அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் - 4

இலெனினும் - அண்ணாவும்
(ஏ.எஸ்.வேணு)

மக்களின் பிரச்சினைகளுக்கு முழுமையாகத் தீர்வுகாண மனைந்து அனைத்துத்துறைகளிலும் வெற்றிகளை வியக்கத்தக்க முறையில் ஈட்டிய சிறப்பு விரல் விட்டு எண்ணக்ககூடிய ஒரு சிலரே பெற முடிந்தது.

அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள், இலெனினும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். உருசிய மன்னர் சாரின் கொடுங்கோலுக்கு ஆளாகித் தவித்த மக்களுக்கும், நிலக்கிழார்களின் நெஞ்சீரமற்ற நெடுங்கால கொத்தடிமையால் ஆழ்த்திய மதகுரு சஸ்புடீனின் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து எல்லார்க்கும் எல்லாம் என்ற சமன்மை (சோஷலிச)சோவியத்து நாட்டைப் படைத்தவர் இலெனின்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தலைசிறந்த நாகரிகமும், பண்பாடும் இலக்கியமும், கொண்டு விளங்கிய தமிழகம், வந்தேறிகளால் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும், கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சலியாது சிறப்புடன் பாடுபட்டுத், தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பி மீண்டும் தமிழ்நாடு என்ற பெயரை உலகப் படத்தில் பொறித்தவர் - அண்ணா.

மனித சமுதாயம் என்றுமே மறக்க முடியாத சிறப்பைப் பெற்றவர் இவ்விருவராவர்.

மேலும், சில ஆண்டுகள் இலெனின் உயிரோடு இருந்திருந்தால், இந்த நேரம் உலகமே ஒரு பொதுவுடமைப் பூங்காவாக மாறியிருக்கும்.

அண்ணாவும் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பொதுமைத் தமிழகமாக வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கும்.

இரக்கமற்ற இயற்கையின் சதியால், அந்த இருவரின் தொண்டும் மிகமிகத் தேவையான காலகட்டத்தில் இழந்துவிட்டோம்.

ஏன் பிறந்தோம் - எப்படி வாழப்போகிறோம் என்று ஏங்கித் தவித்த மக்களுக்கு வழிகாட்டித் தலைமை ஏற்றுத் தியாக வாழ்வு வாழ்ந்த, தன்னலமற்றப் புரட்சித் தலைவர்களை நாம் இழந்துவிட்டோம்.

அசைக்க முடியாத அளவிற்கு அதிகாரத்தைக் குவித்துக்கொண்டு ஆணவ ஆட்சி நடத்திய கொடுங்கோலர்களை ஆட்டம் கொள்ளச் செய்து, வீழ்ச்சியடையச் செய்தவர்கள் இலெனின் - அண்ணா!

இருவருமே பயன் படுத்திய பெரிய படைக்கலங்கள் - நாவன்மையும் எழுத்து வன்மையும்தாம்.
விளம்பரத்திற்கும், கொள்கை பரப்பிற்கும், அறிவியல் கோட்பாடுகளுக்கும், அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும், மனித வாழ்வைப் பற்றிய சிக்கல்களைத் தீர்க்கவும் தாய்மொழியே சிறந்த கருவி என்பதை இருவருமே உறுதியாகக் கடைப்பிடித்தனர்.

மேடைப்பேச்சும், கொள்கைப் பரப்பலையும் தாய்மொழியிலேயே நடத்தி வெற்றி கண்டனர் இருவரும். வெறும் ஆரவாரச் சொற்களை இருவருமே வெறுத்தனர்.

இருவருமே மனிதர்களின் சம உரிமைக்காகப் போராடினர். ஒவ்வொரு தேசிய இன மக்களும் தம் உரிமைகளை முழுமையாகப் பெற்றுத் தங்களின் தாய்மொழியையும், பண்பாட்டையும், நாகரிகத்தையும் பெற்றும் பாதுகாத்தும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தை இருவருமே கொண்டிருந்தனர்.

தங்களின் தாய்மொழி வளமானதாக்க, பிறமொழிச் சொற்களை நீக்கி, வலுவானதாக்க புதுப்புது சமூகப் - பொருளாதார - பெய்பொருட் சொற்களை உண்டாக்கி, வழக்கில் கொண்டு வந்தவர்கள் இலெனினம் - அண்ணாவும். மொழி அறிவு வளமாகப் பெற்றவர்களையே தங்களக்குத் துணையாகர் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் இருவரும்.

இலெனினைப் போன்று அண்ணாவும், மொழி அறிவும் கருத்தாற்றலும், பேச்சாற்றலும் பெற்றிருந்த காரணத்தினால், சமுதாயத்தைப் புரட்சிப் பாதைக்குச் செம்மைப் படுத்திடவும் தட்டி எழுப்பவும் முடிந்தது.

இருவருமே பிறந்த போது எவருமே பெரிதாக மதித்திடவில்லை. தொட்டிலில் இட்டுத், தாலாட்டிப், பெயர் சூட்டு விழா ஏதும் நடந்ததில்லை. ஆனால் இவ்விருவருமே இறந்தபோதும், அதற்குப் பின்னரும் என்றும் மறக்க முடியாத நிலையை அடைந்துவிட்டனர். இவ்விருவரும் மக்களுக்கு ஆற்றிய, தன்னலமற்ற தியாகத் தொண்டினை மக்கள் நினைத்து, நின்தது, அவர்கள் பிரிவைத் தாங்கிக் கொண்ண இயலாது, மக்கள் தவிக்கும் நிலைமை நாம் காண்கிறோம்.

உலக மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் - முழு உரிமையுடன் வாழவேண்டும் - அமைதியுடன் முன்னேறவேண்டும் - முற்போக்குப் பாதையில் பீடு நடை போடவேண்டும் - எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துக், குறை இல்லாத சமதருமச் சமுதாயம் மலரவேண்டும் என்று, இன்றும் அவர்கள் பணியைத் தொடர்ந்திடும் இலட்சியவாதிகளுக்கு அவர்கள் வழிகாட்டிகளாக அமைந்துவிட்டனர். முன்னோர்கள் அடிமைகளாக விவசாயம் செய்து எளிய வாழ்வு வாழ்ந்தவர்கள் தாம். இவருடைய தாத்தா வறுமையில்தான் இறந்தார் என்பதற்குத் தடையங்கள் இப்போது கிடைத்துள்ளன. சிறு வயதிலேயே இலெனின் தந்தையை இழந்தார். வறுமை நிலையிலேயே, மூத்த அண்ணனின் ஆதரவில் இலெனின் கல்வி பயின்றார்.

அறிஞர் அண்ணா அவர்கள் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் முன்னோர்கள் பற்றி குறிப்பிட ஏதும் இல்லை. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் தான் வாழ்ந்திருக்கின்றனர். அண்ணாவின் தாயார் பங்காரு அம்மாள் பெயருக்கு ஏற்ப தங்கக்குணம் படைத்தவர்களே தவிர பொன் அணிகலன்களைக் கொண்டவரல்லர். அண்ணாவின் தொத்தா அரும்பாடுபட்டு அண்ணாவைப் படிக்க வைத்துப் பட்டதாரியாக்கினார்கள். அண்ணாதான் முதல் பட்டதாரி. அண்ணாவின் முன்னோர் யாரும் படித்துப் பட்டம் பெற்றதில்லை. பெரிய பதவிகளை வகித்ததும் இல்லை.

இலெனின் படித்த பிறகு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அண்ணா அவர்களும் சென்னை, கோவிந்தப்ப நாய்க்கன் பள்ளியில் சிறிது காலம் பணியாற்றினார்.

படித்த பெற்றோர்கள், உறவினர்கள், கொண்ட குடும்பத்திலே பிறந்தவர்களும், பெரிய பதவிகள் வகித்த முன்னோர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களும், செல்வக்குடியில் பிறந்தவர்களும், வாழ்வில் முன்னேற்றம் அடைவது எளிது. ஊர் மக்கள் கூடப் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்று வியந்து பாராட்டுவார்கள். இலெனினும் அண்ணாவும் இந்தச் சூழலில் பிறந்தவர்கள் அல்லர். ஆனால், அவர்கள் வாழ்ந்த வாழ்வும், ஆற்றிய தொண்டும் உலகமே வியந்து பாராட்டும் நிலையை எய்தியிருக்கின்றனர். இது வியக்கத்தக்கதல்லவா?

இருவருமே இளமைக் காலத்தில் பாடங்களை ஒழுங்காகப் படித்து வகுப்பில் முதல் மாணவர்களாக விளங்கியிருக்கின்றனர். புத்தகங்களைத் தாமே சுமந்துக் கொண்டு, வெகுதொலைவு நடந்தே சென்று பள்ளியில் படித்தனர். இருவருமே மற்ற மாணவர்களுக்குப் புரியாததைப் புரிய வைத்துள்ளனர். எல்லோரிடமும் அன்பாகப் பழகி இருக்கின்றனர். வீட்டில் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நல்ல ஒழுக்கமுள்ளவர்களாகவும், பெறுப்பை உணர்ந்தவர்களாகவும், பாராட்டத் தக்கவர்களாகவும் வளர்ந்தனர்.

அண்ணாவின் பெற்றோர்கள் அவருடைய தலை முடியை சீவி முடித்துப், பெண் பிள்ளை போல அலங்கரித்துப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். வகுப்பில் மற்ற மாணவர்கள் கிராப்பு தலையுடன் நாகரிகமாக இருந்தனர். தானும் மற்ற மாணவர்கள் போலத் தலை முடியைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்று தன் தாயிடம் விருப்பம் தெரிவித்தார். தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தால் விருப்பத்தை நிறைவேற்றுவதாகத் தாய் கூறினார். அண்ணா ஊக்கமுடன் படித்து முதல் மதிப்பெண் எடுத்துத் தன் நீள் முடியைத் திருத்திக்கொண்டார் என்பதை நாம் அறியும்போது அண்ணா பெற்றோர்களுக்கு அளித்த மதிப்பும், கல்வியில் கொண்டிருந்த ஊக்கதத்தையும் அறிய முடிகிறது.

இலெனின் சகோதரி அன்னா என்ற பெயர் கொண்டவர். அந்த அம்மையார் இலெனின் பற்றிக் கருத்துக் கூறும்போது இலெனின் சிறுவயதிலேயே மிகவும் கூர்மையுடன் எதையும் கவனிப்பான். எதையும் அவன் ஆய்ந்து சிந்திப்பான். கடமையைச் செய்வதில் அதிகப் பொறுப்பு கொண்டவன் என்று கூறுகிறார்.

இதே கருத்தை அண்ணாவைப் பற்றியும், அவருடைய பெற்றோர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அண்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே அவருடைய ஆற்றலைக் கண்டு கல்லூரிப் பேராசிரியர்கள் இராஜேசுவரன், ஆங்கிலப் பேராசிரியர் எம். வரதராசன், வி.திருவேங்கடசாமி ஆகியோர் இவன் என்றாவது ஒரு நாள் பெரிய தலைவனாக வருவான் என்று எல்லோரிடமும் கூறி வந்திருக்கின்றனர். அண்ணா அப்போதே கல்லூரி இடைநிலைத் (இன்டர்மீடியட்) தேர்வில் தேரியதும் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு வேலையைத் தேடிக்கொள்ள முடிவுசெய்தார். கல்லூரியில் கல்விச் சான்றிதழ் கேட்டு விண்ப்பம் செய்தார். சான்று இதழும் எழுதப்பட்டுவிட்டது. முதல்வர் கையொப்பமிட வந்தபோது, அப்போதைய கல்லூரி முதல்வர் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் அண்ணாவை நேரில் அழைத்துப் பேசினார். அண்ணா குடும்பத்தின் வறுமை நிலையை எடுத்துக்கூறினார். அண்ணாவுக்கு உதவியளிக்க ஊக்கம் தந்து, தொடர்ந்து எம்.ஏ. படிக்க நீதிக் கட்சித் தலைவர்களிடம் கூறி ஆவன செய்தார் என்பதிலிருந்து, அந்தக் காலத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்குக் கல்வி கற்பதில் எத்தகைய சூழ்நிலை இருந்தது என்பதை அறியலாம்.

இலெனின் போன்று அண்ணாவும் கல்வி பயிலும்போது ஏராளமான பரிசுகளைப் பெற்றார்.

இலெனின் கல்வி கற்கும் மாணவராக இருந்தபோதே, மக்களுடன் பழகியவர், தொழிலாளர்கள், உழவர் சுரண்டப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் நேரில் கண்டு உணர்ந்தார். கல்வி அறிவு பெறாத மக்கள் அறியாமையில் மூழ்கி அல்லல்படுவதைக் கண்டு மக்களை வஞ்சிப்பவர் மீது வெறுப்பு அடைந்தார் இலெனின்.

அண்ணா படிக்கும்போது, பொதுமக்களுடன் அதிகமாகப் பழகியவர். காஞ்சிபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டு பிழைக்கலாம் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஏதோ அல்லல்படாமல் அமைதியாக வாழலாம் என்று பலர் நினைப்பார்கள். காலை ஆட்டிக்கொண்டு பிழைக்கலாம் என்பது, தறியில் அமர்ந்து இரவும் பகலும் தொடர்ந்து நெசவு செய்து, கால்களுடன் கண்களும், இரண்டு கைகளும் வேலை செய்தால்தான திங்களுக்கு ஒரு புடவையோ, இரண்டோ நெய்து முடிக்கமுடியும். இந்த நெசவில் குடும்பமே ஈடுபட்டால்தான் மாதம் ஒரு நாள் அமாவாசையன் று மட்டும் சோறும், மற்ற நாள்களில் கஞ்சியோ, கூழோ குடிக்க முடியும். படிக்கும்போதே ஏழை நெசவாளிகளுடன் பழகி அவர்களின் வறுமை நிலையை நேரில் கண்டறிந்தவர் அண்ணா. அதனால்தான் அவர் பிற்காலத்தில் பாடுபடும் பாட்டாளி மக்களின் வேதனையையும் உழவர்களின் துன்பத்தையும் தொழிலாளர்களின் துயரத்தையும் போக்கிட இலெனின் போல் குரல் கொடுக்க முடிந்தது.

நேரில் பார்க்க இருவரும் உயரமானவர்கள் அல்ல. கவர்ச்சியான உடையணிந்தவர் அல்லர். எந்த வசதியும் இல்லாத எளியவர்கள்!முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai