சிறப்புக் கட்டுரை


அவசரமாகத் தேவை!

அறிஞர் அண்ணா

வீரமறவர்களே! ராஜாக்களே! நாயக்கர்களே! படையாட்சிகளே! நீங்கள் யாவரும் பண்டைய நாள்களில் போர் வீரர்களாக இருந்தவர்கள் என்று அக்குலமக்கள் பெருவாரியாகக் கூடியிருந்த கூட்டத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் கூறினாராம். போர் வீரர்களாக முன்பு இருந்தவர்களை, மீண்டும், போர்ல் ஈடுபட்டு, புகழ்தேடுவதுடன், எதிரியை விரட்டியடிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். எப்போது கிளம்பவேண்டும் அந்தமக்கள்? உடனே கிளம்பவேண்டுமா? இல்லை! ஆச்சாரியார் சுயராச்யம் பெற்றதும் செய்தி விடுப்பார், அப்போது புரப்படவேண்டுமாம். அதுவரையில் அவரது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கலாம் போலும்! கிடக்கிறது ஆச்சாரியார் ஆசையும் ஈடேறட்டும், அடுத்த மாதத்துக்குள் வைஸ்ராய் நிரிவாக சபையிலே வேலை கிடைக்கும் என்று ஆரூடம் கூறியிருப்பார்கள். கிடைக்கட்டும. அனுபவிக்கட்டும்! அந்த வேலை கிடைத்ததும, நாட்டுக்கே சுயராச்யம் வந்துவிட்டதாகக் கூறட்டும, அதை நம்பும் ஏமாளிகள் நம்பட்டும. அப்போது, மறவரும் நாயக்கமாரும், படையாட்சிகளும், ராஜாக்களம், படையில் சேரட்டும, எனக்கு சம்மதமே, ஆனால், இராமநாதபுரத்திலே ராஜகோபாலாச்சாரியார், ஞாபக மூட்டினாரே, ஒரு காலத்தில் நீங்கள் போர் வீரர்களாக இருந்தீர்கள் என்ற அதை மறக்கவேண்டாம் என்று வீரத்தமிழருக்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

ஆச்சாரியார் பேச்சு முகஸ்துதிக்காக இருக்கக்கூடு, இத்தகைய போர்ப்பழக்கமுள்ள மக்கள் என்னிடம் இருக்கிறார்கள் என்று சர்க்காருக்கு ஜாடையாக எடுத்துக்காட்டுவதாக இருக்கக்கூடும. அவரது அந்தரங்க நோக்கம் எதுவாயிருப்பினம் அநத் உண்மை அவரிடமிருந்து அன்ற வெளிவந்ததே அது எனக்குப் பரமதிருப்தி. ஏன் தெரியுமோ! அந்த வீரமக்கள், தமது பண்டை நாட் பண்ணை மறந்தததால், மனம் சுரங்கிப் போயிருக்கிறார்கள். வீரஞ்செறிந்த அந்த மக்கள், துருப்பிடித்த சக்திபோல் உள்ளனர்.

முக்குலத்தாரின் கோரிக்கைகளை ஆச்சாரியார், முதலமைச்சராக இருந்தபோது ஏற்றுக்கொள்ளவில்லை.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை சத்துசெய்ய வேண்டுமென்று சிளர்ச்சி நடந்தபோது, அவர் கேளாக்காதராகவே இருந்துவிட்டார். வீரமிக்க மக்கள் வெம்பி இருப்பதைக் கண்டும, பச்சாதாபபப்படாத அவர், இராமநாதபுரம் கூட்டத்தில், அன்றொரு நாள் நீங்கள் போர்வீரர்களாக இருந்தீர்கள் என்று கூறினார்! வாயாரக் கூறினார்! மனமாரக் கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனைக் காதாரக் கேட்ட மக்கள், தீரயோசிக்கவேண்டும்.

வலிவும் வசீகரமும் வயோதிகத்தால் வதங்கி விடுவதுண்டு. மழையில்லாக் குறையால் நஞ்சையும் புஞ்சையும் காடுமேடாகி விடுவதுண்டு. உயிரில்லையேல் பிணம், உணவில்லையேல் நடைப்பிணம் ஆகிவிடுவர் மாந்தர், ஜீவசக்தி குறையக்குறைய, எந்தப்பிராணியும், பழையபண்பை இழந்துவிடுகிறது. இயற்கையாக இங்ஙனம் கேடு நேரிடுவதால் கதி கெட்டுவிடுவது மட்டுமல்ல, செயற்கையால் பிறரின் சேட்டையால், வளங்கெள்டடு, வாட்டம் பெற்ற வகையறாக்களும் உண்டு. பெய்கிற மழையை யாரும் தடுத்துவிடவில்லை. ஆகவே நெற்கதிர் சாய்ந்துகிடக்கவேண்டிய நிலங்களில் முட்கதிர் கிடப்பதற்கு, யாருடைய சேட்டையும் காரணமல்ல. ஆனால் மழையும் பெய்து, உழவனும் உழைத்து, கதிரும் முற்றி அறுவடைக்கு ஏற்ற பக்குவம் வருஞ்சமயத்தில், இருண்ட மனமுடைய குறும்புக்காரன் எருமை மந்தையைக் கழனியில் மேயவிட்டுப் பயிரை அழித்தால், அந்த அக்ரமத்தால் அழிந்த நிலத்தைக் காணுவோருக்கு நெஞ்சு பதறும், கோபம் பொங்குமன்றோ? மழையில்லாக் குறையால் கரம்பான, நிலத்தைக் காறம்போது துக்கம் மட்டுமே ஏற்படும. ஆனால் செழித்து வளர்ந்த பயிரைச் சேட்டைக்காரன் அழித்தது கண்டால் துக்கமல்ல, ஆத்திரமே முதலில் வரும். அதுமிகப் பொல்லாத விளைவுகளுக்கும் பிறப்பிடமாகலாம்!

மறவர், படையாட்சிகள் விஷயத்திலிருந்து பயிர் பச்சை விஷயத்துக்குப்பாய்ந்தது ஏன்? என்பீர். முன்னாளில் போர்வீரர்களாக இருந்த அந்தமக்கள், இந்நாளில் இருக்கும் நிலைமை என்ன? அந்த நிலைமை. இயற்கை வளங்கெட்டதால் வந்த விளையா? அன்றி சேட்டைக்காரர் செய்த தீவினை மூண்டதால் வந்ததா என்பதை, அவர்களும், பொதுவாகத் தமிழரும் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கூறவே நஞ்சை புஞ்சையை நடுவே இழுத்துப்பேசினேன்.

சிங்கப்பூர், ஷோனான் என்ற புதுப்பெயர் பெற்றுவிட்டது. காரணம் எதிரிகள் பிடித்துக்கொண்டனர். சயாம், தாய்லாந்து என்ற புதப்பெயரைச் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றது. காரணம் எதிரியின் படை எடுப்பல்ல. சயாமியர்களின் எண்ணம், புதுப்பெயரைத் தமது நாட்டுக்குத் தந்தது. நாட்டுநிலை, மக்கள்நிலை, மக்களிடமுள்ள பண்டங்களின் நிலை முதலியன, இயற்கைக் கேடுகளால் கெடுவதுண்டு, செயற்கையால் கெடுவதுமுண்டு. இந்த இரண்டிய்ல, முன்னதாயின், யார் மீதும் நொந்துகொள்வதற்கில்லை, பிந்தியதாயின் சிந்தனைக்கு வேலை கொடுக்கத்தான் வேண்டும்.

என் எதிரிலே, தோழர் ஆச்சாரியார் எதிலே இருந்த மறவர், ராஜா, நாயக்கர், படையாட்சி முதலிய குலத்தவர் இதுபோது இல்லை. ஆனால் திராவிடநாடு அவர்களைத் தேடிப்போகிறது. ஆகவே அதன் வாயிலாக அவர்களிடம் பேசுகிறேன்.

மறவர்களே! ராஜாக்களே! நாயக்கர்களே! படையாட்சிகளே! தேயார் ஆச்சாரியார் கூறினது உண்டை. நீங்கள் அக்காலத்தில் போர்வீரர்களாக இருந்தீர்கள். கோட்டைகளைக் காவல் பிரிந்துர்கள். கொத்ளங்கள் கட்டினீர்கள். அகழ் வெட்டியும் அரண் அமைத்தும் எதிரியைத் தடுத்தீர்கள். வாளேந்தினீர், வாகை சூடினீர், வல்லமையுடையவராக விளங்கனீர், வாழந்தீர், ஆம்! அது உண்மை. ஆனால் இன்ற உமது நிலைமை என்ன? வாலிபத்தை இழந்தீர், வளமிழந்தீர், வலிமையிழந்தீர், உண்ணும் உணவுக்குப் போரிடுகிறீர், உழைக்கிறீர் அலுக்கிறீர் படுக்கிறீர் புரள்கிறீர் உறக்கமின்றி! வெற்றிக்கொடியெந்திய கரங்கள் இன்ற கட்டை வெட்டுகின்றன! கற்களைப் பிளக்கின்றன! ஏன்? இந்த மாறுதல் வரக்காரணம் என்ன? வீரர்கள் வீழ்ச்சிக்குக் காரணம் யாது? அன்னிய ஆட்சியா காரணம்? அன்னிய ஆட்சியின் பயனாக, நீங்கள் வீழ்ந்தீர் என்றால், அந்தணர் மட்டும, அந்த ஆட்சியிலும், முன்னாளில் இருந்தது போல் இருக்கக் காரணம் என்ன? கோட்டை கொத்தளங்கள் இடிந்தனவே, அக்கிரகாரம், அன்றும் இன்றும் இருந்த நிலை கெடாது இருக்கக் காரணமென்ன? போர் வீரர்களாக இருந்தவர்களே, இமது புகழ் போய்விட்டதே, புரோகிதக் கூட்டத்தின் செல்வாக்கு அலெக்சாண்டர் படை எடுத்த காலந்தொட்டு ஆங்கிலேயன் அல்லற்படும இக்காலம் வரை சிந்தாது சிதையாது இருக்கக் காரணம் என்ன? அன்று நீங்கள் கரும்பருகே கருங்குவளை பூத்த கழனிகளைக் கண்டீர். இன்று கவலை பூத்த குடும்பக் காடுகளில் உலவுகிறீர். உழவர் பலாக் கனியைப் பறித்து மந்தியை விரட்ட வீசுவராம், அவை, தென்னை மரத்து இளங்காயைப் பறித்துப் பதிலுக்க் வீசுமாம், நீங்கள் வாழ்ந்த காலத்தில்! இன்று? வீரமிக்கவரே தோள்வலிமை போச்சே, துரைமார் அதிகாரமாச்சே, என்.று பாடுகிறோம். சூனால், அந்தத் தர்ப்பையின் வலிமை மட்டுமூ போகவில்லையே அதனைக் கண்டீரோ. காரணங்கூற வல்லீரோ! அன்னிய ஆட்சிக்கு முன்பு, அரசு உம்முடையது, இன்ற இல்லை. ஆனால் அன்னிய ஆட்சிக்கு மன்பும் ஆரியருக்கு அதிகாரம் இருந்தது, இன்றம் இருக்கிறது. இந்த செப்படி வித்தையை நோக்குங்கள்! மழையில்லாத குறையால் கழனிகள் காய்ந்து போகுமானால் ஒரு கழனிமட்டும் எப்போதும்போல் இருக்கமுடியாதல்லவா? வருகிற வாய்ககாலை, ஒரே ஒரு கழனிக்குமட்டும் திருப்பிவிட்டு, மற்றைக் கழனிகளுக்கு நீர்பாய்ச்ச மறுத்தால், மறற்வை காய ஒன்று மட்டுமூ ஒய்யாரமாக இருக்கும். அது போலாயிற்று இங்கும். ஒருகுலம் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெறும் வாய்ககாலைப் பிடித்துக்கொண்டது. குன்றாமல் வாழ்கிறது. மறறகுலங்கள் புறம்போக்கு நிலங்கள் போலாயின. மண்வெட்டிக்கூலி தின்னலாச்சே, எங்கள் மனவலிமை தோள்வலிமை போச்சே, என்று கூவிப்பயன் என்ன? கெட்டது, இயற்கை காரணங்களால் அல்ல, விஷமிகளின் சேட்டையே கெடுதியை விளைவித்தது.

ஆச்சாரியாரே, அந்த வாழ்ந்து வீழ்ந்த குலத்தவரிடம் பேசினதுபோல், உமது இனத்தவரிடம் நீர் பேசுவதானால், ஆச்சாரியார்களே! அய்யங்கார்களே! சர்மாக்களே! சாஸ்திரிகளே! கனபாடிகளே, குருக்கள்மார்களே! ஆரியரே! நாம் அந்தக்காலந்தொட்டு இனறுவரை, மேல் ஜாதி மக்களாய், பகவத் பிதிபிம்பங்களாய், குருமாராய், சாணக்கியர்களாய், குல்லூகபட்டர்களாய், ரிஷிகளாய், அர்ச்சகர்களாய், புரோகிதராய் பூதிகளின் தயவைப் பெற்றவராய் வாழ்ந்துகொண்டு வருகிறோம். எந்த அரசு போனாலும் எவ்வித மாறுதல் வந்தாலும், நமது செல்வாக்கு மங்கினதில்லை. கோயிலும், குளமும், சத்திரமும் சாவடியும், அரண்மனையும் வீடுகளம், நமது விஜயத்துக்காவே உள்ளன. ஷத்திரியன் பலம் நமக்கப் பாதுகாப்பைத் தந்தது, வைசியரின் செல்வம் நமக்கு வாழவழி தந்தது, சூத்திரனின் பணிவிடை நமக்கு சுகமளித்தது. இன்றும் நிலைமை அதுவே. இப்போதும், நானே மாகாண சுயாட்சியில் முதல் மந்திரி, மகாத்மா தோன்னிறார் அவரின் சம்பந்தி! திருவாங்கூரிலே நம்மவரே திவான், பரோடாவில் நம்மவர், காஷ்மீரில் நம்மவர். பீகாரில் நமது விஜயராகவாச்சாரியாரே திவான்! வேதாந்த உலகில் நமது ராதாகிருஷ்ண பந்தலு இருக்கிறார், சங்கீதத்தில் நமது அரியக்குடியார்! நாட்டியத்தில் நமது ருக்மணிதேவியார், எங்கும் நமக்குக் குறைவில்லை. எப்போதும் இருந்ததில்லை, ஆங்கில அரசும் நமக்குப் பரிசுகள் தராமற்போகவில்லை, அரபு அரசும் நம்மை ஆகாதவர் என்று ஒதுக்கவில்லை, அடால்ப் ஹிட்லர்கூட நமது ஆரியப் பரம்பரை! யார் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும், அரசுகளில் மாறுதல் ஏற்பட்டாலும் இல்லையானாலும்ம, ஆரியரின் ஆதிகக்கம் கெடாதவரை நமக்குக் கவலை என்ன? ஆகவே ன்றும் இன்றம் நமக்கு அதிகாரத்தைத் தந்த, அந்த பஞ்சாங்கம், தர்ப்பை, ஆகியவைகளை சர்வஜாக்ரதையாக வைத்துக்கொள்ளுங்கள். ருக், யஜூல், சாமம் அதர்வணம் ஆகியவைகளை மனனம் செய்யுங்கள். என்றுதானே கூறவேண்டிவரும், உண்மையை உரைக்கும் விரதம் பூண்டால்!

ஆச்சாரியாரைக் கேட்க நான்மட்டும் ஆசைப்பட்டு என்ன பலன்? வீரமிக்க தமிழர் வீறகொண்டெ-ழுந்து கேட்கவேண்டும். அப்போதுதானே தெரியும், தமிழர் தவிக்கும் உண்மைக் காரணம்!

இவ்விதமாகவெல்லாம் அங்கு எண்ணிப்பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் ஆச்சாரியாருக்கு ஏன் ஏற்பட்டதோ நானறியேன். யார் என்ன வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளட்டும். நாம் போடுகிற போடு போட்டு வைப்போம் என்ற முறையிலே ஆச்சாரியார் பேசுகிறார். இவ்வளவு அதிகமாக இவர் பேசுவதிலிருந்தே, வெகுவிரைவில் சர்க்கார் உத்யோகம் பெறபோகிறார் என்று தெரிகிறது. வைசிராய் நிர்வாக சபையிலே அமர்ந்துவிட்டால் இவ்விதம் பேச இடமேது?

உள்நாட்டு பாதுகாப்பு மெம்பர், ஊர்காப்புக்காக என்னென்ன செய்திருக்கிறார் என்பதைக் கூறமுடியுமா? என்று ஆசச்ரியார் வைசிராய் நிர்வாக சபையிலே பதவி பெற்றபிறகு, தோழர் சிவராஜ் கேட்கிறார் என்ற வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, வீரமரபினர்களைக் கொண்ட விறுவிறுப்பான படைகள் நிறுவியுள்ளேன் என்றா ஆச்சாரியார் பதில் கூறுவார்?

உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முறைகளைச் சர்க்கார் செய்திருக்கின்றனர். விவரம் கூறுவது, எதிரிக்குத் தகவல் கோடுப்பதாக முடியும் என்று மணிபோல் மலர்வார்.

மறவர் முதலிய வீரமரபினரைப் படையில் சேர்க்க, கனம் உள்நாட்டு மெம்பர் ஏற்பாடுகள் செய்தாரா? என்று தோழர சிரவாஜ் மேலும் கேட்டால், ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் முறைபற்றி எனக்கு முன்பிருந்த உள்நாட்டு மெம்பர் கூறினதைவிட நான் வேறொன்றும் கூறுவதற்கில்லை என்று ஆசசாரியார் கூறுவர். சென்னை சட்டசபைப் பழக்கத்தை வைத்துக்கொண்டால், தொழர சிவராஜின் கேள்விகளுக்குக் கேளாக் காதைத் திருப்பி விடக்கூடும்!

ஆகவே ஆச்சாரியார் அதிகாரரூப மெடுக்குமுன்னம், ஓர மூச்சு, பேசித் தீர்த்து விடுவோம் என்ற துணிந்து விட்டார் போலும்! அதனாலேயே அவர் அத்தனை அபத்தங்களைப் பேச முடிகிறது. கேளுங்கள் அவரது கித்தாப்புப் பேச்சுகளை!

வேப்பிலை வீசிப் பிசாசை ஓட்டிவிடுவதைப்போல, எளிதில் இந்து முஸ்லீம் பிணக்கை ஓட்டிவிட முடியுமாம்! ஏனெனில், இந்து முஸ்லீம் பிணக்கு என்பதை ஒரு கட்டுக்கதையாம்!

ஜனாப் ஜின்னாவும் இவரும் ஒருமுறை சந்தித்துப் பேசினால் சகலமும் சரியாகிப் போகுமாம்!

மகாத்மா திறமைசாலியா, இந்த ஆத்மா திறமைசாலியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஆசசாரியாரின் இந்தப் பேச்சைக் கேட்பர். ஆச்சாரியார் மகாத்மாவைவிட மகா சூரர் என்று எண்ண இடமிருக்கிறது. ஏனெனில் வேப்பிலை வீசி விரட்டி விடக்கூடிய இந்து முஸ்லீம் பிணக்கு என்னும் பிசாசை ஓட்ட மகாத்மா பலப்பல முறை முயன்று 21 நாள் பட்டினி முதற்கொண்டு, இருதயத்தைத் திறந்து பேசுவது, காலிசெக்கில் கையொப்பமிட்டுக் கடுப்பது முதலிய எத்தனையோ, வேப்பிலைகள் அடித்தும் விரட்ட முடியவில்லை என்று கூறுகிறாரே, இது திமிர்வாதம் என்று நான் கூறினால், திட்டுகிறான் பரதன் என்று தேசியத் தோழரகள் கூறுவார்கள். கயிறு திரிக்கிறார் கருப்புக்கண்ணாடியார் என்று சொன்னால், கண்ணண் காட்டிய வழியைக் கண்டவரைக் கண்டிக்காலே என்று காங்கிரசார் காய்வர், நான் , என்ன கூறுவது ஆச்சாரியாரின் போக்கை விளக்க நீங்களே கொஞ்சம் சொல்லுங்கள். அலட்சியமாகப் பேசுவது எளிது. அபத்தம் பேசுவதும் எளிது. ஆனால் அந்த அபத்தத்தை உண்மைபோல் தெரியும்படி சித்தரிப்பது சற்றுக் கஷ்டம் ஆச்சாரியார் இந்த வித்தையை மிகச்சமர்த்தாகச் செய்து காட்டியிருக்கிறார்.

ஜப்பானியர் பெற்றிகள் பெற்று வருவதன் காரணம் என்ன சொல்லுகிறார் அவர், மக்கள் வேறு அரசாங்கத்தை நடத்துபவர்கள் வேறு என்ற நிலைமை இருந்ததால் ஜப்பான் வெற்றிகள் அடைந்ததாம். அதற்கு உதாரணம் தருகிறார். பிலிப்பைன் தீவிலே இருக்கும் மக்கள் பிலிப்பைன் இனத்தவர், ஆனால் ஆட்சி அமெரிக்கருடையது. ஆகவே ஜப்பான் ஜெயித்தது! மலாயாவில் மலாய் மக்கள், சீனர், இந்திர் உள்ளனர். ஆட்சி பிரிட்டிஷாருடையது. எனவே ஜப்பான் ஜெயிக்கிறது. ஆகவே மக்கள்வேறு, ஆட்சி வேறு மக்களுடையது என்று நிலைமை இருந்ததால், எதிரி ஜெயிக்க முடிகிறது. அந்தந்த நாட்டுமக்களே அந்தந்த நாட்டு ஆட்சியில் இருந்தால் எதிரிக்கு ஜெயம் கிடைக்காது. இது ஆசசாரியாரின் வாதம். இது உண்மைதானா? என்று பார்ப்போம்.

மலாயா வீழ்ந்ததற்குக் காரணம், அங்கு ஆட்சி மலாய் மக்களிடமின்றி வெள்ளையரிடம் இருந்ததால்தான் என்று ஆச்சாரியார் கூறுவது உண்மையானால், பிரான்சை பிரஞ்சுக்காரர்களே ஆண்டு கொண்டிருந்தும், பெல்ஜியத்தில் பெல்ஜிய மன்னன், நார்வேயில் நார்வே இனமன்னன். ஹாலந்தில் அந்த இன ராணி, கிரீசில் கிரேக்கராட்சி, போலந்தில் போலந்து மக்கள் ஆடசி, என்று சுயராச்சியம் இருந்தும், ஏன் ஹிட்லரிடம் அவைகள் தோற்றுவிட்டன?

இந்தக் கேள்விக்கு ஆசசாரியார் என்ன பதில் கூற முடியும்? ஆனால் இந்தக் கேள்வியை அவரை யார் கேட்பது? யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தால் ஆசசாரியார் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். பேதைகள் பலர் நம்பலாம், ஆனால் பகுத்தறிவுக்கு முன்னம் அவரது வாதங்கள் அரை விநாடி கூட நிற்காது.

வேப்பிலை வீசி, அவர், இந்நாட்டிலே உள்ள இந்து முஸ்லீம் பிணக்கைத் துர்ப்பது கூடச்சற்றுத் தாமதித்து நடத்தப்படலாம். ஆனால் அவருக்கு ஒரு அரை டஜன எலுமிச்சம் பழங்கள் வெகு அவசரமாகத் தேவை. அவருக்குப் பித்தம், அதற்காக எலுமிச்சம் பழத்தைத் தேய்த்துத தலை முழுகவேண்டும் என்று நான் கூறுகிறேன் என்று தவறாகக்கருதிக் கொண்டு, கோபிக்க வராதுர்கள். வேலை கிடைக்கும் போலிருக்கிறதே அவருக்கு, டில்லிக்குப்போய் வைஸ்ராய் துரையையும், மற்ற துரைமார்களையும் பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு போகப்படாது, எலுமிச்சம்பழம் எடுத்துச சென்றால், மரியாதை செலுத்தும் வகையில் அவைகளை, துரைமார்களிடம் கொடுக்கலாம் அதற்காகச் சொன்னேன்.

(திராவிட நாடு 15.03.1942)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai