மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
சோழப் பேரரசன் திருவுலாவை நினைவுறுத்திய
அண்ணா பவனி!

 

கலம் செலுத்திக் கடல் கடந்து கடாரம் வென்ற மீண்ட சோழப் பேரரசனைத் தலைநகர மக்கள் எப்படி வாழ்த்தி வரவற்றிருப்பார்களோ, நாம் கண்டதில்லை; ஆனால் அந்தக் கடாரத்தை உள்ளடக்கிய தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் உள்ளத்தை வென்று, நல்லெண்ணத்தைக் காணிக்கைப் பொருளாகக் கொண்டு மீண்ட அறிஞர் அண்ணா அவர்களைத் தமிழகத் தலைநகர மக்கள் வரவேற்ற காட்சியைக் கண்டோம் - அதன் மாட்சியை விவரிக்க இந்த ஏடு காணாது!

அறிஞர் அண்ணா அவர்களை வரவேற்று 22.8.65 மாலை சென்னை மாநகரில் நடைபெற்ற ஊர்வலமும், பொதுக் கூட்டமும் வர்ணனைக்குள் அடங்காத வரலாற்றுச் சிறப்புமிக்கன.

ஊர்வலச் சிறப்பு
சென்னை மாவள்ளட தி.மு.கழகம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு ஊர்வலத்தில் அணி அணியாக - அலை அலையாகத் திரண்டு வந்த மக்கள், பொதுக்கூட்டத்தில் கடலெனத் திரண்டு காட்சியளித்தனர்.

ஊர்வலம், சால்ட் கோட்டர்ஸ் எதிரிலுள்ள திடலிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டபோதிலும் பிற்பகல் 1 மணி முதலே அங்கு மக்கள் வந்து குழுமிய வண்ணமிருந்தனர். ஊர்வலம் பல முக்கிய வீதிகளைக் கடந்து சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ள திருவல்லிக்கேணிக் கடற்கரையை அடைய 7:30 மணி ஆயிற்று.

பட்டத்து யானை பவனிக்கு முன்வருவது போல் யானை ஒன்றின் மீது கழகத்தோழர் ஒருவர், கொடியேந்தி அமர்ந்து முன்வர, அடுத்து இரு குதிரைகளில் இருவர், துந்துபிகள், பாண்டுவாத்தியம் முழங்கி வர, கரகம், பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டங்களுடன் தோழர்கள் அணிவகுத்து வந்த காட்சி, களம் பல கண்ட பண்டைத் தமிழ்வேந்தர்கள், அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடன் 'வெற்றி உலா' வந்த வரலாற்றுக் காட்சியையே நினைவுபடுத்தியது!

ஏழு குதிரைகள் பூட்டிய எழில்மிகு ஊர்தியில் அறிஞர் அண்ணா அவர்கள் செழியனுடன் அமர்ந்து வந்தார். அருகே கழகப் பொருளாளர் கலைஞர் கருணாநிதியும் திருச்சி மாவட்ட செயலாளர் அன்பில் தர்மலிங்கமும் அமர்ந்து வந்தனர்.

அண்ணா வந்த ஊர்திக்கு முன்னால் அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.மதியழகன், தொழிற்சங்கச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி, மேயர் சிட்டிபாபு, வி.முனுசாமி, டி.எம்.பார்த்தசாரதி, டி.கே.சீனிவாசன், டி.கே.பொன்னுவேலு ஆகியோர் அமர்ந்திருந்த ஜீப் கார் வந்தது.

ஊர்வரத்தினிடையே ஓர் உயர்ந்த மோட்டார் வண்டியின் மீது புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் அமர்ந்து வந்தார். அவருடைய நிறுவனத்தார் அந்த வண்டியிலிருந்தபடியே உர்வலக் காட்சிகளைத் திரைப்படமாக எடுத்துக்கொண்டு வந்தனர்.

பல்லாயிரக் கணக்கான தோழர்கள் சைக்கிள்களிலும், சைக்கிள் ரிக்ஷாக்களிலும், குதிரை வண்டிகளிலும் பின் தொடர்ந்தனர். சிலர் பல்வேறு வேடங்கள் அணிந்து உர்வலத்தில் கலந்துகொண்டனர்.

இறுதிகாக வெளியூர்களிலிருந்து வந்திருந்த பஸ்களின் மீது அமர்ந்தபடி தோழர்கள் முழக்கமிட்டு வந்தனர்.

ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் - இருமருங்கிலும் ஆடவரும் பெண்டிரும் நிரம்பி வழிந்தனர். மாடிமீதும், மதிற்சுவரிலும், மரத்தின் உச்சியிலும் ஏறி நின்று ஊர்வலத்தைக் கண்டனர். அண்ணா அவர்களைக் கண்டதும் கரவொலி எழுப்பி வாழ்த்து முழங்கியும், பூமாரி பொழிந்தும் வரவேற்றனர்.

அனைவருக்கும் அண்ணா அவர்கள் கரம் கூப்பி நன்றி தெரிவித்தவாறு வந்தார்.

ஊர்வலப் பாதையில் பல இடங்களில் கண்ணைக் கவரும் மின்விளக்குகளுடன் கூடிய வரவேற்புப் பந்தல்களும், வளைவுகளும், தோரணவாயில்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பொதுக் கூட்டம்
ஊர்வலம் கடற்கரையில் வந்து முடிந்ததும் பொதுக் கூட்டம் தொடங்கியது. மாவட்டத் துணைச் செயலாளர் சு.பாலன் அனைவரையும் வரவற்றார். மாவட்ட அவைத்தலைவர் காஞ்சி மணிமொழியார் எம்.எல்.ஏ. கூட்டத்துக்குத் தலைமை வகித்தார்.

முதலில் மேயர் சிட்டிபாபு அவர்கள் 'மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வரவற்கிறேன்' என்று கூறி வரவேற்றார்.

அடுத்து மாவட்டச் செயலாளர்களான அன்பில் தருமலிங்கம், மன்னை நாராயணசாமி, மதுரை எஸ்.முத்து, உடுமலை நாராயணன், சி.வி.எம்.அண்ணாமலை, ஈ.ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் அவரவர் மாவட்டச் சார்பில் வரவேற்றுப் பேசினர்.

அடுத்து முஸ்லீம் லீக் தோழர் ஏ.கே.ஏ.அப்துஸ்சமது, எம்.ஏ., எம்.பி., அவர்கள் பேசினார். பின்னர் நடிகமணி டி.வி.நாராயணசாமியும், புரட்சி நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களும் கலைஞர்கள் சார்பில் வரவேற்றனர்.

தொடர்ந்து பேராசிரியர் க.அன்பழகன், எம்.எல்.சி., என்.வி.நடராசன், எம்.எல்.சி., ஏ.கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், எம்.எல்.ஏ., கே.ஏ.மதியழகன், எம்.எல்.ஏ., கலைஞர் மு.கருணாநிதி, எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.

சென்னை மாவட்டச் செயலாளர் நீல நாராயணன், மாவட்டக் கழகச் சார்பில் வரவேற்பு மடல்களைப் படித்தளித்தார்.

இறுதியாக அண்ணா அவர்கள் நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.

இரவு 10 மணிக்குக் கூட்டம் இனிது முடிந்தது. நேரம் கடந்துவிட்டதால் அண்ணா அவர்களுக்கு அணிவிக்க இருந்த மாலைகள், கைத்தறியாடைகள் எல்லாம் அண்ணா பேசிய பின்பே அணிவிக்கப்பட்டன.
- நம்நாடு, 23.8.65

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai