மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
இருபதாயிரம் மக்கள் நனைந்துகொண்டே
அண்ணா உரை கேட்டனர்!

 

"இந்நாட்டில் தென்னையும் வாழையும் செழிப்புடன் பூத்துக் குலுங்குகின்றன. இதைப் போலவே தமிழ்நாட்டிலும் செய்ய முடியும்; ஆனால் அதற்கு அங்குள்ள அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்" என்று அண்ணா அவர்கள் பினாங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் விளக்கினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு:-

"இந்தோனேசியாவின் எதிர்ப்பு மலேசியாவுக்கு ஏற்பட்டிருப்பதை இந்தியா நன்கு அறிந்துள்ளது. மலேசியாவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்திய அரசங்கத்தின் சார்பில் நான் இதைக் கூறவில்லையாயினும் நான் ஓர் இந்தியன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன்.

மலேசியத் தேசியப் பாதுகாப்புக்கு இங்கு நிதி திரட்டப்பட்டது. தேசியப் பாதுகாப்பு நிதிக்குத் தமிழர்கள் அதிகம் நிதி வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் - தமிழ்ப் பண்பு - தமிழ்க் கலாசாரம் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பது தமிழர்களின் கடமையாகும். இந்த நாட்டைத் தங்கள் சொந்த நாடாக ஆக்கிக்கொண்டு இங்கே வாழ வேண்டும். தமிழகத்தில் கலாசாரத் தொடர்பு மட்டும் வைத்துக் கொள்ளலாம்."

"பினாங்கு நகரம் அழகோடும் வனப்போடும் அமைந்துள்ளது. நீங்களெல்லாம் மலர்ந்த முகத்தோடு இருக்கிறீர்கள். இப்படி உங்களை வளமாகவும் நலமாகவும் காண்கிறபோது 'நல்லதொரு ஆட்சி அமைந்தால் எங்கள் தமிழகமும் இப்படி இருக்குமே' என்று எண்ணத் தோன்றுகிறது.

"பன்னீர் தெளித்து இங்கு வந்த என்னை வரவேற்றீர்கள். உங்களை எதிர்பாராத விதமாகக் கொட்டுகின்ற மழையில் நனையும் நிலைமைக்கு உள்ளாக்கியதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன்.

"தமிழகத்தில் மழை பெய்து முடிகிறபோது ஒருவகை எரிச்சல் ஏற்படும். ஆனால் இங்கே மழை பெய்ததும் குளிர்ச்சி ஏற்படுகிறது. அடிக்கடி மழை பெய்கின்ற நாட்டில் வாழ்கின்ற உங்களை, மழையே பெய்யாத நாட்டைச் சேர்ந்த நான் 'மழையைக் கண்டு மருளாதீர்கள்' என்று கேட்டுகொள்ளக் கூடாது.

"இங்கே வாழ்கின்ற நீங்கள் மலேசியாவின் எதிர்காலத்தை ஒளி நிரம்பியதாக - பசுமை நிறைந்ததாக ஏற்றம் பெற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

"மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இருந்து வருகின்ற தொடர்புகள் நாளுக்கு நாள் - நேரத்திற்கு நேரம் வளரும் நட்பு முறையுடனும், பாச உணர்வுடனும் பழகி வர வேண்டும் என்று இருநாடுகளிலும் வாழ்கின்றவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

"மலேசியாவுக்கு எழுந்துள்ள ஆபத்தை நீக்குவதிலும் போக்குவதிலும் பாடுபட வேண்டும்" என்று இங்கு வாழ்கின்ற தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், ஒரு சிலரின் உள்ளத்தில் "ஊருக்கு உபதேசம் தேவையா?" என்று கேட்கத் தோன்றும்.

நான் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கிறவன் அல்லேன். தமிழ் நாட்டில் நான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன் அல்லேன். எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் அங்கே இருக்கிற ஆளுங்கட்சியைக் கீழே இறக்குவதுதான் என் வேலை. இதைச் செய்வதிலே கொஞ்சமும் வெட்கமோ தயக்கமோ நான் கொள்ளவில்லை".

[1967-ல் அண்ணா அவர்கள் ஆளுங்கட்சியைக் கீழே இறக்கிக் காட்டினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே]

ஆனால் ஒரு நாட்டிற்கு எதிர்க்கட்சியாக இருப்பதாலேயே அந்த நாட்டிற்கு ஆபத்து வருகிற நேரத்தில் "அந்த நாட்டைக் காப்பாற்றக் கூடாது" என்பது புத்தி கெட்டவர்களுடைய செயலாகும்.

ஆகையால்தான் எங்கள் நாட்டில் எனக்கு - எங்கள் நாடு ஆளுங்கட்சி மீது இருந்துவந்த கருத்து வேற்றமைகளை விட்டு, ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுத்தேன்.

அப்படிப்பட்ட செயலைச் செய்ததால்தான், இந்த இடத்திலேயும் கேட்டுக் கொள்கிறேன் - இங்கே மலாய் மொழி பேசுகிற மலாய்க்கார்களும், சீனம் பேசுகிற சீனர்களும், தமிழ் மொழி பேசுகிற தமிழர்களும், மலேசியாவைத் தாய்நாடாகக் கொண்டிருக்கின்ற அடிப்படையில், இந்த நாட்டிற்கு ஓர் ஆபத்து என்றால் - எதிரியால் மிரட்டல் என்றால் அடுத்தவனின் உருட்டல் மிரட்டல் ஏற்படுகிறதென்றால், ஒன்றுபட்டு எதிர்ப்பை முறியடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்."

அண்ணா தொடர்ந்து பேசுகையில் "நாட்டைக் காத்திட அரசாங்கத்திற்குத் தோளோடு தோள்நின்று உதவுமாறு" கேட்டுக்கொண்டார்.

"அரசாங்கம் தொடங்கியுள்ள நாட்டுத் தற்காப்பு நிதிக்கு ஒவ்வொரு தமிழனும் நன்கொடை வழங்குவது கடமை" என்றார்.

மழைத் தூற்றலையும் பொருட்படுத்தாது, சுமார் இருபராயிரம் மக்கள் அறிஞர் அண்ணா அவர்களின் தேன்தமிழ்ச் சொற்பொழிவை கேட்டு மகிழ்ந்தனர்.

திரு. கே.கே.டி.முகம்மது இப்ராகிம் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார் அவர் அண்ணா அவர்களின் அருமை பெருமைகளை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

"இன்று வெறும் அண்ணாவாக நம்முன் இருப்பவர், நாளை அமைச்சர் அண்ணாவாக ஆகக்கூடும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார். (அதே போல் 1967-ல் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத் தக்கது.)

திரு. அ.ந.சேதுராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai