புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன்
அறிஞர் அண்ணா
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
மேல்நாட்டுக் கவிகளைப் போல் கலையைக் காலத்தின் கண்ணாடி ஆக்குகிறார்!
காலத்தையே உருவாக்குகிறார்!
காலத்தையே உருவாக்குகிறார் என்பது மாத்திரம் அல்ல;
காலத்தையே மாற்றுகிறார்!
காலத்தை மாற்றுகிறார் என்பது மட்டும் அல்ல; மாறிய
காலத்திற்கு நம்மை அழைத்தும் செல்கிறார்!
அப்படி அழைத்துச் செல்கிறார் என்பது மாத்திரம்
அல்ல; சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார் மாறிடும்
காலத்தை நோக்கி!
இயற்கையின் நியதிப்படி -
தென்றல் வளரும்; நிலவு வளரும்; செல்வம் வளரும்.
அவைபோல அவருடைய கவிதைகளும் வளரும்; வளர வேண்டும்.
ஒரே இனம் ஒரே கொள்கை
கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அளித்துள்ள கவிதைகளை நான் பாத்திருக்கிறேன்
- படித்திருக்கிறேன் - என்பதற்காக மட்டும் அல்ல நான் பாரதிதான்
படத்தைத் திறந்துவைக்க விருப்பப்படுவது.
புரட்சிக் கவிஞரும் நானும் ஒரே திராவிட இனம்;
ஒரே இனக் கொள்கை உடையவர்கள்.
பல மாணவர்கள் உள்ளங்களிலே பாரதிதாசன் மேல் அன்பு
ஊடுருவிப் பாய்ந்து அவருக்கு இப்படிப்பட்ட பாராட்டு விழா ( அண்ணாமலைப்
பல்கலைக் கழகம் போன்ற உயர்ந்த இடங்களில்) நடைபெறுவது பற்றிப் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். எனவேதான் அவரது படத்தைத் திறந்து வைக்கவும் நான் விரும்புகிறேன்.
இப்பொழுது தமிழிலே பாடுகின்ற - தமிழுக்காக உழைக்கின்ற
- எல்லாக் கவிவாணர்களையும் தமிழ்நாடு வரவேற்கின்றது.
எக் கட்சியினர் ஆயினும், செய்கிற தொண்டு தமிழுக்கும்
தமிழ் நாட்டுக்கும் பயன்படுகிறது என்றால் தமிழனுடைய உள்ளம் குளிர்கிறது.
உடனே கவிகளைக் கட்டி அணைக்கத் தன் இரு கரங்களையும் அவன் நீட்டுகிறான்;
பாராட்டுகிறான்; பரிசு அளிக்கிறான்.
இது நாட்டின் நற்காலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஆங்கிலம் கற்காததால் அடைந்த தொல்லைகள்
இதற்கு முன்பெல்லாம் கடந்த பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்
நடந்தது இல்லை. கவிகளை மக்கள் கனவிலும் கூடக் கருதினார் இல்லை.
தமிழும் தன்னந் தனியே தமிழரை விட்டுப் பிரிந்து
உலவிற்று.
உதாரணமாக, அப்பொழுதெல்லாம் தமிழ் ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கம் எவ்வளவு தொடர்பு இருந்தது என்றால் - (புராணம் கதையிலே
வரும்) முருகனுக்கும் தெய்வயானைக்கும் எவ்வளவோ அவ்வளவு!
தமிழ்ப் பண்டிதர்களுடைய நிலையே தனி, அவர்கள் சரிந்த
தலைப்பாகையும், உலர்ந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும், வீட்டில்,
அரை டசன் குழந்தைகள் என்ற எண்ணமும், குறைந்த ஊதியமும் அவர்களைப்
பரிதாபகரமான நிலையிலே கொண்டு வந்து நிறுத்தின.
அதிக ஆற்றல் இருந்தும், ஆங்கிலம் கற்காத காரணத்தால்
தமிழ்ப் புலவர்களின் நிலை தாழ்ந்தது. தமிழனுக்குத் தாய் மொழியைக்
கற்றுக் கொடுத்த காரணத்திற்காகச் சம்பளம் குறைந்தது. அவர்களை இகழ்வது
- தள்ளிவைப்பது - ஆகிய வகுப்பு என்றால் விருப்பப்பட்டால் போகிற
வகுப்பு என்று அவர்கள் நினைத்தார்கள். தமிழ் வகுப்பு நடந்து கொண்டேயிருக்கும்;
தெய்வயானையை (முதல் மனைவியை) விட்டு விட்டு வள்ளியைத் தேடிக்கொண்டு
முருகன்(புராணக் கதையில்) போவதுபோல், மாணவர்கள் தமிழ் ஆசிரியரை
விட்டு விட்டு வெளியே போய்விடுவார்கள்!
ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது. எங்கே சென்றாலும் தமிழ் -
தமிழர் என்கிற பேச்சுக்களையே நான் கேட்கிறேன்; பார்க்கிறேன்.
ஓரிரண்டு ஆண்டுகளாக நான் ஆங்கிலத்திலேயே பேசுவேன்! என்று சபதம்
செய்தது போல் நடந்து கொண்டவர்கள் கூட இன்று, தமிழிலேயே பேசுவேன்;
தமிழிலேயே எழுதுவேன்; தமிழிலேயே எண்ணுவேன்! என்று சொல்லுவதைக்
கேட்கிறேன்.
தமிழிலே கவிதைகள் - தமிழிலே நாடகங்கள் - தமிழிலே இசைகள் - இவற்றை
யாரும் எங்குச் சென்றாலும் கேட்கலாம்; பார்க்கலாம்.
நேற்றுக் கூப்பிட்டிருந்தால் (தமிழ் நிகழ்ச்சிக்கு)
வரமாட்டேன் என்று இறுமாப்புடன் இருந்திருப்பவர்கள் கூட, இன்று
தானும் தமிழர் - தமிழர் இனம் என்ற சொல்லிக்கொள்ள முற்படுகிறார்கள்.
ஆனால் இந்த நிலை என்றும் மாறாமல் நிலைத்திருக்குமா?
இழிந்த நிலைக்கு என்ன காரணம்?
இவ்வளவு நாளும் இல்லாத ஒரு விருப்பு - ஓர் உணர்ச்சி
- தாய்மொழிப்பற்று - தன்னினப்பற்று - தமிழர்களிடையே ஏற்பட்டதற்கு,
தமிழன் தன் நிலை உணர வந்ததற்குக் காரணம் என்ன?
இந்தப் புரட்சிக் கவி பாரதிதாசன் நேற்று இல்லை;
இன்று இருக்கிறார்
என்று சொல்வேன் என்று நீங்கள் கருதினால் அப்படிச் சொல்பவன் அல்லன்
நான்.
அவருக்கு முன்னால் இருக்கும் பெயரே, அவருக்கு
முன் மாபெரும் கவிஞர் சி.சுப்பிரமணிய பாரதியார் இருந்தார் என்பதை
நினைவூட்டுகிறது.
கவிகள் - புலவர்கள் இதற்கு முன் இருந்த இழி நிலைக்கும்,
தமிழ் மீது தமிழர் பற்றுக் கொள்ளாததற்கும் காரணம் என்ன?
தமிழ்நாடு என்றால், அது குறுகிய மனப்பான்மை என்றும்
தமிழ்மொழி என்றால், அது உத்தியோகத்திற்கு இலாயக்கானது அல்ல; தகுதியானது
அல்ல என்றும் தமிழ் படித்த ஒரு சில வட்டாரங்களிலே செய்திகள் உலவி
வந்ததும், தமிழ் நாட்டின் எல்லையைக் குறித்தால் - தமிழனுடைய மேன்மைப்
பண்பைக் குறித்தால் - தமிழனுடைய தனித் தன்மையைக் குறித்தால் -
நம் நாட்டுக்குச் செய்கின்ற நாச காரியங்கள் அவை என்றும் தவறாக,
தெரியாமல், பாமரர்களும், படித்தவர்களும் கருதினதும் தான் கவிஞர்களின்
பழைய இழிநிலைக்குக் காரணங்கள் ஆகும்.
தெரிந்து, பாமரர்களுக்குப் பரிந்து பேசுவது போல
நடிக்கும் நயவஞ்சகர்கள் நாட்டிலே உண்டாக - எத்தர்களும், ஏமாளிகளும்
ஏற்பட்டனர்.
ஏமாற்றி வாழ்பவன் எந்தன்; ஏமாறுபவன் ஏமாளி. தன்னுணர்வு
அற்ற மக்களால் தமிழும் தமிழ் அறிஞர்களும் போற்றப்படாமல் மூலை முடுக்குகளிலே
தள்ளப்பட்டுத் தூங்கிக் கிடந்தனர்.
புதிய விழிப்புணர்ச்சி நீடிக்கவேண்டும்
ஆனால் இன்று . . . தன்மான உணர்வு பெற்ற தமிழர்கள் தூங்குகிற கவிகளைத்
தட்டி எழுப்புகின்றனர்; துக்கப் படுகிறவர்களது துயரத்தைத் துடைக்கின்றனர்;
தேம்பித் திரியும் கவிவாணர்களைத் தேடிப் பிடித்து, அவர்களை மார்போடு
அணைத்து, உச்சி மோந்து, முத்தம் கொடுத்து உள்ளம் பூரிக்கின்றனர்.
இவனா? . . . இவன் என் இனத்தவன்!
அது தமிழா? . . . அமிழ்தினும் இனியது அல்லவா?
அவனா? . . . அவன் ஓவியக்காரன்; அவன் ஓவியங்கள்
இரவிவர்மா ஓவியத்துடன் போட்டியிடும்!
அவன் தமிழிசை வாணனா? . . . தமிழிசை எந்த விதத்திலும்
தெலுங்கை விடக் குறைந்தது அல்லவே!
அவன் நடகக்காரன் . . . அவனது நடனம் வடநாட்டு நடனத்தைவிட
இரம்மியமாக இருக்கும்!
அவன் நடிகன் . . . மேல் நாட்டு நடிகனும் அவனிடம்
தோற்றுவிடுவான்! தமிழ் நாட்டு நடிகன் நமது இருதயத்தையேதான் நடிக்கும்
நாடக மேடை ஆக்கிக் கொள்கிறான்!
அவன் கவிஞன். . . அவன் பாக்களிலே ஓர் அடிக்கு
- மேல் நாடாக இருந்தால் - ஓராயிரம் பொன் கொடுப்பார்!
என்றெல்லாம் இன்று தமிழ் அறிவாளிகளை, சிற்பிகளை,
சிந்தனையாளர்களை, கவிஞர்களை, கலைவாணர்களைத் தமிழகம் போற்றுகின்றது.
இந்த நிலை நேற்று இல்லை; இன்று இருக்கிறது. நாளை
இது நீடித்திருக்க வேண்டும்.
இத்தகைய நிலை நிலைத்திருந்தால்தான் ஒரு பாரதிதாசன்
அல்ல; எண்ணற்ற பாரதிதாசர்கள் தோன்றுவார்கள்.
அவர்களைக் கண்டு - அவர்கள் காட்டிய வழிகளைத் தமிழரும்
தமிழகமும் பின்பற்றிப் பயன் அடைய ஏதுவாகும்.
தொண்டா? துரோகமா?
கவிஞர்களையும் மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுவதற்கும்
இன்னும் ஒரு காரணம் உண்டு.
சங்க இலக்கியங்களிலே நம் கண்ணும் கருத்தும் படாதபடி
பழைமை விரும்பிகள் திரையிட்டு வந்தார்கள்.
உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம்.
சிலர் புரிந்துகொண்டிருக்கலாம். சிலர் புரிந்தது போல் பாவனை காட்டலாம்.
நான் சங்க இலக்கியங்களைப் படித்தவன் அல்லன்; அல்லது
அவற்றைப் படித்தவனைப் போலப் பாவனை செய்பவனும் அல்லன். அதற்காக
நான் வெட்கப்படப் போவதும் இல்லை.
சங்க இலக்கியங்களை நான் படிக்கவில்லை என்றால்
- அதற்குக் காரணம் என் அறியாமை இல்லை. என் கண் முன் சங்க இலக்கியங்கள்
நர்த்தனம் ஆடவில்லை. என் கண் முன் அவற்றைக் கொண்டு வந்து புலவர்
பெருமக்கள் அப்படி நிறுத்தவில்லை.
அவர்கள் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும்
வேலிகள் அமைத்துக் கொண்டு - இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில்
சுற்றுச் சுவரை எழுப்பிக்கொண்டு - உள்ளே ஆடுது காளி
வேடிக்கை பார்க்க வாடி!
என்பது போல,
தொல்காப்பியத்தைப் பாரீர்!
என்றால் அதனிடம் யார் அணுகுவார்?
சங்க இலக்கியங்களை வீட்டைவிட்டு வெளியேற்றி நாட்டிலே
நடமாடவிடவேண்டும்.
நடன சுந்தரிகளாகச் சிறுசிறு பிரதிகள் (படிகள்)
மூலம், தொல்காப்பியக் கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்டால்தான்
- தொல்காப்பியம் சிறு சிறு குழந்தைகளாக ஒவ்வொருவருடைய மடியிலேயும்
மனத்திலேயும் தவழும். ஒவ்வோர் இல்லமும் இலக்கியப் பூங்காவாகக்
காட்சியளிக்கும்.
இன்றைய புலவர்கள் உண்மையிலேயே இனிமையையும் எளிமையையும்
சங்க இலக்கியத்துடன் சேர்ந்து மக்களுக்கு ஊட்டியிருப்பார்களேயானால்
- சங்ககாலப் புலவர்களைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு
இருகுகுமேயானால் - அவர்கள் ஒவ்வோர் இல்லத்தையும் இலக்கியப் பூங்காவாக்கும்
உழவர்களாக இருந்திருக்கவேண்டும்.
ஆனால் அப்படி இல்லை என்பதை நினைக்கும் பொழுதுதான்,
அவர்கள் இத்தனை நாட்களாக நாட்டுக்குச் செய்தது தொண்டு அல்ல; துரோகம்
என்று எண்ண வேண்டியிருக்கிறது!
இளங்கோவா? கம்பனா?
புலவர்கள் தாங்கள் நன்மை செய்வதாய்க் கருதிக்கொண்டு, ஒரு சில புலவர்களையும்
கவிகளையும் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியும், அந்த ஒரு சிலரே
பொதுமக்களின் பாராட்டுதலுக்கு அருகதை உடையவர்கள் என்று சொல்லியும்
வருகிறார்கள்.
அதன் மூலம் உண்மைக் கவிகள், உயிர்க் கவிகள், சங்க
காலப் புலவர்கள் மறைக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இன்றும் தெளிவாகக் கூறவேண்டுமானால், கம்பனை எந்த
அளவுக்குப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்களோ, அந்த அளவுக்குச்
சங்க காலப் புலவர்கள் அறிமுகப்படுததவில்லை.
கம்பனைத் தெரிந்த பொதுமக்கள்தான் அதிகம் இருப்பார்களே
தவிர, இளங்கோவைப் பற்றித் தெரிந்தவர்கள் கொஞ்சமாகத்தான் இருப்பார்கள்.
வேண்டுமென்றால் தில்லையில் (சிதம்பரத்தில்) ஓர் ஓட்டுப் (வாக்குப்)
பெட்டியை வைத்துப் பிரச்சாரம் இல்லாமல் - அப்படி இருந்தால் ஒரு
பக்கமும் நடத்தி - கம்பனுக்கும் இளங்கோவுக்கும் வாக்குப் போடச்
சொன்னால் - தேர்தலில் கம்பன் தான் வெற்றி பெறுவான்!
ஆனால் நாம் நமது கற்பனா சக்தி முன்னால் இருவரையும் நிறுத்திப்
பேசச் சொன்னால், கம்பர் இளங்கோவைப் பார்த்து - எனக்கு உயிர் கூட்டிய
உத்தமரே என்பார்;
எனக்கு அணி அழகு தந்த ஆணழகரே! என்பார்.
பத்திரிகைகளின் ஓரவஞ்சனை
அகத்தையும், புறத்தையும்(அகநானூறு - புறநானூறு), அவற்றிலே காட்டப்பட்ட
கருத்துக்களையும், அணிகளையும், உவமைகளையும் நாம் அறியாமற் போனதற்குக்
காரணம்;
பத்திரிகைகள் ஒரு கவியைப் பற்றியே புகழ்வதும்,
ஒரு சில கவிதைகளிலேயே - அவை எவ்வளவு பழைமையில் அழுந்தியிருந்த
போதிலும் - புதுமை மிளிர்வதாகவும், இரசம் ததும்புவதாகவும் விளம்பரப்
படுத்துவதும், மிதிலைச் செல்வியைப் (சீதை) பற்றியும், கோசலைச்
செல்வனைப்(இராமன்) பற்றியும் மாதாந்திர வெளியீடுகளும், ஆண்டு மலர்களும்,
தனிப் புத்தகங்களும் வெளியிடுவதும்தான் (காரணம்) ஆகும்.
கம்பனையும் சேக்கிழாரையும் அடிக்கடி பலப்பல நிறங்களிலே
காட்டுவதன் மூலம் கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் தத்துவார்த்தங்களாலும்
புதுமைக் கருத்துக்களாலும் காட்டி நிலைநாட்டுவதன் மூலம் - வள்ளுவனை
மக்கள் அதிகம் காண முடியாத நிலையை உருவாக்கிவிட்டார்கள்.
அகநானூற்றையும் புறநானூற்றையும் மக்கள் மறக்க
நேர்ந்தது. கற்றறிந்தோர் ஏத்துக் கலித்தொகையைக் கற்றறிந்தவரிடம்
காண்பதே அரிதாகிவிட்டது. பரிபாடலைப் பார்க்கவே முடியவில்லை.
ஆகவே சங்க இலக்கியங்கள் மங்கி, மக்களுடைய மனத்தைப்
பெறாமல் போனதற்குக் காரணம் - அந்தச் சங்க இலக்கியக் கருத்துக்களைக்
காண முடியாதபடி நமது கண் முன் திரைபோட்டு விட்டார்கள்!
ஒரு சிலரையே மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துவதன்
மூலம் - பொதுமக்களுடைய ஆதரவைத் தாங்கள் பெற முடியும்; குறிப்பிட்ட
தங்கள் திட்டம் நிறைவேறும்;
மக்களுடைய மனத்தை மாசற்ற கவிகளின் மீது பாயவிடாமல் மருண்ட பாதைக்கு
இழுத்துச் சென்றால்தான் என்ன?
என்று எண்ணிடும் நயவஞ்சக நாச காலர்கள் நாட்டிலே உலவி வருகிறார்கள்!
குறிப்பிட்ட சிலரையே போற்றுவது ஏன்?
ஏன் புரட்சிக் கவி பாரதிதாசனைப் புத்துலகச் சிற்பியாக மக்கள் முன்
கொண்டுவந்து நிறுத்தவில்லையென்றால் - அவருடைய புதுமைக் கருத்துக்களைக்
காணும்படி மக்களைத் தூண்டுவதில்லையென்றால் - அதற்குக் காரணம் இல்லாமல்
இல்லை.
மக்கள் புரட்சிக் கவியின் உண்மை உருவத்தைப் பார்த்துவிட்டால்
அவர்களால் (பிற்போக்குப் பழைமைப் பற்றாளர்களால்) தூக்கிவைக்கப்பட்ட
கவிகள் தொப்பென்று கீழே விழுந்துவிடுவார்கள்! போலிக் கவிகளுக்கு
மதிப்புக் குறையும்; போற்றினவர்கள் பிழைப்புக் கெடும்.
இளங்கோவைப் பற்றி மக்கள் அறிய ஆரம்பித்துவிட்டால்,
சிலம்பு நாட்டிலே ஒலிக்க ஆரம்பித்து விட்டால் - கம்பனுக்கும் கம்பராமாயணத்துக்கும்
அவ்வளவு மதிப்பு இராது.
மேன்செஸ்டர், கிளாஸ்கோ(இங்கிலாந்து நாட்டு நகரங்கள்)
முதலிய இடங்களிலிருந்து மெல்லிய துணிகள் வருகின்றன என்றால் - தடிப்பான
லாங் கிளாத் துணிக்கு அவ்வளவு கிராக்கி இராது.
ஆமதாபாத் புடவைகள் அமோகமாகக் கிடைக்கின்றன என்றால்
- ஆரணங்குகள் கவர்ச்சி குறைந்த பெங்களூர்ப் புடவையை எப்படி விரும்புவர்?
கம்பனைப் பற்றி வேண்டும் என்றே நான் குறை கூறுவதாக
நினைக்கக் கூடாது. அவரைப் போற்றுகின்ற உங்களிடமுள்ள குறைகளை (நீங்கள்)
நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
ஒரு சிலரைப் போற்றுவதன் மூலம்தான் நாம் புகழடைய முடியும்; நமது
புலமை மிளிரும் என்கிற நினைப்பு ஒழிய வேண்டும்.
தூற்றிப் பிழைக்கும் பிற்போக்குப் புலவர்கள்
பாரதிதாசனின் பாண்டியன் பரிசு சங்க கால இலக்கியங்களில் உள்ள உவமைகளையும்
அணிகளையும் எளிய நடையில் எல்லாரும் புரிந்து கொள்ளுமாறு இயற்றப்பட்டிருப்பதைக்
காணலாம். பாடலுக்கு இலட்சணம் படித்தவுடன் இலேசில் புரிந்து கொள்ளக்
கூடாது என்றும் - புலமைக்கு இலட்சணம் பிறர் கண்டு பயப்படவேண்டும்
என்றும் - சிலர் கருதுகிறார்கள்.
பாரதிதாசனின் இந்தக் காவியத்தைப் பார்க்க - படித்து
உணர இலக்கணம் தேவை இல்லை; இலக்கியங்களைப் படித்திருக்கவேண்டுவது
இல்லை; நிகண்டு தேவையில்லை; பேராசிரியர்கள் உதவி தேவை இல்லை.
ஆனால், இதைப் புலவர்கள் சிலர் வெறுக்கின்றனர்;
மறுக்கின்றனர். எளிய நடையில் எழுதுவது ஓர் ஆற்றலா? என்று தம்மால்
எழுத முடியாவிட்டாலும் ஏளனம் பண்ணுகின்றனர்.
ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ - அதில்
ஏதாவது குறையோ - காணாவிட்டால் சில புலவர்களுக்குத் தூக்கமே வராது.
திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவிரை என்ற
திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களால் ஒரு புத்தகம் வெளியிடப்படும்.
அதே நேரத்தில் அதே அச்சுக் கூடத்திலேயே திரு.வி.க.வுக்குச் சில
கேள்விகள் என்று ஒருத் துண்டு வெளியீடு வெளியாகும்.
இப்படி ஒருவர் வெளியிட்ட புத்தகத்திற்கு இன்னொருவர்
மறுப்பு எழுதாவிட்டால் அவருக்கு நிம்மதி ஏற்படாது. காரணம், அவர்களிடம்
மூலதனம் குறைவு! ஒருவர் எடுத்து ஆளவேண்டும் என்றிருந்த அணியை இன்னொருவர்
கையாண்டிருப்பார். ஆகவே எழுதியதில் குற்றம் கண்டு பிடித்து அவரது
பிழைப்பையும் கெடுத்துவிட வேண்டும் என்ற நினைக்கிறார்கள். அவர்கள்
மீதும் குற்றம் இல்லை; அவர்களிடம் எண்ணற்ற புதிய கருத்துகள் ஊறுவது
இல்லை!
கடந்த ஐந்து - ஆறு ஆண்டுகளாக நானும் பார்க்கிறேன்;
சுப்ரமணிய பாரதியார், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
(மனோன்மணீயம் என்னும் தமிழ் நாடகக் காப்பியம் தீட்டியவர்) இவர்களைத்
தவிர, மேல் நாடுகளில் உள்ளதுபோல் (வேறு யாராவது) கலையைக் காலத்தின்
கண்ணாடி ஆக்குகிறார்களா? அல்லது கலையைக் கடை வீதியில் கொண்டு வந்து
நிறுத்துகிறார்களா? அவர்களுடைய பாக்களிலே உயர்ச்சியடைய ஏதாவது
மார்க்கம் உண்டா? என்றால் இல்லை. காரணம், புலவர்களின் பிற்போக்கான
நோக்கமே.
அது இருக்க, இது ஏன்?
நான் ஒரு புலவரைப் பார்த்து
தோழரே! அணுக்குண்டு கண்டு பிடித்தது எவ்வளவு ஆச்சரியம்! அதன் அழிவு
சக்தியைக் கேட்டீரா? என்றால் அது என்னப்பா பெரிது? ஆங்கிலேயனோ,
அமெரிக்கனோ தான் அழிவு சக்தியை ஏற்படுத்த அந்த (அணு) ஆயுதத்தைக்
கையில் ஏந்த வேண்டும். நம் பரமசிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால்
போதும்; நெருப்பு ஜுவாலைகள் பறக்கும்! எதிரே உள்ள அத்தனை பொருள்களும்
சாம்பலாகி விடும்! என்று பதில் சொல்வார். அது இருக்க இது ஏன்?
என்னும் பிற்போக்குத்தனமும் சோம்பேறித்தனமும்தான் இதற்குக் காரணம்.
அது இருக்க இது ஏன்? என்று மேல் நாடுகளிலே கருதி
இருப்பார்களானால் - ஆளில்லா விமானத்திற்குப் பிறகு அணுக்குண்டு
கண்டுபிடித்திருக்க முடியுமா?
தொல்காப்பியம் நமக்கு இருககும்போது, நமக்கு வேறு
என்ன வேண்டும்? என்றிருந்தால் அகநானூறும் சிலப்பதிகாரமும் கிடைத்திருக்க
வழி உண்டா?
சிலப்பதிகாரமே போதும் என்றிருந்தால் - கலிங்கத்துப்பரணி
கிடைத்திருக்குமா?
கலிங்கத்துப் பரணியே போதும் என்றிருந்தால் - மனோன்மணீயம்
தோன்றியிருக்க முடியுமா? மனோன்மணீயம் போதும் என்றிருந்தால் - பாரதியாரின்
தேசிய கீதங்களைக் கேட்டிருக்க முடியுமா?
பாரதியாரின் தேசிய கீதங்களே போதும் என்றிருந்தால்
தேசிகவிநாயகம் பிள்ளையின் தாயினும் இனிய அன்பு குழைந்தூட்டும்
பாக்களைப் பார்த்திருக்க முடியாது.
தேசிகவிநாகம் பிள்ளை போதும் என்றிருந்தால் - நாமக்கல்லாரின்
(கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை) கத்தியின்றி இரத்தமின்றி . . .
என்னும் புது மாதிரியான சண்டைத் தத்துவப் பாடலைக் கண்டிருக்க முடியுமா?
அது போலத்தான் நாமக்கல்லாரே போதும் என்றிருந்தால்
- கொலை வாளினை எட்டா - மிகு கொடியோர் செயல் அறவே!
என்னும் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க புரட்சிகரமான பாடலைக் கேட்டிருக்க
முடியாது!
இரத்தத்தில் கலக்கும் பாரதிதாசன் பாடல்கள்
சங்க இலக்கியங்களின் இன்பங்களைச் சொல்வது என்றால் இன்று முழுவதும்
சொல்லிக்கொண்டு இருக்கலாம்.
சங்க இலக்கிய நுட்பத்தை அனுபவிக்க வேண்டிய இடங்களை,
நமக்கு ஏற்ற எளிய முறையில் அளிப்பது என்றால் அந்தத் துறையில் வல்லவர்
பாரதிதாசன். அவர் நாட்டுக்கும் நமக்கும் செய்துள்ள தொண்டினை மறந்தாலும்
மறக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது.
பாரதிதாசன் இலக்கியச் சுவையை அனுபவிக்க இலக்கணம்
கற்றிருக்க வேண்டியது இல்லை.
பாரதிதாசன் பாக்களைப் படித்தவுடன் அவை நம் இரத்தத்தோடு
இரத்தமாகக் கலக்கின்றன. உணர்ச்சி நம் நரம்புகளிலே ஊறுகிறது; சுவைத்தால்
ருசிக்கிறது.