மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
அண்ணா வரவேற்பில் அமைச்சர் டத்தோ சாமிவேலு

 

அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க. பொருளாளராக இருந்த காலம் அது. அப்போது 'தினத்தந்தி' பத்திரிகையில் 'அண்ணா வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்' என்று செய்தி வெளியாயிற்று.

அதனைத் தொடர்ந்து தோழர்கள் பலர் 'எப்போது பயணம்? என்ன திடீரென்று? முன் ஏற்பாடு இல்லாமல் இந்த முடிவை அண்ணா எப்படி எடுத்தார்?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர்.
அதற்குப் பதிலளிக்கும் முறையில், அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிய மடலின் ஒரு பகுதியை இப்போது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

8.5.1955 தேதியிட்டு, திராவிடநாடு - இதழில் அறிஞர் அண்ணா தம்பிக்கு வரைந்த மடலிலிருந்து இது எடுக்கப்பட்டது.

தம்பி!

"கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர - மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே'' - என்றெல்லாம் கேட்டிருக்கிறாய், - கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லிவிட்டா நான் வெளிநாடு பயணமாவேன் - உன்னிடம் கூறாமலா - என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின் "அனுமதி' பெறாமல், வெளிநாடு போகத்தான் முடியுமா?

ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய் - பத்திரிகைகளில் தலைப்புப் போடுவதும் - படம் போடுவதும் எளிது - பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணுகிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு "பாஸ்போர்ட்' கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம் வேண்டும். "பாஸ் போர்ட்' போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கிறோம்'' என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய் - ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளிநாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு!

ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை!

ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட்சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டு விட்டிருக்கிறது.

நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து - இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர்தல் குறித்துக் கலந்தாலோசித்து. பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு - இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்!

எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும் - வேடிக்கையாகப் பார்த்துக் கொள்ளலாம்!

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai