ஈப்போவுக்கு வரவிருந்த அறிஞர் அண்ணா அவர்களின் வருகை திடீரென்று ரத்து ஆகியதால், ஈப்போ நகரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இங்குள்ள தமிழர்களின் முகங்களெல்லாம் அண்ணாவின் வருகை ரத்தானதைக் கேட்டு வருத்தமும், சோகமும் சூழ அனைவரும் வீடு திரும்பினர்.
ஈப்போ பேரா ஸ்டேடியத்தில் 27.7.65 மாலை 6 மணிக்கு அண்ணா அவர்களுக்கு வரவேற்பளிக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ம.தி.மு.க. அறிவித்திருந்தும், 'கூட்டம் கட்டாயம் நடைபெறும்' என்று நம்பிய உள்ளூர் - வெளியூர்ப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகப் பிற்பகல் 3 மணி முதலே கூடத் தொடங்கிவிட்டனர்.
பல பகுதிகளிலிருந்தும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பஸ்களிலும், இருநூறுக்கு மேற்பட்ட கார்களிலுமாக சுமார் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஈப்போ ஸ்டேடியத்தை அடைந்தனர்.
அண்ணாவுக்குப் பரிசாக அவர்கள் தஞ்சோங் ரம்புத்தான் மக்கள் சார்பில் ஐந்து பவுன் நிறையுள்ள தங்கப் பதக்கம் கொண்டு வந்திருந்தனர். கோப்பெஞ் பகுதி மக்கள், தங்கத்தால் செய்த பால்வெட்டுக் கத்தியும் மற்றும் தங்கப் போனாக்களும், தங்கக் கடிகாரங்களும் இரத்தினக் கம்பளங்களும், சால்வைகளும், கைத்தறித் துண்டுகளும் கொண்டு வந்திருந்தனர்.
அண்ணா வராததனால் அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் வருத்தத்துடன் திரும்ப எடுத்துச் சென்றனர்.
அண்ணாவின் திருக்கழுத்தை அரங்கரிக்கக் கொண்டு வந்த 300க்கு மேற்பட்ட மலர் மாலைகள் வாடி வதங்கின!
சுமார் 30000 மக்கள் கூடுவர் என எதிர்பார்த்த உள்ளூர் மாவட்ட போலீசு அதிகாரி, சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசுக்காரர்களைக்கொண்டு ஒழுங்கை நிலைநாட்ட ஏற்பாடு செய்திருந்தார்.
அண்ணா வராததனால் அங்கிருந்த போலீசுக்காரர்கள் கூடியிருந்த மக்களைக் கலைந்து செல்லுமாற கேட்டுக்கொண்டார்.