மறக்க முடியாத மாமனிதர் அண்ணா
(திருமதி கே.ஆர்.ஆர். கல்யாணி, தலைவர், தமிழ்நாடு கோழி இன வளர்ச்சிக் கழகம்.
பேரறிஞர் அண்ணா பவள விழா சிறப்பிதழ் - 16.09.1984)

அறிஞர் அண்ணாவின் பவள விழா எங்கள் பொன்மனம் ஏற்கும் விழா மக்கள் மன மகிழ கூடும் விழா இதயக் கனியாலே காணும் விழா தமிழர் எந்நாளும் போற்றும் விழா எங்கள் அண்ணாவின் பவள விழா.

அறிஞர் அண்ணா அவர்களின் பவள விழாவைக் கொண்டாடும் தமிழக முதல்வர் அவர்கள் நாட்டின் நலனே தனது நலனாக கருதி இல்லாமையை ஒழித்து எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழகத்தைப் பொற்காலத்திற்கு கொண்டு செல்ல அயராது பாடுபடுகிறார். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் ஆட்சியில் அறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா நடைபெறுவது கண்டு பெறு மகிழ்ச்சி அடைகிறேன் நான். இன்றைக்கு பொன்மனச் செம்மலின் ஆட்சியில் தமிழகமே மகிழ்ச்சிக்கடலில் நீந்திக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

25 ஆண்டுகளாக பாசமிக்க உடன் பிறவாப் பிறவியாகிய அன்பே உருவான அண்ணா அவர்களோடு நடந்து வந்த பாதையில் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் நடந்த ஆரம்ப காலத்தையும் அண்ணா அவர்களின் அறிவுத் திறனால் நிகழ்ந்த பலனையும் எண்ணிப் பார்க்கிறேன் நான். அதை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் சுதந்திர எழுச்சிக்கு வித்தூன்றிய கலைஞர்களைக் கூட இந்த சமுதாயம் கூத்தாடிகள் என்ற இழிவான பெயரைச் சூட்டி தலைகுனிய வைத்தது. கூத்து என்று சொல்லப்பட்ட நாடகம் ஒரு காலத்தில் ஒழிவாகப் பேசப்பட்டு மக்களால் ஒதுக்கித் தள்ளப் பட்டிருந்தது. இத்தகைய இழிவான நிலையை மாற்றி, கூத்தும் நாட்டின் சொத்துதான் நற்றமிழ் காக்கும் வித்து என்றெல்லாம் நாட்டு மக்களை உணரவைத்தது கலைஞர்கள் என்ற புதுப் பெருமையையும் தேடிக் கொடுத்தவர் அறிஞர் அண்ணா அவர்கள்.

கலைஞனும் மனிதன்தான் அவனுக்கம் அரசியலில் பங்குண்டு என்பது எடுத்துக்காட்டப்பட்ட நாடக உலகின் பொற்காலம் தமிழகத்தின் பேரறிஞர் அண்ணா காலத்தில்தான் உருவானது. முத்தமிழில் மூத்த தமிழாக விளங்கிய நாடகத் தமிழ் செழித்துத் தழைக்க அண்ணா அவர்கள் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.

நாடக மேடையில் அவர் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் நாடகம் மூடக் கொள்கைகளின் பாசறையாக விளங்கியது. இக் காட்சியைக் கண்ட அண்ணா வேதனை அடைந்து நாடகத்தின் வாயிலாக அவர் கொடுத்த விளக்கம் நாட்டின் நலிவு போக்க எதிர்கால இளைஞர்களுக்கு தெளிவூட்ட உண்மையை நிலைநாட்ட இழிவை அகற்று மடமைகளை ஒழிக்க அறிவோடும் கற்பனையோடும் நாடகம் மூலம் இனிமையாக்த் தந்து மக்கள் மன்றத்தின் சிந்தனைக் கதவுகளைத் திறந்து நாட்டு மக்களின் அகக் கண்களையும் திறந்தார் அண்ணா. இதற்கு நாடகத்தை ஒரு மாமருந்தாகப் பயன்படுத்தினார். சமுதாய கேடுகளைக் களைய அதனைக் கேடயமாக்கினார். சமுதாயத்திலுள்ள நச்சுக் கருத்துக்களை நாட்டிற்க அம்பலப்படுத்தினார். அந்த நஞ்சினை நீக்கும் வழியையும் நாடக வழிகக் காட்டினார் அண்ணா. முதன் முதலாக நடிகர்களைப் பாராட்டி எழுதிய அரசியல் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள்தான்.

இருபதாம் நூற்றாண்டு நாடகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விளைவு கண்ட காலமாகும். வடக்கே திரு பிருதிவிராஜ் கபூர் நாடாளுமன்ற உறுப்பினரானார். பழம்பெரும் நாடகக் கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் தமிழக சட்ட மனற் மேலவை உறுப்பினரானார். அத்தகைய கௌரவத்தை இந்திய அரசு துணிந்து கொடுத்தது என்றால் அதற்கக் காரணகர்த்தாவாக இருந்தவர் தமிழகத்தின் ஈடு இணையற்ற மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்தான்.

நம்ம இயலாதவற்றை நாடகமாக்குவதைவிட அன்றாட சிக்கல்களை எழுதி நடிப்பதுதான் இப்போது தேவை. நாடக ஆசிரியர்களே பகுத்தறிவு என்பது அலங்காரச் சொல் அல்ல துணிந்து எழுதுங்கள் என்றார் அண்ணா. ஆயிரம் கூட்டங்கள் நடத்தி சீர்திருத்தக் கருத்துக்களை மக்களின் மனத்ல் பதியவைப்பதைவிட ஒரு நாடகம் உருவாக்குவதன் மூலம் எளிதில் மக்கள் மனதில் பதிய வைக்க முடியும் என்றார் அண்ணா.

அன்றைக்கும் நிறைய நாடகக் குழுக்கள் இருந்தாலும் மக்களின் அறியமையை நம்பித்தான் நாடகம் நடந்து வந்தது. நாட்டின் நலிவு போக்க நாடக மன்றங்கள் எப்படி இயங்க வேண்டுமென்பதையும் மக்களை மகிழ்விப்பதோடு நில்லாமல் அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் வழி காட்டுவதன் மூலம் நாட்டைச் சீர்திருத்த முயன்றார். சமுதாயம் இருக்கும் நிலையைச் சீர்படுத்தி அமைத்தால் பயன் தரக்குவய நிலை ஏற்படும் என்ற நம்பிக்கையில் இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் நாடகங்களை எழுதி காலத்தோடு ஒட்டியும் காலத்தின் அலங்கோலங்களை விளக்கியும் மக்களுக்கு உணர்வு ஏற்படும் வகையில் நாடகங்களைத் தீட்டினார். அதில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டு நாடகங்களில் நடித்தும் மக்களுக்கு உண்மைகளை உணர்த்திக் காட்டினார் அண்ணா.

இதற்கு என் கணவர் திரு.கே.ஆர்.இராமசாமி அவர்களின் ஒத்துழைப்பு அறிஞர் அண்ணா அவர்களுக்கு இன்றியமையாத வரப்பிரசாதமாக அமைந்தது. அன்றைக்கு சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் நடத்த யாரும் முன்வராத நேரத்தில் - அதை ஏற்று நடத்த தைரியமில்லாத காலத்தில் கே.ஆர்.ஆர். அவர்கள்தான் ஒரு தீவிரவாதியாக செயலில் இறங்கி வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் சரி என்று கரை புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு கரை சேர்ந்தாற்போல் அண்ணா அவர்களின் கொள்கைகளை சிரமேற்கொண்டு பல எதிர்ப்புகளுக்குடையேயும் கேலிப் பேச்சுக்களையும் கிண்டல் பார்வைகளையும் துச்சமாக எண்ணி அரும்பாடுபட்டு அண்ணா அவர்களின் புரட்சிப் படைப்புகளு.கக உயிரூட்டம் தந்து குன்றின் மேலிட்ட விளக்காய் கோபுரத்தின் கலசமாய் ஒளி காட்ட ஒரு மெழுகுவர்த்தியாய் அண்ணா அவர்களுக்கு துணை நின்றவர் கே.ஆர்.ஆர். அவர்கள்.

கலை கலைக்காக என்று அக்காலத்தில் சிலர் சொல்லிக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தார்கள். அந்த நாடகக் கலையால் ஒரு நாட்டையே சீர்திருத்திக் காட்டினார் அண்ணா.

கலை உலகின் மூலம் அவர் காட்டிய வழியால் சீர்திருத்தக் கருத்துக்கள் என்ற தென்றல் காற்று நாடெங்கும் வீசி புதுமைக் கருத்துக்கள் நாளுக்கு நாள் மலர்ந்து கொண்டே இருந்தன.

மேலும் தமிழக அரசியலிலே இளைஞர்களுக்கும் மதிப்புக்குரிய ஒரு இடத்தைத் தேடிக்கொடுத்த முதல் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள்தான். அவர் அரசியலிலே புகுந்தபின் மாணவர் சமுதாயம் தனக்கென ஒரு வழிகாட்டியைப் பெற்றது. அண்ணா அரசியலிலே இருந்த நேரம் தமிழக இளைஞர்களிடையே ஏற்பட்ட மறுமலர்ச்சி தந்தை பெரியார் அவர்களையே விக்கச் செய்தது என்றே கூறலாம்.

அண்ணாவின் சொல்லழகில் கண்ணனின் குழலோசை கேட்ட மாந்தர்களைப் போல் மாணவர் உலகமும் கட்டுண்டு கிடந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படி தமிழக மக்களின் உள்ளங்களிளெல்லாம் இடம் பெற்றார் அறிஞர் அண்ணா அவர்கள். தாய் எட்டடி தாண்டினால் குட்டி 16 அடி தாண்டும் என்பதைப் போல இன்றைக்கு அண்ணா அவர்களுக்குப் பின் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் ஆட்சியில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்கள் எண்ணிய எண்ணங்களை கொண்ட கொள்கைகளை எல்லாம் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாகவும் தமிழகத்திற்கும் அறிஞர் அண்ணா அவர்களுக்கும் பெருமைகளைக் குவித்துக் கொண்டடிருக்கிறார் பொன்மனச் செம்மல் புரட்சிச் தலைவர் அவர்கள்.

வாழ்க அண்ணா நாமம்!

வளர்க புரட்சித் தலைவரின் தொண்டு!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai