டி.கே.எஸ்-ன்
குமஸ்தாவின் மகள் நாடக விமர்சனம்
(டி.கே.எஸ்-ன்
குமஸ்தாவின் மகள் நாடக விமர்சனம்
அறிஞர் அண்ணா (15.06.1940) விடுதலை நாளிதழில் எழுதியது)
வனிதைகளை மணந்து வாழ்வதென்றாலே
வெறுப்புக் கொள்ளும் வேதாந்தி?
கண்டவர்: கனியே மணியே எனக்கூறி கட்டி அணைக விரும்பும்
கட்டழுகு படைத்த இரு மங்கைகள். கூணோ குருடோ எவனோ ஒருவன் வரமாட்டானா,
வயதுக்கு வந்துவிட்ட பெண்ணைக் கட்டிக்கொண்டு ஜாதியாச்சரம் கெடாதபடி,
பழி வராதபடி தடுத்து ஆட்கொள்ள மாட்டானா என்று சதா கவலைப்படும்
தந்தை. சோகத்தில் பங்கு கொள்ளவே ஜனித்த அவனது மனைவி, அவர்களின்
இணைபரியாத தோழன், வறுமை! உல்லாசமே உயிர் வாழ்க்கையின் இலட்சியம்
என எண்ணி வாழும் செல்வச் சீமான். அவளது உதவி இருக்கும்போது வீட்டைப்
பற்றிக் கவலை எதற்கு என்று எண்ணும் இளங்காளை; காளையைச் சுற்றிலும்
கண் சிமிட்டி கை அசைத்துக் காலந்தள்ளும் காரிகைகள். அத்தகையோரைக்
கொண்டே நடிப்புக் கலையை நடத்தி நல்ல பணம் பெற முடியும் என எண்ணும்
சினிமா டைரக்டர்.
இவ்வளவு பேருக்கும் இடையே நின்று அகப்பட்டதைச்
சுருட்டி வாழும் சில அந்தணர்கள்.
குமஸ்தாவின் மகள் எனும் நாடகத்தில் வரும் பாத்திரங்கள்
இவைகளே. குடும்பப் பாசம், வறுமையின் கொடுமை, வரதட்சணையின் குரூரம்,
மணவறையில் பிணம் விழுதல், தந்தை மொழியால் தற்கொலை, இதே நேரத்தில்
வீடு ஜப்தி இவைகளைவிட சோகக் காட்சிகள் எது? இவ்வளவும் குமஸ்தாவின்
மகள் தருகிறாள். அதாவது அந்த நாடகத்தில் உண்டு.
மூன்றாம் தாரத்திற்காக வேண்டி முகத்தின் கோணல்,
முதுகில் கூனி. நரம்பின் தளர்ச்சி, அவலட்சணம் யாவும் தயாராக வைத்துக்
கொண்டிருக்கும் கிழட்டுக் காமுகன், தன் மனையாட்டி இறந்தாள் என
மனமுருகிக் கூறி மற்றொரு மங்கைக்கு மனுப்போடுவது. அதற்காகத் தரகுப்
பணம் 25 ரூபாயை ஐந்தாறு இடத்தில் ஒளித்து வைத்திருந்து, எடுத்து
அவிழ்த்து முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொண்டு காட்டும் காட்சி, பயத்தைக்
காட்ட மல்லையும் கந்தர்வர்களை அழைக்கின்றேன் என்ற பாவத்தைக் காட்ட
காற்றில் சிக்கிய செடி கண்டபடி ஆடுவதுபோல ஆடியும் நமக்கும் தலைக்கும்
என்ன சம்பந்தம். முதலாளிக்கு கதாநாயகன் தோழன் கதாநாயகனுக்கு நான்
கண்ணாட்டி நடி.க்கும் உரிமை பெற இது போதாதா என எண்ணும் சினிமா
நடிகை அவளை ஆட்டி வைத்து தடதட, தடதடதடா (மிருதங்கம்) அடிக்கச்
சொல்லி பலாத்கார சீன் கற்றுக் கொடுத்து அதையே சாக்காக வைத்துக்கொண்டு
நடிகையையே பலாத்காரம் செய்யும் டைரக்டரின் ரசமிக்க நடிப்பு - இவைகளைவிட
ஹாஸ்யத்திற்கு வேறு காட்சிகள் தேவையில்லை. இவ்வளவும் குமாஸ்தாவின்
மகளில் காணலாம்.
சோகம், ஹாஸ்யம், மயிர்க் கூச்செரிதல், திடுக்கிடும்
திடீர் மாறுதல், உலகத்தில் உள்ள பிராமணீயச் சேட்டைகள் இந்த உயிர்
கதையில் உயரிய முறையில் அமைக்கப்பட்டு, உன்னதமாக நடிக்கப் பட்டிருக்கிறது.
ஈரோடு வாசிகளின் இன்பத்துக்கு டி.கே.எஸ்.சகோதரர்களின்
மதுரை பாலஷண்முகாவுக்கு சபா கடந்த நாலைந்து நாட்களாக மிகச் சிறந்த
முறையில் கண் கவரும் சீன்கள், அருமையான நடிகர்களாகக்கொண்டு பல
நாடகங்களை நடத்திக் காட்டி வருகின்றனர்.
டி.கே.ஷண்முகம் ஒரு வேதாந்தி. பிரம்மச்சாரி! கதையில்
வாழ்க்கையில் அவர் வேதாந்தியோ அல்லவோ நான் அறியேன்.
ஆனால் இன்றளவு வரையில் அவர் பிரம்மச்சாரியாகவே
இருந்து வருகிறார். ஆனால் கதையில் கூட கடைசிவரை அவரால் பிரம்மச்சாரி
விரதத்தை அனுஷ்டிக்க முடியவில்லை. ஜாம்ஜாமென மாப்பிள்ளையாகி விடுகிறார்.
வாழ்க்கையிலும் அவர் அந்த வசீகர காட்சியை வெகு விரைவில் அளிப்பார்
என வழக்கப்படி பத்திரிகைக்காரர்களுக்குள்ள இரகசிய நிருபர் நமக்கும்
அறிவிக்கிறார். கதை பிராமண சமூகத்தில் உள்ள முக்கியமான கொடுமையாகிய
வரதட்சணையையும் வாழ்க்கையை வாட்டிட வதைக்கும் வல்லமை படைத்த வறுமையையும்
விளக்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ராமசாமி ஐயர் எனும் ஏழை குமாஸ்தாவுக்கு கிளிகள்
போல இரு பெண்கள் சீதா-சரஸ்வதி உள்ளனர். ராமசாமி ஐயர் வேடத்தில்
நடராஜன் கடின சித்தமுடையவர்களைக் கரைய வைத்துவிடுகிறார். வறுமை
என்பதை உருவாக்கினால் அந்தக் கறப்புக் கோட்டும், கந்தல் பஞ்சகச்சமும்,
முரட்டு மயிரால் மூடப்பட்டிருக்கும் வரட்டுத்தலையும், தாடையின்
குழிகளை மறைக்கும் சிறு தாடியும், அந்தப் பசித்தப் பார்வையும்
தளர்ந்த நடையும் உலர்ந்த உதடும், இருமலும் கொண்டதாகத்தான் இருந்து
தீரும். வறுமையால் வாடும் ஏழை குடும்ப பாரத்தின் கொடுமையால் வதைகிறார்.
இரண்டு பெண்! இரண்டு பிள்ளை. முதலாமவன்,குடும்பத்திலிருந்தால்
குஷாலாக இருக்க முடியாதே என்றெண்ணி மிராசுமணி எனும் சீமானிடம்
நேசனாகிக் காலந் தள்ளுகிறான். உலகிலே வெறும் களியாட்டத்தையே விரும்புபவன்
பிச்சு! மிராசுமணி அலங்கார ஆடம்பர ஆணழகன்!
தோழர் பகவதிதான் மணி வேடத்தில் மணியென ஜொலிக்கிறார்.
வெண்பட்டு உடையும், வெற்றிலைக் காவி தழுவிக்கொண்டிருக்கும் உதடும்,
சிருங்கார நடையும், பெரிய மனிதர் பார்வையும், பகவதிக்கு, ரொம்ப
ஜோராக அமைந்திருக்கிறது. தன் வீட்டுக்கு மனைவி கமலாவைக் காணவேண்டி
சீதா வந்து போகையில், உருப்படி ஏது-கண்களைப் பறிக்கிறதே என்று
கருதி சிங்காரியைச் சீமான் எப்படிப் பார்க்க வேண்டுமோ, அந்த விதமாக
பார்வையும் பெருமூச்சும், பிறகு பார்ப்போம்-பணத்தை வீசுவோம் என்று
தைரியப்படுத்துவதும் தத்ரூபம். ஆமாம்! எத்தனையோ மிராசுமணிகள் இருந்துகொண்டுதான்
வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் சிக்காது தப்பித்துக்கொள்ளும்
சீதாக்கள் குறைவு.
கதை ஜோடனைக்காரர் கண்ணாடிபோல் இந்த இடத்தில் கதையை
அமைத்திருககிறார். நடிகர்கள் நடிக்கிறோம் என்பதை மறந்து நடிக்கிறார்கள்.
அதனாலேயே பகவதி மிராசுமணியாகவே தோற்றமளிக்கிறார். குட்டி துரோபதையைப்
பற்றியோ கூற வேண்டியதில்லை. சரசு வேடத்தில் நடிப்பை நடிகர்கள்
உணர்ந்து கொள்ளும்படி நடிக்கிறது. ஆம்! நான் நாடகத்தைக் கண்ட அன்று
ஒரு நல்ல மாஜி நடிகர்கூட அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு நானே
கூட எண்ணிக்கொண்டேன். எவ்வளவு வழியாக வரவேண்டியவர்கள் சுழி பேதத்தால்
(சுழி, இங்கு பிரமனின் எழுத்தைக் குறிப்பிடுவதல்ல) சூன்யமாகிக்கொண்டே
வருகிறார் பாவம் என்று.
இரண்டு பெண்கள் இருப்பதைக் கூறினேன். அதிலே ஒன்று
உருவில் சிறியது. உயர்வில் முதல் ரகம் துரோபதை; பேய எடுத்துக்
காட்டும் உங்களுக்கு, பெண் பட்டணத்துப புவியல்ல என்று. சுத்தமான
முகவெட்டு, பயிற்சிக்கேற்றபடி பக்குவமான வேலை செய்யும் கண்கள்.
முகத்தில் இயல்பாகவே ஒரு களை. ஆனால் குள்ளம் அதனால்தான் போலும்
பார்ப்பதற்கு விக்ரகம் போலவே விளங்குகிறது. துரோபதை. சரீர அமைப்பு
கிடக்கிட்டும். சாரீர பாவம் மிக ரசமானது. சோகத்தின் சிகரம் அந்தப்
பெண்ணின் ஒவ்வொரு வார்த்தையிலும், பார்வையிலும் ததும்புகிறது.
உருக்கமான பாடலும், அமைதி, அடக்கம் எங்ஙனம் இருக்க வேண்டுமென்பதையும்
தத்ரூபமாக குழந்தை நடித்துக் காட்டுகிறது.
சீதா, சரசு இரண்டும் வறுமையில் வளரும் வாடா மல்லிகள்.
வாடை காத தூரம் வீசுகிறது. சீதாவின் மணம், மிராசு மணிக்கு மோக
வெறியை ஊட்டுகிறது. வேதாந்தி ராமுவுக்கு, சீதாவிக்கு அண்ணணாக இருக்கும்
அளவுக்குத்தான் மன எழுச்சி உண்டாகிறது. சீதா அரும்பு போல், தன்
எண்ணத்தை அடக்கிக் கொண்கிறாள். தற்கொலைக்குக் தயாரானதும் தாராளமாகத்
தன் கருத்தை வெளியிடுகிறான். கடித மூலம். கடிதத்தை சண்முகம் படிக்கும்
காட்சி, அவர் கண்கலக்கம், கை துடிப்பு வியர்வை பொழிவது, பார்க்கப்
பார்க்க என்னைப் பரவசப்படுத்திவிட்டது. நான் லேசில் பரவசமாகிறவனுமல்ல!
ஆ! சீதா - சீதா என்ற அந்த அலறல் ஷண்முகம் அன்று
நடித்ததில் நாடகக் கலையில் உச்சி என்பேன். நாகராஜன் அதாவது சீதா
வேடம் பூண்ட தம்பிக்கு நேர்த்தியான சாரீரம். முகத்தில் ஒரு ஜோதி,
வெறும் மேக்கப் ஜோதியல்ல; குளிர்ந்த முகம், கனிந்த நடிப்பு, நல்ல
தயார்!
சீதாவின் சிறப்பை முதலில் உணரவில்லை ராமு, சீதா
இறந்த பின்னர் உணருகிறான். உணர்ந்து உருகி உருகி, கசிந்து அழுகிறான்.
எவ்வளவோ ராமுக்கள் இங்ஙனமே தமது சீதாக்களை இழந்து விட்டுத்தானே
இருப்பார்கள்.
சீதா வறுமையின் வாட்டத்தை ஊரார் சீற்றத்தை - தந்தையின்
சோகத்தை தவிப்பை, கண்டு கண்டு, தடாகத்தில் மிதக்கும் தாமரை போன்ற
கண்கள் கொண்டு வாழுகிறாள். குடுமபத்துக்குப் பாரமாக இல்லாதிருந்தால்
போதும் என கிழவனுக்கு கழுத்தைத் தருகிறாள். மண வாசலில் அவன் விழுகின்றான்.
விழுந்தவன், எழுந்தானில்லை. கட்டிய தாலி அறுந்தது. சீதா விதவைக்
கோலத்தையும் எடுக்கிறாள். அரும்பு மலராது கருகி விடுகிறது.
ராமசாமி ஐயர் என்ன செய்வார்! மருமகள் கதி என்னவோ
என எண்ணும் நேரத்தில் மணி, சீதாவைத் தீண்ட ராமசாமி ஐயரையே கேட்டு
விடுகிறாள். அந்தக் கட்டத்தில் தோழர் நடராஜனின் ஆத்திரம், அழுகை,
ஆவேசம், பகவதியின் பேச்சு, பார்வை மிக மிக ஜோர்.
தோழர் நடராஜன் ஆரம்ப முதலே மிக அருமையாக நடிக்கிறார்.
ஆனால் அந்த மரணக் காட்சி நனைந்த ஆடை, நடுக்கும் உடல், சற்றுத்
தொலைவில் சீதா, தலைப்பக்கம் சரசு; என்னென்னமோ சொல்றேளே அப்பா என்று
நமது நெஞ்சை நுறு ஈட்டி கொண்டு குத்துவது போல் கூறும் பேச்சு;
உயிர் போகிறது - கொழந்தே எங்கே? என்று கேட்டுக் கண்களை இங்கும்
அங்கும் பாயவிட்டு கைகளை ஆட்டி கட்டிலில் உயிர் பிரியும் காட்சியை
தோழர் நடராஜன் காட்டுவதைக் கண்டுவிட்டால் போதும்; பிறகு நாம் வாழ்க்கையில்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சகித்துக் கொள்ளலாம்.
சீதாவைச் சபிக்கிறார் தகப்பனால், ஏன் கோபமா? இல்லை,
வெறுப்பா? இல்லை கண்ணே சீதா, வா அம்மா இப்படி என்ற கடைசியில் அவர்
சீதாவைக் கூப்பிடும் காட்சியே நன்கு விளக்கும், அடக்க முடியாத
அன்பு இருந்தும் தன்னால் சீதாவின் விதியைத் தடுக்க முடியவில்லையே
என்ற மனவேதனையை சீதா மீது வெறுப்பு இருப்பதுபோல் காட்டுகிறது என்பதை.
விதவை சீதா, மணியின் கடிதத்தை காதற் கடிதத்தைப்
படித்துக் கிழித்தெறிவது - காமந்தகாரனாகி மணி தன்னை நெருங்கும்போது
நடிப்பது - ராமு அவ்வழி வரக் கண்டு பதைப்பது நாகராஜனின் நடிப்புத்
திறனை நன்கு விளக்குகிறது.
ராமுவும் - சீதாவும், சுதா விதவையான பிறகு சந்திக்கும்போது
நாகராஜன எவ்வளவு உன்னதமாக நடித்துளளார். துககம் தொண்டையை வந்து
அடைப்பது நன்கு தெரிகிறதே! ராமு - சீதாவின் கோலத்தைக் கண்டு கலங்குகிறது,
ஷண்முகத்தின் பாவத்தில் எவ்வளவு பளிச்செனத் தெரிகிறது. பேஷான கட்டம்
அது.
கோயில், குளம் முதலிய இடங்களில் காம வேட்டை நடக்கிறது - என்பதை
சு.ம.க்கள் கூறுவதுண்டு. குமாஸ்தாவின் மகள் நாடகத்தில் சீதாவை
மணி மயக்க வந்த இடமும் - அத்தகைய பிள்ளையார் அமர்ந்துள்ள அரச மரத்தடியில்தான்!
பிரசாரம் அல்ல! இயற்கையை மறக்க முடியாது. கதாசிரியர் அந்த இடத்தை
அதற்கென அமைத்தார் என எண்ணுகிறேன்.
விதவையான சீதா, வேறு வழியின்றி பிழைக்க கைராட்டைச்
சுற்றுகிறாள். ஆனால் பாவம், சீதாவின் வாழ்வு எப்படி, நேராக வராது.
அடிக்கடி இடையே அறுந்து போய் விடுகிறதோ, அதைப் போலவேதான் சீதா
சர்க்கா மூலம் சுற்றும் நூலும் அடிக்கடி அறுந்து விடுகிறது! சர்க்காவால்
வேறென்ன முடியும்? சீதாவின் வாழ்க்கையை சர்க்கா காப்பற்றவில்லை!
மிராசு மணியின் துடுக்குத்தனம், சீதாவின் உயிரைக் குடித்துவிடுகிறது.
உயிர் போன பிறகு, சீதா ராமுவை அடிமை கொள்கிறாள். ராமு சரசாவிக்கு
அண்ணனாகி வரன் தேடிப்பிடிக்கிறார்.
வரனின் தகப்பனார் அசல் சாஸ்திரிகள் சந்தேகமில்லை.
பெண்ணின் முகம் - மூக்கு பற்றி அவருக்குக் கவலையில்லை. நகைகள்
மீதுதான் நாட்டம்; ரூபத்தைப் பற்றி கவலையில்லை. ரூ.3000 அதற்கு
மேலும் ஆயிரம் அதன் மீதுதான் அக்கரை.
கல்யாண வேளையில் பேராசை பிடித்த பிராமணன் சீதாவைப்
பற்றிப் பழித்ததும் வருகிறதே ராமுவுக்கு என்றுமில்லாத கோபம். எங்கிருந்து
அவன் வேதாந்தம் என்ற வலையில், போட்டுக் கட்டி வைத்திருந்த காதல்,
வேதாந்தத்தை அறுத்து எறிந்துவிட்டு சரசாவின் அருமையறிந்த வேறு
வரனை இதே முகூர்த்தத்தில் அழைத்து வருகிறேன் என விரைந்து செல்கிறான்.
வரன் வருகிறான்! யார்? ராமுதான்!
சீதாவின் தோல்விக்கு சரசா பழி வாங்கி விடுகிறாள்.
ஆம்! சீதாவுக்கு ராமு செய்யத் தோன்றியதை சரசாவுக்கு செய்து சாந்தி
பெறுகிறார் ராமு.
புலி பாய்கிறது மான் மீது! மான் மிரள மிரள விழிக்கிறது.
தப்பி ஓடலாம் என்றாலோ, சுற்றிலும் முள் வேலி போடப்பட்டிருகிறது.
பயத்தின் மிகுதியால் புள்ளிமானால் துள்ளி ஓடி முடியவில்லை. கண்களிலே
மிரட்சி கப்பிக்கொள்கிறது. அந்த நேரத்தில் வில்வீரன் அன்பினால்
புலியை வீழ்த்தி புள்ளிமானைத் தடவிக் கொடுக்கிறான். மான் நன்றியறிதலுடன்
களிப்புடன் அவனை நோக்கி தாவினால் அவன் கரத்தைத் தடவிக் கொடுக்கிறது.
சரசு, மான், புலி, வரதட்சணைக் கொடுமை. முள்வேலி
சமுதாயக் கட்டுப்பாடு, வில் வீரன், சாமு, அம்பு தாலி. அந்த வில்
வீரனுக்கம் ராமுவுக்கும் என்ன வித்தியாசம்! சந்தேகமிருந்தால் போய்ப்பாருங்கள்.
அந்த சீனை - ஷண்முகம் வீர ராமுவாக நடிப்பதை! முகத்தில் தோன்றும்
வீரக் களையை! மருண்ட மான் போல துரோபதை சரசாவாக நடிப்பதை நேறிலே
சென்று பாருங்கள்; பிறகு கூறுங்கள் என் உவமையில் எதாவது சொள்ளை
இருந்தால்.
சோகரசம் மட்டுமேதான் துரோபதையின் ஸ்பெஷல் என்று
கருதுவீர். அந்த ஒரு நாடகத்தை மட்டும் கண்டால், ஒரு வேளை துரோபதைக்கு
சோக நடிப்பு இயற்கையாக அமைந்திருக்கிறது போலும் என்று எண்ணுவீர்கள்,
அது தவறு.
அவ்விதமான நடிகர்கள் இருக்கிறார்கள்; எனக்குத்
தெரியும். சில நடிகர்களுக்கு - அனுமார் வேடம் போட வேண்டுமானால்
அதிக தொல்லையே இராது!
சரசுவாக வந்து நமது மனதைக் கரைய வைக்கும் அதே
துரோபதை, இராமாயணத்தில் மாயா சூர்பநகையாகத் தோன்றி நடித்த நடிப்பும்,
பேசிய பேச்சும் பாடிய பாட்டும், தளுக்கும் குலுக்கும், சரசமும்
சல்லாபமும் பார்க்கவேண்டும். போ! போ! என நீர் சொல்கிறீர், ஆனால்
உமது கண்கள் இரு இரு என்று சொல்கின்றன என மாயாசூர்பநகை கூறி, கண்களைக்
கொண்டு பேசவைக்கும் நடிப்பைப் போய்ப் பாருங்கள் அந்த துரோபதையா
இவ்வளவு கோர நடிப்பும் நடிக்கிறது என்று ஆச்சரியப்படுவீர்கள்.
அந்தத் தளுக்குக் குலுக்குக்குத் தப்பித்த இராமாயண
ராமு, குமாஸ்துவின் மகள் நாடகத்தில் ராமுவாக வரும்போதுன் பழி தீர்க்கப்படுகிறார்.
நாடகத்தில் பிரத்யோக விமரிசனத்துககுரியது ஸ்டூடியோ
சீன்! தமிழ்ப் படங்கள் ஏன் கெட்டுவிடுகின்றன? கலைக்குப் பல காத
துரத்தில் உள்ள முதலாளி, முதலாளியின் தோழன் என்ற முறையினால் கதாநாயகராகும்
நடிகர், நடிகரின் நட்பைப் பெற்று நடிகை கதை காட்சி, கானம், நடிகர்
தன்மை எதையும் அழியாத வகையில் சிகரெட் டப்பாவும் சுறுசுறுப்புக்கு
பானமும் அருந்தும் டைரக்டர். இதுதானே தமிழ்ப் படம் கெடுவதற்குள்ள
காரணம். தோழர் கே.ஆர்.ராமசமி டைரக்டர் வரச் வேடத்தில் வந்து, நாடகக்
கொட்டகையே அதிர்ந்து விழும்படியான நகைப்பை ஊட்டிவிடுகிறார். என்ன
வேடிக்கையான உத்திகை, தோழிகளின், அழுகை! மிருதங்கக்காரரின் தடதடா
பேஷ்! பேஷ்! டைரக்டர்கள் இனி தோழர் ராமசாமி மீது மான நஷ்டம் கூடத்தொடுத்து
விடுவார்கள்! படத்தின் பண்பு, பாஷையில் பயிற்சி ஏதுமறியாத டைரக்டர்கள்
தயவு செய்து விலகிவிடட்டும். தோழர் ராமசாமி அத்தகையோரின் மானத்தை
அடியோடு வாங்கிவிடுகிறார்! மத்தாப்பு சுந்தரிகள், ஸ்டூடியோக்களுக்கு
தயவு செய்து வரவேண்டாம். வந்தால் என்ன நடக்கும்? கேளிக்கை, சீட்டாட்டம்,
குஷி, நடிப்பு இருக்குமோ; இராது! படம் ரன் ஆகுமோ. ஆகாது! நாடகத்திலும்
டைரக்டர்களும் நடிகர்களும் ரன் ஆகிறார்கள் படம் நின்று விடுகிறது.
சினிமாத்துறையில் உள்ள ஆபாசத்தை அலங்கோலத்தை அந்த சீன் மிக அழுகு
பட ஹாஸ்யச் சுவையுடன் எடுத்துக் காட்டுகிறது.
கிழட்டு மாப்பிள்ளையாக வரும் கே.ராமசாமி அசட்டுத்தனத்தை
அப்படியே உருவகப்படுத்திக் காட்டிவிடுகிறார். பெண் பித்துக்கொண்ட
பார்வையை மிக நன்றாகக் காட்டுகிறார். பருவம் அவரது முதுகைச் சற்று
வளைத்து விடுகிறது. ஆனால் ஜோதிடர் வேடத்தில் ஜோராக தோழர் என்.எஸ்.நாராயணன்
நடிக்கிறார். ஏன் வளர்க்கவேண்டும், அந்த நாடகத்தில் யார் மீதுதான்
குறை சொல்வது? ஷண்முகத்தின் உருக்கமான பாடலைக் கேட்டேன், பகவதி
உண்மையை உணர்ந்தேன். தேவைக்கு அதிகமான பொருள் இருந்ததால் இங்ஙனம்
ஆடினேன். என்னை மன்னிக்க வேண்டும். என ராமுவிடம் அடிபணியவும் இருவரும்
ஒருவரையொருவர் அணைத்து நிற்கவும் அபேத வாதமும் அன்பும் அழகு பட
விளங்கும் அரியக் காட்சிகளைக் கண்டேன் மிராசு மணிக்கு வாழ்க்கைப்பட்ட
கமலா, மாதர் மலருக்குச் சமம். ஆண்கள் வண்டு குணம் உடையவர்கள் என்று
உலக உண்மையை உரைப்பதைக் கேட்டேன். பல நாட்களில் நான் கண்டறியாதன
இதில் கண்டேன். நான் கண்டதைச் சுருக்கித்தான் எழுதினேன். முழுதையும
நீங்கள் காணவேண்டுமே.
ஈரோடுவாசிகள் இன்றே செல்லுங்கள். மற்ற ஊரார் அழைப்பு
அனுப்புங்கள் கம்பெனிக்கு. குமாஸ்தாவின் மகள் சினிமாவாகவும் வரப்போகிறது.
கவனமிருக்கட்டும்!
(இளந்தமிழன்)