மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
நிகழ்வுகள்
எழுஞாயிறு தோன்றும் திசை நோக்கி!

 

"அண்ணா அவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகில் எங்கெங்கே தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் குடிகொண்டு அவர்களையெல்லாம் ஆளும் மாமன்னராகத் திகழ்கிறார்" என்று புகழ்பெற்ற ஆங்கில வார ஏடான 'இல்லஸ்ட்ரேட்டடு வீக்லி ஆப் இந்தியா' இதழில் அதன் ஆசிரியராக இருந்த திரு.ஏ.எஸ்.இராமன் என்பார் குறிப்பிட்டிருந்தார்.

ஆம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் ஆளும் மாமன்னர்தான் என்பதை உறுதிப்படுத்தியது அண்ணா அவர்களின் கிழக்காசியச் சுற்றுப்பயண நிகழ்ச்சி.

அண்ணா அவர்களை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டாதா? அவர் நம் நாட்டிற்கு வரமாட்டாரா? என்றெல்லாம் கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் ஏங்கிக் கிடந்ததுண்டு.

வெளி நாடுகளிலிருந்து அண்ணா அவர்களுக்கு அழைப்பு வரவும் தவறவில்லை; அண்ணா அவர்களுக்கும் வெளிநாடு செல்லும் விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் அதற்குரிய நேரமும், நினைப்பும், வாய்ப்பும், வசதியும் இல்லாத நிலையிலேயே அண்ணா அவர்கள் இருந்து வந்தார்கள்.

அன்றிருந்த ஆட்சியில், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடு செல்வது என்றால் அவ்வளவு எளிதாக அனுமதி கிடைத்துவிடாது. அதுவும், அகில இந்திய தேசியத்துக்கு எதிரானவர் என்று கூறப்பட்ட அண்ணா அவர்களுக்கு அனுமதி கிடைத்துவிடுமா?

சென்னை மாநகராட்சியைத் தி.மு.க. கைப்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட இடங்களைப் பிடித்து, நாடாளுமன்றத்திலும் கணிசமான இடம்பெற்ற நாடாளுமன்ற மேலவையில் அண்ணா சென்று அமர்ந்த பிறகுதான் இந்தியப் பேரரசுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிமையும், அண்ணாவின் அறிவாற்றலும் புரிந்தன. அதன் பிறகுதான் அண்ணா அவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற முடிந்தது!

எனவே, பேரறிஞர் அண்ணா அவர்கள், தமது முதல் வெளிநாட்டுப் பயணத்தையே ஐம்பத்தாறாவது வயதில்தான் மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

வெளிநாட்டுப் பயணம் என்றதும் அண்ணா அவர்களின் நாட்டம் மேலைநாடுகள் பக்கம் செல்லவில்லை. உதயசூரியன் எழும் கிழக்குத் திசை நோக்கியே தமது முதல் பயணத்தைத் தொடங்கினார்கள். தமிழினத்தவர் மிகுதியாக வாழும் கிழக்காசிய நாடுகளையே முதலில் காண வேண்டும் என்ற பேரவா அண்ணா அவர்களுக்கு எழுந்ததில் வியப்பில்லை.

தொழில் துறையிலும், அறிவியலிலும் முன்னேறிய மேலைநாடுகளைவிட, எல்லாத் துறைகளிலும் மேலை நாடுகளோடு போட்டிபோட்டு முன்னேறியவரும் சின்னஞ்சிரிய நாடான ஜப்பானைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் விழைந்தார்கள்.

எனவே, தமக்கிருந்த எல்லா அலுவல்களையும் ஒரு நான்கு வார காலத்துக்கு ஒதுக்கிவைத்துவிட்டு, இளவல் இரா.செழியன் எம்.பி அவர்களையும் உடனழைத்துக் கொண்டு, கிழக்காசிய நாடுகளுக்குப் புறப்பட ஆயத்தமானார்கள்.

அண்ணா அவர்கள் வெளிநாடு செல்லும் செய்தி கேட்டுக் கழகத் தோழர்கள் பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் கொண்டார்கள்.

நம்நாடு வெளியிட்ட செய்தி
------------------------------------------------
பேரறிஞர் அண்ணா அவர்கள் தோழர் இரா.செழியன் எம்.பி. அவர்களுடன் கிழக்காசிய நாடுகளுக்குப் பயணமாவது குறித்து, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையச் சார்பில் 14.07.65 நம்நாடு நாளிதழில் பின்வரும் செய்தி வெளியிடப்பட்டது:

சூலை 16ஆம் நாள் வெள்ளியன்று காலை 8:35 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் ஏர்இந்தியா விமானத்தின் மூலம் அறிஞர் அண்ணா அவர்களும், தோழர் இரா.செழியன் எம்.ஏ.எம்.பி. அவர்களும் சிங்கப்பூர் அடைகிறார்கள்.

பயணம் 4 மணி நேர அளவுதான் என்றாலும் வழியில் விமானம் சில இடங்களில் தங்கிச் செல்வதால், பிற்பகள் 2:35 மணியளவில்தான் சிங்கப்பூரை அடைவார்கள்.

அங்கிருந்து தங்களது மலேசியச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு பின்னர் கம்போடியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், ஜபபான் ஆகிய இடங்களுக்குச் செல்வார்கள்.

ஆகஸ்டு 15ஆம் நாளுக்குள் தாயகம் திரும்புவார்கள்.

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai