இரண்டாயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய குவாங் தோங் சங்க மண்டபத்தில் 20.7.65 அன்று ஐயாயிரம் பேர் வரை அண்ணாவின் பேச்சைக் கேட்கக் கூடிவிட்டார்கள். இதனால் அமைதியின்மை ஏற்பட்டது..
கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் எவ்வளவோ வேண்டியும் உணர்ச்சிமிக்க மலேசியத் தமிழர்கள் அமைதி காக்கவில்லை!
தலைமையுரை ஆற்றிய திரு. கமருதீன் பின் மாட் ஈதா. (பேரா மாகாண ஆட்சிக்குழு உறுப்பினர்) ஆரம்பத்திலே தமது உரையைத் தமிழில் தொடங்கி மலாயில் தோடர்ந்து பேசினார்.
கூட்டத்தினரின் அமைதியின்மை காரணமாக அவர் பேசியது, யாருக்கும் காதில் விழவில்லை.
அண்ணா அவர்கள் எழுந்து அமைதியாக இருக்கும்படி கோரியும் அமைதி ஏற்படவில்லை! அடுத்து செழியன் பேச்சைப் பாதியில் முடிக்கச் செய்து மாலை அணிவிப்பு நிகழ்ச்சி துவங்கியது! அதன் பிறகுதான் கூட்டம் அமைதியுற்றது.
அதன் பிறகு அண்ணா அவர்கள் அமைதியாக இருக்க வேண்டியதன் அவசியம் - கடமையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்ட வேண்டியதன் பொறுப்புணர்வு ஆகிவற்றை வற்புறுத்தி விட்டு மேலும் பேசியதாவது:-
"மலேசிய நாட்டில் வாழும் நீங்கள் அன்பு முகங்காட்டி, கனிவுடன் வரவேற்பது, பல ஆண்டுகள் எங்கள் உள்ளத்தில் பசுமையுடன் இருக்கும். முதலில் மலேசியாவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டபோது, சில நகரங்களில் மட்டுமே பேசுவது என்று கூறினோம். ஆனால் இங்கு வந்த பிறகு எல்லாக் கூட்டங்களிலும் பேசச் சொன்னார்கள். இந்தக் கூட்டங்களில் உள்ளே வந்து வெளியே போவது மிகவும் சிரமமாக இருக்கிறது.
என்மேல் கொண்ட அன்பால், பாசத்தால் அனைவரும் என்னை அருகில் நின்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்! என் உருவத்தை பார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
எங்கள் நாட்டில் சாதாரணக் கூட்டம் ஓர் இலட்சம் பேர்களை கொண்டதாக இருக்கும். சில ஊர்களில் அது இரண்டு மூன்று இலட்சங்களைக் கொண்டதாகக் கூட இருக்கும்! அவ்வளவு பெரிய கூட்டங்களில் கூட இவ்வாறு தொல்லை ஏற்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் என்னை அடிக்கடி பார்ப்பவர்கள், நீங்கள் பார்த்தவர்கள் அல்லர்! இதுதான் முதல் தடவை.
இக் கூட்டத்திற்குத் தாய்மார்களும் குழந்தைகளும் வந்துள்ளனர். அவர்களது நலனைக் கருதியாவது அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!
உங்களையும் என்னையும் மொழியும் கலாசாரம் சேர்த்துவைத்தாலும், நாடு பிரிக்கிறது; உங்கள் நாடு மலேசியா; இதை மறுப்பதற்கில்லை; நீங்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள்; தகப்பனாரும் பாட்டன்மாரும் இங்கே பிறந்தவர்கள்.
இம் மலேசியாவில் நீங்கள் அனைவரும் நல்ல குடிமக்களாக இருக்கவேண்டும் என்பதே என் அவா!
தமிழ் உயரிய மொழி; அந்த மொழி பயின்றவர்கள் பண்போடு வாழ்ந்தால்தான் மற்றவர்களும் அதைக் கற்க முன்வருவர்.
தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் மலேசியா சிறந்த நாடு! தமிழுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அமைதியும் அன்பும் கொண்ட துங்குவின் பெருந்தன்மையே இதற்குக் காரணம். அரசியல் தெளிவும் மாண்பும் மிக்க நாட்டுத் தலைவராக இருந்தால்தான் பெருந்தன்மை கொண்ட மனம் வரும்! அந்த மனம் கொண்ட துங்குவுக்கு உங்கள் வாயிலாக நன்றி தெரிவிக்கிறேன்.
பல தலைமுறைகளாக இந்நாட்டின் இரத்தமாக ஊனாகத் தமிழர்கள் மாறிவிட்டார்கள். தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்றவர்களுக்கும் நிலையை உணர்த்தவேண்டும், திருக்குறள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்; அதன்படி வாழவேண்டும்; நீதி நியாத்தின் பக்கம் நீங்கள் நிற்கவேண்டும்; உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும்.
தோட்டப் பாட்டாளியின் மகன் தோட்டப் பாட்டாளியாகவே இருக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல!
இந்தோனேசியா காரணமில்லாமல் உங்கள் நாட்டின் மீது படையெடுப்பதாக அறிந்தேன். நாட்டின் நல்ல குடிமக்களாகிய நீங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஒன்றித்து நிற்கவேண்டும். நாட்டின் பாதுகாப்புப் பத்திரங்களை நிரம்ப ஆர்வமுடன் வாங்கவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்!"