சிறப்புக் கட்டுரைகள்

அண்ணாவும் நடிப்பிகைப்புலவரும்
கே.ஆர்.ஆர்.கல்யாணி ராமசாமி

1944-ல் கலைவாணர் அவர்களின் அன்பு அரவணைப்பில் இருந்த கே.ஆர்.ஆருக்காக என்ற நாடகக் கம்பெனியை வாங்கி என்.எஸ்.கே.நாடகசபா என்ற பெயரில் கே.ஆர்.ஆரின் மேற்பார்வையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் சிறப்பாக நாடகங்கள் நடந்து வந்த நேரம். ஒரு சிலரின் சூழ்ச்சியால் கலைவாணரும் தியாகராஜ பாகவதரும் ஜெயிலுக்குப்போகும் நிலை ஏற்பட்டது.

நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. நானும் இதில் நடித்து வந்தேன். அண்ணா நாடகம் பார்க்க அடிக்கடி வருவார். நாடகம் முடிந்ததும் உள்ளே (ஸ்டேஜ்) வந்து கே.ஆர்.ஆரிடம் பேசிவிட்டுப் போவார். அண்ணாவின் வேலைக்காரி நாடகத்தை என்.எஸ்.கே. நாடக சபாவில் கொடுத்திருந்ததார் அண்ணா. இந்த நிலையில் நாடகக் கம்பெனியின் நிர்வாக முறையில் சில மாற்றங்கள் எற்பட்டதால் எல்லோரும் ஒரு குழப்பமான நிலையில் இருந்தார்கள். இதனால் தான் இந்தக் கம்பெனியிலிருந்து விலகுவதாக கே.ஆர்.ஆர். முடிவு செய்து கையெழுத்திட்டு வெளியேறினார். வரும்போதே அண்ணா எழுதிய வேலைக்கரி நாடகத்தையும் வாங்கி வந்துவிட்டார்.

கே.ஆர்.ஆரைப் பின்பற்றி உடனிருந்த நடிகர்கள் மேனேஜர், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என்ற சுமார் 50 பேர்கள் முக்கியமானவர்கள் எல்லாம் கம்பெனியைவிட்டு வெளியேறினார்கள்.
இதில் எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், பி.வி.எத்திராஜ், பொன்னுசாமிபிள்ளை, கே.டி.சந்தானம். பி.எஸ்.தட்சிணாமூர்த்தி, எஸ்.ஸி.கிருஷ்ணன், எம்.என்.கிருஷ்ணன், சிவாஜிகணேசன், சிவசூரியன், வி.எஸ்.நடேசன் சின்னபொன்னுசாமி முதல் முக்கியமானவர்கள் எல்லாம் வெளியேறினார்கள்.

இதைக் கண்ட கே.ஆர்.ஆர். அவர்கள் எல்லோரையும் அரவணைத்து என்னை நம்பி வெளியேறிய உங்களை எல்லாம் வைத்து கலைவாணர் பெயரிலேயே நாடகக் கம்பெனி துவங்கப் போகிறேன்என்றார். இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

கம்பெனி ஆரம்பிக்க ஒன்றிரண்டு மாதம் ஆகும் அதுவரை ஊருக்குப்போய் வருபவர்கள் எல்லாம் போய் வாருங்கள் என்றார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்க பணப் பற்றாக்குறை இருந்ததால் தனக்கு கலைவாணர் கொடுத்த அன்பளிப்பான வைரக் கம்மலை கொடுத்து விற்றுவரச் சொல்லி செலவுக்குக் கொடுத்தனுப்பினார்.

பிறகு காஞ்சீபுரம் சென்று அண்ணா அவர்களிடம் நடந்த விபரத்தைச் சொல்லி வேலைக்காரி கதையை அங்கிருந்து கொண்டு வந்ததையும் தான் கலைவாணர் பெயரில் நாடகக் கம்பெனி துவங்கப்போவதையும் வேலைக்காரி நாடகத்தை தான் நடத்துவதாகவும் கூறினார். அண்ணா இதில் ஆர்வம் காட்டினார்கள். தஞ்சையிலே நாடகங்கள் நடத்துவதற்குண்டான ஏற்பாடுகள் நடந்து வந்தது. நடிகர்கள் எல்லோரையும் வரவழைத்து காஞ்சியில் திராவிடநாடு அலுவலகத்தில் ஒரு மாதம் இருக்கவைத்து உணவு விடுதியில் எல்லோருக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

1945-ல் கிருஷ்ணன் நாடக சபா என்ற பெயரில் கே.ஆர்.ஆரின் நாடக மன்றம் துவங்கப்பெற்றது. முதலில் மனோகரா, பம்பாய் மெயில் நாடகங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நான்கு ஐந்து படங்களில் படப்பிடிப்பு நடந்து வந்ததால் நேரம் கிடைக்கும்போது ஒன்றிரண்டு நாள் தஞ்சையில் நாடகங்களில் நடிப்பார் கே.ஆர்.ஆர்.

அண்ணாவிடம் கே.ஆர்.ஆர். வேலைக்காரி நாடகம் நடத்த சீன், டிரஸ், செட்டிங்குகள் செய்ய நாளாகும் எனவே வேறு ஒரு சாதாரண கதையாக எழுதித் தாருங்கள் என்று கேட்டார். அண்ணாவும் உடனடியாக ஓர் இரவு கதையை ஒரே நாளில் எழுதித் தந்தார். இந்தக் கதை ஒரே இரவுக்குள் கதையே முடிந்து விடுவதைப் போலவும் அன்றாட வாழ்வில் மனிதன் அவதிப்படும் நிலையும் இரவில் நடக்கும் அவலங்களையும் சம்பவங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

இதைப்படித்த கே.ஆர்.ஆர். இதுவரை எவரும் நடத்தாத நாடகமாக இருப்பதைக்கண்டு உடனே எம்.எஸ்.முத்துகிருஷ்ணனிடம் எல்லோருக்கம் பாடம் எழுதிக்கொடுக்கச் சொல்லி சீன் மற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்யச்சொன்னார். சென்னையில் படப்பிடிப்புகளையெல்லாம் ஒரு மாதம் தள்ளி வைக்கச் சொல்லிவிட்டு, அண்ணாவோடு தஞ்சைக்குச் சென்று கம்பெனியிலேயே தங்கி ஒத்திகையும் பார்த்து நாடகத்தை அரங்கேற்றிவிட்டு சென்னை வந்தார்கள். இந்த நாடகம் மக்களின் ஆதரவைப் பெரும் அளவில் பெற்று வருவதைக் கண்டு இதை அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் காணவேண்டும் என்று நாடகத்திற்குத் தலைமை ஏற்க பல பெரியோர்களையும் அறிஞர்களையும் அழைத்தார் கே.ஆர்.ஆர்.

கல்கி, மு.வரதராசனார், நாமக்கல் கவிஞர். வே.ராமலிங்கம், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம். எஸ்.சொளந்தரபாண்டியன், கலைவாணர், தந்தை பெரியார், பாரத தேவி ஆசிரியர் சாமரத்தினம், வ.ரா.மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், சோமசுந்தர பாரதியார், ஜெயப்பிரகாஷ் நாராயண், டாக்டர். தர்மாம்பாள், பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், குடந்தை கே.கே.நீலமேகம், குடந்தை சின்ன தம்பி நாடார், அருளானந்த சாமிநாடார், நாவலர் முதல் இன்னும் பல பெரியோர்கள் எல்லாம் அண்ணா அவர்களின் புரட்சிப் படைப்பைக் கண்டு வானாளாவப் புகழ்ந்தார்கள்.

குறிப்பாக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையேற்க அழைத்தபொழுது இந்தக் கதையில் சுருக்கத்தை எழுதித்தரக் கேட்டார். அண்ணாவிடம் கே.ஆர்.ஆர். ஆங்கிலத்தில் கதைச் சுருக்கம் எழுதித் தரச் சொன்னார். அண்ணாவும் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பினார்.

அதைப்படித்த ஜே.பி. இவ்வளவு அருமையாக எழுதக்கூடிய அறிஞர் தமிழகத்தில் இருக்கிறாரா, யார் அவர்? என்று விசாரித்தார்.

கல்கி அவர்கள் நாடகத்திற்கு தலைமை ஏற்றபோது நம் தமிழகத்திற்கு ஒரு பெர்னாட்ஷாவாக அண்ணா இருக்கிறார் என்று மனமார புகழ்ந்தார்.

பாவேந்தர் பாரதிதாசன் தலைமையேற்றபோது கரும்பு நுனியிலிருந்து சுவைத்து வந்தால் போகப்போக எப்படி சுவை அதிகரிக்குமோ அதைப்போல நாடகம் அமைந்திருக்கிறது என்றும் தமிழகத்திற்கு ஒரு பேரறிஞர் அண்ணா கிடைத்திருக்கிறார் என்று வார்த்தைக்கு வார்த்தை பேரறிஞர் அண்ணா என்று பெருமையோடு புகழ்ந்தார்.

கலைவாணர் அவர்கள் தலைமையேற்றபோது, இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று, சமுதாயம் சீர்திருந்த, சமுதாயத்தில் நடைபெறும் பல கொடுமைகள் ஒழிய இந்த நாடகம் உதவியாக இருக்கிறது. இந்த நாடகத்தை இவ்வளவு சிறப்பாக எழுதிக் கொடுத்த அண்ணாவை பாராட்டுகிறேன். மக்கள் சீர்திருந்த துணிந்து முதன் முதலாக அதை நடத்திய பெருமை கே.ஆர்.ராசாமியையே சேரும். ஆயிரம் மேடைப் பிரசங்கமும் சரி ஒரு நாடகமும் சரி என்று நிரூபித்தவர் கே.ஆர்.ராமசாமி என்றார் கலைவாணர்.

ஆனைவரும் இதை ஏற்று நடத்திய கே.ஆர்.ஆரை மனமார வாழ்த்தி பெருமைப்படுத்தினார்கள். இதற்குப் பிறகுதான் கே.ஆர்.ஆர் நாடக மன்றதின் நாடக விளம்பரங்களில் தமிழகத்தின் பெர்னாட்ஷா அண்ணா கதை வசனம் என்றும் தமிழகத்தின் பேரறிஞர் அண்ணா கதை வசனம் என்றும் விளம்பரங்கள் முதன் முதலாக செய்யப்பட்டு, அறிஞர் அண்ணாவுக்கு பெருமைகளைச் சேர்த்தார் கே.ஆர்.ஆர். இதற்குப் பிறகுதான் மற்றவர்களெல்லாம் இதைப் பின்பற்றி எழுதினார்கள். இந்த நாடகத்தில் ஒரு சீனில் காளிகோயிலில் காளியிடம் நீதிகேட்டு அதை அலங்கோலம் செய்யும் கட்சி வருவதால், இதை நடத்தினால் மக்களின் ஆதரவு இருக்குமா? நாடகம் நடக்குமா என்ற சந்தேகத்தால் யாரும் நடத்த முன்வரவில்லை. அண்ணா அவர்கள் சார்ந்த திராவிடக் கழகத்தின் கொள்கைகளை ஏற்று மிகத் தீவிரதியாக செயலில் இறங்கி வெற்றியோ தோல்வியே எது வந்தாலும் ஏற்றுக்கொள்வது என்று துணிந்து இதையும் நடத்திக் காட்டினார் கே.ஆர்.ஆர். இதன் வெற்றியும் இமாலயவெற்றியாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தமிழகத்திற்கு வாய்த்தது!

ஓர் இரவு நாடகம் 8 மாதமும் வேலைக்காரி 8 மாதமும் தொடர்ந்து நடந்தது. 1945-ல் துவங்கிய கே.ஆர்.ஆர்.நாடக மன்றத்தை 1950 வரை தொடர்ந்து நடத்தி வந்தபோது அண்ணாவின் மேற்பார்வையில்தான் கம்பெனியை கவனித்து வந்தார்கள். பலதடவைகள் கம்பெனி வீட்டிலேயே தங்கி இருந்து ஆலோசனை கூறி எல்லாவற்றையும் கவனித்துவந்தார்கள். அண்ணா நாடக கம்பெனி எந்த ஊருக்கு போவது எந்த நாடகம் நடத்துவது என்பது முதல் கவனித்துவந்தார்.

கே.ஆர்.ஆர். நாடக மன்றமும் எங்கள் வீடும் அண்ணா அவர்களுக்கு கழக ஆதரவாளர்களையும் கழகத்தையும் வளர்க்க அன்றைக்கு ஒரு பாசறையாகவே விளங்கியது என்று கூறலாம்.

திருச்சியிலிருந்தும் தஞ்சைக்கு வரும் பாசஞ்சர் ரயிலுக்கு ஓர் இரவு ரயில் என்றும் வேலைக்காரி ரயில் என்றும் அன்றைக்கு சொல்வார்கள். இந்த ரயில் தஞ்சைக்கு வந்ததும் மக்களெல்லாம் இறங்கி ரயில் காலியாகிவிடும். சென்னையிலிருந்து கன்யாகுமரி வரையிலுள்ள மக்களும் திரளாக வந்து நாடகத்தை கண்டுகளித்தார்கள். கருத்துக்களை ஏற்றார்கள். எந்த எந்த ஊர்களுக்கு நாடகக் கம்பெனி போய்க்கொண்டிருந்ததோ அங்கெல்லாம் கழகத்தோழர்கள் - ஆதரவாளர்கள் - பொது மக்களின் ஆதரவையும் பெற அண்ணாவுக்கு கே.ஆர்.ஆர். நாடக மன்றம் திரட்டிக் கொண்டிருந்தது. அண்ணாவுக்கு பின்னால் ஒரு அஸ்திவாரமாக அமைந்தது கே.ஆர்.ஆர். நாடக மன்றம் என்றே கூறலாம்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.