கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டுத் திரும்பிய அறிஞர் அண்ணா அவர்கள், பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கை வருமாறு:
கிழக்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நாங்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்தோம்.
எங்களுக்குக் கிடைத்த சிறிது காலத்தில் - இந்த நாடுகளின் பல்வகைச் சூழ்நிலை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் கற்றறிய முடியாது; எங்களால் மட்டுமல்ல - உள்ளபடியே யாராலும் முடியாது.
நாங்கள் சென்ற நாடுகளிலிருந்த அரசினருக்கும், நமது நாட்டுத் தூதுவரகங்களுக்கும், ஹைகமிஷனர் அலுவலகங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் எல்லோருமே நட்புடனும், உற்சாகத்துடனும் எங்களை வரவேற்றார்கள்.
அங்குள்ள தமிழ் பேசும் மக்களைப் பற்றிச் சில வார்த்தைகள்: மலேசியாவில் அவர்கள் பத்து இலட்சத்திற்கு மேல் இருக்கிறார்கள். மற்ற நாடுகளில், ஆயிரக் கணக்கிலோ நூற்றுக் கணக்கிலோ இருக்கிறார்கள்.
நாங்கள் பயணம் செய்த நாடுகளில் குறிப்பாக மலேசியாவில் தமிழ் பேசும் மக்கள் அந்த நாட்டோடு ஒன்றிப் போய்விட்டார்கள்.
திரு.துங்கு அப்துல் ரகிமானின் சிறந்த தலைமையின் கீழ், மூன்று தனி இனங்களாக மலாய் - சீன - தமிழ் மக்கள் ஒரே அமைப்பாக வாழ முயன்று கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதாரப்படி, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள இந்த நாடுகள் முன்னேற்றப் பாதையில் முன்னேற வெகு தீவிரமாகி வருகின்றன.
சமூக இயல்படி, இங்கு பல்வேற கலாசாரமுள்ள மக்கள், இயைந்த - பழைய பரம்பரை உணர்வுகளைப் புறக்கணிக்காத புதிய பாழ்க்கையைக் கொண்டிருக்கிறார்கள்.
மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய கிழக்காசிய நாடுகளில் பொங்கி வழியும் உற்சாகமும், செயற்திறமையும்தான் எங்களை மிகவும் கவர்ந்தன. வாழ்வின் மிக உயர்ந்த தரத்தை அடைய இந்த நாடுகளில் இடைவிடாத முயற்சி நடக்கிறது. முயற்சிக்கத் தகுந்த முன்னேற்றமும் நம்பிக்கையும் தோன்றுகின்றன.
அளவில் பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும், இந்த நாடுகளிலிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
குறைவான காலக் கட்டத்தில் தொழில் நுட்ப, பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள அந்த நாடுகளிலிருந்து - குறிப்பாக, ஒளிவிடும் உதாரணமாக இருக்கும் ஜப்பானிடமிருந்து, நாம் பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.