மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
பேச்சுகள்
ஏழுமணி நேரம் காத்திருந்த இரண்டாயிரம் பாட்டாளிகள்

 

சுங்கை ஊராட்சி மன்ற மண்டபத்தில் 22.7.65 அன்று அறிஞர் அண்ணா அவர்கட்கு, வட்டார மக்கள் சார்பாக ஒரு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் அண்ணாவைக் காணத் தணியாத ஆவலில் வட்டார மக்கள் திரண்டிருந்தனர். தோட்டப்புறத்தைச் சேர்ந்த பாட்டாளிகள் பெருவாரியாக இருந்தனர்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் பூமாரி பொழிய, வருகை தந்த அண்ணாவை வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

அறிஞர் அண்ணா அவர்களை, திறந்த காரில் அமர்த்தி மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

தமிழாசிரியர் பச்சையப்பன் வரவேற்புரையாற்றினார்.

பேரா மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் பேரா ம.இ.க. செயலாளருமான திரு. வை.பொன்னுசாமி(பிள்ளை) ஜே.பி; பி.ஜே.கே. கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசுகையில் "தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் தலையாய தலைவர் அண்ணா" என்று புகழ்மாலை சூட்டினார்; 'அவருடைய அரசியல் கொள்கைகள் பிடிக்காதவர்களும் கூடச் சொல்லாழம் மிகுந்த அவருடைய பேச்சைக் கேட்டால் அவர்பால் தங்களது இதயத்தைப் பறிகொடுத்து விடுவார்கள்' என்று கூறினார்.

'தமிழ் பேசுகின்ற மக்கள் ஒவ்வொருவரும் அவர் மீது அன்பு செலுத்துவது பொது உரிமை, அதை எவராலும் தடுக்க முடியாது' என்றார்.

தமது மலேசியப் பேச்சுக்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற மலேசிய நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும்படியும், துங்கு சர்க்காருக்கு நல்லாதரவு கொடுக்குமாறும் அண்ணா கூறிவந்த கருத்துக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அண்ணா உரை
வரவேற்புக்கு நன்றி தெரிவித்து அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

"ஒரு மரத்தின் வேர் ஒரே பக்கத்தில் மட்டும் பரவி நிற்காமல், பல பக்கங்களிலே பரவி, நிரவி, ஆழமாக - அழுத்தமாக வேரூன்றியிருக்க வேண்டும்; அப்போதுதான் மரத்திற்கு உறுதி.

அதைப்போல, இங்கு வாழ்கின்ற பத்து இலட்சம் தமிழ் மக்களும், நாலா பக்கமும் ஆழ வேர்விட்டு, உறுதியான மரத்தைப் போன்ற நிலையான வாழ்வு பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மலேசிய மணிவாசகம்

தமிழ் மீது வைத்திருக்கிற பற்றைப் போலவே தாங்கள் வாழும் மலேசிய நாட்டின் மீதும் பற்றி வைத்திருக்கிறார்கள் தமிழர்கள்.

இங்கே எங்களுக்குப் பல இடங்களிலே அளிக்கப்பட்ட வாழ்த்துப் பத்திரங்களில் 'வாழ்க மலேசியா' என்று குறிப்பிட்டிருக்கும் மணிவாசகம் அதற்குச் சான்று கூறுகின்றது.

இங்கே வாழ்கின்ற தமிழர்கள் பலர், தோட்டத் தொழிலாளர்களாகவோ, ஈயச் சுரங்க ஊழியர்களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வை இன்னும் மேம்பாடடையச் செய்து கொள்ள வேண்டும்.

தலைமை தாங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. வை.பொன்னுசாமி பிள்ளை அவர்கள் கேட்டுக் கொண்டதைப் போன்று, தமிழர்கள் ஒருமைப்பாடு மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் ஒரே கட்சியில் அவர்களை இருக்கும்படி நான் கூறு முடியாது. எந்தக் கட்சியில் இருந்தாலும் தோழமை உணர்ச்சி கொண்டு ஒற்றுமையோடு இருக்க வேண்டும்" என்று அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கறுப்பு - சிவப்பு துண்டு ஒன்றை அண்ணாவுக்கு அணிவித்து மகிழ்ந்த வாலிபர் ஒருவர், அண்ணாவின் பாதம் பணிந்து வணங்கினார்.

விருந்தில் செனட்டர் துரைராஜ் உட்படப் பல பிரமுகர்களும், வெளியூர் வாசிகளும் கலந்துகொண்டார்கள்.

'அண்ணா வாழ்க!' என்ற வாழ்த்தொலிகளுடன் அண்ணா அவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டார்கள்.


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai