சிங்கப்பூர் 'தமிழ்மலர்' நாளிதழின் ஞாயிறு மலரில் (27-7-65) வெளியாகியிருந்த கேள்வி பதில்களில் சில பின் வருமாறு:-
கேள்வி: அறிஞர் அண்ணாவின் மலேசிய நாட்டு வருகை எப்படி உள்ளது?
பதில்: அன்புத் தம்பிகளின் அன்புத் தொல்லையைத் தவிர்த்து எக்குறைவுமின்றிச் சிறப்பாய் உள்ளது.
கேள்வி: அண்ணா அவர்களின் மலேசியா வருகையை ஒரு சிலர் எதிர்த்ததேன்?
பதில்: அப்படி எதிர்த்ததாகக் கூறப்பட்டவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்ததைக் கண்டிருக்கலாமே!
கேள்வி: அண்ணா வருகையால் கண்ட பலன் என்ன?
பதில்: மலேசியத் தமிழர்களின் நெடுநாளைய கனவு நனவாகியது; சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகம் 13000 வெள்ளி பெற்றது. தற்காப்பு நிதிக்கு 1113 வெள்ளி கிடைத்தது.
கேள்வி: அண்ணா வருகை இந்த நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்படுத்தியதா?
பதில்: அண்ணா அரசியல் தெரியாதவரல்லர்; இந்த நாட்டின் ஆணித்தரமான ஆதரவாளர் அண்ணா என்பது, அவருடைய பேச்சிலிருந்து தெளிவாகிவிட்டது.
கேள்வி: தமிழ்நாட்டுத் தலைவர்களில் இன்றைய சாக்ரடீசாக யாரைக் குறிப்பிடலாம்?
பதில்: அறிஞர் அண்ணாவைக் குறிப்பிடலாம்.