தோழர்
சோமசுந்தர பாரதியாரும்
ராவ்சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியாரும்
பேரறிஞர்
அண்ணா
(திராவிடநாடு - 27.09.1942)
பெரியவர் ஈ.வெ.ராமசாமி கம்பராமாயணம் ஒழிக்கப்படவேண்டிய நூல்
என்று சொன்னவுடன், கம்பராமாயணப் பிரசங்கிகளும், புத்தக வியாபாரிகளும்
பார்ப்பனலல்லாத பகுத்தறிவு மக்களிடத்தில் சிறிது செல்வாக்குள்ள
சில அறிஞர்களைப் பிடித்து சில அறிக்கைகள் வெளியிடச் செய்துவிட்டார்கள்.
இதனால் இப்பிரசங்கிகள் தாங்கள் கம்பஇராமாயணத்தைக் காப்பாற்றிவிட்டதாக
மனப்பால் குடிக்கிறார்கள்.
தோழர் சோமசுந்தர பாரதியாரவர்கள் இப்புராணப் புலவர்களுக்கு இரங்கி
ஒரு புதுக்கரடியை உண்டாக்கிவிட்டார். இந்தக் கரடி கம்பராமாயணத்தை
ஒழிக்கவேண்டும். என்கின்றவர்களை விழுங்குமோ அல்லது அக்கரடியை உண்டாக்கினவர்கனையே
பார்த்து உறுமுமோ என்பது இனி போகப் போகத்தான் தெரியும்.
இப்படித்தான் பெரிய புராணத்தையும் திருவிளையாடல் புராணத்தையும்
காப்பாற்ற தோழர கா.சுப்பிரமணியப் பிராமணர் (அந்தணர்) என்று பார்ப்பனரல்லாதவர்களில்
ஒரு கூட்டமிருந்தது என்றும், நான்கு வேதம் (மறை) என்று தமிழில்
நாலு மறைகள் இருந்தன என்றும், யாகம் (வேள்வி) என்பதாக தமிழர்க்கள்
சில செய்கை இருந்தன என்றும், ஆதலால் பெரியபுராணம், திருவிளையாடல்
புராணம் முதலிய சைவ நூல்களில் வரும் நான்கு வேதம், பிராமணர், யாகம்
என்பவைகள் ஆரியர் சொல்லுவதும், ஆரியர்கள் சாஸ்திரம், ஸ்மிருதி,
புராணங்கள் ஆகியவைகளில் வருவதுமான வேதம், யாகம், பிராமணர்கள் அல்ல
என்ற ஒரு புதுக்கரடியை உண்டாக்கி பெரியபுராண வியாபாரிகளும், புலவர்கள்,
பிரசங்கிகள் ஆகியவர்களுக்கும் மூடநம்பிக்கைச் சைவர்களுக்கும் காப்பளித்தார்.
கடைசியாக இந்தக் கரடி அவரையே விழுங்க ஆரம்பித்துவிட்டது என்றால்
இது அடியயோடு கற்பனை ஆகாது.
அதுபோலவே கம்பராமாயணத்தையும் கம்ப இராமாயணப் புத்தக வியாபாரிகள்,
பிரசங்கிகள், புலவர்கள் ஆகியவர்களையும் ஆதரிக்க பாரதியார் அவர்கள்
இராமாயணத்தில் வரும் குரங்குகள், இராவணன் முதலிய அரக்கர்கள் முறையே
மனிதர்களுமல்ல திராவிடர்களுமல்ல. மனிதர்க்கும் குரங்குக்கும் மந்தியில்
உள்ள ஒரு பிராணி என்றும் இராவணன் ஒரு வகை ஆரியன் என்றம் ஒரு புதுக்கரடியை
உண்டாக்கி இருக்கிறார் என்ற சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில்
இப்படி கரடியை உண்டாக்கினவர் சற்று கருணை வைத்து அதற்க ஆதாரம்
இன்னது என்ற காட்டி இருப்பார்களானால் கம்பராமாயணத்தை ஒழிக்க அவண்டுமென்பவர்கள்
அந்த ஆதாரத்துடன் தங்கள் போராட்டத்தை துவக்கப் போய் விடுவார்கள்.
இப்போது அக்கரடிக்குத் தோழர பாரதியார் அவர்களே ஆதாரமாய் இருப்பதால்
ஒழிக்கவேண்டியவர்களின் நிலைமையை பாரதியார் தர்மசங்கடமாக ஆக்கிவிட்டார்,
என் செய்வது? தோழர் பாரதியாரைவிட மூப்பெய்தியவரும் பாரதியார் அவர்களுக்கு
மேம்பட்டவராய் இல்லாவிட்டாலும் சமானமாகவே பாரதியாருக்கும் முற்பட்ட
ஆராய்ச்சியாளருமாய் அறிஞருமாய் கொண்டாடி வருபவருமான தோழர் ராவ்சாகிப்,
வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கருத்தை
இப்போது இதன் கீழ் வெளியிடுகிறோம். வாசகர்கள் ஊன்றிப் பார்த்து
கம்பராமாயணம் ஒழிக்கப்படவேண்டியதா? காக்கப்பட வேண்டியதா? என்பதைப்
பற்றி சிந்திப்பார்களாக:- வெ.ப.சு.
தோழர் ராவ்சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் அவர்களால் 1906-ல்
எழுதப்பட்ட இராமாயண உள்ளுரைப் பொருளும் தென் இந்திய சாதி வரலாறும்
என்ற ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களாவன:-
பக்கம் 3 வரி 6 முதல் 14 முடிய
இராமாயணத்தில் கூறும் அனாரியர் யாரெனில் வாலி முதலான தென் இந்திய
வாசிகளும் இராமாயணதி இலங்கை வாசிகளுமாம். வாலி சுக்கிரீவன் ஆகியோர்
குரங்குகள் என்று ஆரிய கவியால் கூறப்பட்டிருந்தாலும அவர்கள் கடவுளால்
அவ்வாயர்களைப் போலவே மனிதர்களாகப் படைக்கப்பட்டவர்களே. இராவணனாதியர்
இராக்கதர் என்று கூறப்பட்டிருந்தாலும் அவர்களும் ஆரியரைப்போல மனிதரே.
இவ்விரு வகுப்பு (குரங்கு, இராக்கதர் என்று கூறப்படும்) மனிதரும்
நமது முன்னோராகிய திராவிடரே என்றும்,
பக்கம் 12: வரி 9 முதல் 12 முடிய இராவணன் அனுமான் முதலியவர்கள்
கல்வித் திறத்தைப் பற்றிய புகழ்ச்சியால் (அக்காலத்திய) திராவிடர்களின்
கல்வி கேள்விகளின் மேம்பாடு குறிக்கப்பட்டிருக்கின்றது
என்றும்
பக்கம் 14: வரி 7 முதல் 10 முடிய
வாலி தன்னைப் போலவே திராவிடராசனாவும், தனக்கு பழகிய நட்பாளனாகவும்
உள்ள இராவணனை என்றும்
பக்கம் 17: வரி 22 முதல் 25 முடிய இராவணன் தன் சாதிக்க சத்துருக்களாகி
தேவரென்ற ஆரிய சாதியருக்கு இடுக்கண் செய்தானென்று என்றும்
பக்கம் 19: வரி 20 முதல் 25 முடிய
புதிய வரவினராகிய ஆரியர்களுக்கு அனுகூலராயும் பிரதிகூலராயும் இருந்த
திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை (இராமாயணத்தில்) ஆரிய கவி அரக்கர்
என்றும் குரங்கினம் என்றும் இழித்துக் கூறியது அவர்க்குரிய சாதித்
துவேஷம், செய் நன்றி கொல்லல் ஆகிய குணதோஷத்தைக் காட்டுகிறது என்றும்.
பக்கம் 20: வரி 15 முதல் 17 முடிய
இராமயண காலத்தில் தெற்கே மைசூர்ப் பிரசேசம் வரை உள்ள நாடுகள் நீலன்,
சுக்கிரீவன், வாலி முதலிய சிறந்த திராவிட அரசர்களால் ஆளப்பெற்றன
என்றும்
பக்கம் 30: வரி 11 முதல் 13 முடிய பரத்துவாசர் ஆச்சிரமத்தில்
இராமராதி ஆரியரும் விபீடனராதி திராவிடரும் உடனிருந்து விருந்துண்டனரென்று
இராமாயணம் கூறுகிறது.
என்று கூறியிருக்கிறார்.
இன்னும் இப்படிப்பட்ட பல அப் புத்தகத்தில் காணப்படுகின்றன.
ஆகவே இதைப் படித்தவர்களுக்குத் தோழர் பாரதியார் ஆதாரம் காட்டும்
வரை தோழர் சுப்பிரமணிய முதலியார் கூற்று சரியா? என்ற சங்கடம் பிறக்கலாம்
தோழர் பாரதியார் கூற்றுக்குப் பாரதியார் ஆதாரம் காட்டும்வரை தோழர்
சுப்பிரமணிய முதலியார் கூற்றுதான் செல்லுபடியுள்ளதாகும். ஏனெனில்
முதலியார் கூற்றக்கு முதலியாரைவிட பாரதியாரைவிட முன்கூட்டி ஆராய்ச்சி
செய்த அறிஞர், ஆராய்ச்சியாளர்கள், நடுநிலமையாளர்கள், எவ்வித சொந்த
உணர்ச்சியிலும் சம்மந்தப்படாதவர்கள் ஆகிய பல நூற்றுக்கணக்கானவர்களின்
ஆதாரங்கள் இருக்கின்றன. இதில் மற்றொரு பெரிய ஆதாரம் என்னவெனில்
தோழர் முதலியாரின் மேற்கண்ட கூற்றுகள் முதலியாருடைய ஆராய்ச்சி
மாத்திரமல்லாமல் திருவனந்தபுரம் மகாராஜா காலேஜ் புரபசர் பி.சுந்தரம்
பிள்ளை அவர்களது ஆராய்ச்சி முடிவென்றும், அதிலிருந்தும் புரபசர்
சுந்தரம் பிள்ளை அவர்களிடம் நேரில் கேட்டுத் தெரிந்ததிலிருந்தும்
அவர் வைத்துவிட்டுப்போன ஆராய்ச்சிப் பொக்கிஷத்தில் இருந்தும் தெரிந்தவைகளாகும்
என்று தோழர் முதலியார் அவர்களே ஆதாரத்தோடு தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதாகும்.
இப்புத்தகம் சென்னை பவழக்காரத்தெருவு சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தில் 0-8-0 விலைக்கு விற்கப்படுகிறது.
இப்படிக்கு,
கம்பராமாயணம் ஒழிக்கப்படவேண்டும் என்னும் பேரவாவிற்பட்டோன்
(திராவிடநாடு - 27.09.1942)