சிறப்புக் கட்டுரை



கல்வி நீரோடை
(இட ஒதுக்கீடு பற்றி அண்ணா 30.06.1946-ல் திராவிடநாடு இதழில் எழுதியது)

 

கல்வியூர் மிராசுதார் பஞ்சாபிகேச ஐயர் . . . அவருக்கென்ன? அவருக்கென்னவாம்! அவரிருக்கிறார் தக்காளிப்பழம் போன்ற தளதளத்த மேனியுடன். நீரோடைக்கு மறுபக்கத்திலிருக்கிற கல்லூரணிக் கிராமத்தில். . .

கல்லூரணிக் கிராமமா? அதுவும் கல்வியூர்போல நீரோடைப் பாய்ச்சலுள்ள இடமாயிற்றே. கட்டுக்கலம் காணும், அன்றியும் முப்போகமும் விளையும், அந்தக் கிராமத்தையும் ஐயர் வாங்கிவிட்டாரா?

அடபோடா! அந்தக் கிராமத்தை அவர் வாங்குவதா? கல்லூரணியை உண்டாக்கியதே அவர். அப்படியானால் நீரோடையின் இருமருங்கிலும் அவருடைய வயல்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

அதைத்தான் சொல்லவந்தேன். எப்படியோ நீரோடையைச் சூழ்ந்துள்ள பாய்ச்சல் இடங்களெல்லாம் ஐயர் கையில் சிக்கிவிட்டன. நீரோடையிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மற்றவர்கள் நிலங்ககுளுக்குப் பாய்வதில்லை. ஏழை எளியோரின் சிறு பங்குகள் வெடித்துக்கிடக்கும்பொழுது, ஐயரின் நிலத்தில் கதிர்சாய்ந்துகிடக்கிறது. அவர் நெல்லையா குவிக்கிறார், கொள்ளைத்தான் குவிக்கிறாரா?

அப்படியானால் மற்றவர்களின் கதி என்ன ஆவதாம்? அதைப்பற்றி அவருக்குக் கவலையேன்? ஊராரின் உழைப்பிலே உண்டு கொழுத்துத் திரியும் வசதியிருக்கும்பொழுது மற்றவர்களின் வாழ்வுபற்றி அலட்சியம் செய்யத்தான் வேண்டும். அனைவருக்கும் பொதுவான நீரோடை, ஐயரின் சொந்த சொத்தாகிவிட்டது. கலெக்டர் துரையிடம் சொல்வதுதானே. அது ஒன்றுதான் பாக்கி! கரடியாகக் கத்திப்பார்த்தாகிவிட்டது, அது துரையின் காதில் விழவில்லை. நாம் பேசுகிற பொழி அவனுக்குப் புரியாது. சிற்சில சமயங்களில் நம் கூக்குரல் அவன் காதில் விழுந்ததும், நம் முதுகில் அடிதான் விழுந்தது. ஐயர் கிழித்த கோட்டை அந்த வெள்ளைக்காரன் தாண்டுவதில்லை. ஐயரிடம் போனால் சேரிக்குப் போடா என்கிறார், வெள்ளைக்காரனிடம் போனால் ஜெயிலுக்கு போடா என்கிறான். இவைகளுக்கெல்லாம் ஒரே ஒரு வழிதான்.

கிராமப்பக்கம், நடக்கும் இத்தகைய உரையாடல். இந்த ஆதிக்கம், பயிர் அளவோடு முடியும். நீரோடையைக் கைப்பற்றிவிட்டால் நிலங்களின், பலனை, ஓடை ஆதிக்கக்காரர் அடையாமல் வேறுயார் அடைய முடியும். புறம்போக்கு கூடத்தான், நீர்பாசனவசதி கிடத்துவிட்டால், புன்சிரிப்பைத் தரும் வயலாகும். நமது வயல் வறண்டுகிடக்கிறதே என்று மட்டும் வருத்தப்பட்டுப் பலன் என்ன! நீரோடையைக் கைப்பற்றி, பாய்ச்சல், சகலருக்கும், எல்லா நிலங்களுக்கும் கிடைக்கும்படி செய்ய, வழி என்ன என்ற கண்டறிய வேண்டும். வயல் விஷயம் வெறும் செல்வம் சம்பந்தப்பட்டது. கல்வி, நீரோடை, வாழ்க்கை என்னும் வயலை வளமாக்குவது, வாழ்வின் வளம், பெருக வேண்டுமானால், கல்வி நீரோடையின் தயவு வேண்டும். இந்த நீரோடையின் ஆதிக்கத்தை யார் பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கை வளம் ஏற்படுகிறது. ஆரியர் இந்தக் கல்வி நீரோடையைத் தமது ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டுள்ளனர், எனவே அவர்கள் இனத்திலே வாழ்வு தழைக்கிறது. அந்த நீரோடைக்கு வெகு தொலைவில் இருப்பதால், தமிழரின் வாழ்வு, தற்குரித்தனம் நிரம்பிய தரிசுநிலம் போல் இருக்கிறது. இந்தச் சூட்சமத்தை உணராமல் நம் கதி இது! என்று கூறுவர் தமிழர். கல்வி நீரோடையின் நிலைபற்றியோ, அதனை யார் கைப்பற்றியுள்ளனர் என்பது பற்றியோ, அதன் விளையுபற்றியோ, எப்படி கல்வி நீரோடையை அவர்களால் கைப்பற்ற முடிந்தது என்பதுபற்றியோ தமிழர் எண்ணிப் பார்ப்பதில்லை. பஞ்சாபிகேச ஐயரின் நிலம், மண்போட்டுப் பொன் எடுக்கும் இடம், என்று பேசுவது போலவே, சின்னச்சாமி ஐயர்மகன் சீமைக்குச் சென்று படித்துவிட்டு வந்தார். சரசுவதி கடாட்சம் அது என்று பேசுவர். அவ்வளவுக்கு மேலே சிந்தனை ஏறாது.

பெரியவர்கள், கல்வி நீரோடையின் நிலைபற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டார்கள். அதனாலேயே நம் இனச் சிறுவர்கள், கல்வித்துறையிலே, பிற்போக்கான நிலை பெற்றனர்.

அதெல்லாம் ஐயமார்வீட்டுப் பசங்களுக்குத்தான் தகும்! அந்த மூளையே மூளை, தனிரகம் ஜாதி அப்படிப்பட்டது. ஞானம் தானாக உதிக்கிறது. நம்மப் பசங்கள் சுத்த மக்கு! மண்டையிலே ஏறுவதே கிடையாது. அதனால்தானே அடுத்த தெரு ஐயர் கூட அன்று ஒரு நாள் டே உன்மகன் வாயிலே தர்ப்பையைப் போட்டுக் கொளுத்தினால் கூட படிப்புவராது என்று சொன்னார்.

அது கொடுத்துவைத்த அளவுதானே கிடைக்கும். படிப்புக் கூடத்தான். இவை, நம்மவரிடையே உலவும் சர்வ சாதாரணமான மொழிகள். இவைகள் தாழ்வான நிலைமையைக் குறிப்பிடுகிறோம் என்ற நினைப்புக் கூடத் தோன்றுவதில்லை.

இவ்விதமான மொழிகளைக் கேட்டுக்கேட்டு நம் இனச்சிறுவர்களேக் கூட தங்களுக்குப் படிப்பு வராது என்ற எண்ணம் கொண்டுவிடுகின்றனர். படிப்புவராத இனம் - என்ற பழிச்சொல், நமது மக்கள் மீது சுமத்தப்படுகிறது. சுமத்தப்படுவது சுலபமாகிறது.

விளையாதகழனி - படிப்புவராத இனம்!! ஏன் விளையவில்லை! நீர்ப்பாசனம் இல்லை ஏன் நீர்ப்பாசனம் கிடைக்கவில்லை நீரோடை நம்மிடம் இல்லை, வேறு நிலத்தானின் ஆதிக்கத்தில் இருக்கிறது. படிப்பு ஏன் வரவில்லை கல்வி எனும் நீர் பாய்ச்சப்படவில்லை? ஏன்? கல்வி நீரோடையின் ஆதிக்கம், வேறு இடத்திலே இருக்கிறது. உண்மையாகவா? உண்மைதான் இனி நாம் பேசவேண்டியதில்லை, புள்ளி விவரம் பேசும் கேளுங்கள்.

உழவரின் உழைப்பையே உரமாகக்கொண்டு நல்ல விளைவைத் தருகிற வயல்களெல்லாம், உழைக்காத உல்லாசக்காரர்களிடம் எப்படிச் சிக்கியது என்று அந்த உழவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் அவர்களுக்குத் தெரிகிறது, ஊருக்குப் பொதுவான நீரோடைத் தண்ணீர் - ஊராரின் வரிப்பணத்தினால் பராமரிக்கப்படுகிற தண்ணீர்த் தேக்கம் ஐயரின் சொந்த சொத்தாகிவிட்டது என்று. அது கூட நமக்குத் தெரிவதில்லை. அரசாங்கத்தாரின் பணத்தேக்கத்தில் குவிக்கப்பட்டுள்ள பணம் நமக்கு முழு அளவுக்கும் பயன்படுகிறதா என்று புரிவதில்லை.

உதாரணமாகக் கல்வித் துறையை எடுத்துக்கொள்வோம். கடைசியாக வெளிவந்துள்ள 1943 - 44ம் ஆண்டு சென்னை மாகாணக் கல்வியதிகாரியின் அறிக்கையின்படி அந்த ஆண்டில் 7 கோடி 23 இலட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் நிலை பள்ளிக் கூடங்களுக்கு 3 கோடி 14 லட்சமும், இடைநிலை பள்ளிக் கூடங்களுக்கு 17 லட்ச ரூபாயும், உயர்தர பள்ளிகளுக்கு 1 கோடி 26 இலட்சமுமாகும். பெரும்பாலும் பள்ளிக் கூடங்கள் ஒன்று பிரைமரி அல்லது ஹைஸ்கூல் ஆக இருப்பதால் மிடில் ஸ்கூல்கள் அதிகம் இல்லாதிருப்பது கவனிக்கத் தக்கது. இந்த மூன்று பகுதிகளிலும் 1வது வகுப்பிலிருந்து 6வது பாரமாகிய எஸ்.எல்.சி வரை கல்வி போதிப்பதாகும். சாதாரணமாக 5 வயதிலிருந்து 16 அல்லது 17 வயதுவரை படிப்பவர்கள் கல்வி பெரும் இடங்கள். இவைகளேயன்றி, ஹைஸ்கூல் படிப்பிற்கு பின்போ அல்லது அதற்கு ஒத்த முறையிலேயே தொழிற்கல்வியோ அல்லது வேறு துறையில் சிறப்புக் கல்வியோ தரும் பள்ளிக்கூடங்களும் உண்டு. அவைகளாவன ஆர்ட் ஸ்கூல், மெடிக்கல் ஸ்கூல், டிரெயினிங் ஸ்கூல், என்ஜினியரிங் ஸ்கூல் போன்றவையாகும். இந்தக் கல்விக்காகச் செலவிடப்படும் தொகை ரூ.42,79,474. இந்த 43 லட்சமும் செலவிடப்பட்டுள்ள விதத்தில் நாட்டின் பெருங்குடிமக்களுக்கு விளைந்துள்ள பலனைக் கணக்கிட்டு பார்க்கலாம்.

(குறிப்பு: இந்தத் தொழில் - சிறப்புள்ள பள்ளிக் கூடங்களாகிய மெடிக்கல் ஸ்கூல், என்ஜினியரிங் ஸ்கூல் முதலியவைகளை மெடிக்கல் காலேஜ் என்ஜினியரிங் காலேஜ் என்பவைகளுடன் ஒன்றாகவைத்து எண்ணவேண்டாம். இவை குறைந்த படிப்பை கொடுப்பவை, பின் கூறப்பட்டுள்ள கல்லூரிகள் உயர்ந்த படிப்பும், அதற்கான பட்டமும் கொடுப்பவை)

தொழிற் கல்வி - சிறப்புக் கல்வி பள்ளிக்கூடங்கள்

 
பார்ப்பன
மாணவர்கள்
பார்ப்பனரல்லாத மாணவர்கள்
ஆர்ட் ஸ்கூல்
71
193
மெடிக்கல் ஸ்கூல்
211
240
டிரெயினிங் ஸ்கூல்
1633
5,653
குருடு செவிடு ஸ்கூல்
494
3527
என்ஜினியரிங் ஸ்கூல்
162
76
கமர்சியல் ஸ்கூல்
3604
3104
மற்ற பள்ளிகள்
2205
1824


முன்னதாகக் குறிப்பிட்டபடி இந்தப் பள்ளிக்கூடங்கள் அவ்வத்துறைகளில் சிறந்து விளங்குகிற கல்லூரிகளுடன் ஒன்றாக மதிக்கக் கூடாது. உதாரணமாக, டிரெயினிங்ஸ்கூலில் சேர எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், ஆனால் எல்.டி.பட்டம் பெற பி.ஏ.பட்டதாரியாக இருக்கவேண்டும். அத்தகைய கல்லூரிக் கணக்கு வேறிடத்தில் தரப்பட்டுள்ளது, மேலே குறிப்பிட்டக் கணக்கில் திராவிட மாணவர்கள் பார்ப்பன மாணவர்களைவிட 32 மடங்கு அதிகமிருக்கிறார்களா என்று கணக்கிட்டுப் பார்க்கவும், பார்க்கும் பொழுது பார்ப்பன இனத்தின் பங்கு பெரும் பகுதியாக உள்ளது என்பது புலப்படும். குறிப்பாக கடைசியாக உள்ள என்ஜியரிங் ஸ்கூல், கமர்சியல் ஸ்கூல் மற்றப்பள்ளிக் கூடங்களில் 100க்கு 97 ஆக உள்ள இனத்தைவிட பார்ப்பனர் எண்ணிக்கையில் அதிகமிருப்பதைக் காணலாம். திராவிட பார்ப்பன விகிதாச்சாரம் சரியாக மட்டுமல்ல திராவிடர்களுக்கு அதிகமாகவே உள்ள பள்ளிக்கூடமும் ஒன்றிருக்கிறது.
சிறுவயதில் அறியாத பருவத்தில் வறுமையால் தாக்கப்பட்டு பெற்றோரும், பேணுவோருமின்றி வாடும் அனாதைச் சிறுவர்கள் நாட்டிலும் நகரிலும் அனேகர். எலும்பு முறிய வேலை செய்தும் பசியுடன் போராடும் பகற்பொழுதை போக்கிவிட்டு இருளும் குளிரும் மிகுந்த இரவில் தங்களது துன்பத்தைத் தூங்கவைக்க முயலும் இவ்விருண்ட வாழ்வினர் மீது சிலசமயம் சட்டம் பாய்வதுண்டு. இவன் ஒரு தேங்காய் துண்டைத் திருடினான். இவன் திருடியவை ஒரு பிஸ்கோத், இரண்டு வெங்காயம் என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு இளம் குற்றவாளிகளெனத் தண்டிக்கப்படும் சிறுவர்களில் சமூகத்தால் பிறப்பிலேயே தண்டிக்கப்பட்ட அனாதை சிறுவர்களே அதிகம். இத்தகைய இளம் குற்றவாளிகளைத் திருத்துவதற்காக ஏற்பட்டுள்ள பாஸ்டல் அல்லது சர்டிபைட் பள்ளிக் கூடங்கள் சென்னை மாகாணத்தில் 5 இருக்கின்றன. அவற்றில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பார்ப்பனரல்லாதார் 1838. பார்ப்பனர் 35 மக்கள் தொகையில் திராவிடர் பார்ப்பனரைவிட 32 மடங்கு அதிகமென்றாலும் இந்த இருண்ட பள்ளிக்கூடம் ஒன்றில் தான் திராவிடர்களில் தொகை பார்ப்பனரைவிட 53 மடங்கு அதிகம். மகிழ்ச்சியும் பெருமையும் தாங்க முடியாதவில்லையல்லவா!

உழைக்காக இனம், உழைப்பைதருகிற இனம் என நாட்டிலே வாழும் இருபரம்பதைகளில் திராவிட இனம் படிப்புவராத இனம் மட்டுமல்ல, குற்றப்பரம்பரைகூட திராவிடர் இழிவாக நடத்தப்படுகிறார்கள். அதோடு இருட்டறையில் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டுக்குச் சொந்தக்காரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதல்லால் அவனுக்கு திருட்டுப்ட்டமும் கொடுக்கப்படுவதைபோல நாட்டிலே நலிந்த நிலைமையிலுள்ள திராவிடர்களுக்கு பள்ளிக்கூடங்களில் சரியான விகிதாச்சாரமும் கிடையாது. ஆனால் குற்றவாளிகள் பள்ளிக்கூடத்தில் மட்டும் பெரும்பகுதியாக இருக்கிறது. திராவிடர்களின் இழிவு சமூக அடிப்படையிலிருந்து கிளம்புகிறது. அதனால் தான் சமூக அடிப்படையின் மீது கட்டப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளிலும் அது வெளிப்படுகிறது. சமூகத்தில் உழைப்பவன் ஆனால் தாந்ந்தவன், பாடுபடுபவன் ஆனால் பலனுக்கு அருகதையற்றவன், கல்வித்துறையில் படிப்பு வராத இனம் குற்றப்பரம்பரை அரசியலிலும் இதே கதைத்தான். வீரர்கள் ஆனால் விவேகமற்றவர்கள் என்று காமராஜ் கும்பல் மீது வீசப்பட்ட சொற்களுக்கும் உழைப்பாளிக் ஆனால் படிப்பு வராத இனம் என்பதற்கும் வேற்றமை கிடையாது. நன்றாக உழைத்தார்கள், ஆனால் ஆச்சாரியாரைப் போல புத்திசாலிகளல்ல, என்று தூற்றப்பட்டு காங்கிரசில் குற்றப்பரம்பரையாக்கப்பட்டுள்ள காமராஜ் குழுவினர் இதனை நன்றாக உணரவேண்டும்.
சமூகத்தில் சமன் செய்யப்படாத ஏற்றத்தாழ்வு சமூகத்தின் சிறுபகுதிகளான அரசியல், அறிவுத்துறை முதலியவைகளில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு நாடகத்திற்கும் அடிப்படையான ஒரு முடிவும் கருத்தும் அதற்கான சூழ்நிலையும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்த அடிப்படையின் மீது தான் நாடகத்தின் பலப்பல கட்டங்கள் இயங்குகின்றன. அதைப்போல சமூக நாடகத்திலும அடிப்படையான இனபோராட்டம் இருக்கிறது. அந்த இப்போராட்டத்தின் நிலை பல சீன்களில் வெளிப்படுகிறது. இதுவரை நீங்கள் பார்த்தது கோர்ட்சீன். அதில் நீதிபதி ஆங்கிலேயன். பெருங்குற்றம் செய்துள்ள சமூகம் சிறு குற்றங்கள் செய்த சிறுவர்களைத் தண்டிக்கிறது! நீதிபதி தலையசைக்கிறான் விளக்குகள் மங்குகின்றன. இருளில் படிப்புவராத மாணவர்கள் சேர்ந்தது விழுகின்றனர். கோர்ட் சீன் முடிவடைகிறது.

சென்னை மாகாணத்தில் 3 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் மொத்தம் 67 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றிற்காக 1943-44ல் செலவு செய்யப்பட்ட தொகை ரூபாய் 57, 57,836. இந்த 58 இலட்சரூபாயும் பொது மக்களின் பணம் என்பதையும் பொதுமக்கள் என்று கூறும்பொழுது 100க்கு 97 பங்கினராகத் திராவிடர்கள் உள்ளனர் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. கீழே குறிப்பிட்டுள்ள கணக்கில் மாணவர்களின் தொகை இனவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.



 
பார்ப்பன
மாணவர்கள
பார்ப்பனரல்லாத மாணவர்கள்
இண்டர் மீடியட் 1வது வகுப்பு
3199
3601
இண்டர் மீடியட் 2வது வகுப்பு
2621
2537
பி.ஏ.அல்லது பி.ஏ ஹானர்ஸ் 3வது வகுப்பு
1789
1348
பி.ஏ.அல்லது பி.ஏ ஹானர்ஸ் 4வது வகுப்பு
1515
1268
பி.ஏ.அல்லது பி.ஏ ஹானர்ஸ் 5வது வகுப்பு
241
117
போஸ்ட் கிராஜுவேட்
103
62
மொத்தம்
9,468
8,928

(போஸ்ட் கிராஜுவேட் என்பது பி.ஏ. படித்த மாணவன் எம்.ஏ. பட்டம் பெற படிப்பதாகும்)

கல்லூரி என்பது கல்வித்துறையில் தலைசிற்த இடமாகும். பத்தாவது வரை படிக்கும் மாணவனின் உள்ளம் அதுவரை பக்குவப்படுத்தப்படுகிறது. கல்லூரியில்தான் எதையும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு புகட்டப்படுகிறது. பல்கலைகளும், விஞ்ஞானமும் உயர்ந்த நிலையில் தழைக்கும் இடமுமாகும். கல்வியெனும் கரும்பை வளர்க்கும் இடங்களாக பள்ளிக்கூடங்களும், கரும்பின் சாற்றைப் பிழிந்தெடுக்குமிடங்களாகக் கல்லூரிகளும் இருக்கின்ற. தற்பொழுதுள்ள கல்விப் போக்கில் குறைகளிலிருந்த போதிலும் கல்லூரிப்படிப்பு மக்களனைவருக்கும் எட்டாதத் தொலைவிலிருந்தாலும அதனுடைய முக்கியத்துவத்தை முற்போக்குள்ள எந்தநாடும், மறுத்ததில்லை, மறுக்காது. அத்தகைய வசதியின்மையும் குறைபாடுகளும் சமூக அரசியல் பிழைகளேயன்றி கல்லூரிகளின் குற்றமல்ல. பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளின் குற்றமல்ல. பல்கலைக்கழகங்களம் கல்லூரிகளும் உல்லாச வாழ்வினரின் ஓய்வு இடங்கள் போலக் காணப்பட்டாலும், அவைகளின்றி நாடும் ஏடும் வளம் பெறு. இயந்திர வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்பதோடு, கைத்தொழில் புரியும் அன்றாடக் கூலிக்காரர்களின் பிழைப்பையும் கெடுத்துவிட்டது. அது உண்மை, இந்தத் துயரை நீக்க வழி என்ன? வார்தாத் திட்டமும் காந்தியமும் இயந்திரத்தை உதறித்தள்ளு என்று கூறும். அது தவறு. இயந்திரங்களைத் தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டு உரிமைப் போரின் பலனை உறிஞ்சுகின்ற முதலாளித்தனமே வறுமைக்குக் காரணம். எனவே இயந்திரச் சாலைகளைப் பொதுவாக்கி மக்களுக்கு இன்பங்கூட்டுவதைபோல கல்லூரிகளில் ஒரு சிறுபான்மைக் கூட்டம் மாத்திரம் ஆதிக்கம் செலுததுவதை ஒழித்து அனைவருக்கும் பயன்படும் அறிவின் ஆய்வுக் கூடமாக அதை ஆக்கவேண்டும்.

வரி செலுத்துவோரில் நாம் அதிகம். கவ்லூரிகளுக்குச் செலவிடப்படும 58 இலட்ச ரூபாயில் 56 இலட்ச ரூபாய் திராவிடர்களால் செலுத்தப்பட்ட வரிப்பணம். இவ்வளவு தொகையையும் உண்டு வாழ்கிற கல்லூரிகளில் நுழைந்து அங்கு படிக்கும் மாணவர்கள் தொகையைப் பார்த்தால் 100க்கு 3 ஆக உள்ள இனம் 100க்கு 97ஆக உள்ள இனத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஒருவனின் வயற்கரை மற்றவனின் வயலில் ஒரு அங்குலம் கூட நுழைந்து விட்டால் அதைத் தண்டிக்க சட்ட திட்டங்கள் நாட்டில் இருக்கின்றன. இங்கோ சிறுபான்மையினர் கல்லூரிகளைச் சொந்த வீடுகள் போல ஆட்சி புரிகின்றனர். படக்கலை வரவேற்று நெஞ்சு பகுத்தறிவுக் கொவ்வாத படங்களைப் பார்த்தும் படக்கலையாம் சனியொழிந்தால் போதும் என நினைப்பதுபோல கல்லூரிகள் கங்காபுத்திரர்களின் கையில் சிக்கியதைப் பார்க்கும்போது பூதேவர் பட்டத்தைப் பெற்றவன் பி.ஏ. பட்டத்தைப் பெற்றவுடன் அவனடையும் உருவத்தைக் கண்ணுறும் பொழுது, கல்லூரிகளின் மீது நமக்கு அடங்காக கோபந்தான் உண்டாகிறது. இதுவரை நாமடைந்த துன்பங்கள் இரட்டிக்கின்றன.

முன்னாள் அரசர்கள் சதுர்வேதி மங்கலங்களை அவர்களுக்குத் தானம் செய்தனர். இப்பொழுதுள்ள அரசியலார் சர்வகலாச்சாலைகளை அவர்களது என உரிமையிடங்களாக முத்திரை பொறித்துவிட்டனர். நிலங்களில் மிராசுதாரர் உழவர்களின் உணவைப் பறிக்கிறான். கல்வித் துறையில் கங்காபுத்திரர் கல்விச் சாலைகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு மக்களின் உணர்வைப் பறிக்கின்றனர். படிப்பின் காரணமாக பட்டதாரிகளான கூட்டம் அரசியல் மேடையைத்தனதாக்கிக் கொண்டது. பத்திரிக்கைப் பலத்தைப் பெற்றது. தன்னினத்திற்கு வேண்டிய வசதிகளைப் பெற்றவுடன் அரசியலில் ஆங்கிலேயனுக்கு மிரட்சியை உண்டுபண்ணு வண்ணம் பலத்தையடைந்ததும் இப்பொழுது கல்லூரிகளை உண்டாக்கும் திறமையை அடைந்திருக்கிறது. இயந்திர வசதிபெற்ற முதலாளி பலரை ஏழைகாக்கி, இயந்திரதினால் நொடிப்பொழுதில் பெரும் பலனை அடைவதுபோல், கல்வி வசதிபெற்ற குருமார்கூட்டம் பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தை எளிதில் அடக்கமுடிகிறது.

பொது மக்களுக்காக ஏற்பட்டுள்ள கல்லூரிகளில் இத்தகைய இழிநிலை. முதல்வகுப்பில் பார்ப்பன மாணவர்களைவிட திராவிட மாணவர்கள் சற்று அதிகம். இரண்டாவது வகுப்பில் பார்ப்பனமாணவர் அதிகம். மேல்வகுப்பில் பார்ப்பனர் தொகையே உயர்கிறது. ஐந்தாவது வகுப்பில் பார்ப்பனர் நம்மைவிட இரண்டு மடங்குக்கு அதிகம். இந்தக் கணக்கில் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையை மட்டும் தனியாகப் பார்த்தால் விம்முகிற நெஞ்சின் வேதனை அதிகரிக்கும். தாழ்த்தப்பட்டோரின் தொகை


1வது வகுப்பில்
140
2வது வகுப்பில்
103
3வது வகுப்பில்
52
4வது வகுப்பில்
31
5வது வகுப்பில்
போஸ்ட் கிராஜுவேட்
மொத்தம்
326

முன் கொடுக்கப்பட்டுள்ள கணக்குடன் ஒப்பிட்டுப்பாருங்கள். 100க்கு 3 உள்ள பார்ப்பனர் எண்ணிக்கையுடன், 100க்கு 16 உள்ள தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை சேர்த்துப பார்க்கக்கூட யோக்கியதை அற்றிருககிறது. 81 லட்சம் தாழ்த்தப்பட்டோரின் கல்லூரிகளில் படிப்பவர்கள் 326 பேர் அதிகம் வேடிக்கை பி.ஏ.க்கு செல்லுபவர்கள் 83 பேர். போஸ்ட் கிராஜுவேட் வகுப்புகளில் 81 லட்சம் பேர்கள் கொண்ட பெருங்குடியினரில் ஒருவர் கூட இல்லை.

உயர்தரக்கல்வியில் நம் நாட்டில் மிகச் சிறப்பு வாய்ந்ததும், விரும்பப்படுவதும் இன்ஜினியரிங், மெடிக்கல் போன்ற உத்தியோகத்திற்கு பக்குவப்படுத்தும் தொழில் கல்லூரிகளும், குறிப்பிட்டத் துறையில் ஒருவனைப் பழக்குகிற சிறப்புக்கல்லூரிகளுமாகும். 1943 - 44 அறிக்கைப்படி சென்னை மாகாணத்தில் இவை 15 கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றிற்காகச் செலவிடப்பட்ட தொகை ரூ.19,18,340 ஆகும். அவைகளில் படிக்கும் மாணவர்களின் தொகை இனவாரியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
பார்ப்பன
மாணவர்கள்
பார்ப்பனரல்லாத மாணவர்கள்
சட்டக்கல்லூரி
155
202
மெடிக்கல் கல்லூரி
426
676
ஆசிரியர் கல்லூரி
182
88
என்ஜினியரிங் கல்லூரி
127
205
விவசாயக் கல்லூரி
45
55
வெட்டனரி கல்லூரி
61
45
டெக்னிகல் கல்லூரி
31
7


புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுதே இனவாரியான விகிதாச்சாரம் சரியாக அமையவிலலை என்பது நன்றாகப் புலப்படும் 100க்கு 3 ஆக உள்ள கூட்டத்திற்கு, 100க்கு 40,50க்கு மேல் இடங்கள் கிடைத்து விடுகின்றன. ஆசிரியர் கல்லூரியில் பார்ப்பனர் திராவிடரைவிட இரண்டு மடங்குக்க மேல் அதிகம். டெக்னிக்கல் கல்லூரியில் நான்கு மடங்குக்கு மேல் அதிகம். டெக்னிகல் கல்லூரியில் நான்கு மடங்குக்கு மேல் அதிகம். வெட்னரியிலும் முப்புரிக் கூட்டத்திற்கே முதலிடம் தாழ்த்தப்பட்டோர் இந்தக் கல்லூரிகளில் எட்டிப் பார்க்கவேயில்லை. அந்த 18 இலட்சமக்களில் ஏதோ தப்பித்தவறி 22 பேர் இந்தக் கல்லூரிகளில் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோரில் மெடிக்கல் கல்லூரியில் 9 பேர், ஆசிரியர் கல்லூரியில் 3, என்ஜினியரி 5, விவசாயக் கல்லூரி, மற்ற சட்டக் கல்லூரி, வெட்னரி, டெக்னிக்கல் கல்லூரிகளில் ஒருவர் கூட கிடையாது.
கல்விக்காக ஆண்டுதோறும் 6 கோடி, 7 கோடி ரூபாய் என்று செலவு செய்யப்படுகிறது. அதனால் பலன் என்னவென்று பார்த்தால் 100க்கு 97 ஆகவுள்ள திராவிட மாணவர்கள் கல்வித்துறையில் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கின்றனர், இதை நாம் புதிதாகக் கண்டீபிடிக்கவில்லை. சர்க்காரின் அறிக்கைகள் கூறுவதுதான். ஒன்று கெடுதலைப் பயப்பது என்று தெரிந்திருந்தும் அதையே தொடர்ந்து நடத்துவது பெருங்குற்றமாகும். அதை அரசாங்கம் இன்றுவரை புரிந்து வந்திருக்கிறது. சென்ற சென்சஸ் முடிவுகள் வெளியிடப்பட்டபொழுது, கல்வியறிவு என்ற தலைப்பை எழுதும்பொழுது, அதில் கல்வியறிவில் பார்ப்பனர்கள் மற்ற வகுப்பினால் எட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு முன்னேறியுள்ளனர். ஆங்கிலக்கல்வியில் அவர்களது முன்னேற்றம் அபரிமிதமானது, என்று சர்க்கார் குறிப்பு எழுதியுள்ளனர். இதைப் பார்த்தவுடனாவது அரசியலாருக்கு நல்லெண்ணமும், நீதியில் நம்பிக்கையும் இருந்திருந்தால் அவர்கள் கல்வித்துறையில் நடைபெரும் அநீதியை அழித்திருக்க வேண்டும். வரிப்பணத்தை செலுத்துவது நாம் அதன் பலனை அனுபவிக்க இன்னொரு கூட்டம நெல்லுக்கு பாய்ச்சப்பட்ட நீர் வழியிலுள்ள விழலுக்கு மாத்திரமே பாய்கிறது.

கல்வி நீரோடை அனைவருக்கும் பொதுவானது. குளம் வெட்டுபவனுக்க குளத்துநீரை உபயோகிக்க முடியாதபடி இருப்பதுபோல, கல்வி நீரோடையைப் பராமரிக்க பொதுமக்கள் அனைவரும் வரிப்பணம் செலுத்தியபோதிலும் அதனால் நாட்டுமக்களுக்குப் பயன் விளையவில்லை. சிறுபான்மையினரான பார்ப்பனர் 100க்கு 53பேர் கல்வியறிவு பெற்றிருக்க திராவிடர் 100க்கு 8பேருக்குக் குறைவாகவே கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். கல்வி நீரோடை பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பாய்ந்து மக்கள் மனவளத்தைப் பெருககவில்லை. அந்தப் பார்க்கலுளள பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் பார்ப்பனரின் ஆதிக்க இடங்களாகிவிட்டன. திராவிட இனத்தின் கல்வியறிவு வரண்ட பாழ்நிலமாகக் காண்ப்படும் பொழுது, பார்ப்பனரின் கல்வியறிவு செழித்தோங்கி வளர்ந்துள்ளது. ஊருக்குப் பொதுவான நீரோடை ஐயருக்குப் பயன்படுவதைக் கண்ட உழவனுக்கு வேறு வழியில்லது திகைத்த நேரத்தில் ஒரே வழிதான் என பெருமூச்சுடன் கூறியதுபோல, கல்வி நீரோடை கங்கா புத்திரர்களின் கமண்டலநீராக ஆனதைப் பார்க்கும் பொழுது நமக்கும் வேறுவழி தோன்றவில்லை, அந்த ஒரே வழிதான் இருக்கிறது. அந்த வழி சென்றால்தான் கல்வி நீரோடை நாடெல்லாம் பாயும்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai