சிறப்புக் கட்டுரைகள்

வெற்றிவீரர் ஜூகோவின் வரலாறு
பேரறிஞர் அண்ணா
(திராவிடநாடு - 24.02.1946)

 

வெற்றி முழக்கம் எங்கும் முழங்கப்படுகிது. இவ்வெற்றிக்கு முக்கியஸ்தராய் விளங்கியவர் மார்ஷல் கியார்க்கி ஜூகோவ் என்பவர். இவர் ரஷ்ய தளபதிகளில் முதன்மையானவர், பல வெற்றிகள் கண்டவர், இவரது வீரம் ரஷ்ய சரித்திரத்தில் ஏன் உலக சரித்திரத்திலேயே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய வீரரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். எனவே அவரது வாழ்க்கைக் குறிப்புகளைக் கீழே தருகிறோம்.

நேசப்படையிலோ எதிரியின் படையிலோ ஜூகோவுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. நாம் சொல்வதல்ல, அமெரிக்கப் பத்திரிகையான ‘லைப்’ என்ற இதழில் சிச்சார்டு.இ.லாட்டர்பாக் எழுதியிருப்பதாகும்.

மாஸ்கோ மக்கள் இவரை இரட்சகர் என்று அழைக்கிறார்கள். காரணம் மாஸ்கோ நகரம் 1941ல் ஹிட்லரால் முற்றிகையிட்டபோது மாஸ்கோ மக்களை விடுவித்தவர் இவர்தான்.

1941ல் மாஸ்கோ நகரத்தின் வாயலண்டை வந்திருந்த நாஜியர்களை குளிர்காலத்தில் துரத்தியடிக்கும்படி இவருக்கு தோழர் ஸ்டாலினால் ஆணையிடப்பட்டது. சிலவராங்களுக்குள் நாஜிகளின் முற்றுகையைத் தகர்த்தெறிந்ததோடு, குளிர்கால எதிர்த் தாக்குதலையும் இவர் ஆரம்பித்தார். அடுத்த வருஷம் பனி காலத்தில் ஸ்டாலிங்கிராட் நகரைக் காக்கும் பொருட்டு இவர் அனுப்பப்பட்டார். இச்சமயத்தில் தான் அவர் ஜெர்மனியின் ஆறாம் சேனையைக் கடும்போராட்டத்திற்குப்பின் தோற்கடித்தார். இதிலிருந்துதான் யுத்தத்தின் போக்கே மாறியது. உலகுக்கு ஒரு நல்ல நம்பிக்கை பிறக்கலாயிற்று. அடுத்தாற்போல் லெனின் கிராட் முற்றுகையை உடைத்தெறிந்தார். சென்ற ஆண்டில் உக்ரைனிலிருந்தும் தென் ரஜ்யாவிருந்ததும் நாஜியர்களை இவர் துரத்தியடித்தார்.

இவ்வாறு சிறுகச் சிறுக முறியடிப்பதனால் போர், நீடித்துக்கொண்டே போகிறதல்லாமல் முடிவுக்கு வருவதற்கில்லாது போகிறதே, இதற்கு என்ன செய்வதென்று எண்ணலானார். இதன் முடிவாகப் பெரும் படைகளைத் திரட்ட ஆரம்பித்தார். மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்காவும் பிரிட்டனும் வைத்திருந்த படைகளைப்போல் இருமடங்கு படைகளை அதாவது 200 டிவிஷன்களைத் திரட்டினார். ஹிட்லரின் படைகளை அழிப்பதென்ற உறுதியின் மீது கிழக்குப் பிரஷ்யாவிலிருந்து கார்பதியின் மலைகள் வரை 460 மைல் நீளம் போர்த்தொடுத்தார். அவரது முக்கிய கவனம் வார்ஷா – பிரால்க்பர்ட் மலைப்பாதையைக் கைப்பற்றுவதில் செலுத்தப்பட்டது. எப்பகுதி மிகக்கடினமானதாகப் பலத்த எதிர்த்தாக்குதலோடு கூடியதாகயிருந்ததோ அப்பகுதியில் அவரே முன்னின்று போரை நடத்திவந்தார்.

அவர் பயங்கரமான பேர்வழி – திறமைசாலி என்பதை எதிரி கண்டு பிரமிக்கும்படி பல சமயங்களில் செய்து காட்டியிருக்கிறார். உதாரணமாக பனிகாலத்திற்கு முன், அவர் ரிஸவ் என்ற நகரத்தை மீட்டார். அப்பொழுது ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு பாலம் கட்டும்படி தமது எஞ்சீனியர்களுக்கு உத்தரவிட்டார். தண்ணீர் மட்டத்திற்குக் கீழ் 18 அங்குத்தில் ஒரு பாலம் ஒரே இரவில் போடப்பட்டுவிட்டது. ரிஸிவின் விடுதலை நாளென்று ஜூகோவின் டாங்கிகள் சாரி சாரியாக ஆற்றைக்கடந்து வருவதைக் கண்டு நாஜி படைவீரர்கள், வார்ஸாவையும் பின்பக்கமாக வந்தே படித்திருக்கிறார். கடைசியாக இப்பொழுது நடைபெற்ற போராட்டங்களிலும் எதிரிகள் திகைகும்படியாகப் பல்வேறு இடங்களிலிருந்தும் போராடியிருக்கிறார். பின்வாங்கிச் செல்லும் நாஜிகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களே ஆச்சரியப்படும படி குழிகளில் இருந்துகொண்டு சுட்டுவீழ்த்தினார்.

1941ல் ஜெர்மானியர்கள் சென்ற வேகத்தைவிட வேகமாக அதாவது 18 நாளில் சதுப்புநிலத்தையும் காட்டையும் 300 மைல் கடந்துசென்று முன்னேறியிருக்கிறார் இப்போரின் துவக்கத்தில்.

அவர் வெறும் போர்வீரர் மட்டுமல்ல. அரசியல் அறிஞருமாவார். அவர் மாஸ்கோவில் இருக்கும் நேரத்தில் தோழர் ஸ்டாலின், இவருடன் இராணுவப் பிரச்சினைகளையும் அரசியல் பிரச்னைகளையும் கலந்து யோசிப்பார். ஸ்பெயினில் யுத்தம் நடந்த காலையில் இவர் ஸ்டாலினுடைய பிரதிநிதியாக இருந்து வந்திருக்கிறார்.

1989 கோடையில், தூரக்கிழக்கில் மங்கோலியாவில் இருந்து ரஜ்யப் படைகளுக்குத் தலைமை வகித்து நடத்திவந்திருக்கிறார்.

ரஷ்யா ஜெர்மன் இப்பந்த நேரத்தில் மற்ற தளபதிகளைவிட ஜூகோவ்தான் நாஜிகளின் அபாயத்தை எடுத்துக் காட்டி எச்சரித்தது.

தோற்றத்திலே அவர் ஒரு இராணுவ வீரர் என்பது நன்கு விளங்கும். அவர் உத்தரவு பிறப்பிக்கும் போதோ அல்லது அணிவகுப்புகள் மாற்றுவதுபற்றி விவாதிக்கும்போதோ நேரடியாகச் சுருக்கமாக அமைதியாகப் பேசுவார். அவர் முகம் அவரது மனஉறுவை விளக்கும். அவரது கருத்தை எதிர்ப்பவர் யாருமிருக்க மாட்டார்கள். தாம் கொண்ட முடிவில் பிடிவாதமாக இருப்பார். ஆனால் மற்றப் பிரதம தளபதிகளால் தாம் கொண்ட முடிவை மாற்ற நேரிட்டால் அதன்படி மாற்றிக்கொள்வதோடல்ல, அவர்களுடைய திட்டத்தைத் தம்முடைய சொந்தத் திட்டம் போலவே நடததிச் செல்வார்.

ஜப்பானியரையும் ஜெர்மானியரையும் வெற்றிக்கொண்ட வீரர் இவர். கிரம்லினுக்குப் பக்கத்தில் மாஸ்கோவிலுள்ள ஆர்பட்ஸ்குயரில் உள்ள வீட்டில் இரண்டாவது மாடியில் இருக்கிறது இவரது வீடு. இவரது மனைவியார் அழகி பகருகிறமுள்ள கூந்தலையுடைவர். கணவரைவிட உயர்ந்தவர். இவருக்கு 13 வயதுப் பெண்ணும் 12.9 வயதுடைய இரண்டு ஆண்களும் உண்டு.

ஜூகோவ் சாதாரண குடியானவனுடைய மகன். மத்தியரஷ்யாவில் உள்ள ஸ்ட்ரல்கோவா என்ற சிறு கிராமத்தில் 1895ல் பிறந்தார். சிறுவயதிலே இவர் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டார். கம்பனி வியாபார நிலையத்தில் வேலை பழகலானார். முதலாவது உலகயுத்தம் துவங்கியதும் பட்டாளத்தில் சேர்ந்து சிப்பாயாக இரண்டு ஆண்டு வேலை பார்த்தார். பிறகு உடல் நலிவுற்றதனால் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். நோய் குணமாவதற்குள் ரஷ்யா சண்டையிலிருந்து விலகிவிட்டது. லெனின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. ஜூகோவுக்கு இராணுவ சேவைதான் பிடித்தமாகயிருந்தது. ஆதலால் கம்பணி வியாபாரத்தைத் துறந்து செஞ்சேனையில் சேர்ந்தார். அவர் பொதுவுடைமைக் கட்சியிலும் சேர்ந்தார்.

உள்நாட்டு போரில் ஜூகோவ் பல முனைகளில் போரிட்டார். காயமுற்றார். ஆபீசர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவரது திறமை செஞ்சேனைத் தளபதிகளின் கவனத்தைப் பற்றியது உள்நாட்டு யுத்தம் முடிந்ததும், இராணுவ சாஸ்திரம் படிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். படித்துத் தேறிய பிறகு, மீண்டும் குதிரைப்படையில் சேர்ந்து தளபதியானார்.

1939 மே மாதம் மங்கோலிய குடி அரசை ஜப்பானியர் தாக்கியபோது, மங்கோலியருடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி அவர்களுக்கு உதவும் பொருட்டு ஜூகோவின் தலைமையின் கீழ் பலடாங்கி டிவிஷன்கள் அனுப்பப்பட்டன. அப்போரில் ஜூகோவின் திறமையைக் கண்ட ஸ்டாலின் தனது பார்வையை அவர்மீது செலுத்தலானார். இப்போருக்கும் ஹிட்லரின் படையெடுப்புக்கும் இடையில் 22 மாதங்கள்தான் இருந்தன. இதற்குள் அவர் அரசியலிலும் இராணுவத்திலும் உயர்த்தப்பட்டார். பின்னிஷ்போரில் டிமோஷெங்கோவின் கீழ் இவர் வேலை பார்த்துவந்தார். அப்போரின் முடிவில் அவர் கீவுக்கு தளகர்த்தராக ஜெனரல் என்ற பதவியில் நியமிக்கப்பட்டார். பிறகு மார்ஷலாக உயர்த்தப்பட்டார்.

கீவில் இருந்த காலையில் ஜப்பான் போரிலும் பின்லந்து போரிலும் தாம் கண்ட அனுபவத்தைக் கொண்டு செஞ் சேனையைத் திருத்தியமைக்கும் திட்டங்கள் வகுத்தார். செஞ்சேனையில் இளம் ஆபீசர்களுக்க நல்ல பயிற்சியளிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.

1940-41 பனிகாலத்தில் மேற்கப் போர் முனை கொந்தழிப்பில் இருநததைக் கண்ட ஸ்டாலின் இவரை மாஸ்கோவுக்கு வரவழைத்துச் செஞ்சேனையைத் திருத்தியமைக்குமாறு ஆணையிட்டார். தகுதியற்ற அதிகாரிகளை நீக்கிச் செஞ்சேனையைத் திருத்தியமைத்தார்.

பொதுவுடைமைக் கட்சியின் மத்திய கமிட்டியின் மெம்பராக 1941ல் நியமனம் செய்யப்பட்டார். தற்காப்பு உதவி மந்திரியாகவும் நியமனம் செய்யப்பட்டார், ஜூகோவ் தீர்க்கதரிசனப்படி நாஜிகள் 4 மாதங்களுக்குப்பின் தாக்குதல் ஆரம்பித்தனர். வாரத்திற்கு வாரம் ஜெர்மன் படைகள் மாஸ்கோவை நோக்கி நெருங்கிக் கொண்டே வந்தன. வடக்கே வரோஷிலோவும் தெற்கே புட்டெனியும் மத்தியில் டிமோஷெங்கோவும் தாக்குதலை நடத்தி வந்தனர். அக்டோபர் மாதத்தில் கிராம்லினுக்கு 50 மைல் தூரத்தில் நாஜிகளின் படை திரண்டு எழுந்துவிட்டன. அம்மாதம் 21ந் தேதி மாஸ்கோ முற்றுகையிடப்பட்டுவிட்டதாக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். டிமோஷெங்கோவைத் தென்மேற்கு முனைக்குமாற்றி ஜூகோவுக்குத் தலைநகரைக் காக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. எதிர்த்து நில்லுங்கள் அல்லது மாளுங்கள். ஒரு அடியும் பின் வைக்காதீர்கள் என்ற கடுமையான உத்தரவைத் தமது படைகளுக்கு விடுவித்தார். ஒவ்வொரு மனிதனும் 10 பேர் போல் போரிடவேண்டுமென கட்டளையிட்டார். மாஸ்கோவில் அவசரமாக பயிற்சியளிக்கப்பட்ட அதிக ஆயுதமில்லாத தொண்டர் படைகளை உதவிக்கு அனுப்பிக் களைத்து போயிருக்கும் தமது படைகளை ஊக்குவித்தார். நாஜிடாங்கிகளைத் தடுத்து வேட்டையாடினால் போதும் என்பது அவரது ஆசை.

பின் வாங்கும் ரஷ்யர்களின் வேகம் குறைந்தது. இதற்குள் கிழக்கிலிருந்து வந்து கொண்டிருந்த படைகள் உதவிக்கு வந்துவிட்டன. நவம்பர் 7-தேதி அவரது சேனையின் மீது பாய்ந்து நாஜியரின் ஈட்டிமுனைப் பாய்ச்சலை தகர்த்தெறிந்தார்.

1942 ஆம் வருடம் ஜூகோவுக்கும் செஞ்சேனைக்கும் வெற்றியளித்து வந்தது. மத்திய முனையில் ஜெர்மனியர்களை நிறுத்தவிட்டு ஸ்டாலின் கிராடுக்கு இவர் அனுப்பப்பட்டார். டிமோஷெங்கோவுக்குப் பதில் இவர் படைகளை நடத்திச் சென்றார். இவருக்கு உதவியாகப் பல ரஷ்ய நிபுணர்கள் இருந்து வந்தார்கள். 21-வாரங்களுக்குப் பிறகு இவர் ஸ்டாலின் கிராட் முற்றுகையை விடுவித்தார். பிறகு லெனின் கிராடு முற்றுகையை விடுவிக்க விமானத்தின் மூலம் பறந்து சென்று அதையும் விடுவித்தார். அதற்குப்பின் சிலவாரங்களில் அவர் மார்ஷல் என அமைக்கப்பட்டார்.

உக்ரைனில் அவர் செய்த போரின் திறத்தைக் கண்டு வியப்புற்ற சோவியத் யூனியன் அவருக்கு லட்சம் டாலர் மதிப்புள்ள ஆர்டர் ஆப் விக்டரி என்ற பதக்கத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறது.

ஸ்டாலினுக்கு போருக்குப் பிந்திய வேலைகளைக் குறித்து திட்டம் போடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டதால், யுத்தத்தைக் குறித்துத் திட்டங்கள் வகுக்கும் பொறுப்பு இவரைச் சேர்ந்துவிட்டது. ஆகவே இவருக்குப் பொருப்பு அதிகரித்துவிட்டது. இவர் பர்லிருக்குள் எவ்வாறு பாய்வது என்பதில் அதிக கவனம் செலுத்திவந்தார். ஒன்றாகச் சேர்ந்து தாக்குவது பற்றி அமெரிக்க, பிரிட்டன் தூது கோஷ்டியுடன் கலந்து பேசிவந்தார். ஜெர்மன் படையை அழிப்பதிலும் யுத்தத்தை முடிப்பதிலும் தான் இவரது கவனம் முக்கியமானதாக இருந்துவந்தது. இந்தப்படி திட்டங்கள் போட்டுக்கொண்டு சென்ற ஜனவரி 12ம் தேதி புதுத்தாக்குதல் ஆரம்பித்தார். தாமே முன்னின்று போரை நடத்தினார். போர் முனை முழுவதிலும் விமானத்திலும், ரயிலிலும், மோட்டாரிலும் போன வண்ணமாகவேயிருந்தார். இவரது ஒப்பற்ற ஊக்கம்தான் செஞ்சேனைக்கு உற்சாகத்தையளித்து இறுதி வெற்றிக்கு அவர்களை இட்டுச் சென்றது என்றே சொல்லவேண்டும். இத்தகைய வீரர் மார்ஷல் ஜூகோவின் பெயர் உலக சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டாமா?
(திராவிடநாடு – 24.02.1946)



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai