அண்ணா வேண்டும்
(சிங்க. சௌந்தரராஜன்)

நான் ஒரு கவிப்பேரரசுமல்ல
எனது வார்த்தைகள்
ஓர்
உலகக் கவிதையுமல்ல.

இது...
அன்றொரு நாள்
அகாலப் பொழுதொன்றில்
இயற்கையோடு கலந்துவிட்ட
அண்ணனுக்கு,
அன்பினால்
இளைய தம்பியொருவன்
'சமைத்து' வைத்த
'சபைக் கடிதம்'

அன்புள்ள அண்ணாவுக்கு!
அன்றைக்கெல்லாம்
நீ மட்டும்தான்
நாள்தோறும் கடிதமெழுதுவாய்
நாங்கள் வாசித்துவிட்டு
உன்னிடம் வசியப்படுவோம்.

இன்றைக்கு....
ஏதோ ஓர் ஆசையில்
எண்ண வண்ணத்தில்
வார்தைத் தூரிகையால்
காற்றுத் தாளில்
உனக்கென வரைந்து வைத்தேன்.

ஓர்
ஓவியக் கடிதம்

அண்ணா!
நாங்கள்
இங்கே
நலமென்று சொல்வதற்கில்லை.
நீ
நலமா?
எங்கே இருக்கிறாய்?
ஒரே ஒரு முறை
'ஏழையின் சிரிப்பில்'
உன்னைக் கண்டேன்.

பின்னர்...
'திராவிட நாட்டில்'
'ஓர் இரவில்'
'சந்திரரோதயத்தில்'
'மாற்றான் வீட்டுத் தோட்டத்தில்'
மல்லிகையின் மணத்திலே
மறுபடியும்
உன்னைக் கண்டேன்.

'எதையும் தாங்கும் இதயமே!'
இப்போது
எங்கே இருக்கிறாய்?

நீ
'எங்கிருந்தாலும் வாழ்க'

அண்ணா!
எங்கள் புலவரெல்லாம்
கந்த புராணம் பாடியவேளையில்
நீ மட்டும்தான் மக்களின்
சொந்த புராணம் பாடச் சொன்னவன்

பேருக்கு அறிஞரெல்லாம்
'பெரியவாளை'த் துதித்தபோது
பேரறிஞன் நீ மட்டும
பெரியாரை மதிக்கச் சொன்னாய்

அன்றைய நாடக மேடையெல்லாம்
வள்ளித் திருமண்த்தில்
புள்ளி மானைத் தேடிய வேளையில்
நீ மட்டும்தான்
'வேலைக்காரி'யின் வேதனையை
வெளிச்சம் போட்டாய்.

எங்கள் பாட்டன் பாரதி சொன்னதை
அண்ணா நீதான்
அரங்கேற்றிக்காட்டினாய்

புராண கூவத்தில்
புதையுண்ட தமிழ்ச் சமூகம் - உனது
நெம்புகோல் சிந்தனையால்தான்
நதர்சன உலகை தரிசித்தது.

ஆண்டே! ஆண்டே!
எனும்
அடிமைத் தனத்தின் அடுக் மொழித் தொடர்
தமிழகத்தின் தெருவிலிருந்து தகர்ந்தது...
அண்ணாவே
அது
உன்னால்தான்.

மேட்டுக் குடியின்
புராணக் கமண்டலத்தில்
புகுந்து கொண்ட கலைநதியை
சாதரண சனங்களுக்காய்
சரித்துவிட்ட
நெருப்புக் காகம் நீ!

ஆயுதங்களின்
அவதாரம் நீ!
எழுதும்போது
நீயோர் பேனா!
மேடை
ஏறும் போது
நீயோர் நெருப்பு!
சிந்திக்கும்போது
நீயோர்
நியாயத் தராசு!
ஆயுதங்களின்
அவதாரம் நீ!

உன்
சின்ன தலைவனத்தில்தான்
எத்தனை எத்தனை
வண்ணக் கலைப் பூக்கள்.

சாதாரண பேச்சுக்கூட
'போச்சுக் கலை'யென
பெயர் மாறி மிளிர்ந்தது - உன்
அடுக்குமொழி நடையல்லவா!

உன்
கண்பட்டதெல்லாம்
இங்க
கலையாய் ஆனது

அச்சு, பேச்சு, எழுத்து
நாடகம், திரைப்படம்
அத்தனையும்
உன் கைபட்ட பின்னால்
எங்களின்
கவலையைச் சொன்னதே!

அங்கே
நீயோர்
மா கலைஞன்
எங்களின்
கண்ணாடி

அண்ணாதுரை நீ!
துரைத்தனத்தை
விட்டதனால்
தோழனானாய்
எங்கள் குடும்பத்தின்
அண்ணனானாய்

தந்தைப் பெரியாரின்
தத்துவப் பாலைவனத்திற்கு
உன்தன்
சிந்தனை வெள்ளம்தான்
ஈரம் சேர்த்தது.

தமிழனின் மூளைப் பாறையை
செதுக்கிச் சிற்பமாக்கிட
தந்தைப் பெரியாதோ
தத்துவ ஆணிகளால் அறைந்தார்
நீயோ
தத்துவ ஆணிகள் பத்தாது
நாடக உளிகள் வேண்டும்
என நடத்திக் காட்டினாய்
நடித்தும் காட்டினாய்

அண்ணா!
மனிதாபிமானத்தின்
மறுபேயரே!
"மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கும் மணம் உண்டு"
என்றவனே!

எவரையும் நீ
வெறுத்ததில்லை
அதனால்தான்
புற்றுநோயும்கூட
உன்னை
ருசித்துப் புசித்தது.

என்ன வேடிக்கை பார்த்தாயா?
நீ
எங்களுக்குப் புன்னகையைத் தந்தாய்
நாங்கள்
உனக்கு கண்ணீரைத் தந்தோம்.

எல்லாம் முடிந்தது
ஒளியின் சரித்திரம்
இருளில் முடிந்தது
பின்னர்
என்ன நடந்தது?

உனது
இறுதி யாத்திரை
ஊர்வலம்தான்
கின்னசில்
உலக சாதனை என்றார்கள்

நீயிருக்கும்
இடம் தேடி
உனது தம்பிகளில் பலர்
உன் கூடவே வந்தார்கள்.

சிலர் மட்டும்
உனது நாற்காலியை
நாற்காலியை
ரகசியமாய் இறுகப் பற்றிக் கொண்டனர்.

கலை
தன்
கலையை இழந்தது.

எங்கெல்லாம்
நிதர்சமமிருந்ததோ
அங்கெல்லாம்
நிர்வாணம்
பூசனைப் பொருளாகியது.

இப்போதெல்லாம்
எங்களின் வயிற்றுப் பாட்டை
கலையாக்குவதைவிட
காதல் நல்ல வியாபாரமாகிறதாம்

கலைத்தாயின்
கன்னித் தன்மையையெல்லாம்
வியாபார வில்லன்கள்
கற்பழிப்பு செய்கிறார்கள்

செய்திச் சாத்தான்கள் கூட
பரபரப்பு தீனியைத்தான்
பசியோடு தின்பேன் என்கிறது

தமிழனின் உறவே
பணத்தாலும்
வியாபாரத்தாலும
மட்டுமே
பரிசீலிக்கப்படுகிறது.

நீ
அன்று
நடப்பை நடிப்பால் காட்டி
விழிப்பூட்டினாய்
இன்று நடிப்பை நடப்பாய் காட்டி
இவர்
கண் மறைக்கிறார்.

இன்று நீ
இங்கு வந்தால்
வீதிதோறும் ஆஙகில முழக்கம்
வெகுவாகக் கேட்டிடலாம்
திரைப்பாட்டே ஆங்கிலம்தான்
தெளிப்பாக ஆங்காங்கே
தமிழும் உண்டு.

உனது பெயர் என்னவோ
அவ்வபோது
உச்சரிக்கத்தான் படுகிறது
நீதான்
வசதியாக மறக்கப்பட்டுவிட்டாய்

உது நாமங்கள் என்னவோ
மேடைதோறும்
வாழ்த்தத்தான் படுகின்றன
நீதான்
தந்திரமாய் எங்கோ ஒளிக்கப்பட்டுவிட்டாய்

இப்போது
அர்த்தம் புரியாமலேயே
உச்சரிக்கப்படும்
அர்ச்சனை மந்திரமாய்
ஆகிப்போனாய் நீ!

நீ
இழுத்து வந்த
சீர்திருத்தத் தேர்
இன்னும் நடுத்தெருவில்தான்
நிற்கிறது
சாமியாய் யார் இருப்பது
என்பதிலே
எங்கள் பூசாரிகளுக்கிடையே
பூசல்கள்

நாங்கள் மொழிகளற்ற ஊமையாய்க் கிடந்தோம்
நீதான்
எங்களின் குரலாக ஒலித்தாய்

நாங்கள் விழிகளற்ற குருடாய் இருந்தோம்
நீதான்
எங்களின் ஒளியாக உலாவினாய்

மொத்தத்தில்
நாங்கள் புழுவாய்க் கிடந்தோம்
நீதான்
எங்களை மனிதர்களாக்கினாய்

எங்கள் ஒவ்வோர் தலைக்காவும்
உன்
ஒரே தலையே சிந்தித்தது

எங்களின் மேய்பன் நீ - உன்
செல்ல ஆட்டுக் குட்டிகள்
நாங்கள்

அண்ணா!
மேய்ப்பனை இழந்த ஆடுகளாய்
நாங்கள்
இப்போது தெருக்களில் திரிகின்றோம்

உனக்குப் பின்னரும்
எங்களுக்கு நிறையவே மேய்ப்பர்கள்
உனது பெயரை உச்சரித்தபடியே
ஆனால்
அவர்கள் காட்டும் வழிகள் மட்டும்
எப்போதும் கசாப்புக் கடைக்கே
எங்களை
இட்டுச் செல்கின்றன.

நாங்கள் பலியாடுகளாய்ப் போனோம்
அவர்களோ
நரிகளாய்ப் போயினர்.

அண்ணா
கற்கதைன்
ஆனாலும் கேட்கின்றேன்
கலைகளை மட்டுமல்ல
எங்கள் எல்லோரையும்
மீட்டெடுக்க
மீண்டும் எப்போது வருவாய் நீ!

ஏக்கத்துடன்....
உனது தம்பி.

நான் ஒரு கவிப்பேரரசுமல்ல
எனது வாத்தைகள்
ஓர்
உலகக் கவிதையுமல்ல

உது அன்றொரு நாள்
அகாலப் பொழுதொன்றில்
இயற்கையோடு கலந்துவிட்ட
அண்ணனுக்கு
அன்பினால்
இளைய தம்பியொருவன்
வரைந்த
ஏக்கக் கடிதம்

(05.03.200 அன்று 'அண்ணா இலக்கியப் பேரவை மாநாட்டில்' வாசிக்கப்பட்டக் கவிதை)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.