தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளிதழ் சார்பில் 16.7.65 அன்று வெளியிடப்பட்ட அறிஞர் அண்ணா வரவேற்பு மலரில், பின்வருமாறு தலையங்கம் எழுதப்பட்டிருந்தது:-
அறிவுக் களஞ்சியங்களே வருக! வருக!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவரும், சிறந்த தமிழறிஞருமான திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களும், அவர் பொறுப்பேற்று நடத்திவரும் கட்சியின் பிரமுகர்களில் ஒருவரான திரு.இரா.செழியன் அவர்களும் தமிழகத்திலிருந்து நல்லெண்ணத் தூதுவர்களாக மலேசியாவுக்கு வருகை தந்துள்ள பொன்னாள் இன்றைய நன்னாள்.
கம்போடியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் வழியில் இரு தலைவர்களும் நமது நாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். இங்கு வாழ்கின்ற லட்சோபலட்சம் தமிழ் மக்களின் சார்பாகத் 'தமிழ்முரசு' இந்த சிறிய மலரைப் படைத்து அவர்களுக்கு 'நல்வரவேற்பு'க் கூறுகிறது.
அறிவுச்சுடர்!
ஆற்றல் மிக்கவர்!
இன்முகத்தர்!
ஈகை நெஞ்சினர்!
உத்தமத் தலைவர்!
ஊருக்கு உழைப்பவர்!
எடுத்ததை முடிப்பவர்!
ஏழை பங்காளர்!
ஐயமில்லாத அரசியல்வாதி!
ஒப்பற்ற தமிழறிஞர்!
ஓதும் நன்மதியாளர்!
- என்று தமிழகத்து மக்களால் ஒருங்கே போற்றிப் புகழப்படும் அறிஞர்.
அண்ணாதுரை அவர்களையும், அவர்தம் இளவல் செழியன் அவர்களையும் இங்கு வரவேற்றுச் சிறப்பிப்பதில் உவகை கொள்கிறோம்; மகிழ்வெய்துகிறோம்.
கேட்டாரைப் பிணைக்கும்படியும், கேட்க வாய்ப்பு இல்லாரை எதிர்நோக்கி வேட்கும்படியும் செய்யக் கூடிய சொல்வன்மை அறிஞர் அண்ணாதுரையிடம் உண்டு. 'வாக்கின் திறத்தாலே வையத்தினை ஆளும்' நிலையை உருவாக்கும் வல்லமை படைத்தவர் அவர். பேச்சிலே சூரர்; எழுத்திலே தீரர்; தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சிகளின் நாயகர்.
இந்தியாவில் காலஞ்சென்ற பிரதமர் ஜவர்கர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக சென்னைத் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் அறிஞர் அண்ணாதுரையின் சொற்பொழிவுக் கூட்டங்களுக்கே மக்கள் அதிகமாகச் கூடுவர் என்று கூறப்படுவதுண்டு. அத்தகைய சிறந்த சொற்பொழிவாளர் அறிஞர் அண்ணாதுரை.
தமிழ் ஆங்கிலப் பேச்சுகளால் லட்சோப லட்சம் இந்திய இதயங்களைக் கவர்ந்த அவர், எழுத்திலும் வல்லவர். தனித்த நீரோட்டமான அவரின் தனிநடை இன்றைய தமிழுலகம் விரும்பி எதிர்பார்த்துச் சுவைக்கம் மகத்துவம் பெற்றுள்ளது.
பெரியாரிடத்திலே வளர்ந்த அறிஞர்; இன்று அவருக்கும் பெரியவராக இந்திய அரசியலிலே முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அளிஞர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருப்பது இதுவே முதல் தடவை. கடல் கடந்த தமிழர்களை நேரிலே காணும் வாய்ப்பு இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. திரவியம் தேடத் திரைகடல் ஓடிய பாரதப் பிள்ளைகளை இப்போது கண்ணாரக் காண்கிறார்.
வாழ்கின்ற நாட்டைத் தாய்த்திரு நாடாகக் கொண்டு மனித உரிமைகள் யாவும் மனமகிழ்ச்சியோடு கிடைக்கப் பெற்று, சுதந்திர புருஷர்களாக சுயாட்சி கண்ட மலேசியாவில் வீறுநடை போடும் இந்தியர்களைப் பார்க்கும் திரு.அண்ணாதுரையின் இதயம் இறும்பூதெய்தும் என்பது உறுதி.