"கன்னித் தமிழ்ப் பேச்சாலும், கவினுறு எழுத்தாலும், பயனுறு கருத்தாலும், கோடானுகோடி மக்களை நித்தம் நித்தம் கொள்ளை கொண்டு வரும் பேரறிஞர் அண்ணா அவர்களே!
"உங்களின் வரவு எங்களின் இதயங்களை மலர வைத்துக் கண்ணீர் சொரியும் கண்ணீர்க் குளங்களைப் பன்னீர் சொரியும் ஆனந்தக் கண்ணீர்க் குளங்களாக மாற்றியமைத்து, ஏதோ இனம் தெரியாத ஒரு புத்துணர்ச்சி எங்கள் நாடி நரம்புகளிளெல்லாம் ஊடுருவிப் பாயச் செய்து, எங்கள் அங்கமெல்லாம் என்றுமில்லாமல் பொங்கிப் பூரிக்கும் காட்சியையும், அதன் மாட்சியையும் எங்களால் இவண் வார்த்தைகளால் எடுத்து உரைக்க இயலாது விழிக்கிறோம்.
"இந்த உணர்ச்சிக்குப் பெயர் 'அண்ணாதுரை' என்ற ஐந்து எழுத்தே என நாங்கள் அறிகின்றபோது இந்த ஐந்து எழுத்துக்குள்ள ஆற்றலை 'மந்திர சக்தி' என்பதா? 'மின்சக்தி' என்பதா? என எதைச் சொன்னால் பொருந்தும் என அறியாது புரியாது, வியந்தும் மகிழ்ந்தும் இறும்பூதெய்துகின்றோம்."
சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் சுங்கை சிப்புட், கோலகங்கநார், எங்கோர், சாலாக், சிம்மோர் வட்டாரப் பொதுமக்கள் சார்பில் வாசித்தளித்த வாழ்த்திதழில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருந்தது.