மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
அண்ணாவைக் கவர்ந்த கிழக்காசிய நாடுகள்

 

அண்ணா அவர்கள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து புது டில்லிக்குப் புறப்படுவதற்கு முன், கடந்து ஒரு திங்கள் கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த, கண்ட காட்சிகளையும், அவற்றின் மூலம் கொண்ட கருத்துக்களையும் டோக்கியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

ஜப்பானில் ஒரு வார காலம் மேற்கொண்ட சற்றுப் பயணம் பயனள்ளதாகவும், தகவல்களை அறிந்துகொள்ளக் கூடிய நிலையிலும் இருந்ததாக அண்ணா அவர்கள் தெரிவித்தார்கள்.

ஜப்பானுக்குச் செல்வதற்கு முன் மூன்று வார காலம் சுற்றுப்பயணம் செய்த மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் 'இந்திய மக்களைக் காட்டிலும் அதிகமாக உழைக்கிறார்கள்' என்பதுதான் தம்மை மிகவும் 'கவர்ந்ததாகவும் அண்ணா அவர்கள் கூறினார்கள்.

இந்தியாவில் ஏட்டளவில் திட்டங்கள் தீட்டுவதாகவும் அதில் அவர்கள் மிதமிஞ்சிய நிலையில் இருப்பதாகவும் திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது, அது ஒரு கதையாகவே அமைந்து விடுவதாகவும் சொன்னார்.

ஜப்பானில் வேளாண்மை
----------------------------------------
ஜப்பானில் சிறிய துண்டு நிலம் உடையவர்களகூட, அதிக விளைச்சலைப் பெறமுடிகிறது என்பது தமக்கு வியப்பை அளிப்பதாயும் அவர் தெரிவித்தார்.

"சராசரி உற்பத்திகூடச் செய்ய முடியாததற்குக் காரணம் இந்தியாவில் நிலங்கள் சிறுசிறு கூறுகளாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.

சாதாரண விவசாயி ஒருவரால் சிறிய துண்டு நிலத்தில் பயன்படுத்தக்கூடிய தகுந்த நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாலும், ஏனைய நவீன முறைகளை கையாளுவதாலும் ஜப்பானில் அதிக விளைச்சலைக் காட்ட முடிகிறது; அதே நிலையை இந்தியாவிலும் உண்டாக்க முடியும். ஜப்பானிய முறைகளிலுள்ள புள்ளி விவரங்களைக் கொண்டு தாயகம் சென்றதும் இப்பிரச்சினையை நன்கு ஆராய்ந்தறிய திட்டமிட்டிருக்கிறேன்" என்றும் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

"தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் அதிக நிலங்களில் பெரிய டிராக்டர்களைப் பயன்படுத்த முனைகிறார்கள், அல்லது பழைய சாகுபடி முறையையே தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்". என்றும் அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

"இதற்கு வேறு இடை வழியே இல்லை. ஜப்பானில் சீர்படுத்தப்பட்டுள்ள முறைகளைக் கையாளுவதன் மூலம் இதற்கான பரிகாரம் கிடைக்கலாம்" என்றும் அண்ணா அவர்கள் விளக்கினார்கள்.

குற்றங் குறையற்ற ஆட்சி
தாம் சற்றுப்பயணம் செய்த மற்ற நாடுகளில் சிங்கப்பூரில் குற்றம் குறையற்ற ஆட்சியயைக் கண்டதாகவும் அந்நாட்டின் தலைமையமைச்சர் லீகுவான்கியூ திறமையான அரசியல்வாதியாக இருப்பதாயும் குறிப்பிட்டு, அவருடைய நிர்வாகத்தைப் பாராட்டினார் அண்ணா.

"கம்போடியாவில் அந்நாட்டு மக்கள், இளவரசர் சினுக்கிடம் காட்டும் அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் தம்மை மிகவும் கவர்ந்ததாக அண்ணா சொன்னார்.

அமைச்சர்களும் அங்கு இருக்கிறார்கள்; என்றாலும் முக்கியமானவராக அவரே விளங்குகிறார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் தேசியப் பேரவை என்பது அங்கு ஒரு முக்கியமான அமைப்பாகத் திகழ்கிறது. ஏனெனில் அங்குதான் மக்களில் எவரும் அமைச்ர்களைக் குறை சொல்லவோ, குற்றஞ்சாட்டவோ முடியும். அமைச்சர்களும் அவர்களாகவே தங்களுக்காக வாதாட வேண்டியுமிருக்கிறது" என்றார் அண்ணா.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai