மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
அன்புக்கடல் அலைகளுக்கிடையே மாமலையாக அண்ணா!

 

சிங்கப்பூர் 'தமிழ் மலர்' இதழில் 'கண்டதும் கேட்டதும்' என்ற பகுதியில், ராஜா என்பவர், 'அண்ணா வந்தார்' என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதியிருந்தார்:-

அறிஞர் அண்ணாவை அனைவரும் அறிவர். அது போன்றே அறிஞர் அண்ணாவின் மலேசிய வருகையைப் பற்றியும் அனைவரும் அறிவர். ஆனால் அவர் வருகை பற்றிய சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகிறோம்.

வெள்ளிக்கிழமை 2:30 மணிக்கு அண்ணா சிங்கப்பூர் வந்து சேருவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே, 12 மணி தொடக்கத்திலிருந்தே 12ஆம் நம்பர் பஸ் ஆக்கிரமிக்கப்பட்டது. (12 ஆம் நம்பர் பஸ் விமானத் திடலுக்குச் செல்லுவது)

பள்ளிப் பிள்ளைகளுக்குக்கூட இடம் கொடுக்காமல் அண்ணாவைக் காணக் கூட்டம் கூட்டமாகச் சென்றனர் மக்கள். ஆனால், 6 மணிக்குத்தான் விமானம் சிங்கப்பூர் வந்தடையும் என்பது ஒரு மணிக்குத் தெரிய வந்தது. ஆகவே, இத்தாமதத் தகவல், அண்ணாவை வரவேற்க வந்தவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. ஆனால் ரேடியோ மலேசியாவின் சிங்கப்பூர்ச் செய்தி அறிக்கையின்போது, இந்த விமானத் தாமதத் தகவல் கூறப்பட்டதால் குழப்பம் சற்றுத் தணிந்தது.

விமானத் திடலில் கொளுத்திய வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் காத்திருந்தனர். பத்திரிகை அலுவலகத்துக்குப் பல நூறு டெலிபோன்கள் வந்தன.

'அண்ணா எத்தனை மணிக்கு வருகிறார்?'

'ஆறு மணிக்கு'

'அண்ணா வந்துவிட்டாராமே?'

'இன்னும் வரவில்லை, ஐயா!'

'எந்த ஓட்டலில் தங்கியிருக்கிறார்? தயவு செய்து என்னிடம் மட்டும் சொல்லுங்கள்!'

'வரவில்லை ஐயா' - காரசாரமான பதில். டெலிபோனை வைத்துவிட்டார் கேள்வி கேட்டவர்! இப்படிப் பலநூறு டெலிபோன் கேள்விகள்! இதற்குப் பதில் சொல்வதற்கே நேரம் சரியாய் இருந்தது.

பிறகு ஐந்தரை மணியளவில் சுமார் 2000 பேர் விமானத் திடலில் குவிந்தனர். சீருடை அணிந்த தொண்டர்களும், கழகக் கொடி ஏந்திய வீர்களும் ஒழுங்காக அணிவகுத்து நின்று அன்புக் கடலுக்கு அணை கட்டினர்.

ஆறேகால் மணிக்குத்தான் அண்ணா வந்தார். மாலைகள் மலையாயின! தமிழ்க்கடல் அன்புக் கடலுக்கு அடிபணிந்தது.

அன்புத் தம்பிகள் ஆரத் தழுவினர். ஆண்ணா ஆனந்த வாரியில் மூழ்கினார். அன்புக்கடல் அலைகடலாகியது. அலைகடலுக்கு அணைகட்ட அண்ணாவால் முடியவில்லை!

பிறகு திறந்த காரில் அண்ணா பவனி வந்தார். அரை மைல் தூரம் வந்ததும் மற்றொரு காருக்கு மாறினார். காரைத் தொடர்ந்து வந்த பலநூறு வாகன ஓட்டிகளை அண்ணாவின் காருக்கு அரை மைல் தூரத்திற்கு முத்தியோ, பிந்தியோ செல்லப் போலீசார் பணித்தனர்.

அண்ணா வந்தார் - அதில் பல அபூர்வ அம்சங்களும் உண்டு!

அண்ணா வருகையில் முகம் சுளித்தவர்கள் - ஊரோடு ஓட முடிவுசெய்து மலரையும் மாலையையும் ஏந்தி வந்த காட்சி!

கறுப்பு - சிவப்பை வெறுத்தவர்கள் மலர் சமர்ப்பித்த காட்சி!

அவருடன் எந்தப் படத்திலாவது 'விழ' முந்தியவர்களின் காட்சி!

அண்ணா வருகையால் தி.மு.க.-வுக்குச் செல்வாக்கு ஏற்படும் என்று "நான்கு சுவர்களுக்குள் புழுங்கியவர்கள்" தாம் வர முடியாவிடினும் 'சிஷ்ய கோடி'களை விமான நிலையத்திற்கும் கூட்டங்களுக்கும் அனுப்பி மகிழ்ந்த காட்சி!

அண்ணா ஒரு சிறு குன்றாக இருந்தால் எதிர்த்து நிற்கத் துணியும் உளப்பான்மை கொண்டவர்கள், அண்ணா மாமலையாக இருப்பதைக் கண்டதும், அவர் பின்தொடர முன்வந்த காட்சி!

'அந்தப் பசங்கள்' என்று ஏளனமாய்க் கூறியவர்கள் 'அந்தப் பசங்களின்' தயவு இருந்தால்தான் அறிஞரைச் சந்திக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதும் இருதலைக் கொள்ளி எறும்புகளான காட்சி!

அண்ணா வருவார் - 'வருவார் இங்கே' என்றிருந்தவர்கள், 'அண்ணா வந்தார் - கண்ணான தம்பிகளைக் கண்டார்- வருவார் இங்கே' என்றிருந்தவர்களைப் பற்றிக் கருதிப் பார்க்கவில்லை என்ற நிலை ஏற்பட்ட காட்சி!

இந்தக் காட்சிகள், காண்பவர்களுக்கு வேடிக்கை - ஆளானவர்களுக்கு வேதனை!



 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai