"இங்குள்ள ஏடுகளில் 'சென்னைக் கடிதம்' பிரசுரிக்கப் படுவதுபோல், தமிழ்நாட்டில் மலேசியக் கடிதம் பிரசுரிப்பதற்கு நான் ஆவன செய்வேன்" என்று இங்கு அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்.
"தமிழ் நாட்டைப் பற்றி - இந்தியாவைப்பற்றி இங்குள்ள மக்கள் தெரிந்து வைத்துள்ளதைப்போல், தமிழ்நாட்டு மக்கள் மலேசியாவைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்" என்றார் அவர்.
தமிழகத்தில் 'பம்பாய்க் கடிதம்', 'டில்லிக் கடிதம்' 'இலங்கைக் கடிதம்'பிரசுரிக்கப்படுகின்றன. அதுபோல் இனி 'மலேசியக் கடிதம்' பிரசுரிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார் அண்ணா.
இந்த நாட்டு மக்கள் வாழ்க்கை நிலையைப்பற்றி அவரது கருத்தைக் கேட்டபோது, 'பொதுவாக அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காண்கிறேன்; எனினும் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது' என்றார் அவர்.
தாம் தமிழ்நாடு திரும்பிச் சென்றவுடன், தம்முடைய கருத்துக்களை 'தம்பிக்கு' எழுதுகின்ற கடிதங்களில் தெளிவாக எழுதுவதாகக் கூறினார்.
திராசிடநாடு பற்றி கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியதாவது:
"சீனாக்காரன் எல்லையில் பயமுறுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், நாட்டுப் பிரிவினை கேட்டுக்கொண்டிருக்க முடியாது; கட்சியின் சட்ட திட்டங்களையும் அதற்கேற்றபடி மாற்றி அமைத்துவிட்டதால் இனிப் பிரிவினைப் பேச்சே இல்லை" என்று கூறினார்.
பிரிட்டன், அமெரிக்க நாடுகளிலுள்ள எதிர்க்கட்சிகளைப் போன்று திராவிட முன்னேற்றக் கழகம் வெளிநாட்டுக் கொள்கைகளில் அதிகக் கவனம் செலுத்தாது இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
- தமிழ்நேசன்