மலேசியாவில் அண்ணா
தொகுப்பு: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

 

அண்ணா அவர்களுடன் ம.தி.மு.க. பிரதிநிதிகள்
அறிஞர் அண்ணா, இரா.செழியன் ஆகியோருடன் மலேசியத் திராவிட முன்னேற்றக் கழகத் துணைச் செயலாளர் திரு.சுப்பிரமணியம், பொருளாளர் திரு.மூர்த்தி, அகில மலாயா திராவிடர் கழகத் தலைவர் கே.ஆர்.இராமசாமி ஆகியோர் மலேயா தி.மு.க. பிரதிநிதிகளாகச் சுற்றுப் பயணம் செய்து மேற் கொண்டிருந்தனர்"

இதயத்தில் படம் பிடித்துச் செல்கிறேன்.
"பாட்டாளி மக்களாகிய நீங்கள் உழைத்து உழைத்து வீணாகாமல், உங்களின் எதிர்கால வாழ்க்கையை இன்பமாக அமைத்துக்கொள்ள முயற்சி செய்துகொள்ளுங்கள்"
"படம் பிடிப்போர் எப்படி ஒரு விநாடியில் படம் பிடித்து விடுகிறார்களோ, அதேபோல் உங்களின் அன்பு கனிந்த வரவேற்பை என் இதயத்தில் நான் பதியவைத்து, அதைத் தமிழ்நாட்டுக் எடுத்துச் செல்கிறேன்." என்று கோலக்கிள்ளான் பொதுக்கூட்டத்தில் அண்ணா குறிப்பிட்டார்.

மலேசிய அரசின் தமிழ்ப்பணிக்கு அண்ணா பாராட்டு
"தமிழகத்திலுள்ள பல்கலைக் கழகத்தில் கூடத் தமிழ் மொழிக்கென்று ஆரய்ச்சிக் கூடம் இல்லை. ஆனால் மலேசியத் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனிப்புரிவு அமைக்கப்ட்டிருக்கிறது. இதற்காக மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அறிஞர் அண்ணா அவர்கள், கிள்ளான் கூட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்கள்.

கடவுளைப் பற்றி அண்ணாவிடம் கேள்வி
தெலுக்கான்சனில் நடந்த விருந்துக் கூட்டத்தில் அண்ணா பேசி முடித்ததும், திடீரென்று ஒருவர் எழுந்து, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று கேட்டார்.
உடனே அண்ணா அவர்கள் 'நான் ஒரு பகுத்தறிவுவாதி' எனப் பதிலளித்தார்.
அண்ணா அவர்கள் பளிச்செனப் பதிலளித்ததையும், கேள்வி கேட்டவரின் துணிவையும் மற்றவர்கள் வியந்து பாராட்டினர்.
- 'தமிழ் மலர்'

ரப்பர் மரத்தில் பால் வெட்டினார் அண்ணா
மலேசிய நாட்டில் உள்ள கூலாய் செம்பனைத் தோட்டத்திற்கு வருகை தந்த அறிஞர் அண்ணா செம்பனைப் பழங்களைச் சுவைத்துப் பார்த்ததுடன், செம்பனைபற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார்.
அத்துடன், ரப்பர் தோட்டம் ஒன்றுக்குச் சென்று அண்ணா அவர்கள், கச்சிதமாகப் பால் வெட்டினார்.
தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு அண்ணா அவர்கள் வருகை தந்தார். ஒரு தொழிலாளியின் வீட்டுக்குச் சென்று நிலைமையை அறிந்தார்.

மக்கள் அன்பு வெள்ளத்தில் சிக்கி அண்ணா திணறல்
தம்மை காண மணிக் கணக்கில் காத்திருந்த சுங்குரும்பை மக்களின் அன்பில் சிக்கிக்கொண்டு அறிஞர் அண்ணா அவர்கள் திணறிப் போனார்.
ஒன்றரை மணிநேரம் தாமதமாக வந்த அவரை பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த மண்டபத்தில் பொதுமக்கள் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்!
சிவப்பு - கருப்புக் கரை போட்ட அவருடைய வேட்டி சற்றே அவிழ்ந்து - கிழிந்தது!
கோபமும் திகைப்பும் ஒரு விநாடு பளிச்சிட்டது. முகம் மலர மேடையில் ஏறிவிட்டார்.
"எனக்கு இருப்பது ஓர் உடல்தான்; உங்கள் ஒவ்வொருவரின் அன்பும் என்னை மயங்க வைக்கிறது; என்றாலும் என் மீது நீங்கள் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள்" என்றார் அண்ணா!

அண்ணாவுக்குத் தங்கப் பதக்கம்
பத்துமலை வட்டார மக்கள், அறிஞர் அண்ணா, இரா.செழியன் ஆகிய இருவருக்கும் தங்களுடைய அன்பளிப்பாகத் தங்கப் பதக்கங்களை வழங்கினார்கள்.
இங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தப் பரிசளிப்பு நடைபெற்றது.

டத்தோ சம்பந்தம் சந்திப்பு
அறிஞர் அண்ணா அவர்கள் கோலாலம்பூரில் அமைச்சர் டத்தோ சம்பந்தம் அவர்களைச் சந்தித்தார். அமைச்சர், சம்பந்தம் அண்ணா அவர்களை வரவேற்று நன்கு உபசரித்ததுடன் நாட்டின் நிலை - மக்கள் நிலை போன்றவற்றை விளக்கியதோடு, தேசீய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத் தோற்றம் அதன் நோக்கம் - இன்றைய நிலை முதலியவற்றைச் சிறப்புற விளக்கினார்.

வரவேற்புக் குழு வழங்கிய பாதுகாப்பு நிதி
மெர்தேகா அரங்கில் நடந்த அண்ணா வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் நாட்டுப் பாதுகாப்பு நிதிக்கு வசூலான தொகை 978 டாலரும், 62 காசும் பாங்கு நெகராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தைத் தொழிலாளர் அமைச்சர் திரு.மாணிக்கவாசகம் பாங்க் நெகரா கவர்கனர் டத்தோ இஸ்மாயிலுக்கு அனுப்பிவைத்து, கோலாலம்பூர் அண்ணா வரவேற்புக் குழுவின் பெயரில் அதிகாரபூர்வமான ரசீது வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
மெர்தேகா அரங்கில் நடந்த கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் மேற்படி பணத்தைத் தொழிலாளர் அமைச்சரிடம் வழங்கினார்.

பினாங்கு முதலமைச்சருடன் சந்திப்பு
பினாங்கு முதலமைச்சர் மாண்புமிகு பௌ நீ அவர்களை அவர்தம் அலுவல்மனையில் அறிஞர் அண்ணா அவர்கள் 19.7.25 அன்ற சந்தித்து உரையாடினார்கள்.
அண்ணா அவர்களை முதலமைச்சர் வரவேற்று உபசரித்தார். அண்ணா அவர்கள் திரு. பௌ நீ யிடம் பினாங்கு அண்ணா வரவேற்புக் குழுவின் சார்பில் 201 வெள்ளியை தேசியப் பாதுகாப்பு நிதிக்காக வழங்கினார்.

சனநாயகமும் தனிநாயகமும்

"சனநாயகம் பரவி வரும் வேளையில் உலகில் தனிநாயமும் விளங்கத்தான் செய்கிறது. தமிழக மண்ணிலே தமிழ் காக்கப் போராடும் நிலையிருக்க, உலகெங்கும் சென்று கன்னித் தமிழின் மென்மையை, இனிமையை - மணத்தைப் பரப்புவதில் உலகிலே ஒரு தனிநாயகம் தோன்றித்தான் உள்ளது. அந்தத் தனிநாயகம் யார் என்றால் இங்கு வீற்றிருந்து தமிழே உயிரென்றும், தமிழ்ப் பணியே வாழ்வென்றும் கருதித் திகழ்ந்துவரும் அடிகளாரேயாவார்.
"அவர் எங்கெங்கு சென்றிடினும் தமிழுக்கென்றே ஒரு தனிநாயத்தை ஏற்படுத்தி வருகிறார். பெயருக்கேற்ற ஆட்சி, என்னே அவரது பெயர்ப் பொருத்தம்!

- மலேயப் பல்கலைக் கழகத்தில் அண்ணா

"அண்ணாவின் இதயத்திலிருந்து வரும் தமிழின் இனிமை கண்டு அண்ணாவின் மாணவனாக ஆகும் பேறு எனக்குக் கிட்டவில்லை என வருந்துகிறேன்"

- நன்றிவுரையில் தனிநாயகம் அடிகள்.


மூதாட்டியின் வாழ்த்து!
சிகரமெட் நகரில் நடைபெற்ற அண்ணா வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்களை, லாபியைச் சேர்ந்த தமிழ் மூதாட்டி திருமதி. எஸ்.கே.வள்ளியம்மை பாராட்டினார்.
"தமிழ் நாட்டுச் செல்வமே! நீடூழி வாழ்க! நீங்கள் பெருவாழ்வு வாழ்க!” என்று வாழ்த்தி, மாலைகள் அணிவித்தார்.
வள்ளியம்மையாரின் பாராட்டு மொழிகள் கூட்டத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்தது. அண்ணா மனங்கசிந்தார்.

அமைதி நிலைநாட்டினார் அண்ணா
தைப்பிங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இறுதியில் அண்ணாவின் சொற்படி அமைதியுடன் நடந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் முதலில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் செல்ல வழிவிடுமாறு அண்ணா கேட்டுக் கொண்டார். அதன்படியே பெண்களும் குழந்தைகளும் அமைதியுடன் வெளியேற முடிந்தது.
அடுத்து அண்ணா அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பின்னாலிருந்தவர்களும், பிறகு முன்னாலிந்தவர்களும் அமைதியுடன் வெளியேறினர்.
'முதலில் சப்தம் போட்ட கூட்டமா இது?' என ஆச்சரியப்படும் விதத்தில் இது அமைந்தது.
அண்ணாவுடன் பலர் கைகுலுக்க ஆர்வமுடன் கைகளை நீட்டினர். 'என்னிடம் இருப்பது இரண்டே கைகள்தாம்' எனக் கூறி அண்ணா கரங்குவித்து வணக்கம் செலுத்தினார்.

அரும்பொருட் களஞ்சியத்தில் அண்ணா
அலோர்ஸ்டாரில் நடைபெற்ற வரவேற்புப் பொதுக் கூட்டத்திற்குப் பின்னர் அறிஞர் அண்ணா அங்குள்ள அரசாங்க ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்தார்.
மறுநாள் காலை கிட்டா மந்திரி புசாரைச் சந்தித்துப் பேசினார்.
அலோர்ஸ்டார் அரும்பொருட்காட்சிச் சாலையைப் பின்னர் பார்வையிட்டார்.

'அண்ணா, ஒரு மாயா ஜாலச் சொல்'
அண்ணா என்ற சொல் பல கோடி பேர் மயங்கி, அவர்களை வழி நடத்திச் செல்லும் சொல்லாக விளங்குகிறது என்று, விருந்தில் தலைமை வகித்துப் பேசிய ஈப்போ நகராட்சித் தலைவர் திரு.எஸ்.பி.சீனிவாசகம் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், "அண்ணா அவர்கள் வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்லர்; அவர் சிறந்த மொழிப் பேரறிஞர்; தலைசிறந்த பேச்சாளர்; உலகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர்" என்று கூறினார்

அண்ணா அவர்களுக்குத் தங்கப் பொடிடப்பி!
சிங்கப்பூரில் 20.7.65 அன்று நடைபெற்ற வரவேற்புப் பொதுக்கூட்டத்தில், அண்ணா அவர்களுக்கு, மூன்று பவுனில் செய்யப்பட்ட மூக்குப்பொடிச் சிமிழ் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அண்ணா அவர்கள் புன்முறுவலுடன் அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

வாழ்வும் குழம்பும்
"வாழ்வு என்பது வேறு; நல்வாழ்வு என்பது வேறு! குழம்புக்கும் ஊசிப்போன குழம்புக்கும் உள்ள வித்தியாசமே வாழ்வுக்கும் நல்வாழ்வுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
"என்னுடைய மகன் என்னைவிட நன்றாக வாழ வேண்டும்; என்னைவிட அதிகம் சம்பாதிக்க வேண்டும்" என்றெல்லாம் நினைத்து வாழ்பவனின் வாழ்க்கை நல்வாழ்க்கையாகும்.
நான் சம்பாதிக்கிறேன், செலவு செய்கிறேன். அதைக் கேட்க நீ யார்? என்றும், எங்கே போகிறீர்கள் என்று கேட்கும் மனைவியிடம் எங்கோ போகிறேன் இந்திரலோகம் போகிறேன்; உனக்கென்ன? சும்மா வீட்டோடு கிட! என்றும் பாதம் தரையில் படாமலும், கூறுபவனின் வாழ்க்கை கெட்ட வாழ்க்கையாகும்"
இவ்வாறு அறிஞர் அண்ணா அவர்கள் ஜோகூர்பாருவில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
- 'தமிழ் முரசு'


ஒரு துளித் தண்ணீர் பெறும் வலிவு

"கடலுக்குள்ள வலிமை ஒரு துளி தண்ணீருக்கு இல்லையே ஏன்?" என்று கௌதம புத்தரிடத்தில் ஒரு நாள் அவருடைய சீடர் ஒருவர் கேட்டார்.
" அதற்குப் புத்தர் பதிலளிக்கையில், அந்த துளித் தண்ணீர் கடலுடன் கலந்துவிட்டால், கடலின் வலிவு அத்தனையும் அந்த ஒரு துளித் தண்ணீருக்குக் கிடைத்துவிடும்" என்றார்.
"அதுபோல, இந்நாட்டில் வாழும் பத்து இலட்சம் தமிழ் மக்களும் இந்நாட்டுடன் இரண்டறக் கலந்துவிட்டால் மலேசியா வலிவடைந்துவிடும்."

- ஜோகூர் ஸ்டேடியத்தில் அண்ணா பேச்சு


என்.வி.நடராசனுக்கு அண்ணா மடல்
அறிஞர் அண்ணா அவர்கள் அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன் எம்.எல்.ஏ அவர்களுக்கு டோக்கியோவிலிருந்து 11.8.65ல் எழுதியுள்ள கார்டு கிடைத்தது.
அதில் ஒரு பக்கத்தில் ஜப்பான் 'காமகூரா' என்னும் இடத்திலுள்ள மிகப்பெரிய புத்தர் சிலை - தவக்கோலத்தில் அமர்ந்துள்ள நிலையில் - காட்சி தருகிறது.
அந்தச் சிலையின் சிறப்பு என்னவென்றால் 1945 ஆம் ஆண்டு முதல் இதுவரை காற்றினாலோ, மழையினாலோ ஒரு சிறு தேசமும் அதற்கு ஏற்படவில்லை.
அண்ணா அவர்கள் எழுதியுள்ள மடல் வருமாறு:
அன்புள்ள என்.வி.என்,
டோக்கியோவிலிருந்து எழுதுகிறேன். நலம். அனைவரும் நலம் என்று எண்ணுகிறேன்.
15ந் தேதி இங்கிருந்து டில்லி புறப்படுகிறோம். டில்லியிலிருந்து எழுதுகிறேன்; நண்பர்களை விசாரித்ததாகச் சொல்லவும்.

அன்புள்ள,
அண்ணாதுரை

கலைஞருக்கு அண்ணா மடல்!

மலேசியச் சுற்றுப் பயணத்தில் இருந்த அறிஞர் அண்ணா அவர்கள், அப்போதைய கழகப் பொருளாளரான கலைஞர் அவர்களுக்கு மடல் ஒன்று எழுதியிருந்தார்.
அந்த மடலில், சிங்கப்பூரில் கடலோரத்தில் உள்ள எழில் மாளிகையான வங்கிக் கட்டிடம் அச்சிடப் பட்டிருந்தது.
அதுபற்றி அண்ணா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுவிட்டுக் கடிதத்தைத் தொடங்கியிருந்தார்கள்.
"தம்பி!
"இங்குள்ள எழில் மாடங்களில் ஒன்று - படத்தில்தான் நானும் பார்க்கிறேன்; ஓயாத கூட்டம் அங்கு போலவே! ஒரு மாறுதலும் இல்லை.
மற்றவர்களுக்கு இது உல்லாச புரி; நமக்கு அல்ல!"

அன்புள்ள,
அண்ணாதுரை


கம்போடியாவிலிருந்து கலைஞருக்குக் கடிதம்

அறிஞர் அண்ணா, அவர்கள் கம்போடியாவிலிருந்து பொருளாளர் கலைஞர் அவர்களுக்குக் கடிதமொன்று அனுப்பினார்கள். அது இது:

தம்பி,
நலம். கம்போடியாவிலிருந்து எழுதுகிறேன்; ஜப்பான் செல்லும் வழி. மாறன் மற்றும் குழந்தைகள் யாவரும் நலம் என்று நம்புகிறேன். எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.

அன்பன்,
அண்ணாதுரை


 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai