அண்ணா குடும்பத்தின் வாரிசுகள்: இன்றைய நிலை
கோவி.லெனின்
03.02.2012

தன்னால் கற்க முடியாமல்போன கல்வியைத் தமிழகத்தின் தலைமுறைகள் கற்பதற்கு வழியமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். தான் கற்ற கல்வியையும் அதன் மூலம் பெற்ற அறிவையும் தமிழகத்தின் தலைமுறைகள் நலன் பெற பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் அந்த மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது என்றால் அது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஓராண்டு பத்து மாதங்கள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். அதற்கு முன் சென்னை மாகாணம் என்றுதான் அழைக்கப்பட்டது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) நடைமுறைப்படுத்தினார். சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட ஏற்பளிப்பு கிடைக்கச் செய்தார். இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கான பரிசுச்சீட்டுத் திட்டம் ஆகியவையும் அண்ணாவால் கொண்டு வரப்பட்டவையாகும்.

1969 பிப்ரவரி 3ஆம் நாள் அண்ணா மறைந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்குச் சாதனைமிகு எண்ணிக்கையாக அமைந்தது.

அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார். இவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. அண்ணா தனது அக்காள் மகள் சௌந்தரியின் பிள்ளைகளான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகியோரை வளர்ப்பு மகன்களாக்கிக்கொண்டார்.

தமிழகத்தின் மிகப்பெரும் தலைவராகவும், முதல்வராகவும் இருந்த அண்ணாவுக்குச் சொந்தமான சொத்துகள் என்றால் காஞ்சிபுரத்தில் ஒரு வீடு. ஒரு ஏக்கர் நிலம். சென்னை நுங்கம்பாக்கம் அவென்யூ சாலையில் ஒரு வீடு ஆகியவையாகும். அண்ணா முதல்வரானதும் அரசு அதிகாரிகள் அவரது வீட்டில் கொண்டு வந்து வைத்த ஃப்ரிட்ஜ், சோபா செட்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டார். அண்ணா மறைந்தபோது அவர் சேமித்து வைத்த தொகை என்பது நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கிக்கிளையில் 5000 ரூபாயும், மயிலாப்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் 5000 ரூபாயும்தான்.

தனது குடும்பத்தினருக்கு அரசியலில் பதவி எதையும் அண்ணா தரவில்லை. அவரது குடும்பத்தினர்கள் அரசியலிலோ அரசாங்கத்திலோ பொறுப்புகளை எதிர்பார்க்கவில்லை. கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் அண்ணா குடும்பத்தினருக்குப் பொறுப்புகளைக் கொடுக்க முன்வந்தபோதுகூட அண்ணாவின் வளர்ப்புப் பிள்ளைகள், அதனை இயக்கத்தில் வேறு யாருக்கேனும் கொடுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் சட்டமேலவை உறுப்பினராக எம்.எல்.சி.) கலைஞர் ஆட்சியின்போது இருந்திருக்கிறார். அண்ணாவின் நூல்களை செல்வி.ஜெயலலிதா அரசு நாட்டுடைமையாக்கி அவரது குடும்பத்தாருக்கு 75 லட்ச ரூபாய் வழங்கியது. அண்ணா நூற்றாண்டையொட்டி (2009) அண்ணாவின் வளர்ப்பு மகன்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியது கலைஞர் அரசு.

அண்ணாவின் முதல் மகன் பரிமளம், மருத்துவம் பயின்றவர். டாக்டர் அண்ணா பரிமளம் என்றழைக்கப்பட்ட இவர், அரசு தோல் மருத்துவராக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அண்ணா பேரவை என்ற அமைப்பை நிறுவி அண்ணாவின் படைப்புகள் அச்சில் வருவதற்கு பாடுபட்டு, வெற்றியும் கண்டார். அண்ணாவைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதற்காகவே www.arignaranna.info என்ற இணையதளத்தை உருவாக்கினார். தற்போதும் அந்த இணையதளம் மாதமிருமுறை பதிவேற்றம் செய்யப்படுகிறது. அண்ணாவுக்குப் பெருமை சேர்க்கும் பணிகளைச் செய்வதற்காகவே மருத்துவப்பணியைக் கைவிட்ட பரிமளம், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

பரிமளத்தின் மனைவி சரோஜா பரிமளம். இத்தம்பதியரின் மூத்த மகன் மலர்வண்ணன், மலர் அச்சகம் நடத்தி வருகிறார். அவருடைய துணைவியார் ஜெயஸ்ரீ பாலர் பள்ளி நடத்தி வருகிறார். இவர்களுக்கு அகிலன், ஆதித்யன் என்ற இரு மகன்கள். பள்ளியில் படித்து வருகிறார்கள். டாக்டர் பரிமளம்-சரோஜா தம்பதியரின் மகள் இளவரசி. இவரது கணவர் முத்துக்குமார் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடைய மகள்கள் சுருதி, ப்ரீத்தி ஆகியோர் பள்ளியில் பயின்று வருகிறார்கள். பரிமளம்-சரோஜா தம்பதியரின் இரண்டாவது மகன் அ.ப.சௌமியன் கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் பெயர் சரளா. இத்தம்பதியருக்கு அரவிந்த், அர்ஜூன் என இரு மகன்கள். இவர்கள் பள்ளிப்படிப்பு பயில்கிறார்கள்.

அண்ணாவின் இரண்டாவது மகன் சி.என்.ஏ.இளங்கோவன். இவர் அண்ணாவின் காஞ்சி பத்திரிகையில் பணியாற்றியதோடு, அச்சுத்தொழிலையும் மேற்கொண்டவர். முதியோர் இல்லத்தின் ஆலோசகராகவும் இருந்த இவர், காலமாகிவிட்டார். இவரது துணைவியார் விஜயா இளங்கோவன். இவர்களின் மகள் பெயர் கண்மணி. இவரது கணவர் ரமேஷ்பாபு, பொறியாளராக இருக்கிறார். இத்தம்பதியரின் மகள் பிரியதர்ஷினியும் பொறியாளராக உள்ளார்.

சி.என்.ஏ.கௌதமன். இவர் அண்ணா வளர்த்த மூன்றாவது மகன். நூல் வெளியீடு மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது துணைவியார் துளசி கௌதமன் காலமாகிவிட்டார். இத்தம்பதியரின் மகள் சரிதா. இவரது கணவர் சிவக்குமார். இத்தம்பதியருக்கு ப்ரித்வின் என்ற மகன் உள்ளார்.

அண்ணாவின் நான்காவது மகன், பாபு என்கிற சி.என்.ஏ.ராஜேந்திரன். இவர் அரசு தகவல் தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மனைவி பெயர் சாந்தா. இத்தம்பதியரின் மகன் ஆனந்தன் பொறியாளராவார். இவர்களது மகள் ராஜாமணியின் கணவர் வெங்கடேஷும் பொறியாளர். ராஜாமணி-வெங்கடேஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.

அரசியலில் ஆர்வம் செலுத்தாமல் அண்ணா குடும்பத்தினர் தங்களுக்கு விருப்பமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அண்ணாவுக்குப் பிறகு அரசியலுக்கும் ஆட்சிக்கும் வந்தவர்கள் அண்ணா குடும்பத்தினரைப் புறக்கணித்துவிட்டனர் என்றெல்லாம் அரசியல்தளங்களில் விமர்சனம் எழுகின்ற போதும், அண்ணா குடும்பத்தினர் அரசியல் இயக்கங்களிடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ எதிர்பார்ப்பதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்வதிலேயே மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.

நன்றி:

http://www.kavvinmedia.com/BlogDetails.aspx?PostID=402#

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=158

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Chennai, Tamil Nadu.