மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
அண்ணாவின் ஐந்து நிமிடப் பேச்சு

 

எதிர்பாராவிதமாக சுங்குரும்பையில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மண்டபத்தில் பகலிலிருந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்த இரண்டாயிரம் தமிழர்கள், பெரிதும் ஏமாற்றம் அடையும் வண்ணம் அறிஞர் அண்ணா, இரா.செழியன் ஆகியோர் பங்கு கொள்ளவிருந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

எனினும் 'அண்ணா அவர்களைக் காண வேண்டும்' என்று மணிக்கணக்காகக் காத்திருந்த 2000 தமிழர்களின் ஆவலை ஒரு சிறிது தணிக்கும் பொருட்டு அறிஞர் அண்ணா அவர்களும், இரா.செழியனும் கூட்டத்தினர் கண்டு களிப்பதற்கு, மேடைக்கு வந்து அகமும் முகமும் மலரக் காட்சி தந்தனர்.

கூட்டத்திற்குத் தலைமை வகிக்கவிருந்த என்.டி.எஸ் ஆறுமுகம்(பிள்ளை) அவர்கள்,

'எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டும் கடைசி நிமிடம் வரை போலீசு அனுமதி கிடைக்கவில்லை' என்று குறிப்பிட்டார்.

"இதுசம்பந்தமாகப் பினாங்கு முதலமைச்சர் திரு. ஒங் பௌ நியின் சிபாரிசு பெற்றும் கூட்டத்திற்கு அனுமதி பெற முடியவில்லை" என்றார்.

கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணம் அறிவிக்கப்படவில்லை.

அறிஞர் அண்ணா அவர்கள் நன்றியுரைக்கும் வகையில் மட்டும் ஐந்து நிமிடம் பேசினார்.

தமது உரையில் அவர் மலேசியத் தமிழர்களிடம் இரு சிறந்த பண்புகளைக் காண்பதாகக் குறிப்பிட்டுவிட்டு அதுபற்றி விளக்கியதாவது:

"தமிழ்மொழி பேசும் மக்கள் மலேசியாவிடம் பற்று வைத்திருக்கின்றனர். தமிழ் மொழி தங்கள் தாய்மொழி என்பதை மறவாமலும், தமிழ்ப்பண்பாடு குன்றாமலும், அதை ஒளிபெறச் செய்தும் வருகின்றனர்.

மலேசிய மக்களிடம் ஒரு வருந்தத்தக்க நிலையை நான் காண்கிறேன். ஆடவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவு செய்வதாகக் கேள்விப்படுகிறேன். அவர்களைத் திருத்துவது என்பது அவரவர்களின் மனைவிமார்களாலேயே இயலக் கூடியதாகும்.
தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தொழிற் கல்வியையும், அறிவுச் செல்வத்தையும் குறைவின்றிப் புகட்ட வேண்டும்.

மலேசியத் தமிழர்கள் இங்கு வாழ்கின்ற மக்களுக்குச் சமதையாகத் தொழில் திறத்தில் முன்னேற வேண்டும் என்பது என்னுடைய பேரவா"

திரு. இரா.செழியன் அவர்கள பேசவில்லை. இருதலைவர்களுக்கும் மாலைகள் அணிவித்து வாழ்த்துப் பத்திரங்களும் தங்கப்பதக்கங்களும் அளிக்கப்பட்டன.

"அண்ணா வாழ்க" என்ற வாழ்த்தொலியுடன் கூட்டத்தினர் வழியனுப்பி வைத்தனர்.

- 'தமிழ்முரசு' - சிங்கப்பூர்



 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai