சிறப்புக் கட்டுரை

ஈழத்தமிழர்கள்
அறிஞர் அண்ணா

தம்பி! தமிழரின் பிணங்கள் கடலலையால் மோதப்பட்டு, மோதப்பட்டு, சிங்களத்தீவின் கரையிலே, ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆமடா, தம்பி! ஆம்! எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி, அடிமைகளாக்கபட்டு இங்கு கொண்டுவரப்பட்டு, காவிரிக்கு கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர்கள் காண, தமிழர்களின் பிணங்கள், சுறா தின்றதுபோக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள் சிங்களத்திதீவின் கரை ஓரம் கிடந்தன! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின் கரையிலே கிடக்கின்றன . . . இவர்தம் ஆட்சியின் சிறப்பினை உலகுக்கே, எடுத்துக்காட்ட, சிங்களக் கரையிலே ஒதுக்கப்ட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர் என்ன எண்ணியிருப்பர், தமிழரின் பிணங்களைக்கண்டு; தமிழருக்கு இது கதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலை குனிந்து வேதனைப்பட்டு கிடக்க வேண்டியதிருக்க, வீறாப்பு காட்டுவதும், பேச்சை கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலை கடலிலே தத்தளித்தபோது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சடைத்தபோது என்னென்ன எண்ணினரோ. எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில் தமிழன் பிணமாகி மிதக்கிறான். அது கண்டு சிங்களவன், இதோ கள்ளத் தோணி என்று கேலிபேசி சிரிக்கிறான், வாழவைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்துபோனானாமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர் பேச்சை கூவம் ஆக்கிக்கொள்கிறார்; ஏனோ பாவம்!
(மற்றொரு கூவம் - 04.09.1960)

இலங்கையில் நமது சகோதரத் தமிழர்கள் கடைகள் சூரையாடப்படுகின்றன. தமிழ்ப் பெண்களின் கற்பு சூரையாடப்படுகிறது. அவர்கள் கண்ணியமாக வாழ முடியவில்லை. அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. கொலை செய்யப்படுகிறார்கள், சுட்டு கொல்லப்படுகிறார்கள். இதைப்பற்றிக் கேட்க ஒரு ஆணாவது உண்டா? ஆனால் சைனா பசாரில் ஒரு மார்வாடி காரிலிருந்து தடுக்கிவிழந்துவிட்டால், பாராளுமன்றத்தில், பண்டித நேருவைப் பார்த்து கேட்க ஆளிருக்கிறது. அவர் இதைப் பற்றித்தெரியாது என்று சொன்னால்,இதைத் தெரிந்து கொள்வதைவிட உமக்கு வேறென்ன வேலை இருக்கிறது? என்று கேட்கும் அளவுக்கு அங்கே ஆட்கள் இருக்கிறார்கள். சிங்களத்தீவிலே சீரழிந்து கிடக்கும் தமிழ் மக்களைப் பற்றி கேட்பதற்கு நம்மைத் தவிர வேறுயார் இருக்கிறார்கள்?
(22.11.1961 - நம் நாடு - இதழ்)

இலங்கைத் தமிழர் அறப்போர்
இலங்கையில் நடக்கும் அறப்போரை ஆதரித்தும், இலங்கை அரசின் அடக்குமறைகளை கண்டித்தும் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுதான். திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக இப்படிப்பட்ட கூட்டத்தை இன்றயதினம் கூட்டியிருக்கிறதென்றால் இதை அரசியல் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் தள்ளிவிடும் சாதாரண பிரச்சனையாக இது இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும், அவர்கள் மீது வீசப்படும் பழிச்சொற்களும், இழிச் சொற்களும், தமிழர் கடை சூரையாடப்படுவதையும், ஆடவர், பெண்டிர், முதியவர், குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவதும், துடிக்கத் துடிக்க வெட்டப்படுவதும் கேட்டு நமக்கெல்லாம் மனம் பதறச் செய்கிறது. இதை எண்ணும்போது எனக்கு தமிழ் நாட்டில் நெடுங்காலத்துக்கு முன்னால் இருந்த இரட்டைப் புலவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இரட்டைப் புலவர்களில் ஒருவருக்குக் கண் உண்டு, கால் இல்லை. மற்றவருக்கு கால் உண்டு, கண் இல்லை. எனவே காலில்லாத புலவரைக் காலுள்ளவர் தோளில் சுமந்து செல்வார். தோளிலே உட்கார்ந்த புலவர் வழிகாட்டிக்கொண்டே செல்வார். அவருக்கு கண் இருந்த காரணத்தாலும், இருவருக்கும் வாய் இருந்த காரணத்தாலும் ஆளுக்கு இரண்டடி வீதம் பாடி, பல கவிதைகளை இயற்றினார்கள்.

இந்த இரட்டைப் புலவர்களைப் போலத்தான் நாமும், இலங்கைத் தமிழரும் இருக்கிறோம். கண்கள் இல்லை. நாம் அவர்களைப் பார்த்து அதோ பாருங்கள் சிங்கள வெறியர்கள் என்று காட்ட முடிகிறதே தவிர, அங்கு சென்று தடுக்க முடியவில்லை, காலில்லாத காரணத்தால். எனவே அவர்களைப் பற்றி வாயளவிலே எடுத்துச் சொல்லும் தன்னமயில்தான் நாம் இருக்கிறோம். நமது உளங்கனிந்த ஆறுதலையும் நெஞ்சார்ந்த ஆதரவையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

இலங்கைத் தமிழர்கள் நடத்துகின்ற அறப்போர் தக்க பலன் தந்து வெற்றி கிடைக்கவேண்டும் என்ற நமது நல்லெண்ணத்தினைத் தெரிவிக்கவும் அங்கே அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறை கொடுமைகளை உலகிற்கு அறிவிக்கவும், உலகம் கூர்ந்து கவனிக்கும் ஒரு பெரிய பிரச்சினையைப் பற்றி காமராசர் சர்க்கார் சிறுகவலையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதைத் கண்டிக்கவும், மத மதப்பாக இருக்கும் டில்லி சர்க்காருக்கு இலங்கையில் நடப்பதை சுட்டிக்காட்டி, நியாயம் கிடைக்க வழி செய்யும்படி வற்புறுத்தவும் இக்கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்டிருக்கிறது.

இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். உலகில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டிக்க திராவிட முன்னேற்றக்கழகத் தோழர்கள் உரிமைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், இவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதையுந்தான் இன்று இங்கு பேசிய பேச்சுக்கள் காட்டுகின்றன. இங்கே பேசிய எனது தம்பிமார்கள் பேச்சிலிருந்து வெளிப்பட்டக் கருத்துக்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவு என அவசரப்பட்டு எண்ணத் தேவையில்லை. நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி பேசும்போது இலங்கை மீது படையெடுத்தோ, வேறு வழிகளிலோ அங்கு நடைபெறும் அநீதியை ஒழிக்கவேண்டும் என்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை மீது படையெடுத்துச் செல்லலாம். எப்போது? நமக்கென்று தனியாக ஒரு படை இருந்து, நம்மிடம் படையிருப்பதை அறிந்தும், சிங்கள அரசு தொல்லை கொடுக்குமானால், அப்போது அதுபற்றி யோசிக்கலாம். கே.ஆர்.இராமசாமி இப்படி பேசியது அவரது ஆசையையும், இலங்கைத் தமிழர் மீதுள்ள அக்கறையையும் எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.

எனவே கே.ஆர்.இராமசாமி அவர்களுடைய பேச்சைக் கேட்டதும், அடுத்த ஏப்ரல் திங்களோ, மே திங்களோ படையெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டிருப்பதாக சிங்கள அரசு கவலைப்படவேண்டாம். இங்குள்ள சில சிண்டு முடித்துவிடும் பத்திரிகைகளும் அப்படிக் கருதவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், ஆசைத்தம்பி அவர்கள் பேசியபோதும் இங்குள்ள சௌகார்பேட்டையைப் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அது மிகச் சுலபமானவழிதான். சுறுசுறுப்பான முறைதான். ஆனால் அதை ஏன் குறிப்பிட்டார் என்றால் அந்தவகையில் நம் உள்ளத்திலிருக்கும், கவலையைத் தெரிவிக்கவும், நெஞ்சத்தில் ஆசை கொழுந்துவிட்டு எரிகிறது என்பதையுந்தான் அவர் பேச்சு எடுத்துக்காட்டுகிறது. பொறுப்புணர்ச்சியும், பாதுகாப்புணர்ச்சியும், சொன்னால் அதை செய்து காட்டவேண்டுமே என்ற கட்டுப்பாட்டுணர்ச்சியும் உள்ள நான் சொல்லிக்கொள்கிறேன்.

திருமணம் செய்து கொடுத்துவிட்ட தனது பெண்ணை மருமகன் அடித்துத் துன்புறுத்துகிறான் என்றால் வசதியுள்ள தந்தையாயிருந்தால் அந்தப் பெண்ணை தன் வீட்டிற்குத் திருப்பி அழைத்து வந்துவிடலாம். ஆனால் இன்னும் திருமணம் செய்துகொடுக்கவேண்டிய நிலையில் ஐந்து பெண்ணை வீட்டிலே வைத்திருக்கும் தந்தையாய் இருந்தால் என்ன செய்ய முடியும்? கணவன் அடித்தாலும் பரவாயில்லை. சோறு கிடைத்தால் போதும், கணவன் வீட்டிலேயே அந்தப் பெண் இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு ஏக்கத்துடன் இருப்பான்.

அதைப்போலத்தான் நாமும், இலங்கைத் தமிழரைப் பற்றியும், நமக்குள்ள கவலைகளையும் எண்ணி ஏக்கமடைகிறோம். இந்த ஏக்கம்தான் ஓர் இயக்கத்து வலிவினைத் தரும். ஓர் இயக்கத்திற்கு ஏற்படும் ஏக்கம் அந்த இனத்திற்கு வெற்றிகிட்டச் செய்யும். தனி மனிதனுக்கு ஏற்படும் ஏக்கம் அவனைச் செயலற்றவனாகத்தான் ஆக்கும். அறப்போர் வெற்றிபெறவேண்டும் அங்குள்ள தமிழர்களும், அடக்குமறையை விட்டொழித்துத் திருந்தவேண்டும் என்று சிங்களச் சர்க்காருக்கும் எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, ஆப்பிரிக்காவிலுள்ள பிரிடோரியா நகரத்தில் குடியேறி வசிக்கும் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்கின்ற அங்குள்ளத் தமிழர்கள் தமிழ் வேதச் சங்கம் என்ற பெயரிலே ஓர் அமைப்பை ஏற்படுத்தி திருக்குறள் பயின்று வருகிறார்களாம். அவர்கள் வள்ளுவர் விழா நடத்த இருப்பதாகவும் அந்த விழவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து அனுப்பி வைக்கவேண்டும் என்று அந்த தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். இப்படி அவர்கள் நம்மை பார்த்து கேட்க மூன்று காரணங்கள் உண்டு.

ஒன்று தமிழர்கள் கண்ணுக்கெட்டாத தொலைவில் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களைப் பற்றி கவலைப்படுவது திராவிட முன்னேற்றக்கழகம்தான். நமக்கென்று இருப்பது இன மரபு அறிந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் என்ற உணர்வு அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவதாகும். மூன்று, அவர்களுக்கெல்லாம் நாம் தரக்கூடியது அனுதாபச் செய்தியும், ஆறுதல் செய்தியும் வாழ்த்தும், நல்லுரையும்தான்.

ஆகவேதான் நாம் இன்றய தினம் இந்தக் கூட்டத்தைக் கூட்டி நம்முடைய ஆதரவையும், அனுதாபத்தையும் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். வீழ்ந்துபட்ட தமிழர்களுக்கும், விரட்டியடிக்கப்படும் தமிழர்களுக்கும் நம்முடைய அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நமது கண்ணீரை காணிக்கையாக்குகிறோம். தாயிழந்து தவிக்கும் தனயனும், மகனை இழந்த தகப்பனும், அண்ணனைப் பறிகொடுத்த தம்பியும், தம்பியைப் பிரிந்த அண்ணனும், இப்படியாக ஒரு கூப்புடு தொலைவிலுள்ள இலங்கையிலிருந்துகொண்டு கொட்டும் கண்ணீருடனும், குமுறும் நெஞ்சத்தோடும் 30 லட்சம் தமிழர்கள் வாடுகிறார்கள். அங்குள்ள தமிழ் மக்கள் தணலிலிட்ட தங்கம் போல உருகுகிறார்கள். அவர் படும் துயரம் பற்றிய செய்தி தரணியெல்லாம் பரவுகிறது. ஆனால் இங்குள்ள அரசினருக்கு ஏனோ எட்டவில்லை. விரைவில் இலங்கைத் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழ்ந்து இடம் பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக்கு ஆக்கமும் ஊக்கமும் தர நீங்களெல்லாம் இங்கு வந்து கூடியுள்ளதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இந்த கூட்டத்தில் நிறைவேற்றவேண்டிய தீர்மானங்கள், இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள எல்லா நாட்டிற்கும் இன மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறோம். அதைப் படிக்கிறேன். நீங்கள் அனைவரும் ஆதரவைக் காட்டவேண்டுகிறேன்.
(சொற்பொழிவு - நம்நாடு இதழ் - 14.03.1961)

இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்
தி.மு.கழகப் பொதுச் செயலாளர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட ஓர் அறிக்கை வெளியிட்டிருந்ததை முன்னர்க் குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில், 1958 ஜூன் 22-ஆம் தேதி மிகச் சிறப்பாகத் தமிழ்நாடெங்கும் நடத்திய பின்னர், கூட்டத்தில் ஒரு கண்டனத் தீர்மானத்தை ஆங்காங்கே நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இது குறித்து திராவிடநாடு ஏடு (29.06.1958) ஓர் அருமையானத் தலையங்கத்தை எழுதியிருக்கிறது. அத்தலையங்கம் பின்வருமாறு:-

தெருக்களில் தமிழர்கள் மீது பெட்ரோலைக் கொட்டியர்கள் உயிருடன் எரிக்கப்படுகையில், ஜனங்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர்.

கடந்த 3 வார பயங்கர ஆட்சியில் முதல் சில தினங்களில் மாணவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 300 பேர் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் கலகங்களில் கொலையுண்டவர்கள் 400 முதல் 500 பேர் வரையிலாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அநேகரின் மதிப்பீடு.

தமிழர்கள் தீவின் வடபகுதிக்கு ஓடுகிறார்கள். குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேர் தம் வீடுவாசல்கள் விட்டு ஓடியிருப்பார்கள்.

கொழும்பு நகரில் தமிழர்கள் பகுதி எரிந்துபோன வீடுகளும் கொள்ளையடித்துச் சூரையாடப்பட்ட கடைகளுமாகக் காட்சி அளிக்கின்றன. கிராமாந்தரப் பகுதிகளில் ஏகப்ட்ட தமிழர் பேட்டைகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.

வெளியிட்டிருப்பது தி.மு.க. அல்ல! இலண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் எனும் ஏட்டின் நிருபர், இலங்கையிலிருந்தால் இச்செய்திகளை அனுப்ப இயலாதென்று சென்னைக்குப் பறந்துவந்து, இங்கிருந்து ஜூன் 23 ஆம் தேதி இந்த விபரங்களை அனுப்பியிருக்கிறார், இலண்டனுக்கு!!
தினமணி ஏடு எடுத்து, இதனை ஓரளவு போட்டிருக்கிறது.

ஏட்டின் நிருபர், அவர். அவருக்கு இவ்வளவு அக்கறை! பறந்துவந்து, சென்னையிலிருந்து எழுதி அனுப்புகிறார்!!

இலங்கையில் நடந்ததென்ன என்பதைப் பற்றிச் சரியான விவரம் யாருக்கும் கிடைக்கவில்லை. நிருபர் பறந்து வருகிறார், செய்தி எடுக்க! இந்தியாவின் ஐ கமிஷனராக இலங்கையில் வீற்றிருக்கும் குண்டேவா என்பார், பறந்தும் வரவில்லை - அதிகாரியையாவது அனுப்பி விவரம் தெரிவித்ததாகவும் தகவல் இல்லை!!
நெஞ்சு கொதிக்குமளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும் ஓராயிரம் செய்திகள் வருகின்றன. இலங்கைத் தமிழர் படும் அவதிகள் பற்றி . . . ஆவலும், அச்சமும்இங்குள்ள ஒவ்வொருவரையும் பிடித்தாட்டுகிறது. அங்கே, தமிழர்களின் நலன் பேணும் பொறுப்பிலிருப்பவரோ, பேசாதிருக்கிறார். அவரை, அந்த வேலைக்கு அனுப்பிய டில்லிப் பீடமோ ஏதும் செய்யவில்லை. டில்லியின் அடிவருடிபோல் விளங்கும் சென்னை அரசோ, ஆகட்டும் பார்க்கலாம் போக்கிலேயே உள்ளது.

தி.மு.க. உதித்த நாள் முதல் தமிழர்கள் சென்று வாழும் வெளிநாடுகளிலேயெல்லாம் கூடியவரையில் ஒரு தமிழரையாவது ஐ கமிஷனராக நியமிக்கவேண்டும்; அப்போதுதான் தானாடாவிட்டாலும் தன் சதையாடும், கொஞ்சமாவது, தமிழர்தம் பிரச்சினை புரியும் என்று கூறி வருகிறோம். நடைபெற்றுள்ள பல மாநாடுகளில், தீர்மான மூலமும் அரசுக்கு, மக்கள் குரலை எடுத்துக்காட்டி வந்துள்ளோம், டில்லி, எவ்வளவுதான் செவிடாக இருந்தாலும், ஒரு தமிழர் ஐ கமிஷனராக இருந்தால், அடிக்கடி சங்காவது ஊதிக்கொண்டிருப்பாரல்லவா, என்கிற சபலம் நமக்கு. வடவர், இருக்கிறார்! வடவர்களுக்குத்தான், தென்னாட்டின் பிரச்சினைகள் என்றாலே புரிவதில்லையே!

சென்ற கிழமை, பிரஜா சோஷியலிஸ்டு கட்சியின் பொதுக்காரியதரிசி எனப்படும் என்.ஜி.கோரே என்பார் தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, பல ஊர்களில் பேசி இருக்கிறார். அகில இந்திய ரீதியிலிருக்கும் ஒரு இயக்கத்தின் காவலர் அவர்! அவரிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றித் தங்கள் கருத்து யாது? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சினையில் முழு விவரமும் எனக்குத் தெரியாது. எனவே, நான் அதைப்பற்றி அதிகம் சொல்லுவதற்கில்லை என்று பதிலிறுத்திருக்கிறார். கோரே அவர்களின் கூற்றில் அடங்கியிருக்கும், அடக்கத்தை நாம் பாராட்டுகிறோம். விவரம் அறியேன் என்று வெளிப்படையாக அவர் வெளியிட்ட தன்மையை மெச்சுகிறோம். அதே சமயத்தில், ஒரு அகில இந்தியக் கட்சிக்கு, தமிழர்களின் பிரச்சினை குறித்து எந்தளவுக்குப் புரிந்திருக்கிறது என்கிற உண்மையையும் நாம் உணரத் தவறக்கூடாது.

கோரேக்கு மட்டுமல்ல, அ.இ.கம்யூனிஸ்டு கட்சியின் டாங்கேயானாலும், அஜாய்குமாரானாலும், அகில இந்தியக் காங்கிரசின் நேருவானாலும், தேபரானாலும் அவர்களுக்கெல்லாம், தமிழர்களின் பிரச்சினை பற்றி அறிந்திடும் ஆவலும் அக்கறையும், அதிகம் இருப்பதற்கில்லை. ஏனெனில், இந்தியா ஒரு உபகண்டம்! அதிலும், தென்னகம் ஒரு மூலையில் கிடக்கிற பகுதி! இதன் துயரங்களையும், சோகங்களையும், நாம்தான் ஒருவருக்கொருவர் கட்டி அழுதுகொள்ளவேண்டுமே ஒழிய, வடவர்களை நம்புவதிலும், அவர்கள் மூலம் பரிகாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. இலங்கையில் தமிழர்களுக்கேற்பட்ட அளவுக்கு இன்னலும், துன்பமும், ஒரு பத்து மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும் ஏற்பட்டிருக்குமே யானால், அவர்களது உள்ளமெலாம் பதறும். நேரு அவர்கள், குளூ வுக்குப் போய்க் குளிர்ச்சி தேடமாட்டார்! கொதிக்கிறதே உள்ளம் - என்று குமுறுவார்; அலறுவார்; அறிக்கைகள் விடுப்பார்; இலங்கைக்கு அதிகாரிகளையும் அனுப்புவார்!!

பெட்ரோலைக் கொட்டி எரிக்கப்பட்டனர். மாண்டோர் தொகை, 300க்கு மேலிருக்கும் வீடுவாசல்களைவிட்டு ஓடினார்கள். கொள்ளை அடிக்கப்பட்டனர்; சூறையாடப்பட்டன.

இப்படிச் செய்திகள் வருகின்றன; திடுக்கிடுகிறோம்; திகைக்கிறோம். ஏனைய அகில இந்திய கட்சிகப் போலன்றி, இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்சினை நமக்கு நன்றாகப் புரிகிறது. அங்குவாழ் தமிழர் தம் உழைப்பும், வியர்வையும். இலங்கையின் வளத்துக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கிறதென்பதை நம்மால் அறிய முடிகிறது. இலங்கையும் தமிழகமும், இன்று நேற்றல்ல, சரிதகாலந்தொட்டு சகோதர நாடுகளாகும்!

அங்கு இப்போது நடைபெறும் அமளிகளை இலங்கை மழுவதிலுமுள்ள சிங்களவர் அனைவரும் விரும்புவர் என, எண்ணுவதற்கில்லை. படிப்பாளிகளும், நாகரிக மேன்மையும் நிரம்பிய அங்கு வெறி கொண்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதல்ல; நல்லோரும் இருப்பார்கள். அதனை உணர்ந்த காரணத்தால்தான், கடந்த 22-ஆம் தேதி, நாடெங்கும் இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் நடாத்திய, தி.மு.க. பின் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. சம்பந்தப்பட்டோரனைவரது பார்வையிலும் படட்டும் என்று மீண்டும் அதனை இங்கு வெளியிடுகிறோம்.

இலங்கையிலுள்ள ஒருசில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின்பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி உயிரையும், உரிமையையும், உடமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ் தமிழர்களின் நிலைகண்டு இக்கூட்டம் மிகவும் இரங்குகிறது.

நீண்ட காலமாக இலங்கையைத் தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.

அந்தப்படிக்கு இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முறையில், தங்களுடைய நல்லுறவையும். செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியப் பேரரசினரை இப்போதுக்கூட்டம் வற்வுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அந்த வகைக்கு இந்தியப் பேரரசினரைச் செயல்படத் தூண்டுவதற்கு ஆவனவெல்லாம் செய்யுமாறு சென்னை அரசியலாரை இந்தப் பொதுக்கூட்டம் வற்புறுத்துகிறது.

இலங்கைத் தமிழர்தம் பிரச்சினையில், சுமூகம் ஏற்படவேண்டுமென்பதில், தி.மு.க. எவ்வளவு அக்கறையும், விருப்பமும் கொண்டிருக்கிறது என்பதை, தீர்மானத்தின் வாசகங்கள் விளக்கும்.

டில்லியும், சென்னையும் எவ்வளவுதான் இலங்கை வாழ் தமிழருக்கு. இதுநாள் வரையில் துரோகம் செய்திருந்தாலும், இனியேனும் கொஞ்சம் சிரத்தைகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
(திராவிடநாடு - 29.06.1958)

இப்படித் தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக மக்கள் இயக்கங்கள் நடத்தியும் தீர்மானங்கள் இயற்றியும் ஏடுகளில் எழுதியும் வடநாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் செவிகளில் விழாமலேயே காலம் கடந்து கொண்டே இருந்தது.

திராவிட நாடு ஏட்டில் தலையங்கம் வெளிவந்த மறுவாரம் (06.07.1958). திராவிட நாடு இதழில் இலங்கைத் தமிழர் ஒருவர் எழுதிய கடிதத்தை வெளியிட்டு இருந்தனர். அந்தக் கடிதத்தையும் இங்கே வெளியிடுகின்றோம். இந்தக் கடிதம் இலங்கைத் தமிழரின் வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பேசக் காணலாம்.

ஐயா,
இலங்கையிலுள்ள தமிழர் இயக்கத்துக்கும், இந்தியாவிலே உள்ள தமிழர் இயக்கத்துக்கும் நிரம்ப வேற்றுமைகள் உண்டு. இரண்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சங்கடத்துக்கு ஆளாகும் மக்கள்பால், அவர்கள் அல்ஜீரியாவிலிருந்தாலும். சைப்ரசில் இருந்தாலும், இலங்கையிலிருந்தாலும், தென் ஆப்பிரிகாவிலிருந்தாலும் - ஒரு அனுதாபம் காட்டப்படுகிறதல்லவா. அதுபோன்றதே ஒழிய, வேறு சம்பந்தம் கிடையாது. இந்நிலையில், இலங்கை வாழ் மக்களின் பிரச்சினைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல், தென்னிந்தியாவிலுள்ள இரண்டு அரசியல் தலைவர்கள், திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், பொறுப்பற்ற விதமாகப் பேசியிருக்கிறார்கள். அந்தப் பேச்சினை எடுத்து, தமிழ் மக்களுக்கு அண்மையில் இழைக்கப்பட்ட அநீதிகளை மறைக்கும் விதத்தில், இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் தமிழர் இயக்கம், பிரிவினையை விரும்புகிறது. இலங்கையிலுள்ள பெடரல் கட்சி, இலங்கையில் மொழி அடிப்படையில் ஒரு கூட்டாட்சி (பெடரல்) சர்க்காரை ஏற்படுத்த விரும்புகிறது. இப்படி அமையும் கூட்டாட்சியின் மூலம், தங்களது மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்வதோடு, அரசுப் பொறுப்பிலும் தங்கள் குரலுக்கு செல்வாக்கு கிடைக்க முடியும் என்று நம்புகிறார்கள். தங்களது 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில். சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே, வெள்ளையர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு ஐக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதில், பெடரல் கட்சி அக்கரைகாட்டுகிறது. வெள்ளையர் நுழையுமுன், 2000 ஆண்டுக் காலத்துக்கு முன்பிருந்தே, இருதரப்பினரும் தனித்தனி அரசு அமைத்து, ஆண்டிருக்கிறார்கள். இருந்தும், இப்போது, கூட்டாட்சிதான் கேட்கப்படுகிறது.

வெள்ளையர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பாசமும், நேசமும் நீடிக்கவேண்டுமானால், 1948-இல் கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தில் தமிழர்களுக்கும் பங்களிக்கப்பட வேண்டும். இப்போதுள்ளபடி பார்த்தால், எஜமான மாற்றம் மட்டுமே, இந்தச் சுதந்திரத்தால் தமிழர்களுக்குக் கிடைத்ததே தவிர, உண்மையான சுதந்திரம் மலரவில்லை. புது அரசியலமைப்புப்படி, சிங்களவர்களுக்கு ஏராளமான அதிகாரங்கள் ஏற்பட்டுள்ளன; தமிழர்கள் அடங்கி நடுங்கி வாழவேண்டியவர்களாக உள்ளார்கள். இந்த அதிகாரங்களைப் பெற்றுள்ளதால், இலங்கை அரசு, தொடர்ந்து தமிழர்களை உதாசீனப்படுத்தியே வருகிறது. தமிழர்கள் வசிக்கும் இடங்களிலேயெல்லம், சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர் தம் நிலத்தை எல்லாம் சீர்கெடுத்து வருகின்றனர்.

1956-இல் சிங்களவர் மட்டும் என்கிற சட்டத்தையும், இலங்கை அரசு செய்தது. இந்தச் சட்டத்தை, தமிழர்கள் மட்டுமல்ல, நல்ல உள்ளம் படைத்த சிங்களவர்கள் சிலர் கூட எதிர்த்தார்கள். இருந்தும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது - முன்பு அரசாங்க மொழியாக இருந்த தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் இம்மூன்றினில், சிங்கள மொழி மட்டுமே அரசாங்க மொழி என்று வலியுறத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

இலங்கை, சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற கருத்துடன், ஏனையவர்களை எல்லாம் தீவிலிருந்து விரட்டியோட்ட வேண்டும் எனும் கருத்து, சிங்களவர்களில் வெறிகொண்டவர்களிடம் வளர்ந்து வருகிறது. எப்போதாவது, தங்களது கோரிக்கையைத் தெரிவிக்கத் தமிழர்கள் அறப்போர், ஏதாவது தொடங்கினால் இந்த வெறியர்கள், ஏனையோரைத் தூண்டிவிட்டு, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழர்களைக் கொடுமைப்படுத்தும்படி மக்களை ஏவிவிடுவதும், தூண்டிவிடுவதுமாகவுமேயிருந்து வருகிறார்கள். இதுபோன்ற சமயங்களில், அரசு சில நாள்களுக்கு வாளா இருக்கும். வெறித்தனம் நடைபெற்ற பிறகே, ஓடோடி வரும் நிறுத்த!! பிரதமர், பண்டார நாயகா, பிரமாதமாகப் பேசுவார் - ஒற்றுமை உபதேசம் செய்வார் - நடந்த சம்பவங்களுக்கு ஏதாவது ஒரு நொண்டிச் சமாதானம் சொல்வார் - எல்லாச் சம்பவங்களுக்கு பெடரல் கட்சியினரே காரணம் என்று பாய்வார்.

கடந்த மாதம், பெருத்த அளவில், இலங்கைத் தீவு முழுவதுமே இந்த முறை கையாளப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற சில சம்பவங்களைத் தவிர, சிங்களவர்கள் வாழுமிடங்களிலெல்லாம் காலிகளையும், கூலிகளையும் வைத்துக்கொண்டு தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அக்கிரமங்களைப் பற்றி அரசாங்கம் விடுத்த அறிக்கைகள் எதிலும் ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை. ஆனால், தமிழர்கள் வசிக்கும் இடங்களில் ஒரு சிலர் ஈடுபட்ட செயல்கள் பற்றிப் பிரமாதமாக வர்ணிக்கப்பட்டு, தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் எல்லாம் இராணுவம் கொண்டு வந்து குவிக்கப்பட்டது; பெடரல் கட்சித் தலைவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டார்கள் - சிங்கள வெறியர்கள், சர்க்கார் - பிரதமர் ஆகியோரின் பிடியிலேயே உள்ளனர்.
திரு.சின்னதுரை (பி.எஸ்.வி.), திரு.ராஜாராம் நாயுடு (காங்கிரஸ்) ஆகியோர், எதிர்க்கட்சியினரைத் தாங்க வேண்டும் என்பதற்காக, இலங்கை வாழ் தமிழர்களைப் பற்றி அநாவசியமாகத் தங்களது பேச்சில் இழுத்திருக்கின்றனர். எந்த உண்மையை வைத்து அப்படிப் பேசினார்களோ தெரியவில்லை! இதுபோன்ற பேச்சுகள் மூலம், இலங்கைவாழ் தமிழர்களுக்குப் பெருத்த தீங்கும் சிக்கலும் உண்டு பண்ணியுள்ளார்கள்.
(சி.எச்.முத்து, இலங்கை)

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர்! இன்னொருவர் அரசியல் கட்சி ஒன்றின் முன்னணியில் நிற்பவர்! தோழர் ராஜாராமும், சின்னதுரையும், இலங்கைத் தமிழர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள், அங்கு வாழ்வோரின் மனத்தை எந்த அளவுக்கப் புண்படுத்தியுள்ளன என்பதைக் கடிதம் உணர்த்தும்.
சின்னதுரையைவிட ராஜாராம் அவர்களுக்குப் பொறுப்பு அதிகம். ஆளும் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவுக்குத் தலைவர் அவர். அப்படிப்பட்டவர், இலங்கைப் பிரச்சினைக்குக் காரணம் அங்குள்ள தமிழர்கள்தான் என்று தமிழ் மக்களையே குற்றம் சாட்டிப் பேசினதாக, ஏடுகளில் கண்ணுற்றோம்.

இலங்கையில், தமிழன் துயர் பெரிது! இதனைத் தமிழர்கள் கொடுத்துள்ள உயிர்ப்பலி விளக்கும்!

நம்மோடு இருக்கவேண்டியவன் - நமது இனத்தான், நமது சகோதரன், அங்கே சாகும்போது, இங்கேயுள்ள இவர், பிரச்சினை தீர ஆவன செய்திருக்கவேண்டும். இன்றேல் அனுதாபமாவது காட்டியிருக்கவேண்டும். அதைவிடுத்து, அவர்கள் மீதே குற்றம் சுமத்துவதென்றால், கொடுமை என்போம்.

இங்குள்ள சிலர் பேசுவதைக் கேட்டு, இலங்கை வாழ் தமிழர்கள் நடந்துகொண்டதன் விளைவாகத்தான். அங்கே இப்படி எல்லாம் நடக்கிறதாம்! சொல்லி இருக்கிறார், ராஜாராம்.

தீ எரியும்போது, அது அடங்கும் விதத்தில் முயற்சிகள் எடுப்பதுதான் நல்ல செயலாம். அதைவிடுத்து, இப்படி இவர்கள் பேசுவது, வேதனையானது மட்டுமல்ல, இதுபோன்ற விஷயங்களில் ஏனிப்படி இருக்கிறார்கள் என்கிற ஐயத்தையும் கிளப்புகிறது. உண்மையில் வருந்துகிறோம்.முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.