கண்டார், வெற்றி கொண்டார்
(கல்கி இதழ் - 16.02.1969)

மவுண்ட் ரோட்டில் ஆரவாரத்திரிருந்து சற்று ஒதுங்கித் தேனாம்பேட்டையில் 'நிலா' என்ற அழகான பெயர் கொண்ட குளுமையான இல்லம் ஒன்றிருக்கிறது. இதுதான் முதலமைச்சர் அண்ணாதுரையின் காரியதரிசி திரு.சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ். வசிக்கும் வீடு. வெய்யிலின் உக்கிரம் தெரியாமல் நிழல் பரப்பும் மரங்கள், வரவேற்பறையில் ஜிலுஜிலுவென்று வீசும் காற்று, திரைச் சீலைகள் அசைந்தாடும்போது அவற்றின் அடியில் கட்டித் தொங்கவிட்டிருக்கும் சிறு மணிகள் கிண்கிணி ஓசை எழுப்பும் இனிய சூழ்நிலை.

"அண்ணா அவர்களின் சுற்றுப் பயணம் பற்றி உங்களிடம் பேச வந்திருக்கிறோம்" என்றதுமே, திரு.சொக்கலிங்கம் வினாடிப் போதும் வீணாக்கமல் சென்ற இடங்களைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

"முதலில் விமானம் தரை தட்டியது பஹ்ரானில். அப்போது அங்கு இரவு இரண்டு மணி. அந்த அகால நேரத்திலும் நூற்றுக் கணக்கான தமிழர் குடும்பங்கள் அண்ணாவைச் சந்திக்கக் குழந்தை குட்டிகளுடன் பனியில் நின்று கொண்டிருந்தன. தமிழர்கள் எங்கிருந்தாலும் அண்ணாவைக் குறித்து எவ்வளவு நெருக்கமான ஓர் உணர்வைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக அறிந்திருந்த எனக்கே இந்தக் காட்சி இதயத்தைத் தொடுவதாக இருந்தது."

"அவர்களுடன் ஓர் அரை மணி நேரம் பேச அவகாசம் கிடைத்திருக்கும். அடுத்தாற்போல் ரோமுககு பறந்திருப்பீர்கள்"

"ஆமாம். அங்கு பார்த்து சசிக்க வேண்டிய காட்சிகளை யெல்லாம் பாத்துவிட்டுப் போப்பாண்டவரைத் தரிசிக்கச் சென்றோம். அண்ணா அவருக்குத் திருக்குறளைப் பரிசாக அளித்தார். போப்பாண்டவர் மிக எளிய முறையில் இனிமையாகப் பழகினார்கள். பாரத நாட்டுக்குத் தம்மால் ஆகக் கூடிய உதவி ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார்கள்."

"இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டு அண்ணா, போர்ச்சுகீஸிய சிறையில் வாடும் இரு கோவா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்க விடுதலை வாங்கித் தர போப்பாண்டவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைச் சமர்ப்பித்தார். போப்பாண்டவர் அண்ணாவின் வேண்டுகோளை மனத்தில்கொண்டு தம்மால் இயன்றதைச் செய்வதாக வாக்களித்தார். தமது பரிவாரங்களையெல்லாம் அனுப்பிவிட்டு போப்பாண்டவர் தமிழக அறிஞருடன் தனித்து அளவளாவினார். பூஜ்ய ஜெரோம் டிசோசாவும் நானும்மட்டுமேதான் உடன் இருந்தோம்"

"பாரிஸில் உன்னதமான கலைப் படைப்புக்கள் அண்ணாவின் கலை உள்ளத்தைக் கவர்ந்திருக்கும்; அங்கு தொழிற்காலைகள் ஏதேனும் பார்தீர்களா?"

"ஓ! ரெனால்ட் மோட்டார் கார் தொழிற் சாலைக்குப் போயிருந்தோம். பதினேழு நாடுகளில் அதற்குத் துணைத் தொழிற்சாலைகள் உள்ளன..."

"பதினெட்டாவது துணை ஸ்தாபனம் இந்தியாவில் ஏற்பட்டிருக்க வேண்டுமே? ஆனால் ஓர் அரிய சந்தர்ப்பம் கைநழுவிப் போய்விட்டது. தயாரிப்பது சிறிய மோட்டார் கார். ஆனாலும் மனசு சற்று விசாலமாக இருக்க வேண்டாமா? அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாததால்..."

"இதுபோன்ற வேறு சில விஷயங்களும் எங்கள் கவனத்துக்கு வருகின்றன" என்று சொக்கலிங்கம் மேலும் தொடர்ந்தார். "உதாரணமாக இந்தியாவில் தையல் மிஷின்கள், மின் விசிறிகள் முதலியவை தயாரிக்கும் பெரிய ஸ்தாபனம் ஒன்று உள்ளது. வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட்டைப் பிடித்துக் கொண்டருந்தது. இதைக் கண்ட பல மேல்நாட்டு ஸ்தாபனங்கள் இவர்கள் தயாரிப்பை விடத் தரமானதும் நவீனமானதுமான சரக்குகளை உற்பத்தி செய்து அந்த அயல் நாட்டு மார்க்கெட்டைப் பிடித்துக் கொண்டன. நீங்களும் போட்டி போட்டு கொண்டு உங்கள் தயாரிப்புக்களை நவீனமாக்குங்களேன்" என்ற யோசனை கூறினோம். அதற்கு அந்த ஸ்தாபனத்தினர் 'வெளிநாட்டு மார்க்கெட் எங்களுக்க இல்லாவிட்டால் போகட்டும். அதனால் எங்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை. உள்நாட்டுத தேவைகளையே நாங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லையே' என்றார்கள். அவர்களுக்கு இந்தத் துறையில் இங்க ஏக போக்கியம் இருப்பதால்தான் இப்படி அலட்சியமாக பேசுகிறார்கள்? போட்டா போட்டி இருந்தால்...?"

"இன்னும் சிறப்பாகத் தொழில் வளம் பெருகும். இருக்கட்டும். பாரிசில் உலகப் புகழ் பெற்ற லூவர் மியூசியத்துக்குப் போயிருந்தீர்களா?"

"ஆமாம்; அதிகாரிகள் எங்களுக்காக மியூஸியத்தை வழக்கத்தைவிட முன்னதாகவே திறந்துவிட்டார்கள். இல்லாது போனால் விமானத்தை நேரத்தில் பிடித்திருக்க முடியாது. லூவர் மியூஸியத்தில் உள்ள மோனாலிஸா ஓவியம்தான் பாரெல்லாம் புகழ் பெற்றது. ஆனால் அண்ணாவை மிகவும் கவர்ந்தது.(என்னையும்தான்) ஐம்பது அடிக்கு இருபது அறி நீள அகலம் கொண்ட பிரும்மாண்டமான ஓவியம் ஒன்று. நெப்போலியனுக்க முடி சூட்டும் காட்சி! எத்தனை தோரணைகள்; எத்தனை முகங்கள்; எத்தனை பாவங்கள்!"

"பிறகு நியூயார்க்குக்குப் பறந்தீர்களா?"

"இருங்கள், பாரிஸில் நாங்கள் சந்தித்த ஒரு கனவானைப் பற்றிச் சொல்லவேண்டும் இவர் மேல் சபைத் தலைவர். உதவி ஜனாதிபதியின் அந்தஸ்துள்ளவர். இந்த உயர்ந்த நிலையில் இருபது வருடங்களாகத் தொடர்ந்து இருந்து வரும மோனர்வில்லி ஒரு நீக்ரோ. அண்ணா அவர்களை வரவேற்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார்."

"நியூயார்க்கில் நீக்ரோக்கள் வாழும் ஹார்லெம் பகுதிக்கு அண்ணா சென்றிருந்தாராமே!"

"ஆமாம். நான் போகவில்லை."

"சரி, நீக்ரோ பிரச்னை பற்றி அண்ணாவின் அபிப்பிராயம்?"

"நீக்ரோக்களிடம் இன்ற அமெரிக்காவில் ஆட்சியில் உள்ளவர்கள் மிகுந்த அனுதாபத்துடன் நடந்து கொள்ளவே விரும்புகின்றனர். ஆனால் நீக்ரோக்களில் இளைஞர்களாக இருப்பவர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுப பிரச்னையைச் சிக்கலாக்குகிறார்கள்" என்ற அண்ணா அபிப்பிராயப்பட்டார்.
"நியூயார்க்கில் பாரத நாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் ஒரு கடைக்கு அண்ணா விஜயம் செய்தார் என்று பத்திரிகைச் செய்தி கூறியதே!"

"அங்கு அண்ணாவுக்குக் காத்திருந்தது ஏமாற்றம்தான். பாரத நாட்டுக் கலைப் பொக்கிஷங்கள் ஒரு கடல் என்றால் இங்கு மாதிரிக்கு வைக்கப்பட்டிருந்தது ஒரு துளிதான். அவையும் ஒன்றுக்குப் பத்தாக விலை! 'அமெரிக்கர்களிடம் பணம் இருககிறது என்று விலையை ஏகமாக ஏற்றிக் கொஞ்சமாக விற்காதீர்கள். அதைவிட மலிவான விலையில் நிறையச் சரக்குகளை, விதம் விதமான கலைப் பொருள்களைத் தள்ளிவிட முயல்வது நல்லது' என்று அண்ணா யோசனை கூறினார்"

"விவசாயப் பண்ணைகளைப் பார்த்தீர்கள் அல்லவா?"

"நியூயார்க்கில் நமது அமெரிக்கத் தூதர் ஜி.பார்த்தசாரதி அவர்களுடன்தான் தங்கியிருந்தோம் அவரிடம் விடைப்பெற்றுக் கொண்டு நயாக்ரா நீர் வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுப பிறகு நியூஹேவனில் உள்ள பிரிஸ்கோ குடும்பத்தினர் நடத்தும் பண்ணைக்குச் சென்றோம்"

"அங்கே உங்களை மிகவும் கவர்ந்த விஷயம்?"

"பண்ணையிரிருந்து பால் காலன் காலனாக உற்பத்தியாகிச் செல்கிறது. ஆனால் அங்கு அதைக் கண்ணால் பார்ப்பது கிடையாது என்று கேட்கிறீர்களா?"

"பால் கறக்க ஓர் இயந்திரம், கறந்த பால் குழாய்கள் மூலம் குளிர்பதனப் பெட்டியை அடைகிறது. அங்கு நீண்ட காலத்துக்கு கெடாமல் இருக்கும். வாரம் ஒரு முறை பால் வண்டி(மோட்டார் லாரி) வருகிறது. குளிர்சாதனப் பெட்டியில்ரிருந்து அந்த வண்டிக்குள் பாலை ஓர் இயந்திரம் இறைத்து விடுகிறது. பால் சுத்திகரிப்புத் தொழிற்சாலைக்கு மோட்டார் லாரி செல்கிறது. அங்கு பால் சுத்தப்படுத்துப்பட்டு, பிறகு பாட்டில்களில் வினியோகமாகிறது. கண்ணாடிப் பாட்டிலுக்கு வரும்போதுதான் பாலைக் கண்ணடால் பார்க்கிறோம்."

"யேல் சர்வகலாசாலை மாணவர்கள் அண்ணாவைப் பற்றி என்ன நினைத்தார்கள்?"

"அண்ணாவின் மிக எளிமையான தோற்றம்; பெருந் தலைவன் என்ற தோரணையில் ஜபர்த்ஸ்து ஏதும் பண்ணாமல் சரளமாகப் பழகியது; மனத்தில் தோன்றிய உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் பேசியது - இவையெல்லாம் அம்மாணவர்களைப் பெரிதும் அவர்பால் ஈர்த்தன. 'எத்தனையோ தலைவர்கள் இங்கு வந்து போயிருந்கிறார்கள். ஒன்று அவர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் நாட்டைப் பற்றியும் ரொம்பவும் கர்வத்துடன் வருவார்கள்; அல்லது அமெரிக்காவிலிருந்து யார் யாரிடம் என்ன என்ன உதவி பெற்றுத் திரும்பலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டு உண்டி குலுக்கியபடி வருவார்கள். நீங்கள் எதற்காக வந்தீர்கள்? என்று ஒரு மாணவர் கேட்டார்.'"

"அண்ணா, 'நான் உதவி ஏதும் பெற்றுப்போக வரவில்லை. அப்படி உதவி பெறுவது என்பது பாரத நாட்டில் டில்லி தர்பாரின் ஏகபோக உரிமையாக இருக்கிறது. நான் நட்புறவுடன் உங்களிடம் பழக வந்தேன்' என்றார். எந்த விதமான உள் நோக்கமும் இன்றி மனம் விட்டுப் பழகியதை அவர்கள் விரும்பி ரசித்தார்கள்."

"வாஷிங்டனிலிருந்து போர்ட்டோரீக்கோவுக்கு நீங்கள் போனது எதற்காக?"

"போர்ட்டோரீக்கோ தீவு சமீப காலமாக வெகு வேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. அதன் வளர்ச்சியைக் காணச் சென்றோம்."

"போர்டோக்கோவின் வளர்ச்சியை நம் நாட்டுடன் ஒப்பிட்ட்டு நோக்குவதற்கில்லை. அது மோரிக்காவின் ஒரு பகுதியே. அமெரிக்காவின் செல்வச் செழிப்பு அதன் துரிதமான முன்னேற்றத்துககு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது" என்றார் முதல்வரின் காரியதரிசி திரு. சொக்கலிங்கம்.

"யேல் பல்கலைக் கழகம் தவிர கான்ஸாஸ் ஸ்டேட் சர்வகலாச்லைக்கும் சென்றிருந்தீர்கள் அல்லவா?"

"கான்ஸாஸ் ஸ்டேட் சர்வ கலாசாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு அண்ணா ஒரு ஆங்கிலச் சொற்பொழிவாற்றினார்"

"கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் அன்று அசந்து போயிருப்பார்கள் தமிழை எத்தனை திறம்படக் கையாள்கிறாரோ அதற்கு இம்மியும் குறைவில்லாமல் அதே அளவுக்கு வேகமும் அழுத்தமும் இனிமையும் குழைவும் நளினமும் நகைச்சுவையும் சேர்த்து அழகுறப் பேசுபவராயிற்றே அள்ளா. சரி, டிஸ்னி லாண்டில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்?"

"டிஸ்னிலேண்டைவிடக் கொஞ்சம் அதிகமாகவே அண்ணாவுக்குப் பிடித்திருந்தது, இன்னொரு விஷயம். பழங்காலத்திய அமெரிக்கா எப்படிக் காட்சி அளித்ததோ அந்த சரித்திர கால உலகை இன்று மீண்டும் சிருஷ்டித்து வைத்திருக்கிறார்கள். அங்கக சிறகுகளாலான தலைப்பாகை அணிந்து, வில்லும் அம்பும் ஏந்திச் சிவப்பிந்தியர்கள் வளைய வருகிறார்கள். 'கௌபாய்' எனப்படுவோர் குதிரைகளில் விரைகிறார்கள். பழங்காலத்திய அமெரிக்காவை நாம் சினிமாவில் பார்க்கிறோமல்லவா? அதேபோல்தான். ஆனால் இங்கு கண்ணுக்கு மெய்யாக அந்தச் சரித்திர காலத்தின் நாமும் வாழ்கிறோம். 'இருநூறு ஆண்டு சரித்திரத்தைப் பாதுகாக்க இத்தனை பாடுபடுகிறார்களே அமெரிக்கர்கள்! நமது இரண்டாயிரம் ஆண்டுச் சரித்திரத்தை, உன்னதமான கலைகள் வளர்ந்த கதையை எடுத்துச் சொல்ல இதுபோன்ற எத்தனை சரித்திர உலகங்களைப் படைக்க வேண்டும் நாம்!' என்று அண்ணா ஏங்கவே ஆரம்பித்துவிட்டார்!"

"பின்னர் ஸான்பிரான்ஸிஸ்கோ சென்றீர்கள் இல்லை?"

சொக்கலிங்கம் தம் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துககொண்டார். நாலு மணிக்கு அண்ணாவின் இல்லத்துக் வருவதாக சொல்லியிருந்தார். அவர் ஸான்பிரான்ஸிஸ்கோவை விட்டு விட்டு ஹானலூலுவிக்குத் தாவினார்

"ஹவாய் பல்கலைக் கழகத்தை யொட்டி ஈஸ்ட் ஸெண்டரும் உள்ளது. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் என்று ஹவாய்த் தீவுகள் கருதப்படுகின்றன. அதனால் இந்த நிறுவனத்துககு இப்பெயர் இட்டிருக்கிறார்கள். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் அறிஞர்கள் இங்கு வந்து பல துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஆழ்வார்குறிச்சியில் ஹவாய் பல்கலைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் ரு விவசாயக் கல்லூரி அமைக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள"

"சேலம் எஃகு ஆலை எப்போது என்ற பிரச்ளைக்கு விடைகாண ஜப்பானில் அண்ணா முயன்றார் போலிருக்கிறதே?"

"மத்திய அரசினர் கொஞ்சம் மனம் வைத்து விட்டுக் கொடுத்தால் ஆலை உருவாவதில் தடையே இல்லை. ஜப்பானுக்க இங்களுள்ள கனிப் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஜப்பானியரின் ஒத்துழைப்புடனேயே இங்கு எஃகு ஆலையை நிறுவிவிடலாம். ஆனால் புது தில்லி சர்க்கார் அந்நிய செலாவணியெல்லாம் தங்களுக்கே வந்து சேரவேண்டும் என்று கொள்கை வகுத்திருக்கிறார்கள். நாம் நேரடியாக ஜபபானியருடன் இது விஷயத்தில் வர்த்தக - தொழில் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கில்லை. இதுதான் தடை."

"சேலம் எஃகு அப்படியொன்றும் தரத்தில் உயர்ந்ததில்லை என்கிறார்களே?"

"உண்மை. ஆனால் அதில் பிரச்னை இல்லை. அந்தக் கனிப்பொருளை இறக்குமதி செய்யத் தயாராக இருக்கும் ஜபபானியர் 25 சத விகிதமே இரும்பு உள்ள கனிப்பொருளை மேலும் வளமாக்க இங்கே ஓர் ஆலையை நிறுவவும் சித்தமாக இருக்கிறார்கள். அப்படித் தரத்தில் உயர்ந்ததாக்கிய பிறகே அதனைக கப்பலில் ஏற்றிச் செர்வார்கள்."

"அப்படி அவர்களுக்குக் கனிப்பொருளை ஏற்றுமதி செய்து, பிறகு அதில் கிடைக்கும் அந்நியச் செலாவணியுடன் இங்கு ஆலை அமைத்து, அந்த ஆலையை நீண்ட காலத்துக்கு நடத்தத் தேவையான அத்தனை கனிப் பொருள் இருக்கிறதா சேலத்தில்?"

"இருநூறு ஆண்டுகளுக்குக் கவலை இல்லை. அத்தனை கனிப்பொருள் இருக்கிறது. அதைப் பயன்படுத்தத்தான் தடங்கல்கள் சிக்கல்கள்"

திரு.சொக்கலிங்கம் கை கடிகாரத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தார்.

"இன்னும் ஒரே ஒரு கேள்வி. இப்போது இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள எ1கு ஆலைகளே சோம்பிக் கிடக்கின்றனவே, நஷ்டத்தில் இயங்குகின்றனவே, எஃகு உள்நாட்டிலும் தேவைப்படாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கிறதே. இந்நிலையில் சேலத்தில் இன்னொரு எஃகு ஆலை அவசியம்தானா?"

"இதில்தான் நாம் ஜாக்கிரதையாகவும் தீர்க்கதரிசனத்துடனும் செயலாற்ற வேண்டும். எஃகு என்றால் ஒரே ரகமல்ல. அதில் எத்தயோ விதங்கள்; தரங்கள். எந்த ரகத்துக்கு உலக மார்ககொட்டில் தேவை இருககிறது. எதிர்காலத்தில் என்னென்ன ரகங்கள் தேவைப்படும் என்பதைக் கவனித்து எச்சரிக்கையுடன் செயலாற்றினால் நிச்சயம் நஷ்ம் உண்டாகாது"

திரு.சொக்கலிங்கத்துக்கு நன்றி கூறி விடைபெற்றோம். திரும்பும்போது நுங்கம்பாக்கத்தில் முதல்வரின் வீட்டை ஒரு முறை வலம் வந்தோம். உலகம் சுற்றிய முதல்வரை ஒரு முறை சுற்றி வந்ததில் ஏதோ நாமே உலகைச் சுற்றிப் பார்த்து வந்துவிட்டது போன்ற ஒரு மகிழ்ச்சி.

இதே போன்று குதூகலத்தை தமிழகத்தில் லட்சோப லட்சம் மக்கள் இன்று அடைந்திருக்கிறார்கள் அல்லவா?

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.