சிறப்புக் கட்டுரை

மழை
(1961 பொங்கல் மலரில் அறிஞர் அண்ணா அவர்கள் மழையைப் பற்றி எழுதியக் கட்டுரை இது. மழை சேதத்தால் ஏற்படும் அல்லல்கள், இழப்புகள், அவை ஏற்பட்டதற்கான உண்மையான காரணங்கள், மழை நீரை தேக்கி வைக்க முடியாததால் அது கடலில் கரைந்து விரயமாவது இவை இன்று பேசப்படுகிறது. அன்றைக்கே அண்ணா அவர்கள் இதை உருவகமாக, மழையே பேசுவதுபோல் எழுதிய கட்டுரை இது. முழுக்கட்டுரை அல்ல இது; அதில் ஒரு பகுதியே)

சூல் கொண்ட மேகம், துடிக்கிறது. பாரம் தாங்க மாட்டாமல், என் செய்யும்? நான் வெளியேறினால்தான் வேதனை தீருகிறது. மேகத் திரளுக்கு வருகிறேன், பொழிகிறேன். வாழ்த்துகிறீர் சில வேளை; தூற்றுகிறீர் சில சமயம். வாழ்த்தும் போது தேனாகவும் மாறிட முடியாது. தூற்றும் போது மீண்டும் மேகத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டுவிடவும் இயலாது. கீழே வருகிறேன்! வரவேற்பு பெறுகிறேன்! ஆனால் நான் செல்ல சரியான பாதை உண்டா? இல்லை! தங்கிட முறையான இடங்கள் உள்ளனவா? கிடையாது! விரிந்து, நெடுந்தூரம் பறந்து கிடக்கும் வழியை நாடி செல்கிறேன். ஆறு என்கிறீர்களே அதனைத்தான் கூறுகிறேன். அதனை ஒழுங்குற வைத்திருந்தால் எனக்கு இல்லை தொல்லை. ஊருக்கும் ஆபத்து இல்லை. மண்மேடுகள் தடுக்கின்றன! என் வேகத்தைத் தடுத்து, தேக்கி வைத்துப் பயன் பெறலாம் - அதனையும் செய்கிறீர்கள் இல்லை. ஏரி என்கிறீர்கள் - கரை காப்பளிக்கவில்லை. குளம் என்கிறீர்கள் என் வேகம் பொறாமல் குமுறி உடைபட்டுப் போகிறது, நான் என்ன செய்வேன்? என்னை வாழ்த்தி வரவேற்றுப் பயன் பெற்ற மக்கள் ஒரு ஊர் என்றால், அதற்கு உள்ளேயும் வெளிப்புறங்களிலும் நான் வந்து இருக்க ஏரிகளையும், குளங்களையும் அமைத்து வைத்திருந்தனர். இப்போது? ஏரிகள் தூர்க்கப்பட்டுப் புது ஊர்களாக்கப் பட்டுவிடுகின்றன! ஆற்றோரம் குடில்கள் மயமாகிவிடுகின்றன! கடல் ஒன்றே அன்று போல் இன்றும் அளித்திடுது அடைக்கலம். ஊர்களிலே எனக்கென்று முன்பு இருந்த இடமெல்லாம் பறித்துக்கொண்டீர்கள், ஒவ்வொன்றாய், என் செய்வேன்? ஒழுங்காகத் தங்கி இருக்க இடமில்லை! கண்ட இடத்தில் நடமாடும் காலம் வந்தது, அதனால் காண்கிறீர் அழிவு. என் மீதோ குற்றம்! காரணம் புரியாமல் கடு மொழி பேசுகிறீர், கவலை நான் கொள்ள, கருத்தற்றோ உள்ளேன்? குறைமதியாளர் கூற்று அதுவென்று தள்ளிவிடுகிறேன். நிறை மதியாளர்கள் எம் நீடு புகழ் புலவோர்கள் வாழ்த்திப் பாடியுள்ள பாடல் வகை எல்லாம் நான் எண்ணி மகிழ்ந்து உலவுகின்றேன்.
(திராவிடநாடு - பொங்கல் மலர் - 1961)


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai