அப்பேத்கார் அறிவுரைகள்
அறிஞர் அண்ணா
(டாக்டர் அம்பேத்கார், சென்னையிலே பல சொற்பொழிவுகளிலே தந்த அறிவுரைகளிலே
சில பொறுக்குமணிகளைக் கீழே தருகிறோம். உங்கள் குறிப்பிலே இருக்கவேண்டுமென்று.)
பதவிப் பிரியர்கள்
பிராமணரல்லாதார் கட்சி, தேர்தலிலே தோற்றதற்குக் காரணம், அக்கட்சியிலே
பதவிபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு இருந்தவர்களின் போக்குதான்.
கட்சி தலைதூக்குகிறது
பிராமணரல்லாதார் கட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கண்டு
களிப்படைகிறேன்.
காந்தியார் குணம்
காந்தியார் காங்கிரசின் தலைவராக இருக்கிறார். வேறு எந்தத் தேசத்தில்
அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுவார்? எதிர்காலத் தலைவராக ஏற்றுக்கொள்வர்?
எதிர்கால திருஷ்டியோ தற்கால திருஷ்டியோ, இவைகளைப் பரிசீலனை செய்யும்
சக்தியோ அவருக்கு இல்லை.
கொடுமை
தாழ்த்தப்பட்டவர்களாகிய நாங்கள் சென்ற 2000 வருஷ காலமாகப் பிராமண
ஆட்சியில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டிருக்கிறோம்.
காங்கிரஸ் வலை
தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பறிகொடுத்துக் காங்கிரசை வலுக்கச்
செய்வதுதான் காந்தியாரின் நோக்கமென்பதை அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன்.
வட்ட மேஜை மகாநாட்டில் ஜின்னாவிடம்போய் அவருடைய 14 கோரிக்கைகளுக்குத்
தான் இணங்குவதாகவும் அதற்கு மாறாக எனக்கு (அம்பேத்காருக்கு) ஜின்னா
சலுகை காட்டகூடாதென்றும் கேட்டார். இதற்கு ஆதாரமான தஸ்தாவேஜு என்னிடம்
இருக்கிறது. ஆனால் முஸ்லீம் பிதிநிதிகள் காந்தியாரின் வலையில்
அகப்படவில்லை.
அன்று ஒருபோர்
புத்த மதத்திற்கும் பிராமண மதத்திற்கும் வெகுநாள் சச்சரவுகள் நடந்தன.
கொள்கையில் மட்டுமல்ல; அரசியல் சமூகத் துறைகளிலும் போராடினார்கள்.
விஷமம்
நான் வேதங்களைப் படித்திருக்கிறேன், சதுர்வர்ணப் பிரயோகங்களும்
மந்திரதந்திரங்களுமே அவைகளில் மலிந்து கிடக்கின்றன. இவைகளைப் போதிக்கும்
மூளையில் பக்கபலமாக பகவத்கீதையையும் மனுஸ்மிருரிதயும் உபயோகிக்கிறார்கள்.
அவைகளில் விஷமத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
மதப்பிடி
இந்த மதசம்வாதம் சுமார் 1500 வருஷங்களுக்கு மேலாக நடந்ததாகத் தெரிகிறது.
இறுதியில் ராஜதர்மத்தைக் கொலை செய்து பிற்போக்கான எதிர்புரட்சியான
பிராமண மதம் வெற்றி பெற்றது. அந்தப் பிற்போக்கான மதத்தின் பிடியில்தான்
நாம் இருக்கிறோம். புத்தமதம் க்ஷீணித்தது நமக்கு ஒரு பெரிய நஷ்டம்.
அதனால், சமூக சமத்துவமும், அறிவை உணரும் தத்துவமும் மற்றும் பலவும்
ஒழிந்தன.
அறிவு வழி
இனியாவது எல்லோரும் அறிவின் வழியே நடக்க முன்வாருங்கள். அறிவுக்குப்
பொருத்தமில்லாத் தன்மை. வேதாந்த விவகாரத்திலிருந்து, சமூகத் துறையிலும்,
பிறகு அரசியல் விஷயத்திலும் புகுந்துவிட்டது. எதிர்காலத்தில் ஜாக்கிரதையாக
இருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன்.
ஆணவக் கூட்டம்
இந்நாட்டிலே பிராமணர்களே ஆளும் கூட்டமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
ஜாதி விதியாசம் பாராட்டி, மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு என்று
கருதும் இயல்பினரிடம் நாட்டு ஆட்சி இருக்கலாமா? அவர்களைக் கொண்ட
தேசீய சர்க்காரால் நமக்கு என்ன பயன்?
(15.10.1944 - திராவிடநாடு)