலிலே வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காணக்கூடிய மனம் மக்களிடையே ஏற்படவேண்டும்.
நீங்கள் இந்த நாட்டுக் காற்றைச் சுவாசிக்கிறீர்கள்; உங்களுடைய வியர்வை இந்த நாட்டிலே சிந்தப்படுகிறது; உங்களுடைய உணவு இந்த நாட்டிலிருந்து கிடைக்கிறது; உங்களுடைய வாழ்க்கை முறை இந்த நாட்டிலேயே அமைந்திருக்கிறது.
ஆகவே, மலேசியா உங்கள் நாடு; அதன் வாழ்வுக்கும் வளத்துக்கும் பாடுபட வேண்டியது உங்களுடைய கடமை.
மலேசியாவில் ஏறத்தாழ பத்து இலட்சம் தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள். தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகத் தமிழர்கள் வாழ்கின்ற நாடு மலேசியாதான்.
தமிழர்கள் உலகத்தின் பிறபாகங்களிலும் வாழத்தான் செய்கிறார்கள்; ஆஸ்திலேலியாவில் ஒரு பகுதியிலும், பீஜித் தீவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன், நேட்டால் போன்ற நகரங்களிலும், பர்மாவிலும், இலங்கையிலும் இன்னும் சொல்லப்போனால் வியட்நாமிலும் கூடத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
'வியட்நாமிற்கு வரவேண்டும்' என்றுகூட எனக்குத் தமிழர்களிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.
இப்படி உலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் பரந்து வாழ்ந்த போதிலும்கூட, மலேசியாவில் மட்டுந்தான் தமிழர்கள் பெரிய அளவில் வாழ்கிறார்கள். இங்கு இவர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்பதற்காக மட்டும் இதனை நான் குறிப்பிடவில்லை; அவர்கள் சிறந்த வாழ்க்கையை மலேசியாவில்தான் பெற்றிருக்கின்றார்கள் என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
அங்கு இருக்கிறார்கள் - இங்கு வாழ்கிறார்கள்!
மற்ற நாடுகளிலே தமிழர்கள் ஏதோ இருக்கிறார்கள், ஆனால் இங்கேதான் அவர்கள் வாழ்கிறார்கள்.
'இருக்கிறார்கள்' என்பதற்கும் 'வாழ்கிறார்கள்' என்பதற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நிம்மதியில்லாத ஒருவரைப் பார்த்து 'என்ன ஐயா சேதி?' என்று கேட்டால், ஏதோ இருக்கிறேன் என்று கூறுவார். அதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அவரது ஊள்ளத்திலே அவரது வாழ்விலே நிம்மதி இல்லை என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் நிம்மதியாக வாழ்கிற ஒருவரைப் பார்த்து 'எப்படி ஐயா வாழ்கிறீர்கள்?' என்றால், 'நல்லபடியாக வாழ்கிறேன்' என்று சொல்லுவார்.
ஆக, இதுபோல் வித்தியாசத்தை நீங்கள் காண முடியும்.
இந்த மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்கள் நல்லபடியாக, நிம்மதியாக வாழ்கிறார்கள். அதனைக் காணுகின்ற எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி பிறக்கிறது.
ஆகவே வேறு எந்த நாட்டிலும் இல்லாத நல்ல வாய்ப்பு இங்கே தமிழர்களுக்கு இருக்கிறது. வேறு நாடுகளிலே தமிழர்க்கு அமைந்திருக்கிற அருவருப்பான நிலையும், சமவுரிமையற்ற தன்மையும் இங்கே இல்லை. இங்கே குடியுரிமையும் சமவுரிமையும் பெற்ற மக்களாய் அவர்கள் வாழ்கிறார்கள்.
மாண்புமிக்க, துங்குவின் தலைமையின் கீழ் அவர்கள் சீராக வாழ்ந்து வருகிறார்கள்.
துங்குவின் குணநலம்!
உண்மையிலேயே துங்குவின் குணநலத்தைப் பற்றி நான் குறிப்பிடும்போது ஒன்று சொல்லித் தீரவேண்டும். அவர் மலாய் மக்களையும் சீன மக்களையும் தமிழ் மக்களையும் தம்முடைய மக்களாகவே கருதுகின்றார்; அவர்கள் அனைவரது உயர்விலேதான் தம்முடைய தலைமையின் சிறப்பு அமைந்திருக்கிறது என்று அவர் மனமார நம்புகிறார். அந்த அளவுக்கு அரசியல் கண்ணியம் பொருந்திய அவரது ஆட்சிக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவருடைய கொள்கையெல்லாம் 'வாருங்கள், வாருங்கள், உங்களுக்கு நல்வாழ்வு தருகிறேன்' என்பதுதான். இதுதான் அவருடைய தாரக மந்திரமாக அமைந்திருக்கிறது.
ஆஸ்திரேலியவில் நிற வேற்றுமையின் காரணமாக நாம் குடியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இங்கிலாந்து நாட்டிலும் கூடக் குடியேற்றம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இருகரம் நீட்டித் தமிழர்களை வரவேற்ற நாடு மலேசியா என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆகவே, இங்குள்ள மக்கள் இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு சிறப்புடன் வாழ முயல வேண்டும்.
துங்குவுக்குத் துணையாக நிற்பீர்!
எல்லைப்புறத்தில் தொல்லை ஏற்பட்டிருக்கிற இந்த நேரத்திலே துங்குவுக்குத் தமிழ் பேசும் பத்து இலட்சம் மக்களும் பக்கத் துணையாக - பக்கபலமாக இருக்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
மலேசியா, தமிழ்மக்களிடமிருந்து கடமையை எதிர் பார்க்கிறது. இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழர்கள் வேறு யாருக்கும் பின்வாங்கிவிடக் கூடாது.
இலக்கியத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டுமானால் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் நூல்களிலெல்லாம் மிகவும் பழமை பொருந்தியது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் என்றாலே மிகவும் பழமை வாய்ந்த ஒரு நூல் என்று பொருள். அந்தத் தொல்காப்பியத்திலே வருகின்ற சூத்திரங்களைக் கவனித்துப் பார்க்கும்பொழுது அதற்கு முன்னர் பல புலவர்கள் பலவாறு கூறி வைத்திருக்கிறார்கள் என்பது புலனாகும்.
தொல்காப்பியத்திற்கு முன்னரே பல புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால், தமிழர்களின் வரலாறு எந்த அளவுக்குப் பழமை பொருந்தியது என்பது விளங்கும். அப்பொழுதே தமிழ் சிறந்து விளங்கியிருக்கிறது என்பது புரியும்.
உயர்தனிச் செம்மொழி
உலகத்தில் உயர்தனிச் செம்மொழியாக விளங்குகின்றவை மிகச் சொற்பம். அவற்றிலே லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரு, தமிழ்மொழி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
லத்தீன் இன்று எந்த அளவிலே இருக்கிறது என்றால் அதனைப் பேசுவோர் அதிக அளவிலே மேலை நாட்டிலே இல்லை. அதுபோல, சமஸ்கிருதத்திலே உரையாடுவோரை இன்று காண்பது அபூர்வமாக இருக்கிறது. அதேபோலத்தான் ஹீப்ரு மொழியும்.
ஆனால் தமிழ்மொழியோ பண்டுதொட்டு இன்றுவரையில் சிறப்புக்குரிய மொழியாக இருந்து வருகிறது. அது உண்மையிலேயே முன்னோர்கள் நமக்குத் தந்த கருவூலமாகும். மிகப் பெரும் மதிப்பு வாய்ந்த செல்வமாகும். இந்தச் செல்வந்தான் உங்களையும் எங்களையும் பிணைத்து வைக்கிறது.
ஒரு நிருபர் என்னிடம் கேட்டார்: "இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று.
அதற்கு நான், "இன்னும் இரண்டு வாரத்திற்குப் பின்னரே இதுபற்றி நான் கருத்துரைக்க முடியும்" என்றுதான் சொன்னேன். ஆனால் நான் இதுவரை பார்த்தவரையிலே எனக்குத் தோன்றுவதெல்லாம் 'அவர்கள் மிக நிம்மதியாக வாழ்கிறார்கள்' என்பதுதான்.
ஆனாலும், எத்தனை பேருக்குச் சொந்த வீடு இருக்கிறது? எத்தனை பேர்கள் நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத்தெரியவேண்டும். எனவே, இன்னும் எஞ்சிய நாட்களிலே இங்கு இருந்து பார்த்தால், அது எனக்குப் புரியவரும்; அப்பொழுது என்னுடைய தெளிவான - முடிவான கருத்தை உங்களுக்குச் சொல்ல முடியும் என்று கூறினேன்.
பார்த்தவரையில் மகிழ்ச்சி:
இதுவரை, பார்த்தவரையிலே நான் தமிழ் மக்களின் நிலையைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
ஊருக்கு வருகின்ற தமிழர்களைப் பார்க்கிறேன்; அவர்கள் பளபளப்பான சட்டை அணிந்திருக்கிறார்கள்; பொன்னிறக் கடிகாரத்தை அணிந்திருக்கிறார்கள்; இவையெல்லாம் 'அவர்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்' என்பதற்கு ஒர் அடையாளமாகத்தான் நான் கருதுகிறேன்.
மலேசியத் தமிழர்கள் ஒரு துறையிலே அதிகமாகச் செலவழிக்கலாம்; அந்தத் துறை என்னவென்றால் பிள்ளைகளைப் படிக்க வைப்பதுதான்.
உண்மையிலேயே நல்லமுறையில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கு அவர்கள் எவ்வளவு செலவிட்டாலும் நான் வரவற்பேன். வேறு வழிகளில் செலவிடுவதில் பயனில்லை என்று நான் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பலதுறைகளிலும் முன்னேற வேண்டும்
இன்று பெரும்பாலான தமிழர்கள் ரப்பர் தோட்டங்களிலே வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். இரு போதாது. கட்டடக் கலையிலும், வர்த்தகத்திலும் கல்வித் துறையிலும், தொழில் துறையிலும் அவர்கள் முன்னேற வேண்டும். பல தொழிற்சாலைகளும், பல வர்த்தகக் கூடங்களும் தமிழர்களுக்கு உரிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு அடிப்படையான ஆதாரமான ஒரு சமுதாய முறை ஏற்படும்.
நான் உங்களுக்கு ஜப்பானை ஒரு உதாரணமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜப்பானின் அதிசயமான முன்னேற்றம் நம்முடைய அறிவுக்கு விருந்தாக அமைகின்றது. அமெரிக்காவில் செய்யப்படுகின்ற 'டார்ச்' விளக்கை முன் மாதிரியாக வைத்துக்கொண்டு அதேபோல டார்ச் லைட்டை குறைந்த விலைக்குச் செய்து அதே அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறது ஜப்பான். இதைக் கண்டு மலைக்கிற அமெரிக்கர்கள் ஜப்பானுக்குத் தமது நிபுணர்களை அனுப்பிவைக்கிறார்கள். இப்படி குறைந்த விலையில் எப்படி அவர்களால் விற்க முடிகிறது என்று வியப்படைகிறார்கள்.
ஜப்பானைப் பாருங்கள்
உண்மையிலேயே இந்த ஜப்பான், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் அணுக்குண்டு விழுந்த இடமாகும். இடிந்த கட்டிங்களையும் அழிந்த அரசாங்க நிலையங்களையும் செப்பனிட்டு வருகின்ற அதே நேரத்தில்தான் தன்னையும் வளர்த்து வந்திருக்கிறது ஜப்பான். அது இன்று பல நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் நிலையைப் பெற்றிருக்கிறது.
இந்தியாவில் இரும்பு ஆலைத் திட்டத்திற்கு ஆலோசனையும் உதவியும் அணிக்கின்ற அளவுக்கு ஜப்பான் முன்வந்திருக்கிறது. இதிலே உள்ள ஒரு வெட்கக்கேடு என்னவென்றால், ஜப்பானில் இரும்பே கிடையாது. அப்படி இரும்பே விளையாத ஜப்பான் இரும்பு விளையும் இந்தியாவுக்கு ஆலோசனை கூறும் நிலையைப் பெற்றிருக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே ஜப்பானில் சேமிப்பு விகிதாசாரம் அதிகமாக இருக்கிறது. இந்த முறையில் உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டால் 10, 15 ஆண்டுகளில் உங்கள் சமுதாயம் நிச்சயமாகப் பலம் பொருந்தியதாக, வலுவுடையதாக விளங்கும் என்பது எனது திடமான நம்பிக்கை"
இந்தக் கூட்டத்திற்கு நா.பெரியகருப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். கூட்டத்திற்கு இடையிடையே அண்ணா அவர்கள் அருமையான பேச்சுக்குக் கையொலியும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் விண்ணதிர முழங்கின.
- 'தமிழ்மலர்' சிங்கப்பூர்