'ஓர் இரவு' நாடகத்தில்
கருணாகரத் தேவரின் பாத்திரப் படைப்பு

(முனைவர் பேரா.க.அழகர்,
முதுநிலை விரிவுரையாளர், இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி,
இராஜபாளையம்.
)


முன்னுரை
“கடமை. கண்ணியம், கட்டுப்பாடு” என்ற பொன்மொழிக்குச் சொந்தக்காரராகிய அறிஞர் அண்ணா, 1909ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சிபுரத்தில் நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். தமிழ் எழுத்துலகில் தனிப்புகழ் பெற்ற அண்ணா திராவிட நாடு, காஞ்சி ஆகிய இதழ்களை நடத்தினார். சமுதாயத்தில் சீர்திருத்தம், நாட்டுப் பற்று, மொழிப் பற்று, உண்டாக்க அறிஞர் அண்ணா பல சிறுகதைகளையும், புதினங்களையும், கவிதைகளையும், நாடகங்களையும் படைத்தார். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நாடகங்களாக, ஓர் இரவு, நல்லவன் வாழ்வான், சொர்க்கவாசல், சந்திரமோகன், கல்சுமந்த கசடர், காதல் ஜோதி, வண்டிக்காரன் மகன், நல்ல தம்பி போன்ற நாடகங்களைப் படைத்தார். அவ்வகை நாடகங்களுள் ஒன்று தான் ஒர் இரவு நாடகமாகும். அந்நாடகத்தில் சமுதாயத்திற்கு நல்ல பண்புகளை விளக்கிக் கூறுவதற்குக் கருணாகரத் தேவர், சேகர், சுசீலா, ஜெகவீரன், சொர்ணம், இரத்னம். பவானி போன்ற பாத்திரங்களைப் படைத்துள்ளார். அப்படிப்பட்ட பாத்திரங்களுள் விதவை சொர்ணத்தைக் காதலித்துக் கைவிட்டவராகவும், பவானியின் கணவராகவும், சுசீலாவின் தந்தையாகவும். சந்தேகம் தீராத வியாதி என்பதற்கேற்ப, தமது மனைவி பவானியைக் கொலை செய்து, ஜெகவீரனிடம் அகப்பட்டுக் கொள்ளும் அப்பாவியாகவும் விளங்கக் கூடிய கருணாகரத் தேவரின் பாத்திரப் படைப்புக் குறித்துக் காண்போம்.

பாத்திரப் படைப்பு
பாத்திரங்கள் என்பன இலக்கிய மாந்தர்கள் ஆவர். நிகழ்வுகளுக்குத் தளமாகவும், தாங்கியாகவும் இருப்பது பாத்திரங்கள் ஆகும் என்கிறார். தி,சு.நடராஐன். ப.137.

“அன்பு. நம்பிக்கை முதலியவற்றிற்குக் கொள்கலனாக இருப்பவர் பாத்திரம்” என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ப.707.

அந்த வகையில் அறிஞர் அண்ணா படைக்கும் கருணாகரத் தேவர் “ஒர் இரவு” நாடகத்தில் 9, 12, 14, 17, 19, 20, 21, 22, 28. 31, 34, 35, 38, 48 ஆகிய 14 காட்சிகளில் இடம் பெறுகிறார்.

கருணாகரத் தேவர் யார்?
தேவர் ஒரு பணக்காரர் ஆவார், ஆனால் தம்மை விட வசதி குறைந்த விதவைப் பெண் சொர்ணத்தைக் காதலிக்கிறார். பின்பு அவள் தாயாகும் போது, இந்தச் சமுதாயத்திற்கு அஞ்சி அவளைக் கைவிடுகிறார். காதல் புனிதமானது, தெய்வீகமானது என்று வாய் இனிக்கப் பேசலாமே ஒழிய, அதை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அறிஞர் அண்ணா கருணாகரத் தேவரின் பாத்திரப் படைப்பின் மூலம் காட்டுவதைக் காணலாம். பணத்திற்கும். பதவிக்கும் பஞ்சணை விரிக்கும் இல்வுலகில் பண்புக்கு மதிப்பில்லை. சொர்ணம் அவரால் கை கழுவப்பட்ட பெண் ஆகிறாள்.

ஜெகவீரன், சுசீலாவை மணம் முடிக்கத் தேவரை வற்புறுத்துதல் வீட்டில் பெண்ணைப் பூட்டி வைக்கும் பழக்கத்தை எதிர்த்த தேவர், நிலாவிலே பொழுது போக்க நண்பர்களுடன் அனுப்புகிறார். இதனைச் செகவீரன் கண்டித்த போது “என் மகள் சுசீலாவை நான் அடுப்பூதும் பெண்ணாக்கவில்லை. படிக்க வைத்தேன். அவளுக்குப் பெண்கள் முன்னேற்றத்தில் விசேஷ அக்கறை” என்கிறார் தேவர், (ஓர் இரவு ப.19)

ஜெகவீரன் சுசீலாவைத் தனக்குத் திருமணம் முடித்துத் தர வேண்டும் எனத் தேவரைக் கட்டாயப்படுத்துகிறான். அதற்குத் தேவர் சிறு குழந்தைகள் கூடத் தங்களுக்குப் பிடிக்காத பண்டத்தை ஊட்டினால் துப்பி விடும் போது, நான்கும் தெரிந்த சுசீலா. காமுகனான, பணத்தாசை மிக்க ஜெகவீரனை மணந்து கொள்ள எப்படிச் சம்மதிப்பாள்” என்கிறார், (ஓர் இரவு ப.20)

ஜெகவீரனை மணக்க, சுசீலாவைத் தேவர் வற்புறுத்துதல் தமது மகள் சேகரைக் காதலிப்பது தெரிந்தும் ஜெகவீரனிடம் அகப்பட்ட உண்மையொன்றுக்காகத் தேவர் பயந்து. ஜெகவீரனை மணந்து கொள்ளும்படித் தமது மகளை வற்புறுத்துகிறார். ஜெகவீரனை சுசீலா எதிர்த்துப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தன் உயிருக்கு உலை வைப்பதற்காகவே தேவர் நினைக்கிறார், திருமணத்திற்கு மகள் சம்மதம் தெரிவிக்காவிட்டால், தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என்கிறார் தேவர். மேலும் “நீ என் மகளா அல்லது என்னை மாய்க்க வந்த மாபாவியா என்பதை உன் செயலால் காட்டு” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் (ஓர் இரவு. ப.27)

பின்பு சுசீலா தங்கமே, எனக்கு நீ தவிர வேறு யார் இருக்கிறார்கள். மகளை விடப் பணம் பெரிதல்ல என்கிறார் தேவர். (ஓர் இரவு ப.27)

தந்தையின் பேச்சுக்குச் செவி கொடாத சுசீலாவின் காலில் தேவர் விழவே அவளால் தாங்க முடியவில்லை. அவரைத் தூக்கி நிறுத்துகிறாள். கடைசியாக, தேவர் தமது மகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதைக் காணலாம்.

“சுசீலா. உனக்கு விளங்கும்படிக் கூறுவதற்கில்லை. தூக்கு மேடைக்கு நான் போகட்டுமா? அல்லது திருமணப் பந்தலுக்கு ஜமீன்தாருடன் நீ போகிறாயா? இரண்டில் ஒன்று சொல் என்று கூறித் தலையிலே மோதிக் கொண்டே அலறி அழுது மயங்கிச் சாய்கிறார் (ஓர் இரவு ப.29).

ஜெகவீரன், தேவரின் குடும்பத்தைத் தொடரவிருக்கும் சாபத்தைச் சுசீலாவிடம் சொல்ல முற்படுகிறான். அப்போது தேவர் தடுத்துச் சுசீலா தன்னைக் காப்பாற்றி விடுவாள் என நினைத்து “மகளே! அந்தச் சாபத்தைப் போக்கிக் கொள்ள ஒரு பலி தந்தாக வேண்டும்” என்கிறார். (ஒர் இரவு ப.30)
அப்பலி தாமே என்று சுசீலா நினைத்து, தனிமையில் புலம்புகிறாள்.

சேகரின் காதலைத் துறக்க தேவர் வேண்டுதல்
தேவர் தனக்கு மார்பு வலி என்று கூறிச் சேகரைத் தனது வீட்டிற்கு வரச் சொல்கிறார். டாக்டர் சேகரும் வீட்டிற்கு வருகிறார். சேகரிடம் தேவர், சுசீலா உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்றார். அதற்குச் சேகர் நான் நம்ப மாட்டேன் என்றான். உடனே தேவர் “உலகமே நம்பாது, ஆனால் உண்மை. சுசீலா சம்மதித்தது, உன்னை மறந்ததால் அல்ல. என் உயிரைக் காப்பாற்ற” என்றார் (ஓர் இரவு ப.48)

மேலும் தேவர் சேகரிடம் “சுசீலா பவானி மகள், அவளும் தியாகம் செய்யப்பட வேண்டியளே” ஒப்புக் கொண்டாள் என்னைக் காப்பாற்ற ஜெகவீரனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டாள் என்றும், “சேகர்! என்னை மன்னித்து விடு. சுசீலா தியாகியின் திருக்குமாரி. தன்னையும் தியாகம் செய்கிறாள் என் பொருட்டு” என்று தேவர் கூறிப் பெருமைபட்டபோது சேகர் சுசீலாவின் தியாகத்தை மதித்துத் தானும் ஊரை விட்டே சென்று தன் காதலை மறக்க முடிவு செய்கிறான்.

தேவர் தன் கதையைச் சேகரிடம் கூறுதல் தேவர் சேகரிடம், பரிதாபத்துக்குரிய என் கதையைக் கேள். நான் வாலிபனாக இருந்த போது ஒரு அழகிய இளம் விதவையைக் காதலித்தேன். அவள் என்னைப் பரிபூரணமாக நம்பினாள். காதலில் மூழ்கினோம். கடைசியில் சமூகக் கட்டுப்பாட்டுக்கும், குடும்ப கௌரவத்துக்கும் பயந்து நான் அவளைக் கை விட்டேன். கர்ப்பவதியாக இக்கொடியவனால் கைவிடப்பட்ட அப்பெண் என்னென்ன கஷ்டத்துக்கு ஆளானாளோ தெரியாது, அடிக்கடி என் மனம் மட்டும் சுடும். ஆனால் கற்பழித்த பாதகனான நான் ஜெகவீரரின் தங்கை பவானியைக் கல்யாணம் செய்து கௌரவம் பெற்றேன். அந்த விதவையின் பெயர் சொர்ணம் என்றார் தேவர். அதற்குச் சேகர் யார்? அந்த மருதூர் மிட்டாதாரரின் வைப்பாட்டியாகச் சில காலம் இருந்தவளா? என்றான்.

அதற்குத் தேவர் ஆமாம் அவளை விபசாரியாக்கியவன் நான்தான்! அவள் விதி அது என்று உலகம் கூறும். இந்தச் சண்டாளன் செய்த சதி. சொர்ணத்தை அந்தக் கதிக்கு ஆளாக்கிற்று என்றான். (ஒர் இரவு ப.49)

சொர்ணம் தன்னைக் கைவிட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறாள். ஆனால் தேவர் ஜமீன் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்ட நான் உன்னோடு குடித்தனம் செய்தால் உலகம் என்ன சொல்லும்? மேலும் உன்னோடு நான் குடித்தனம் செய்தால் மிட்டாதாரன் என்னைச் சும்மாவிடமாட்டான் என்று மீண்டும் தன் போலிக் கௌரவத்தையும், பயத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம்.

பவானியைத் தேவர் கொலை செய்தல்
பவானி தேவரால் முறைப்படி மணம் செய்து கொள்ளப்பட்டவள். இசை பாடுவதில் கலைவாணி. இவள் மாறு வேடத்தில், விலாசனி என்ற பெயரோடு இடம் பெறுகிறாள். அதனால்தான் அவளைத் தன் வைப்பு விலாசனி என்று பொய் கூறி, சீமான் செட்டியார் மாளிகையில் இசைக் கச்சேரி செய்ய வைத்துத்தான் தான் பட்ட கடனைத் தீர்த்துக் கொள்ள ஜெகவீரனால் முடிந்தது. ஜெகவீரன் மாறுவேடத்தில் உள்ள பவானியை விலாசனி, விலாசனி என்று அழைக்க, அவள் “போதும், உயிரை வாங்காதே மானம் போகிறது” என்றும் “ஈனத் தனமான காரியம் செய்யத் துணிந்து, அதற்கு என்னையும் உடந்தை ஆக்கிக் கொண்டாய்” என்றாள். மூக்குக் கண்ணாடியுடன் நின்றிருந்த பவானியைத் தேவர் பார்த்தவுடன் “ஐயோ மோசம் போனேன்” என்று பயந்து ஒட முயற்சிக்கிறாள். தேவர் ஓடிச் சென்று இவள் தோளைப் பிடித்துக் குலுக்க, பயத்தால் பவானி உடல் நடுங்கியது. “எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?” என்று தேவர் கூச்சலிடுகிறார் (ஓர் இரவு ப.85)

பவானியின் கழுத்தை நெறிக்கிறார் தேவர். இக்கொலைக் காட்சியை ஜெகவீரன் காமிராவில் படம் எடுத்து விடுகிறான். பவானி மூச்சுச் திணறி இறக்கிறாள். ஜெகவீரன் தான் எடுத்த படத்தை வைத்தே தேவரைச் சித்திரவதைப்படுத்துவதைக் காணலாம்.

முடிவுரை
தேவர் நெஞ்சுறுதி கொண்டவர் அல்லர். அவர் வாழ்வில் அச்சமே மேலோங்கி நிற்கிறது. சமுதாயத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதவன். ஏழையைக் காதல் செய்யக் கூடாது என்பதையும், துணுக்குறும் நிலையிலும் மனிதன் தன் நிலையை இழக்கக் கூடாது என்றும் தேவர் உணர்த்துகிறார். தேவர் ஆசை காட்டி மோசம் செய்பவராகவும், போலிக் கௌரவத்தின் சொந்த உருவகமாகவும், தன்னலமிக்கவராகவும், தன் அவசரத்தால் கொலை செய்து விட்டு அந்தச் செயலுக்காக, அணு அணுவாகச் செத்துக் கொண்டு இருப்பவராகவும் படைக்கப்பட்டுள்ளார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai