சிறப்புக் கட்டுரைகள்

கேய்ரோவில் கழுகு!
அறிஞர் அண்ணா

வெஞ்சமரைத் தனக்கோர் விளையாட்டென்று கருதிய நெப்போலியன் உலகிலேயே எகிப்து நாட்டைப் போலவே, முக்கியத்துவம் வாய்ந்த நாடு வேறில்லை என்னலாம் என்று கூறினார். அந்த எகிப்துமீது, நாஜிகள் இதுபோது பாயத்துணிவு கொண்டு விட்டனர். நாஜிப்படைகள் நாகமெனச்சீறி, எகிப்து நோக்கிப் பாய்கின்றன. கெய்ரோ நகர்மீது கழுகுப் பாய்ச்சலில் சென்று தாக்கவும் கொயரிங்கின் விமானங்கள் விண்ணைநோக்கிச் செல்லுமென்று கூறப்படுகிறது. பிறைபறக்கும் இடத்திலே பெர்லின் பேயர்கள் சுவஸ்திகக் கொடியை நாட்டவும், எகிப்தை அடுத்துள்ள சூயசில் தமது ஆதிக்கத்தைப் புகுத்தவும் நெஞ்சில் நினைப்பு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது நிலைமை மிக்கப் பயங்கரமாகி விட்டது.

எகிப்து நாடு, எழிலும் திறனும், வளனும் வீரமும் செறிந்து, பாரோர் புகழும் பரூக் மன்னரின் பரிபாலனத்தின் கீழ பரிமளத்தோடு விளங்குகிறது. பன்னெடுங் காலங்கட்கு முன்னே, இன்று புகழுடன் விளங்குமிடங்கள் காட்டுமிராண்டிக் கூடாரங்களாக இருந்த காலையிலேயே தரணி எனும் கழனியிலே ஒரு கரும்புச்சோலையாக காட்சி தந்து வந்தது எகிப்து. பண்டையச் சாம்ராஜ்யங்களிலே எகிப்து, மிக்ககீர்த்தி வாய்ந்தது. பாலைவனத்துக்குப் பக்கத்திலே பால்வண்ண நீரைத்திரட்டிப் பெருக்கி ஓடும் பண்புடைய நைல் நதி தீரம் எகிப்து. அங்கு நாகரீக நங்கை நடமாடித் திரிந்தாள். அத்தகைய இடத்துக்கு இடரும் இடியும், இன்னலும் இழுக்கும், தேடித்தர ஹிட்லர் எண்ணுகிறார். இடையே நின்று நாஜிகளின் எண்ணத்தைத் தடுத்துவந்த கோட்டைகளை நாஜிப்படைகள் பிடித்துவிட்டன. பெங்காசி முதல் பார்டியா வரை பாதகரின் படை பரவிவிட்டது. டோப்ரூக் கோட்டையும் பிடிபட்டுவிட்டது.

டோப்ரூக் என்ற கோட்டையின் பெயரே போர்க்கால பழமொழியாக இருந்தது. எவ்வளவு பலமான தாக்குதல், முரட்டுப் பிடிவாதமான முற்றுகையையும் சமாளிக்கும் கோட்டையாக டோப்ரூக் விளங்கி வந்தது. எனவே விடாப்பிடிக்கோர் மறுபெயர், டோப்ரூக் என்றுங் கூறுவாராயினர். அத்தகைய டோப்ரூக் நாஜிப்படைத் தலைவன் ஜெனரல் ரோமலின் தந்திரப் பாய்ச்சலால் 22ந்தேதி வீழ்ந்துவிட்டது. நாற்பத்தி எட்டு மணிநேரமே போர் நடந்தது, நடுங்கா உள்ளம் படைத்த வீரர்கள் காவல்புரிந்தும், கடும் போரிட்டும் கோட்டையிலே இன்று, கொடிமரத்திலே சுவஸ்திகா பறக்கிறது. 32,000 பேருக்கு மேலாக நேசநாட்டு வீரர்கள், அச்சுநாட்டுப் படைகளிடம் சிறைப்பட்டு விட்டனர். திடீரென்று கோட்டை பிடிபட்டுவிடவே, தளவாடங்களும் எதிரிகளிடம் சிக்கிக்கொண்டிருந்து விட்டிருக்கும்.

22-6-42ல், ஜெனரல் ரோமலிடம் சிக்கிய இந்த டோப்ரூக், 24 மணி நேரத்திலே, இத்தாலியரிடமிருந்து பிரிட்டிஷாரால் 24-1-41ல் பிடிக்கப்பட்டது.

அக்காலை அங்கு தளபதியாக இருந்த ஜெனரல் வேவல், ஜனவரி 22ந் தேதி, டோப்ரூக் கோட்டையைத் தாக்கினார். 23ந் தேதி, பகலோன் புறப்படு முன்னம், வெற்றி வீரராக வேவல் வெளிவந்தார், டோப்ரூக் வீழ்ந்தது. கோட்டைமீது படைகள் தாக்கு முன்னம் 87 முறை பிரிட்டிஷ் விமானங்கள் ஆங்கு குண்டு வீசின. டோப்ரூக்கில் கிளம்பிய தீ, 80 மைல் தொலைவுவரை தெரிந்ததாம்! வேவலின் வெற்றி ஜனநாயக நாட்டினரின் உள்ளத்தில் உல்லாசத்தைக் கிளப்பிற்று. டோப்ரூக் கோட்டைக்குள் நுழைந்ததும் ஆஸ்திரேலியப் படை, கொடிமரத்திலிருந்து இத்தாலியக் கொடியை இறக்கிவிட்டு, தமது சோல்ஜரின் தொப்பியை அதிலே தொங்க விட்டனராம். இங்ஙனம் பிடிபட்ட டோப்ரூக். ஜெனரல் ரோமலின் உறுமலுக்கு அஞ்சாது தாக்குதலுக்குத் தளராது எட்டு மாதங்களுக்கு மேலாகத் தாக்குப் பிடித்தது. ஆனால், இம்முறை 48 மணி நேரத்திலே வீழ்ந்தது. சிந்தை நொந்தும், சினந்தும், சீறியும், பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதுகின்றன. பாராளுமன்றத்திலே பதைப்பு, மக்கள் உள்ளத்திலே திகைப்பு, நாஜி கூடாரத்திலே களிப்பு, ரோமலுக்குப் புதுப்பட்டமாம், அதைத் தாங்கிக் கொண்டு, ரோமல் தன் படைகளை, எகிப்து நோக்கிச் செலுத்துகிறாராம். கெய்ரோவில் கிலியும் கவலையும் தோன்றும்விதமானதாகி விட்டது, காலம்.

டோப்ரூக், இத்தாலியரிடமிருந்து, ஜெனரல் வேவலால் பிடிக்கப்பட்டபோது, இத்தாலிய டாங்கிகளை விட பிரிட்டிஷ் டாங்கிகள் மிக்க வலி உள்ளனவாக இருந்தன. எனவே தான் டோப்ரூக் வீழ்ந்தது என்று இத்தாலிய தளபதி ஒருவர் கூறினார். இன்று அதுபோன்றே, பிரிட்டிஷ் டாங்கிப்படையைவிட ஜெர்மன் டாங்கிப்படை வலுவில் அதிகமானதாக இருந்ததுடன், வெளியே வீசும் தணல் காற்று உள்ளே உட்கார்ந்து டாங்கியைச் செலுத்தும் வீரனை வாட்டாதபடி உள்ளே குளிர்ச்சியாக இருக்குமாறு ஜெர்மன் டாங்கிகள் அமைக்கப்பட்டிருந்தன, ஜெர்மன் வெற்றிக்கு அதுவே காரணம் என்று பேசப்படுகிறது. ரோமலின் படைகள் களைத்துவிட்டனர். எனவே பெருந்தாக்குதலுக்கு முன்வாரார், என்று பிரிட்டிஷ் படைத்தலைவர் ஜெனரல் ரிட்சி கருதினாராம்! ரிட்சியின் படைகள் தோல்வி அடைந்ததின் காரணங்களை ஆராயப்போகிறார்களாம்! காரணம் எதுவாக விருப்பினும் காலம் பயங்கரமானதாக இருப்பதை நேசநாட்டினர் இதுபோது உணரவேண்டும்.

எகிப்து, சூயஸ் கால்வாயைத்தொட்டுத் தழுவிக் கொண்டிருக்கிறது. சூயசில் சுவஸ்திகா நாட்டப்பட்டால், சிரியாவுக்கு ஆபத்து, ஈராக்குக்கு ஆபத்து. அங்கிருந்து இந்தியாமீது பாயவும் வழி சுலபத்திலே கிடைத்து விடும். செங்கடலைக் கடந்து அரபு நாட்டுக்குள் புகுவரோ, சூயசைத்தாண்டி சிரியா செல்வரோ, நேரே கராச்சிக்கே தமது கணைகளைச் செலுத்துவரோ என்றெல்லாம், கவலைப்பட வேண்டியதாகிவிட்டது. எகிப்துக்கான போராட்டம் தொடங்கிவிட்டது என்கின்றனர் நிபுணர்கள். மேற்கே இதுவெனில், கிழக்கே, அசாம் எல்லையை ஒட்டி, ஜப்பானிய படைகள் குவிந்துள்ளன! மேற்கிலிருந்து நாஜியும் கிழக்கேயிருந்து ஜப்பானியப்படையும் ஏக காலத்திலே இந்தியாவின்மீது பாய்ந்தால், என்ன நேரிடும் என்பதை எண்ணவும் பயமே உண்டாகிறது. பர்மாவிலே குவிந்துள்ள ஜப்பானியப்படைகளைக் காண்கையில், இந்தியாமீது படை எடுக்க ஜப்பான் பெரியதோர் திட்டம் தயாரித்தக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்று, கல்கத்தா அமிர்தபஜார் பத்திரிகை எழுதுகிறது! இந்தியாவின் சர்வாதிகாரி என்ற பட்டமிட்டு, சுபாஷ்போசை ஹிட்லர் தட்டிக்கொடுக்கிறார் என்று லண்டன் பத்திரிகையொன்று கூறுகிறது, கருப்பு உடையும் ராணுவ அங்கியும் பூண்டு, சுபாஷ்போஸ், காணப்பட்டார் என்று அப்பத்திரிகை எழுதுகிறது. இது வெறும் மனப்பிராந்தியாக இருக்கவேண்டுமென்று அவாவுகிறோம். இந்தியாவுக்கு இணையில்லா நெருக்கடி முற்றாதிருக்க வேண்டுமானால், எகிப்து நாடு எதிரிகள் வசம் சிக்காதிருக்கச் செய்ய வேண்டும். கத்தரிக்கோலிடையே சிக்கிய பட்டுத்துணிபோல், இந்தியா, மேற்கிலிருந்து நாஜிப்படையும், கிழக்கேயிருந்து ஜப்பானியப் படையும் தாக்கிடும் நிலையில் சிக்காதபடி தடுக்கவேண்டும். நாட்டினர், இத்தகைய கேட்டினைத் தவிர்க்க, தோள்தட்டி எழுந்து, கச்சையை வரிந்து கட்டவேண்டும்.

ரஷியக்களத்திலே, செபாஸ்டபூல் கோட்டை மூன்று வாரங்களாக, மூர்க்கத்தனமான நாஜித்தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது. கடைசிசொட்டு இரத்தம் சிந்தும்வரை, செபாஸ்டபூல் கைவிடப் படமாட்டாது, ஆனால் செபாஸ்டபூல் எதிரியிடம் சிக்கிவிட்டால் ஆச்சரியப்படமுடியாது. ஏற்கனவே மக்கள் அந்நகரை விட்டு வெளியேறி வருகிறார்கள். அரண்களைத் துளைத்துக்கொண்டு நாஜிப்படைகள் ஊடுருவிப்பாய்கின்றன. இந்நிலையில், இங்கும், நாஜியும் ஜப்பானியரும் இருபுறம் நின்று, ரஷியாவை இடுக்கிக்கொள்ள முயலுமெனத் தெரிகிறது. ரஷியகளத்திலே ஐரோப்பியபுறமிருந்து நாஜிபடை தாக்குகையில், சைபீரியா பக்கமிருந்து ஜப்பானியப்படை தாக்குமாம்! ஆகவே இரு போர்க்களமும், பயங்கரமானதாகக் காணப்படுகிறது.

நேசநாட்டினரின் கொடி தினம், சோவியத்நாள் முதலிய விழாக்கள் கொண்டாடி, நேசநாடுகள், தமது நெஞ்சிலிருக்கும் உரத்தைக்காட்டிக் கொண்டுள்ளன. அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்டுடன் மிஸ்டர் சர்ச்சில் ஆலோசித்து, இரண்டாம் போர்முனை, சீனாவின் சஞ்சலம் ஆகியவைபற்றி முக்கிய முடிவுகள் செய்துள்ளாராம். நேசநாட்டினர், இனி பிணமலை குவித்தேனும் எகிப்து எல்லையையும் ரஷியகளத்தையும் காப்பாற்றித் தீரவேண்டும்! இச்சமயத்திலே, திறமும் தீரமும்கொண்டு தாக்கினால், நாஜியின் நினைப்புச் சாய்ந்து சரியும், கனவு கருகும் என்பது திண்ணம்.
28.6.1942

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai