மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
செய்திகள்
அன்புப் பிணைப்பில் அண்ணா!

 

சிங்கைத் 'தமிழ்முரசு' ஏட்டில் சூலை 19ஆம் நாள், அன்புப் பிணைப்பில் அறிஞர் அண்ணா என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலைங்கம் வருமாறு:

மலேசியத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அறிஞர் அண்ணா, திரு.இரா.செழியன் அவர்களுடன் 16-ந்தேதி சிங்கப்பூர் வந்தார்கள். இப்போது அவர்கள் இருவரும் மலேயாவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நேரில் காண்பதில், அவர்களின் பேச்சுக்களைக் கேட்பதில் பேரார்வம் கொண்டுள்ள மலேசியத் தமிழர்கள், அவர்களுக்குத் தங்கள் அன்பினைக் கொட்டி உபசரித்துக் கௌரவிப்பதில் பெரும் மகிழ்வு கொண்டுள்ளனர்.

அறிஞர் அண்ணாவும், திரு.செழியனும் மலேசியா மக்களின் நிலைகளைக் காண்பதற்கும், இந்நாட்டில் வதியும் தமிழர்களின் அன்பிற்கு அன்பு காட்டுவதற்கும், மலேசிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் மலேசியச் சுற்றுப்பயணம்,இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே பன்னெடுங்காலமாய் நிலவிவரும் நல்லுறவை மேலும் பலப்படுத்தும். அவர்களின் நல்லுரைகள் மலேசிய மக்களிடையே உள்ள அன்பினைப் பெருக வளர்க்கும்.

மலேசியத் தமிழர்களின் பேரன்பினைக் கண்டு பரவசப்படும் அவர்கள், தாராளமாய்க் குடியுரிமை வழங்கும் மலேசியாவில் இங்குள்ள எல்லாத் தமிழர்களும் இந்நாட்டின் குடியுரிமை பெற்று, இந்நாட்டினிடம் முழு விசுவாசத்தோடு வாழவேண்டுமென அழுத்தமுறக் கூறுகின்றனர்.

எல்லோரும் சொல்லும் நல்லுரைதான் இதுவென்றாலும், அறிஞர் அண்ணா இதற்கு வலிவும் பொலிவும் தந்து உரைக்கிறார் என்பதை மலேசியத் தமிழர்கள் உளங்கொண்டு அதனைச் செயலாக்க முற்படுவர்.

மலேசியக் குடியுரிமை வெறுவதிலுள்ள சாதக பாதகங்களைப் பற்றிய விளக்கங்களை அறிஞர் அண்ணா அவர்களிடமே கேட்டறிய விரும்புவோரும் அவர்களிடம் கேட்டறியலாம்.

பிரதமர் துங்குவை நேரில் கண்டு அவருக்கு நன்றி தெரிவுக்கவும், உளங்கலந்து உரையாடவும் அறிஞர் அண்ணா அவர்களின் இந்த வருகை சாத்தியமில்லாதிருக்கிறது. பிரதமர் துங்க ஐரோப்பாவில் இருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்களோ இரண்டு வாரங்களே மலசியாவில் தங்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்.

எனினும், மலேசியாவில் உள்ள அரசியல் தலைவர்களை அறிஞர் அண்ணா அவர்கள் சந்தித்து உரையாடி மறத்தற்கியலாக அன்பினைக் கொண்டும், கொடுத்தும் உவப்பெய்துவார்கள்.

இந்த அன்புத் தளை, அறிஞர் அண்ணா அவர்களை இறுகப் பிணைத்து இன்னும் பன்முறை மலேசியாவுக்கு வருகை தர வழிவகுக்கும்.

அன்பினை அள்ளிக் கொட்டிடும் மலேசியா மக்களை அடிக்கடி காண வேண்டும், உரையாட வேண்டும் என்ற அவா, அண்ணா அவர்களின் நெஞ்சத்தில் அடித்தளத்தில் இந்த நான்கு நாட்களுக்குள்ளாகவே இடம் பெற்றிருக்கும்.

அறிஞர் அண்ணா அவர்களின் பொன்னான மலேசியாவின் முதல் பயணம், அவர் இனி மேற்கொள்ள வேண்டிய பல நாட்டுப் பயணங்களுக்கு முன்னோடி என்பது மலேசியத் தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகும்.

அறிஞர் அண்ணாவின் முழக்கம் அகிலமெல்லாம் பரவும் வகைக்கு வித்திட்ட மலேசியத் தமிழர்கள், இதில் பெரும் மகிழ்வு கொள்வது நியாந்தானே?


 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai