மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
அண்ணாவை வரவேற்றுத் 'தமிழ்முரசு' மலர்

 

அறிஞர் அண்ணா அவர்களும், இரா.செழியன் அவர்களும் மலேசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதையொட்டி சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் 'தமிழ்முரசு' நாளிதழ் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது.

16.07.1965 அன்று அறிஞர் அண்ணா அவர்களும், செழியன் அவர்களும் சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்ததும் இம்மலரின் படிகள் அவர்கள் கையில் கொடுக்கப்பட்டன; இம்மலர் குறித்து அப்போது 'நம்நாடு' இதழில் மா.செ. எழுதிய மதிப்புரை வருமாறு:-

தமிழவெள் கோ.சாரங்கபாணி அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'தமிழ்முரசு' நிறுவனத்தார், தமக்கேயுரிய பாணியில் சிறப்புடன் தொகுத்து மலரை வெளியிட்டுள்ளனர்.

கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய முறையில் உருவாக்கப்பட்டுள்ள இம்மலரில், அறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் - சிறப்பியல்புகள் - அண்ணா அவர்களைப் பற்றிய அறிஞர்கள் பலரின் கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன.

ஆர்ட் காகிதத்தாலான அட்டையின் முகப்பில் அண்ணா - செழியன் உருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. மலருக்கென்றே எடுக்கப்பட்ட படங்கள் உட்பட, பல்வேறு கோணங்களிலும், நேரங்களிலும் எடுக்கப்பட்ட அண்ணா புகைப்படங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.

இத்துணைச் சிற்பபுகளையும் கொண்ட இந்த எழிலேட்டுக்கு விலையே இல்லை, 'இலவசம்' என்று இதன் முகப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்த் 'தமிழ் முரசு' ஆசிரியர் குழாமின் கைவண்ணத்துடன், சென்னையில் உள்ள 'முரசு' பிரதிநிதி திரு.இராதாகிருஷ்ணன் அவர்களின் தனித்திறனும் சேர்ந்து மலரைப் பொலிவுள்ளதாக்கியிருக்கிறது என்றால் மிகையாகாது.

மலேசியத் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ளவர்களும் படிக்க - சுவைக்க வேண்டிய செய்திகள் பல மலரில் உள்ளன. ஆனால் இங்குள்ளவர்களுக்கு அது எட்டாப் பழமாகும். நாளும் தமிழ்முரசு படிக்கும் வாசகர்களுக்கே இதைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

- 'நம்நாடு' - சென்னை 29.07.1965


 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai