காஜாங் நகர மண்டபத்தில் 22.7.65 மாலை 6 மணிக்கு சுமார் 3000 மக்கள் கூடியிருந்து அறிஞர் அண்ணா அவர்களுக்கு வரவேற்பளித்தனர். அண்ணா அவர்கள் இக்கூட்டத்தில் பேசியதாவது:
"தங்களின் வற்றாத உழைப்பைத் தந்து மலேசிய நாட்டை வளமாக்கும் பாட்டாளி மக்கள் தங்களின் சந்ததியினை வழிவழியாக ரப்பர் தோட்டங்களிலும், ஈயச் சுரங்கங்களிலும் ஈடுபடுத்தி, அவர்களின் எதிர்பாலத்தைப் பாழாக்காமல், தங்களின் செல்வங்களை நன்கு படிக்க வைத்துப் பிற இனத்தவர்போல் டாக்டராகவோ, பொறியியல் வல்லுநராகவோ விளங்குமாறு செய்ய வழி செய்ய வேண்டும்.
தமிழகத்திலிருந்து புறப்படுவதற்கு முன் இங்கு வாழும் தமிழ் மக்கள் சீரும் சிறப்புமாக வாழ்கின்றார்கள் என்றே எண்ணி வந்தேன். ஆனால் பத்துச் சதவிகிதத் தமிழ் மக்களே எல்லா வசதிகளும் பெற்ற வாழ்வதை அறிந்து மிக மன வருத்தம் கொள்ளுகிறேன். இங்குள்ள பாட்டாளி மக்கள் அயராது உழைத்தும், திரளாகப் பொருள் தேடியும் வீணாக ஆடம்பரச் செலவு செய்துவிட்டுக் குடியிருக்கத் தமக்கான ஒரு சொந்த வீடும் இல்லாத நிலையில்உள்ள காட்சியினைக் காணவும், என் பேச்சைக் கேட்கவும் துடித்த நீங்கள், உங்களது வாழ்க்கையில் மூன்று உயரிய கோட்பாட்டினைக் கடைபிடிக்க வேண்டும். அதனைச் செயலாக்கி நல்வாழ்வு தேடவேண்டும்.
பாட்டாளி மக்கள் தோழமையுடன் வாழவேண்டும். உங்களுக்குள் ஒன்றுமை நிலவ வேண்டும். ஒற்றுமை குன்ற ஆரம்பித்தால், பாட்டாளிகளின் சக்தி அழிந்து எதிர்காலமே மங்கிய நிலையை நிலையை பெற்றுவிடும்.
திருக்குறளை மறவாதீர்!
இன்று முதல் சேமிக்கத் தொடங்குங்கள். இன்னும் பத்தாண்டு கழித்து செல்வ நிலையின் பேற்றினைப் பெறுவீர்கள். எப்படி ஒரு மரம் தனது வேர்களைப் பரவலாக விட்டு, உறுதியாக, நிலையக விளங்க முடிகிறதோ அது போன்றே உங்களது நிலையும், உங்களின் சந்ததியின் நிலையும் உயர்ந்து விளங்க ஏதுவாகும்.
தாய்மொழியாகிய தமிழ் மொழியை நீங்கள் படிப்பதன்றி தமிழின் சிறப்பைப் பிறரும் அறியும் வண்ணம் செயலாக்க வேண்டும். வாழ்க்கை முறையினை - ஒழுக்க சீலத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் திருக்குறளைப் படிக்க மறவாதீர்கள். திருக்குறள் இல்லாத இல்லமே இம் மலேசியத்தில் இருக்கக்கூடாது. சாதியை ஒழிப்பதற்கும் திருக்குறள் ஒன்றே வழியாகும். அதன் சிறந்த கருத்துக்கள் உங்கள் வாழ்வுக்கு வழிகாட்டியாகும்.
உங்களது உயிரும் உடலும் மலேசிய மண்ணோடு பிணைக்கப்பட வேண்டும். வார்வையும் வளத்தையும் வழங்கிய நாட்டுக்குத் தனது விசுவாசத்தை மெய்ப்பிக்கத் தவறும் மனிதன் மனிதனல்ல; அதிலும் தமிழனல்ல"
அண்ணாவுக்குத் தங்கப் பதக்கமும் பேனாவும், மலேசியாவின் அமைப்பைக் கொண்டதும், ரப்பர் மரம் வெட்டும் உளி போன்றவற்றையும் நினைவுப் படுத்துவதும் வெள்ளிக் கேடயம் ஒன்றும் காஜாங் வட்டார மக்கள் அன்பளிப்பாகத் தந்தனர்.