அறிஞர் அண்ணாவும் நானும்
(முன்னால் முதல்வர் திரு.எம்.பக்தவத்சலம்
(16.09.1984)

அறிஞர் அண்ணா அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தது ஒரு பொதுக்கூட்டத்தில். அது சென்னை, எஸ்பிளனேட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கட்டடத்தில் நடந்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் சட்டசபைக்குப் போவதாகக்கூட முடிவு செய்யவில்லை. அந்தக் கூட்டத்துக்கு நான் தலைமை வகிக்கவும், அவர் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் அநேகமாக மாணவர்கள் ஏராளமாகக் கூடியிருந்தார்கள்.

அவர் பேசுவதைப் பற்றி நான் விமர்சனம் செய்ய வேண்டுமா என்ற கவலை எனக்கு இருந்தது. சாதாரணமாக நான் ஒரே கூட்டத்தில் சர்ச்சைகளை விரும்புவதில்லை. இதுவரையில் நான் பேசுகின்ற எந்த கூட்டத்திலும் அத்தகைய சங்கடம் ஏற்பட்டதில்லை என்பது என்னுடைய பேரதிர்ஷ்டமாகும். ஆனால் அண்ணா அவர்கள் நான் ஒப்புக்கொள்ளாத சில விஷயங்களைப் பற்றிப் பேசினால் நான் அதற்கு விடையளித்துத்தான் ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. நான் அதற்கு விடையளிக்க அவசியம் இருக்குமா என்றுகூட நினைத்தேன். ஆனால், அந்தக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் மாறுபட்ட கருத்து ஒன்றும் தெரிவிக்கவில்லை. நான் அவர் பேச்சைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலும் போய்விடடது.

பின்னால் காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரி அபிவிருத்தி விஷயமாகவும் நானும் அவரும் சேர்ந்து ஒரே மேடையில் பேசியிருக்கிறோம். அப்போதும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதில்லை.
அவர் சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவர் எதிர்கட்சியில் இருந்தபோதும் எனக்கும் அவருக்கும் எப்பொழுதும் சுமுகமான உறவு, தொடர்ந்து இருந்து வந்தது.

நாங்கள் மதுவிலக்குத் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தோம். அது வெற்றிகரமாக நடைபெறுவதிலே அண்ணா அவர்களுக்கும் அக்கறை உண்டு.

அதுபற்றிக் கிராமங்களில் நான் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்போதெல்லாம் தனக்கும் அழைப்பு அனுப்பினால் வந்து கலந்து கொள்வதாகச் சொல்லி அவரும் கலந்து கொண்டார்.

அவர் முதல்வரான பிறகும் கூட ஒருமுறை திட்டவட்டமாக அறிவித்தார் -
மதுவிலக்குத் திட்டம் சிரிவர நடைபெறவில்லை என்றாலும் அதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு மத்திய அரசு உதவி செய்யவில்லை என்றாலும், மதுவிலக்குத் திட்டத்தினால் அரசு வருமானம் குறையும் என்றாலும் அந்த நிலையிலும் நான் மதுவிலக்குத் திட்டத்தைக் கைவிடமாட்டேன் என்று உறுதியாகக் கூறினார்.

முதுகுளத்தூர் கலவரம் நடந்தபோது அதை நான் சமாளிக்க வேண்டியிருந்தது. அதுபற்றி சட்டசபையில் எதிர்க்கட்சி விவாதம் நடத்தியது. ஆதி திராவிடர்களுக்கு எதிராக நடைபெற்ற அந்தக் கலகத்தை வன்முறைச் செயலை நான் எடுத்துக் கூறி விலக்கினேன். ஆனால் எதிர்கட்சி என்கிற முறையில் அவர்கள் அதைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தார்கள். அண்ணா அவர்கள் அதுபற்றி உருக்கமாகப் பேசி நான் அவருடைய ஒரு பிள்ளைப் போல் பாவித்து, அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் அதை ஏற்று அவர் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்ற ஆசை ஒருபக்கம் எனக்கு உண்டு என்றாலும் மற்றொரு பக்கத்தில் கடமை உணர்ச்சி ஏற்பட்டு ஒத்துக்கொள்ள முடியவில்லையே என்று கூறினேன்.

அதேமாதிரி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் மாணவர்கள் அதில் கலந்து கொண்டார்கள். சமூக விரோதச் சக்திகளுக்குத் தங்கள் கட்சி பொறுப்பு இல்லை என்று அண்ணா தெரிவித்தார். அண்ணா அவர்களின் ஆதரவு வன்முறைச் செயல்களுக்கு இல்லை.

அரசியலைப் பொறுத்தமட்டில் தேர்தலில் அண்ணா அவர்கள் காஞ்சியில் நின்றபோது நான் எதிர்த்துப பேச வேண்டியிருந்தது. ஆனால் எப்போதும் அவர் என்னிடத்தில் சகஜமாகவே பழகி வந்தார்.

அண்ணா அவர்கள் ஆட்சி செய்தபோது, அவர்க்கிருந்த முக்கியமான கவலை, தவறு ஒன்றம் நேரக்கூடாது என்பது.

சட்டமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்பு, அவர்க நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிர்ப்பாக இருந்தபோதிலும், சட்டமன்றத்தில் கலந்துகொள்ள முடிவு செய்த பிறகு அந்தப் போக்கை அடியோடு கைவிட்டுவிட்டார்கள்.

ராஜ்யசபையில் உறுப்பினராக இருந்தபோது அமைச்ச்ர்களிடத்திலும், உறுப்பினர்களிடத்திலும் அறிஞர் அண்ணா அவர்கள் நல்ல முறையில் பழகிப் பெயர்பெற்று வந்தார்.

அறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப்படாமல் இன்னும் கொஞ்சகாலம் பதவியில் நீடித்திருந்தால், அது நாட்டிற்கு நலனை விளைவிப்பதாக இருந்திருக்கும்.

'அறிஞர் அண்ணா பிறந்தநாள்' விழா மலராக 'தமிழரசு' இதழ் வெளிவருவதறிந்து மிக்க மகிழ்ச்சி. 'தமிழரசு' வாசகர்களுக்க என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai