மலாய் மக்கள் முற்போக்குக் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள ஈப்போ நகராட்சி மன்றம் அறிஞர் அண்ணா அவர்களுக்கு 20.7.65 மாலை வரவேற்பு அளித்தது.
இந்நிகழ்ச்சி அதிகார பூர்வமானது என்பதாலும், இட வசதிக் குறைவு என்பதாலும், பார்வையாளராக எல்லோரையும் அனுமதிக்க முடியவில்லை. அனுமதிச் சீட்டுப் பெற்றவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
எனினும் ஏராளமான இந்தியர்கள் - குறிப்பாகத் தமிழர்கள், அறிஞர் அண்ணா அவர்களைக் காணத் துடித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த நகராட்சி மன்றம் அண்ணா அவர்களை ஒரு திறந்த காரில் அமர்த்தி, சுங்கை சிப்புட்டிலிருந்து அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தது.
நகராட்சித் தலைவரின் அதிகார பூர்வமான இல்லத்திற்கு அண்ணா அவர்கள் காரில் வந்திறங்கியபோது ஒளி விளக்குகள் போட்டு அண்ணா அவர்களை மக்கள் நன்கு பார்க்க வசதி செய்யப்பட்டிருந்தது.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது வெளியில் கூடிநின்ற மக்கள் சொற்பொழிவுகளைக் கேட்க, ஒலி பெருக்கி வசதியும் அமைக்கப்பட்டிருந்தது.
ஈப்போ வாழ் பெருமக்களின் சார்பில் அறிஞர் அண்ணா, அவர்கட்கு 27.7.65 அன்று பிற்பகல் மாபெரும் வரவேற்பு அளிக்க, வரவேற்புக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் தவிர்க்க முடியாத நிலையில் இவ்வரவேற்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.