அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -23

தமிழின, மொழிப் போராட்டத் தானைத் தலைவர்
(பன்மொழிப் புலலர் டாக்டர். கா. அப்பாத்துரையார்)

மொழியின் பழமை மனித இனத்தின் பழமையை விடக் குறைந்ததன்று. உண்மையில் மொழியும், மொழியின் பிறப்புக்கும் மலர்ச்சி, தளர்ச்சிகளுக்கும் அடித்தளங்களான குடும்ப, குமுகாய, இன வாழ்வுகளும் உயிரினமலர்ச்சி (நுஎடிடரவடி டிக டஎபே நெபேள) தோன்றியபோதே தோன்றி, அதன் மலர்ச்சியுடனே தளர்ச்சிகளுடனே தாமும் மலர்ச்சி தளர்ச்சிகளடைந்து வருபவை ஆகும். கிளியின் காதலிசைக் குரலிலும் கூடடத்தின் கூக்குரலிலும், பாம்பின் சீரலிலும் இனங்காக்கும் யானை அணிவகுப்பின் பிளிறலிலும் நாம் மனித இன மொழியின் குழந்தைப் பருவத்தைக் காணலாம். எல்லையற்ற இயற்கைப் பரப்பில் இனப்போராட்டங்களும் மொழிப் போராட்டங்களும் மிகப் படுகின்ற ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையேயாகும். முன்னதில் தடமற்ற அல்லது தடங்களுடன் மாண்ட உயிரின வகைகள் எண்ணற்றவை. பின்னதிலோ, மாண்ட மனித இன நாகரிகங்களும், அவற்றின் மாண்ட தலைமுறைகளும், மாண்ட நாகரிக இன மொழிகளும் அவற்றின் மாண்ட தலை முறைகளும், எண்ணற்றவை.

உலக மொழி வரலாறும் இந்திய மொழி உலகில், மாண்ட நாகரிக இனங்கள், மொழிகள், மொழித் தலைமுறைகள் எத்தனையோ, அவற்றில் குறைந்ததன்று இந்தியாவில் மாண்ட நாகரிக இனங்கள், மொழிகள், மொழித் தலைமுறைகள், இலக்கியங்கள்! இந்த மனித உலகில் அதன் நடுவண்மையாகிய இந்தியாவில் ஒவ்வொரு மாண்ட நாகரிக இனத்தின் வரலாற்றுப் பின்னணியிலும், ஒவ்வொரு மாண்ட மொழியின் , மொழித் தலைமுறையின் பின்னணியிலும் ஒவ்வோர் இனப் போராட்டத்தின், மொழிப் போராட்டத்தின் வரலாறு மறைந்தே கிடக்கின்றது. மாண்ட மனித இன, இந்திய மொழி இலக்கியத் தலைமுறைகள் ஆகியவற்றின் சாவா மூவாச் சின்னமாக நம் இன்றைய மனித உலகில், இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வளர்ந்து வருகிற ஒரே மனித இனமொழி, ஒரே இந்திய இன மொழி தமிழ்! அது கண்ட, கண்டு வருகிற போராட்டங்கள் பல. ஆனால் என்றோ, எப்போதோ இம்மொழி சாவா வாழ்வு, பிணியிலா நலவாழ்வு ஆகியவற்றின் மறைதிறவைக் கண்டு பிடித்திருக்க வேண்டும் என்னலாம், ஏனெனில் அது ஆயிரக்கணக்கான போராட்டங்களில் செத்துப் பிழைத்திருக்கிறது; வென்று இன்றும் வாழ்ந்து வளர்ந்தே வருகிறது!

பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டே, தொல்காப்பியத்துக்கும் முற்பட்டே 16,000 நூற்பாக்களால் முத்தமிழுக்கும் ஓர் இலக்கண வரம்பு கண்டு, மொழிகாத்துத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டிய அகத்தியர் என்ற குறுமுனிவர் ஒருவரைப் பற்றித் தமிழ் மரபு கூறுகிறது, அதுபோல நம் நாட்களிலேயே, தமிழ் மொழிகாக்க எழுந்த மூன்று போராட்டங்களுக்கும் உரிய மும்மைத் தலைவராக, மும்முனைப் போராட்டத் தளபதியாக விளங்கியவர் வான்புகழ் அறிஞர் அண்ணா! மெய்யோ, பொய்யோ என ஆராய்ச்சியாளர் ஐயுறுமளவுக்குத் தமிழர் கனவாகிவிட்ட முந்தைய அகத்தியரின் மெய்யான நனவுலகப் புதிய அகத்தியராக அறிஞர் அண்ணா தமிழின வரலாற்றில் வண்ண ஒளி வீசுகிறார். தமிழ்காக்கும் மூன்று போராட்டங்கள் சொற்காப்புப் போராட்டம், இசை காப்புப் போராட்டம், மொழியாட்சிக் காப்புப் போராட்டம் ஆகியவையே.
முதலது இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே பரிதிமால் கலைஞர், தவத்திரு மறைமலையடிகளார். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஆகியோரால் தமிழ் மரபு கண்டு புதுப்பித்து வளர்க்கப்பட்ட போராட்ட இயக்கம் ஆகும். இரண்டாவது அரசு வயவர் அண்ணாமலை செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்டு, இராசாசி, கவிமணி, அரசு வயவர் முத்தையாச் செட்டியார் ஆகியோரால் வளர்க்கப்பட்டு வந்துள்ள இசை காப்புப் போராட்ட இயக்கம் ஆகும். மூன்றாவதோ நாவலர் சோமசுந்தரபாரதியார், ஆசிரியர் மறைமலையடிகளார், தமிழகத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஆகியோரின் தலைமைகளிலும் இராசாசி அவர்களின் துணையுடனும் புதிய தமிழகத்தின் புத்தெழுச்சிக்குரியதாக இந்தி எதிர்ப்புப் போராட்ட இயக்கம் என்ற பெயருடன் தோன்றிய தாய்மொழிகளின் தன்னாட்சியுரிமைக் காப்புப் போராட்ட இயக்கம் ஆகும்.

இந்த மூன்று போராட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே தமிழின உரிமை இயக்கமாகிய மும்மைமொழிப் போராட்டத் தனிநாயகத் தளபதியாக விளங்கிய பெருமை அறிஞர் அண்ணா ஒருவருக்கே உரிய தென்னல் ஆகும். இந்தியாவின் அரசியல் விடுதலை இயக்கப் போராட்டத்தில் காந்தியடிகளுடனும் தலைவர் பெருந்தகை சுபாசு சந்திரபோசுடனும் ஒப்பிடத்தக்க தென்னகத் தலைவர் தந்தை பெரியார். அரசியல் விடுதலைத் தன்னுரிமையுடன் சமய சமுதாயத் தன்னுரிமையாகிய சமதரும நெறியையும் ஒருங்கிணைத்த திராவிட இயக்கத்தைத் தொற்றுவித்தவர் அவர். ஆனால் அப்பேரியக்கத்தை மொழியுரிமை, சிறப்பாகத் தமிழர், தமிழின மரவுரிமை இயக்கத்தையும் இணைத்து அதனை இலகின் ஒப்பற்ற முழு தேசிய இயக்கமாக்கியவர் அறிஞர் அண்ணாவேயாவார்!

அறிஞர் அண்ணாவின் இந்த ஒருங்கிணைப்புப் பேராற்றல் செய்லபடாமலிருந்திருக்குமானால், தந்தை பெரியாரின் இயக்கம் வெறும் பகுத்தறிவியக்கமாக அரசியல் சமய சமுதாயப் பேரியக்கமாக மட்டுமே அமைந்திருக்கும்; இன்று அமைந்துள்ளதுபோல, அது மொழிமரபுரிமையை அடிப்படையாகக் கொண்ட முழுமனித இன உரிமை இயக்கமாக மிளிர்ந்திருக்க முடியாது என்று கூற இடமுண்டு. மலையாள நாடோ, கன்னடநாடோ, தெலுங்கு நாடோ தமிழகத்திலிருந்து பிரிந்துவிடாத பழைய சென்னை மாநிலத்தில் 1939-ல் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பேரறிஞர் அண்ணா அதன் செயல் துறைப் பெரும்படையின் முன்னணித் தளபதியாக மட்டுமன்றி அதன் உள்ளுயிர் ஆற்றல் உருவாகவும் விளங்கினார். அந்நாளைய முதல்வர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியருக்கு அனுப்பப்பட்ட இந்தி எதிர்ப்பாளர் அல்லது தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தாரின் திறந்த மடலை உருவாக்குவதில் தமிழ்ப் பெரியார்களுடன் தமிழகப் பெரியாரை ஒருங்கிணைத்து வைத்து அதற்கு ஒரு முகக்குரல் தந்தவர் அறிஞர் அண்ணா அவர்களேயாவர்.

இதனை உணர்ந்த தந்தை பெரியார் 1946-ல் தொடங்கப் பெற்ற திராவிடர்கழக இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் அறிஞர் அண்ணா அவர்களையே முழுப் பொறுப்பு வாய்ந்த பொது நிலைத் தளபதியாக்கி மகிழ்ந்தார். மடல் உருவாக்கும் பணியில் நானும், இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டதில் தொண்டர் படையில் என் துணைவியாரும் இடம் பெற்று அறிஞர் அண்ணாவின் பேரொளியை அருகுநின்று காணும் அரும்பெறற் பேற்றினை அடைந்திருந்தோம். மும்மைத் தமிழ் காப்புப் போராட்டங்களின் அடிப்படை ஒற்றுமையையும் தமிமொழி ஒன்றுக்கேயன்றி தாய்மொழிகள் எல்லாவற்றுக்குமேயுரிய அதன் அகல் விரிவையும் கண்டவர், கண்டு சுட்டிக்காட்டியவர் அறிஞர் அண்ணா அவர்களே! மூன்று போராட்டங்களும் உண்மையில் தமிழ்மொழிகளின் மீது அரசியல் அல்லது சமய அல்லது சமுதாய அல்லது பொருளியல் மேலாட்சி காரணமாக அடக்கு முறைகளையும் தாக்குதல் முறைகளையும் எதிர்த்த போராட்டங்களேயாகும் என்பதை அவர் ஆய்ந்து தெளிந்து விளக்கினார். செக்கோசிலவேக்ய நாட்டின் தலைவரான டாக்டர் மசாரிக் போன்ற - உலகில் மொழிப் போராட்டப் பெருந்தலைவர்களிடையே அறிஞர் அண்ணா ஒரு தனிச் சிறப்புக்குரிய இடம் பெறத்தக்கவர் ஆவர்.

ஒளி மணி!
(பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்)

தமிழ்த் தேசீயமும் சரி, இந்தியத் தேசீயமும சரி. தமிழக வரவலாற்றில் புதிய இயக்கங்களல்ல, இரண்டின் வேர் மூலங்களும் தமிழர் பண்பாட்டில் ஆழ்ந்தூன்றிப் பரந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முளைவிட்டு அருவித் தழைத்து, நம் காலத்திலேயே அறிஞர் அண்ணா அவர்கள் உருவிலும் அவர் அறிவுக் கலைத்தாரகைகளாக உலவும் கலைஞர் நாவலர் முதலிய அறிவுத் தொண்டர்களின் உருவிலும் முகையவிழ்ந்து அலர்ந்து வரும் ஒரு பெருமித மலர்ச்சியேயாகும், இதனை அறிந்தவர், அவ்வப்போதும் அணுக்கத் தம்பி தங்கைகளுக்கு அறிவித்து வந்தவர்தாம் நம் அறிஞர் அண்ணா!

தமிழ்த் தேசீயம் இந்தியத் தேசீயத்தின் உயிர்; இந்தியத் தேசீயம் தமிழ்த் தேசீயத்தின் உடல், இரண்டுக்கும் உடலோடு பொருந்தும் உடையாயாக அமைந்ததே மனித இனப்பண்பாடு, உலக நாகரிகம், நம் கலையாளர் காஞ்சிக் கதிரவனாகிய அறிஞர் அண்ணா அரசியல் தலைவர்களிடையே ஒரு வெறும் அரசியல் தலைவராக மட்டும் அமைந்துவிடாமல், தேசீய பெருந்தேசீய, உலகத்தேசீயத் தலைவராக ஒருங்கமைந்தவராதலி னாலேயே தம் முன்னாள் முதல்வர்களான காந்தியடிகள், தந்தை பெரியார் ஈ.வெ.ரா ஆகியோர் முன் மாதிரியையோ கட்டளையையோ கூட மீறி இந்திய விடுதலை நாளை ஆசியசோதி ஜவஹர்லாலைப் போலவே துன்பந்தவிர்க்கும் ஒரு முதற்படி இன்பநாளாகக் கொண்டாட முனைந்தார்.

இதே காரணத்திலேயே, தேசீயக் கவிஞர் பாரதியாரைப்போலே, அவரும் தமிழர் விடுதலை, இந்தியர் விடுதலை ஆகிய வொளிகளுடன் நின்றுவிடாமல் அமெரிக்க விடுதலை, பிரஞ்சுப் புரட்சி, இத்தாலி விடுதலை, உருசியப் புரட்சி ஆகியவற்றிலும் முழு ஆர்வ ஈடுபாடு கொண்டார். எந்த நாட்டு விடுதலையும் எம் தமிழ் நாட்டின் விடுதலை ஒளி தூண்டும் ஒளி; எம் தமிழக விடுதலை ஒளியுடன் ஒளிரும் ஒளிக் கோட்டம் என அவர் கொண்டார்.

மாஜினி, ரூசோ, வால்ட்டேர், மார்க்ஸ் ஆகிய உலக விடுதலை அறிஞர் பெயர்களை மறவாதவர், அவர்கள், குரலுடன் தம் குரலிணைத்துத் தமிழகத்தைத் தட்டி எழுப்பியவர் அறிஞர் அண்ணா. மனித உரிமைக்கு குரலெழுப்பித் தம் தாயகத்தில் மட்டுமேயன்றி மனித உலகெங்கணுமே உள்ளத்திலிருந்து உள்ளத்துக்கு உரிமையலைகளை, ஆர்வக்கடலை உணர்வுகளைப் பரப்பிய ரூசோ, டாம்பெய்ன் ஆகியவர்களைப் போல, அறிஞர் அண்ணாவின் உணர்வுகளில் வளர்ந்து ஆர்வக் குரலும் தண்ணளி வாய்ந்த புகழ் ஒளியும் திராவிட இயக்கம் நிரம்பித் ததும்பிக் குலுங்கி தமிழ் நாடெங்கும் தளும்பி இடங்கொள்ளாது பரவி இந்தியா எங்கணும் நுண்துளியார்ந்து திவலைபாயப் பரவி வீசி, கடல்கடந்து உலகெங்கணும் அலையெதிரலையாகப் பாய்ந்துலாவி வந்துள்ளது.

அரசியல் தலைவர்கள் பலரிடம் நாம் ஆற்றலைக் காண்கிறோம், இது பெரும்பாலும் ஆளும் வகுப்புடன் நின்றுவிடுவது ஆகும். காந்தியடிகள் போன்ற ஒரு சில மக்கள் தலைவர்கள்தான் ஆளும் வகுப்பும் நடுத்தர வகுப்பும் கடந்து, ஆளப்படும் மக்கள் திரளினிடமும் அவதியுற்று அழுந்திக் கிடக்கும் உரிமையற்றவர்களிடமும் சென்று ஆர்வ அலை எழுப்பி, அவர்கள் உள்ளம் தொடும் உயர்தனி ஆற்றல் உடையவர்களாக விளங்குகின்றனர். உலகிலேயே விரல்விட்டெண்ணக் கூடிய இத்த மக்கள் தலைவர் ஒரு சிலருள்ளும் தலை நிற்பவர் எனத் தக்கவர் எம் அறிஞர் அண்ணா. அந்த ஒரு சிலருள்ளும் உயர் சிறப்புடையவர் அவர். ஏனெனில் அவர் மக்கள் உளந்தொட்டவர் மட்டுமல்லர்; புத்தெழுச்சியூக்கி, அவர்களை ஒரு புதிய உலகைக்காண, அக்கனவை நனவாக்கிவிடும் துடிப்பை ஊட்ட, அம்முயற்கியில் தாமும் வளர்ந்து, தம் நாட்டை, மொழியை, இனத்தை, மலர்வித்து தம் தேசத்தை உலகத்தை வளர்த்தாக்கிப் படைக்கும் ஆற்றல் பெறும்படி செய்த அருஞ்சிறப்பு உலகத் தலைவர்களில் அறிஞர் அண்ணாவுக்கு அமைந்ததுபோல வேறு எவருக்கும் அமையவில்லை என்று துணிந்து கூறலாம்.

தமிழ் மாமதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் மீதுபட்ட அடி சீராசிகள் அனைத்தின் மீதும் பட்டன என்று பாடின, பண்டைத் தமிழ்ப் புராணங்கள், ஆம்! அதுபோலவே அறிஞர் அண்ணாவின் நாவில் பட்ட தமிழ், தமிழக மக்கள் அனைவர் நாவிலும் புதுத்தமிழாக, உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் புதுத் தமிழ்ப் புகழ்மணமாகத் தெறித்தெழத் தொடங்கிற்று என்று வருங்காலத் தமிழ் வரலாறு கட்டாயம் கூறும், ஏனெனில் தந்தை பெரியாரின் பகுத்தறிவியக்கம் அறிஞர் அண்ணாவின் மாணவ உள்ளத்தைத் தொட்ட அன்றே, அது தமிழ் தேசிய இயக்கம் ஆகிவிட்டது. அவர் எழுந்த அன்றே தமிழகம் எழுந்துவிட்டது. அவர் மணிநா மேடையேறி முழங்கத் தொடங்கிய அன்றே தமிழ் முழங்கத் தொடங்கிவிட்டது.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai