திராவிடரும் - கடவுளரும்
அறிஞர் அண்ணா
இஞ்ஞான்றைத்
திராவிடமக்கள் சிலரால் வழிபடப்படும் கடவுள் அல்லது கடவுளர், உண்மையாகவே
திராவிடரின் கடவுளராகவும், திராவிட மொழிகளில் ஒன்றையாவது தெரிந்தவர்களாகவும்
இருந்தால், திராவிட மக்களைக் கொண்டே திரவிட மொழிகளிலே தங்களுடைய
காரியங்கள் எல்லாம் நடைபெறும்படி செய்திருப்பர். இன்றுங்கூடத்
திராவிட நாட்டிலுள்ள கோயில்களில் நடைபெறும் வழிபாடு (பூசை)கள்
எல்லாம் ஆரியப் பார்ப்பனரைக் கொண்டே வடமொழியிலேயே நடைபெற்று வருவது
கண்கூடு. ஆகையால், வடமொழியைத் தேனெனப்பருகி, ஆரியக் கொள்கையைக்
கற்கண்டெனச் சுவைத்துத் தமிழ் மக்களைச் சூத்திரராக்கித் தமிழ்
மொழியைத் தமக்கேற்றதல்லவாக்கித் தமிழர் கொள்கைக்கு இடமளியாது நிற்கும்
ஒரு கடவுள், அது எத்தகையதாய் இருப்பினுஞ் சரியே, அதனிடம் எத்துணை
ஆற்றல் இருப்பினுஞ்சரியே, அதனைத் தனது கடவுள் என்று எந்தத் திராவிடனாவது
ஏற்றுக்கொள்வனா? இனித் திராவிட மக்களுக்கு ஒரு கடவுளும், அவரைக்
குறிக்கும் வேதங்கள் திராவிட (தமிழ்) மொழியிலும் இருந்தனவென்றும்,
ஆனால் அவை ஆரியர் சூழ்ச்சியாலும், ஆடிப்பெருக்காலும் மறைந்தும்
அழிந்தும் போயினவென்றும் சிலர் கூறுவரேல், அவர்தம் அக்கூற்று அறிவுடைய
மக்களால் அணுவளவும் எற்றுக்கொள்ளக்கூடியதன்று என்பேன். ஏனென்றால்,
அக்கடவுளும் அவர் தம்மைப்பற்றி எழுதப்பட்ட வேதங்களும் ஆரியச் சூழ்ச்சியாலும்
ஆடிப் பெருக்காலும் அழியக் கூடியனவாய் இருந்தால், அக்கடவுளை எல்லாம்
வல்ல முழுமுதற் கடவுள் என்றும், அவர் இலக்கணத்தைக் கூறும் சுவடிகளை
முடிந்தமுடிபைக் கூறும் வேதங்கள் என்றும் எப்படி ஒப்புக் கொள்ள
முடியும்? தன்னையும், தன்னை விளக்கும் நூல்களையும் காப்பாற்ற வகையற்ற
ஒரு கடவுள், நம்மையும் மற்றும் இவ்வுலகிற் காணப்படும் அனைத்தையும்
காப்பாற்றும் ஆற்றல் பெற்றுள்ளதென்பதனைக் கேட்கும், மணற்சோறு பொங்கி
மகிழும் சிறுமகாரும் எள்ளிநகைப்பரே!
இனித், திராவிட மக்கட்கு ஒரு கடவுள் உண்டென்று
கூறுவோர், மேற்கூறிய தணிவோடுமட்டும் நின்றுவிடுவதில்லை. தங்கள்
போலிக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காகக் ஏதேதோ சான்றுகள் காட்ட முனைந்துவிடுகின்றனர்.
அவையாவன; ஆரியர்களும், சமண - புத்தர்களும் திராவிட நாட்டிற்கு
வந்து தத்தம் மதக் கொள்கைகளை நிலைநாட்டிய காலத்திற்கு மிக முன்பிருந்தே
திராவிட மக்கள், கடவுள் வழிபாட்டையும், அதற்குரிய வேதாகமங்களையும்
உடையவர்களாய் இருந்தனரென்றும்; ஆரியச் சூழ்ச்சியாலும் ஆடிப் பெருக்காலும்
அவை மறைந்தும் அழிந்தும் போனபின்னர்; திருவள்ளுவர் திருக்குறளையும்,
சைவசமயாசிரியர்கள் தேவார திருவாசகங்களையும்; வைணவாசிரியர்கள் பிரபந்தங்களையும்
உண்டாக்கிப் பண்டைத் திராவிடரின் கடவுட் கொள்கையை நிலைநாட்டினர்
என்றும் கூறுவர்.
இக்கூற்று முழுப் பூசுனைக்காயைப் பரிமாறின சோற்றுள்
மறைப்பது போன்ற ஒரு பொருந்தாப் பொய்க் கூற்றாம். எப்படியென்றால்,
வள்ளுவர் வழங்கிய திருக்குறளானது, ஒரு சமயச் சார்புபற்றிய நூல்
அல்லவென்பதூஉம், அது உலமக்கள் அனைவர்க்கும் அறிவை விளக்க எழுந்த
ஒரு பொது நூலே என்பதூஉம் அறிஞர் கண்ட முடிபாகும். எனவே, திருக்குறளைச்
சைவரோ - வைணவரோ மற்றெந்தச் சமயத்தவரோ, தங்கள் சமய உண்மைகளை விளக்க
எழுந்த நூலென்றோ, அல்லது தங்களுக்கன்றிப் பிறர் எவர்க்கும் உரியதாகாதென்று
கூறித் தனியுரிமை பாராட்டவோ முடியாது. அது மக்கட் பண்பை விளக்க
எழுந்த ஒரு பொதுநூல். ஆனால் அதற்கும், மதவெறி பிடித்தோர் மாசண்டாக்கி,
அதனை மன்பதையின் பொது நூலாக்கிக்கொள்ள இடமில்லாது செய்து விட்டனர்.
என்றாலும், பொன்னின் களிம்மைப்புடம் போட்டு நீக்க முடிவது போல்,
திருக்குறளையும் அதன்கண் புகுத்தப்பட்டுள்ள மதமாசைத் துடைத்து
அதனை மன்பதையின் பொதுநூலாக்குவது, முயன்றால் முடியாத காரியமன்று.
மணிகளிடையே பவளத்தைக் கோர்ப்பதுபோல், அறிவுமணியாகிய திருக்குறளிலே
மதக் கொள்கைகள் ஆகிய பவளங்கள் கோர்க்கப்பட்டிருப்பது கலங்கரை விளக்காய்க்
காணக்கிடக்கின்றது. அவற்றை நீக்குவது காய்தல் உவத்தல் இன்றிய கற்றறிந்தாரால்
மிக எளிதில் முடியக் கூடிய காரியமே.
இனித், தேவார - திருவாசக - நாலாயிரப் பிரபந்தங்கள்.
எல்லாம், இருக்கு - எசுர் - சாமம் - அதர்வணம் என்று சொல்லப்படும்
ஆரிய வேதங்களை அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்பட்டன வென்பதற்குச்
சான்றுகள் பலவுள. விரிவஞ்சி ஒன்றை மட்டும் ஈண்டெடுத்துக் காட்டுகின்றேன்.
அதாவது:-
வேதம் பகவதன் பால்
மெய்யாகமநால்வ
ரோதுந்தமிழ் அதனினுன்று
நெய் - போதமரு
நெய்யுனுறு சுவையாரின்
வெண்ணெய் மெய்கண்டர்
செய்த தமிழ் நூலின் திறம்.
இப்பாடல், சைவசித்தாந்த நூலாகவுள்ள சிவஞான போதத்தில்
அதன் சிறப்பைக் குறிக்குஞ் செய்யுளதாக மிளிர்வது. இப்பாடலின் பொருள்
என்னவென்றால், இருக்கு அதர்வம் ஆகிய ஆரிய வேதங்கள் பசுவாகவும்;
அப்பசுவிடத் துண்டான பாலை ஆகமங்களாகவும்; அப்பாலிடத் துண்டாகும்
நெய்யைத் தேவரா திருவாசகங்களாகவும்; அந்நெய்யிடத் துண்டாகுஞ் சுவையைச்
சிவஞானமாகவும் கூறிச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றியும்,
தேவார - திருவாசகங்கள் எல்லாம் இருக்கு முதலான வேதங்களை அடிப்படையாகவும்
இராமாயண - பாரத இதிகாசங்களை வேதமாகவுங்கொண்டு பாடப்பட்டதற்கு அப்பாடல்களிலேயே
சான்றுகள் காணக்கிடப்பதோடு இராமாயண - பாரத இதிகாசங்கள் எயன்றால்,
தேவார - திருவாசக பிரபந்தங்களைப் பாடியிருக்க முடியாதென்ற தன்மையும்
அங்கை நெல்லிக்கனி ஆகையால், பிரபந்தங்களைப் பண்டை வேதாகமங்களில்
சாரம் என்பது சாரமற்ற கூற்றேயாகும். பண்டைத் தமிழ் மக்களுக்கு
வேதங்கள் எதுவும் இருந்ததில்லை என்பது போதரும். தரவே, அவ்வேதாகமங்கள்
பேசப்பட்டதாகச்சொல்லி, இன்றைத் தேவார - திருவாசக பிரபந்தங்களம்,
ஏனைச் சைவ - வைணவ நூல்களில் கூறப்படும் எந்தக் கடவுள் பண்டை திராவிட
மக்களால் வழிபடப்பட்டன அல்ல என்பதும் பெறப்படும். திராவிட மக்கள்
பால் மங்களுக்க ஏற்ற கடவுள் வழிபாடு ஒரு வேண்டப்படாத - தேவைப்படாத
மூடக்கொள்கை இருந்திருக்க முடியாதென்று யாரும் கூறும் உண்மைத்
தன்மை பெறுதல் காண்க. காணவே கருத்து சிலர், திருக்குறளையும் தேவார
திருவாசக - பிரபந்தங்களையும் பண்டைத் தமிழ் நூல்களின் சாரம் என்று
கூறுவது தருக்கர் உரையாம் என்றே கருதப்படும்.
இனி, முதல் - இடை - கடைச் சங்கமென்று சொல்லப்படும்
முப்பெருங் கழகங்களில், அக்கழகத்திற்குத் தலைவராக இருந்த தமிழ்ப்
புலவரின் பெயர் என்பதும், அப்புலவர் அறிவால்கள். தலைசிறந்து விளங்கிய
காரணத்தால் இறந்தபின், அவர் பேரல் நினைவு சில எடுக்கப்பட்டு, ஆண்டுதோறும்
நாட்கள் தமிழ் மக்களால் பொண்டாடப்பட்டு வந்தன வென்பதும், அந்நினைவு
கற்களே, ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர் சிவன் கோயில்களாக
மாற்றப்பட்டனவென்பதும், அப்புலவர், சிவன் என்ற பெயரால் எப்படி
- ஏன் அழைக்கப்பட்டார் என்பதுமான உண்மைகள், பெரிய புராண ஆராய்ச்சி
முதற்பாகத்தில் தக்கசான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது.
இங்ஙனமே, வைணவ மதமும், அதன் கடவுளான திருமால்
வழிபாடும் வட நாட்டிலே, சடகோபர் - முனிபாணர் - பாவணாச்சாரி முதலியோரால்
ஏற்படுத்தப்பட்டு, நம்போலும் மக்களினத்தாரில் ஒருவனாய் இருந்து
இறந்து போன இராமன் என்னும் அயோத்தி மன்னனைக் கடவுளாகக் கொண்டு,
இராமனுசர் என்பவரால் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதென்பதும்,
ஈண்டுக் கருதற்பாலது. இவ்வாறே, புத்த - சமண மதங்கள் வட நாட்டிலிருந்தும்;
கிறித்துவ மதம் ஆசியாவிலிருந்தும்; முகமதிய(இஸ்லாம்) மதம் அரபி
நாட்டிலிருந்தும் பொண்டுவரப்பட்டுத் திராவிட நாட்டில் இறக்குமதி
செய்யப்பட்டனவென்பதும் யாவரும் அறிந்ததே. ஆகையால், திராவிட மக்களுக்கென
ஒரு மதமோ - கடவுளோ அவரைக் குறிக்கும் வேதாகமங்களோ பண்டைக் காலத்தில்
இருந்ததில்லை என்பதும், அவையெல்லாம் காலக்கணக்கில் ஒவ்வொருவரால்
கொண்டுவந்து, புகுத்தப்பட்டவை என்பதும மறுக்க முடியாத உண்மைகளாகும்.
இனி, இவ்வளவு காலமாக இக்கடவுள்கள் மக்களுக்குச்
செய்த நன்மை என்ன என்பதையாவது யோசித்துப் பார்க்க வேண்டாமா? மக்களின்
பசிக் கொடுமை நீங்கிற்றா? கவலை ஒழிந்ததா? வறுமை மாறிற்றா? கைலையில்
காவலோடுவாழும் கடவுளையும்; வைகுந்தத்தில் வனிதையரோடு கூடி விளையாடும்
கடவுளையும்; மக்கள் படைத்து வழிபட்டுக் கண்ட பலன் என்ன? அன்றியும்,
இச்சொல்லப்பட்ட கடவுளரின் திருவிறக்க(அவதார)ங்களான நாயன்மார் ஆழ்வார்கள்
- ஆகிய மதத்தலைவரிகளால் மக்கள் அடைந்த பயன் என்ன? பசியும், விளியும்,
வறுமையும், கவலையும் மக்கள்பால் இல்லா தொழிந்தனவா? அன்று தொட்டின்றுவரை
இன்பதுன்பங்கள், மேடும் பள்ளமும் போல் இருந்து வருவதையே காண்கின்றோம்.
இங்ஙனம இருப்பது இயற்கையின் பண்பென்று எழிலுடையார் கூறுகின்றனர்.
முயற்சித்தால் முடியாத தொன்றில்லை என்று முதறிவோர் கூறுகின்றனர்.
இவ்வுண்மைகளை உணரா தோரும், உணரவிரும்பாதாரும், இல்லாததும் - இருக்க
முடியாததும் - வேண்டப்படாததுமான ஒன்றை, இருக்கிறதென்றும் இருக்க
முடியுமென்றும், வேண்டப்படுவதென்றும் கூறி வீணாக உலகை ஏமாற்றி
வருகின்றனர். கடவுளைக் கண்டேன் என்றும், பாண முடியுமென்றும், கூறிகின்ற
ஒருவன், அந்தக் கடவுளைக் கண்டு தனக்குத் தேவையானதைப் பெற்றுக்
கொள்ளாமல், கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றவனிடம் போய்ப்
பிச்சை கேட்கிறான். கடவுள் தன்மை இருந்தவாறு மிக நன்று! நன்று!!
என்று அந்தப் பகுத்தறிவாளன் நகைத்து, அப்பிச்சைக்காரனுடைய வயிற்றுப்
பசியை நீக் வழியும், அறியாமைப் பசிக்கு ஆராய்ச்சியோடு கூடிய அறிவும்
சொல்லிக் கொடுக்கிறான். கேட்டு அதன்படி நடப்பது அவன் கடமை.
இனி, மதநுலால் கூறும் கடவுள் இலக்கணப்படி, ஒரு
கடவுள் எக்காலத்தும் - எவ்விதத்தும், எவ்விடத்தும் இருக்க முடியாதென்பதற்கு,
இன்னுமொரு வலிய சான்று தருகிறேன். அதாவது, உலகிலுள்ள அசையும் பொருள்
- அசையாப் பொருள்ஆகிய அனைத்தும், கடவுளின் ஆணை - அருள்- அன்பு
- நினைப்பு - நோக்கு ஆகியவற்றால் உண்டாகி, இலங்கும் உயிர் உல்
அனைத்தும் ஈசன் கோயிலாகி, எல்லாம் பொருள்களையும் அந்த ஒரு கடவுளே
இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது, பொதுவாக எல்லா மதநூல்களுடையவும்
முடிந்த முடிபான கொள்கையாகும். உலகத்தோற்ற முறையைக் கூறுமிடத்துப்
பலதிறப்பட்ட வேறுபாடுகள் காணப்படினும், கடவுளுக்கும் உயிர்களுக்கும்
உள்ள தொடர்பும், அவ்விரு வகைப்பட்டாரின் செயல் வேறுபாடுகளும் ஒரு
விதமாகவே கூறப்பட்டுள்ள. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று
கடவுட் கொள்கை எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகும், எனவே,
கடவுளுக்கும் உயிர்களுக்கும் பொதுவாகவுள்ள இவ்வடிப்படைக் கொள்கையை
ஆதாரமாகவும், பகுத்தறிவைத் துணையாகவும் கொண்டு பார்க்கும்போதுதான்,
கடவுள் என்ற ஒரு பொருள் எந்த வகையிலும் இருக்க முடியாதென்ற நல்ல
முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. எப்படியென்றால், உலகிலுள்ள அனைத்தையும்
இயக்குவது கடவுள் என்றால், இயக்குபவன் இன்னான் என்று இயங்குபவன்
ஏன் அறிந்து கொள்ள முடிவதில்லை? அல்லது இயக்குகின்ற அந்தக் கடவுளாவது
தன்னை இன்னான் என்று இயங்குபவனுக்கு என் அறிவிப்பதில்லை? உதாரணமாக,
ஒருவனுக்கப் பிறக்கும் ஒரு குழந்தைக்கு, கடவுள் ஒருவர் இருக்கிறார்
என்ற எண்ணம் அல்லது அறிகுறி ஏன் உண்டாவதில்லை? எல்லாம் வல்ல கடவுள்,
தன்னால் படைப்பிக்கப்படும் குழந்ததைக்குத் தன்னை அறியும் தன்மையை
அதன் பிறப்பிலேயே கொடுக்க முடியவில்லை. அல்லது கொடுப்பதில்லை என்றால்,
அந்தக் கடவுளுக்கு எல்லாம் வல்ல இயல்பு யாங்ஙனம் பொருந்தும்? தனக்குப்
பசியிருக்கிற தென்பதை அழுவதன் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தும்
ஆற்றல் பெற்ற ஒரு சின்னஞ்சிறு குழந்தை தன்னைமயும் தனக்குப் பசியையும்
உண்டாக்கியவன் கடவுள்தான் என்பதை ஏன் உணரமுடிவதில்லை? உண்மையாகவே
கடவுள் தன்மை அக்குழந்தையிடம் இருக்குமானால், அக்குழந்தை பிறர்
சொல்லிக் கொடுக்காமலேயே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும்.
அங்ஙனமன்றிக், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை பிறர்சொன்ன
பின்னரே அக்குழந்தை தெரிந்து கொள்கின்றதென்றால், அக்கடவுட் செய்தி
தெரிவிக்கப்படும வரை அக்குழந்தைக்கும், பிறரால் தெரிவிக்கப்பட்ட
அந்தக் கடவுளுக்கும் எந்த விதமான தொடர்பும் இருந்திருக்க முடியாதன்றோ!
உலகப் பொருள்களை, இது இன்னது, இது இத்தன்மையது என்று அவற்றை அறியாதானுக்கு
அறிவிப்பது போல், கடவுளையும், இவர் கடவுள், இத்தன்மையர் என்று
அறிவிப்பதென்றால், தோன்றி அழியும் உலகப் பொருள்களுக்கும், தோன்றா
அழியாப் பொருளான கடவுளுக்கும் யாதாமொரு வேறுபாடோ - உயர்வு தாழ்வோ
இருக்கமுடியுமா? அது, இந்துமதக் கடவுளாயினும் சரி, வேறு எந்த மதக்
கடவுளாயிருனுஞ் சரி தமக்கும் பிற உயிர்களுக்கும் தொடர்பில்லாத
முறையில், தொடர்பை உண்டாக்குபவன் ஒருவனை வைத்துக் கொண்டு இருக்கிறதென்றால்,
அத்தகைய கடவுள், கடவுள் இலக்களத்தைக் கூறும் வேதாகமங்களின்படி
ஒப்புக்கொள்ள முடியாததாகும்.
இனி, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றால், புற்றீசல்
போன்ற பலகுலங்கலும் பல கடவுளரும் இருப்பானேன்? ஒரு கடவுளே பல பெயர்களோடு
வணங்கப்படுகிறார் என்றால், ஒரு கடவுள் இன்னொரு கடவுறோடு நான் பெரியவன்
நீ சிறியவன் என்று சண்டையிட்டுக் கொள்வானேன்? ஒரு குலத்தவன் இன்னொரு
குலத்தவனை நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கூறிக் குலப்போர்
நடத்திக் கொடுமை விளைப்பானேன்?
ஒரு அரசன், தனக்குக் கீழே பலசிற்றரசர்களை வைத்துத்
தந்நாட்டை ஆளுவதுபோல, ஒரு முழுமுதற் கடவுளும், தமக்குக் கீழே பல
சிறுசிறு கடவுளரை வைத்து இவ்வுலகத்த இயக்குகின்றதா? அங்ஙனமாயின்,
அக்கடவுளுக்கு முழு முதற்றன்மையும்; எல்லாம் வல்ல இயல்பும், உண்டென்று
கற்பிப்பதன் பொருள் என்ன? இந்துமதத்திற் பேசப்படும் கடவுளுக்கு,
இச்சொல்லப்பட்ட தன்மைகள் உண்மையாகவே இருக்குமானால் இந்நாவலந் தீவில்
பல்வேறு மதங்களும், அவற்றிற்குரிய பல்வேறு கடவுளரும் இருக்கக்
காரணமில்லையே.
விறுப்பு வெறுப்பற்ற ஒரு கடவுள், தன்னைப் பிறர்
வணங்கவேண்டுமென்று விரும்புமா? தன்னை வணங்கியவர்களுக்குப் பிறப்பும்
வணங்காதவர்களுக்கு பிறவாமையும் கொடுக்குமா? அப்பத்தானென்றால் கைக்கூறி
பெற்றுக் கொண்டு ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்பவனுக்கும்த அந்தக்
கடவுளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று இதுவரை கூறிய சுருக்கமான
இவ் உண்மைகளை உள்ளபடியே அறிவோடு ஆராய்ந்து பார்ப்பவர்க்கு, கடவுளின்
தன்மை இப்படிப்பட்டதென்பதும், கடவுள் இல்லாமலேயே உலகில் வாழதுமுடியிமா
முடியாதா என்பதும், திராவிட மக்களுக்குக் கடவுட் கொள்கை எப்படி
யாரால் - எந்தக் காலத்தில் உண்டானதென்பதும, கடவுளுக்கும் உயிர்களுக்கும்
யாதாயிலும் தொடர்பு இருக்க முடியுமா என்பதும் எளிதில் விளங்குவதோடு,
இயங்கும் உலகம் இயற்கையோடு அமைந்துள்ளதென்ற உண்மையும் விளங்கம்
என்ற காரணத்தால், இன்னும் இதுபற்றி விரித்தெழுதாமல் இந்த அளவோடு
முடிக்கிறேன்.
(அறிஞர் அண்ணா - 10.10.1944)