அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -16

அண்ணாவின் பெருமை! எங்கேயுண்டு இவர் போல்
திரு.ஈ.வெ.கி. சம்பத்

அறிஞர் அண்ணா அவர்களின் பொன் விழா கொண்டாடுகிற இந்த நேரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் என் நினைவு செல்கிறது. இருபதாண்டுகளுக்கு முன் அண்ணா அவர்கள் ஈரோட்டுக்கு வந்தார்கள். அப்பொழுது நான் மிகச் சிறுவனாக இருந்தேன். அன்றே அண்ணா அவர்கள் எனக்கு அண்ணானானார்கள். அதன் பிறகுதான், அரசியலும், வரலாறும், ஆழ்ந்த பொருளாதாரமும், அறிந்திருந்த அண்ணன் நமக்குக் கிடைத்திருப்பதை உணர்ந்தேன். என்னுடைய அண்ணன் தமிழகத்தில் புகழ்படைத்த - தமிழகத்தின் நம்பிக்கைக்குரியவர் - சிறந்த ஆற்றலும் பண்பும் உடையவர் என்பதைத் தெரிந்தபின் நான் வளர்ந்தேன்! அண்ணனால் கிடைத்த பயிற்சியால் நானும் அண்ணனுக்குத் துணை நிற்க முடியும் என நினைத்து வளர்ந்தேன்! இப்படிப்பட்ட அண்ணனை நான் எப்படிப் பாராட்டுவது?

அண்ணனுக்கு 50 ஆண்டு நிறைவதை நினைத்து என் அன்பை - இனம் தெரியாத ஒரு இன்பத்தை வெளிப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எங்ஙணம் வாழ்த்துவது?

அண்ணா அவர்களை வாழ்த்திப் பேசுவதென்றால் முடியாது. அண்ணா அவர்களை இங்கே அமரச் செய்து, அவர்களை நாம் அனைவரும் உற்றுப் பார்த்தால் கூடப்போதும். அதுவே நமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதாகும்.

அண்ணா அவர்களைப் பற்றி நாம் பாராட்டுவதைவிட மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்கள் பாராட்டுவதிலே தான் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அண்ணா அவர்களையும் நமது கழகத்தையும் அடிக்கடி இழிவாகத் தாக்கிப் பேசுபவர்களெல்லாம் அண்ணா அவர்களை இன்று புகழ்வதைக் காண்கிறோம். அண்ணா அவர்கள் பக்கத்திலே நாம் இருப்பதால் அமைச்சர் பக்தவத்சலம் போன்றவர்கள் அண்ணா அவர்களின் ஆற்றலைப் புரிந்துகொண்ட அளவு நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை; அதனாலேதான், பக்தவத்சலம் போன்ற மாற்றார் பாசறையிலிருப்போர் பாராட்டும்போது நம் உள்ளம் புளகாங்கிதமடைகிறது.

நாம் இன்று கொண்டாடுகின்ற பொன்விழா தனிப்பட்ட ஒருவருக்குக் கொண்டாடும் விழா அல்ல; ஒரு ஸ்தாபனத்தினுடைய பொன் விழாவாகும், அண்ணா ஒரு தனி மனிதரே அல்ல - அவர் ஓர் ஸ்தாபனம். நமது எதிர்காலத்தைப் பற்றி மனக் கோட்டைக் கட்டிக்கொண்டு நடமாடும் உருவமாக அண்ணா காட்சி அளிக்கிறார்.

பெரியார் அவர்கள் பிறந்த நாளும், அண்ணா அவர்களின் 50-வது ஆண்டு நிறைவு வாரமும் இணைந்திருப்பது மிகப் பொருத்தமாகும். பெரியார் அவர்கள் சமுதாயத் துறையிலே பகுத்தறிவையும், அரசியலிலே விழிப்புணர்ச்சியையும் தூண்டினார். பெரியார் அவர்கள் தூண்டிய உணர்ச்சியிலே பழுது உண்டானபோது அதை நீக்க ஆள் தேடினோம், அப்பொழுது அண்ணா வழி காட்டினார்.

அண்ணா காட்டிய வழி ஒரு மிகப்பெரிய சாதனையாக இன்று வளர்ந்தோங்கி வந்திருக்கிறது.
அண்ணா அவர்களுக்கு, தாம் சாதித்த சாதனைகள் மீதே அதிருப்தி! தாம் சாதிக்க வேண்டிய காரியங்கள் மீது அதிருப்தி! தாம் சாதித்தது மிகச் சிறிது - சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்று அவர் கருதுவதால்தான், தமது சாதனைமீது அதிருப்திப்படுகிறார். இவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்கத் துணிந்த அவருக்குச் சலிப்போ உற்சாகக் குறைவோ ஏற்பட்டதால் அதிருப்திக் கொள்ளவில்லை. தம்பிமார்கள் சலிப்படையாமல் இருக்கவேண்டுமென்பதற்காகவே அவர் நித்தம் தூண்டி வருகிறார். நமக்கு ஒரு தூண்டுகோலாக இருந்துவருகிறார்.

பர்மாவிலே 32 வயதே நிரம்பிய அவுங்சான், விடுதலை வீரனாகப் பணியாற்றி, விடுதலை பெற்ற பர்மாவுக்கு முதலமைச்சரானார். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு - எதிரிகளின் கையாலே சாவுகின்ற வாய்ப்பு - அவருக்குக் கிடைத்தது. அவங்சானின் சாதனைகளைப்போல் நாமும் ஏன் பணியாற்றவில்லை? என்பதுதான் அண்ணா அவர்களின் அதிருப்திக்குக் காரணம். உலகம் எதைப் பாராட்டுகிறதோ அதில் அண்ணா அவர்களுக்கு அதிருப்தி.

தி.மு.கழகம் தோன்றி இந்தப் பத்தாண்டில் பெருகியிருப்பது அண்ணனின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. இங்கே பெரிய சாதனைகளில் ஒன்று. இங்கே நீங்கள் ஏன் இலட்சக் கணக்கில் வீற்றிருக்கிறீர்கள்? எண்ணற்ற தாய்மார்கள் ஏன் வீற்றிருக்கிறார்கள்? இத்தகைய ஒரு உயிருணர்வு இந்தப் பத்தாண்டில் எந்த ஸ்தாபனத்திற்கு ஏற்பட்டது? திராவிட விடுதலை இயக்கத்தின் அடிப்படை இலட்சியத்தை விடாமல், உறுதியோடு காப்பாற்றிக் கொடுத்த பெருந்தகையின் 50-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகிறாம் என்ற மெய்யுணர்வால் இங்கே இப்படிக் கூடியிருக்கிறீர்கள்.

அடிப்படை இலட்சியத்திலே கேரளமும், கர்நாடகமும, ஆந்திரமும் தமிழகமும் சேர்ந்து திராவிடம் என்று முழக்கமிட்டவர்கள் இன்று தமிழ் நாடு மட்டும் போதும், என்று பாதை மாறி, எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அண்ணா அவர்களுக்கு திராவிடத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் நாடு போதும் என்று அவர்கள் சொல்கிறார்கள்; போதாது என்கிறார் அண்ணா.
ஏன் நமது பெரிய திராவிட நாகரிகத்தைச் சின்னாபின்னமாக்க வேண்டும்? திராவிட நாகரிகம் ஒரு தனித் தன்மை வாய்ந்த ஒருமைப் பாட்டுடன் கூடிய காலவெள்ளத்தால் அடித்துப் போகப்படாத ஒன்றாக இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது. எனவேதான், திராவிட நாடு என்று அழுத்தமாகச் சொல்கிறார் அண்ணா.

அரசியலிலே தம் கொள்கைகளை மாற்றிக்கொள்பவர்களில் இரண்டு ரகம் உண்டு. அவசரக்காரர்களாக இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தம் கொள்கையை மாற்றிக்கொள்வது ஒரு ரகம். தம் வாழ்நாளில் பெரும் பகுதியும் தம் ஆற்றல் முழுவதையும் காட்டித் தீர்த்துவிட்டு வெற்றி கிட்டாத காரணத்தால் கொள்கையை மாற்றிக்கொள்பவர் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளமே அவ்வளவுதான்!

நமக்கு ஆற்றலும் இருக்கிறது ஆயுளும் நிறைய இருக்கிறது. நாம் அவசரப்படத் தேவையில்லை. திராவிட நாட்டிலுள்ள 4 மாநிலங்களில் ஒரு மாநிலம் இத்தகைய விடுதலை உணர்ச்சியைப் பெற்றுவிட்டது. மற்ற மூன்று மாநிலங்களும் இந்த உணர்வைப் பெறச் செய்யும் பணியில் நாம் ஈடுபட்டால் திராவிடத் திருநாட்டை நாம் நிச்சம் அடையமுடியும்.
(அறப்போர் - 05.05.1961)

தி.மு.க. கண்கவர் கோலம்! அண்ணாவின் சாதனை!
ஈ.வெ.கி.சம்பத்

ஓராண்டிற்கு முன்பென்றால் அண்ணா அவர்களைப்பற்றி எதுவும் என்னால் எழுதியிருக்கவே முடியாது. அவ்வளவு நெருக்கமாக இருவர் வாழ்வும் பின்னிக் கிடந்தது. கழகத்தின் பொறுப்புகளும், பணியாற்றும் துறைகளும், பணிகளும் மிக மிக, நமது தோழர்களின் சந்திப்பே மாநாடாகத்தான் அமைகிறது. முன்பு சந்திப்புகள் அதிகம் என்பதைக்காட்டிலும், ஒன்றாவே இருந்தோம் என்ற சொல்வதே பொருந்தும். ஒன்றாக இருந்து அன்றாட அலுவல்களில் ஒன்றாகவே ஈடுபட்டிருக்கும் இருவர் ஒருவரைப்பற்றி ஒருவர் புகழ்ந்து எழுதுவதென்றால் அது எளிதல்லவே, இருவரும் தம்மைப் பாராட்டியதாகவே பெருமையோடு மகிழ்ந்து கொண்டிருந்தோம். இன்று பணிகளும், பணிகளின் தன்மையும் எங்கள் நேருக்கத்தைச் சற்று தளர்த்தியிருப்பதால் அவரைக் குறித்து என்னால் எழுத முடிகிறது. அவரது திறமை, பண்பு, தொண்டு ஆகியவற்றை அழகுபட, தமிழ் மக்கள் அனைவரும் அறியத் தக்க வகையில் புகழ்ந்து கவிஞர்களும் திறம்பட எடுத்துரைத்துள்ளனர். அவற்றைச் சுவைத்துச் சுவைத்துச் அத்தகையவரின் உறவில் எத்தனை ஆண்டுகள் நாம் வளரும் வாய்ப்பைப் பெற்றோம் என்பதை எண்ணி இன்பமடைவது தவிர புகழும் போட்டியில் வெற்றிபெறும் வல்லமை எனக்கில்லை.

அவருக்கும் எனக்குமிடையே ஏற்பட்ட உறவு பற்றி நான் கூறினால் அது பிறர் கூறாததாய் இருக்கும். அதனால் அதில் சுவையிருக்கலாம். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஈரோட்டிற்கு வந்தபோது அவர் எனக்கு அண்ணனாகவும், எனது இலட்சிய அறிவுப் பெட்டகமாகவும் ஆனார். முதன் முதல் அவரது அன்பு என்னை ஈர்த்தது. அதன் பின் அவரது அறிவாற்றலைப் பிறர் வியந்து பாராட்டுகின்றனர் என்பது புலப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அவரது அறிவும், ஆற்றலும் தனித் தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்தேன். இருவருக்கிடையே ஏற்பட்ட அன்பும் பாசமும் அத்துடன் கூடவே வளர்ந்தது.

1949-ல் தமிழக அரசியலில் பெரியார் அவர்களால் தமிழர்கள் வாழ்க்கை நலத்திற்கான விடுதலை முயற்சிகள் குலைந்துவிடக் கூடும் என்னும் நிலை ஏற்பட்டபோது இவரால் மட்டுமே அப்பேராபத்தைத் துடைக்க முடியும் என எனக்கு உறுதியாகப்பட்டது. எனக்கு அவரிடமுள்ள அன்பின் ஆதிகக்கச் சக்தியனைத்தையும் பயன்படுத்தி அவரை எனது திட்டத்திற்கு இணங்கவைத்தேன்.. அதன் விளைவாகத் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. அதற்குத் திராவிடம் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. கோப தாபங்களுக்கு எளிதில் இரையாகிவிடும் பருவத்தினரை உடன் வைத்துக்கொண்டு அந்தப் பருவத்தை எளர்ப்பதில் எவ்வளவு இடர்ப்பட்டிருப்பார் என எவ்வளவு விளக்கினாலும் முழுவதும் கூறல் என்பதியலாது. அத்தகைய இடர் மிக்க சோதனையான பணியினைத் திறம்படச் செய்து பத்து ஆண்டுகள் நிம்பப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்கவர் கோலம் கொண்டதாய், எதிர்ப்போர் மருளும் ஆற்றல் மிக்கதாய் ஆக்கித் தந்துள்ளார்.

உள்ள வயதைக் குறைத்துச் சொல்வதிலேயும் பிறர் நம் வயதைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுவதைக் கேட்கும்போதும் பெருமகிழ்ச்சி கொள்வதுதான் உலக வளமை. ஆனால் அண்ணா அவர்களுக்கும், நமது தோழர்கள் பலருக்கும் உண்மை வயதைவிட நான்கைந்து ஆண்டுகள் எவரேனும் கூட்டிச் சொனால் அதை மறுத்துச் சொல்ல மனம் வருவதில்லை. காரணம் தமிழ் நாட்டு அரசியலில் நாம் ஒரு தனி முயற்சிசெய்து அதற்கு மக்கள் ஆதரவு பெருகிவரும் நிலையில் நமது இளம் வயதைச் சில வேளைகளில் நாமே கூட எண்ணிப் பார்க்கும்போது திகைப்பு மேலிடுகிறது. மாற்றுக் கட்சியினர் எப்பொழுதாவது அதனைச் சுட்டிக் காட்டினால் நமக்குச் சுரீரெனத் தைக்கிறது. இன்று அண்ணா அவர்களுக்கு ஐம்பது வயது நிரம்பிற்று என்பதைக் கேட்கும் போது நமக்கு ஏற்படும் மகிழ்சிசிக்கான காரணங்களில் அது மிக முக்கியமானது. அறியாப் பருவத்தினர், சிறுபிள்ளை விளையாட்டு, வயதானால் தெளிவடைவார்கள் என்பன போன்ற ஈட்டிகள் இனி நம் மீது வீசப்படுவது குறையும் என்பதாகும்.

ஆனால் அண்ணா அவர்களுக்கு எப்பொழுதுமே தான் சாதித்திருக்கவேண்டியது அதிகமாகவும்; சாதித்தவை குறைவாகவுமே கருதி அதிருப்தி அடையும் சுபாவம் உண்டு, இந்த அதிருப்திதான் அவரைப் பெருஞ்சாதனைகளைப்புரிய வைத்திருக்கிறது. என்பது என்ணம். பல ஆண்டுகளுக்கு முன் அவர் குறிப்பிட்டதொன்று என் நினைவுக்கு வருகிறது. என்ன சம்பத்து நாம் பெரியகாரியங்களைச் செய்துவிட்டோம்? முப்பத்திரெண்டு வயதில் அவுங்சான் பர்மிய மக்களின் ஒப்பற்ற தலைவனாகி, பர்மாவின் முதலமைச்சனாக இருந்து பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவனுக்குக் கிடைத்தற்கரிய எதிரி கையில் சாவு என்னும் பெருமையும் பெற்றுக்கொண்டு போய்விட்டான். நாமும் இருக்கிறோமே! என்று பெருமூச்சோடு சொல்வார்.

அவரது அறிவாற்றலும், எதிர்கட்சியினரை ஆபாசமாகத் திட்டாமலே திறமையாக எதிர்த்து வெற்றி காண முடியும் அரசியல் போர் முறைப் புதுமையும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிப்படுத்திக் காட்டியது. கொள்கைகளை முந்திக்கொண்டு கழகத்தின் நாகரீகப் பாணி பலரையும் ஆட்கொண்டது. அவரது போர்க்குரல் கேட்டுத் தமிழகம் பல போராட்டங்களில் ஈடுபட்டுத் தன் மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கிறது. அவரது முழு கவனத்தையும், முழு சக்தியையும் பயன்படுத்திக்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் துடிதுடித்து நிற்கிறது. கலையுலகம் அவரது நேரத்தையும் நினைப்பையும் கொள்ளை கொள்ள முயலும்போதெல்லாம், ஒரு சக்களத்திப் போராட்டமே நடைபெறுகிறது! உலகைத் திருத்திய உத்தமர்கள் வரிசையில் எங்கள் அண்ணா இடம்பெற வேண்டுமென்ற ஆவலும், வீரத்தோடு ஒருமனதாய்ப் போராடி மக்களுக்கு விடுதலைத் தேடித் தந்த உலக விடுதலை வீரர்கள் வரிசையில் அவரை அமர்த்தி அழகு பார்க்கும் பெருவாய்ப்பு நம் நாட்டவருக்குக் கிடைக்கவேண்டுமென்ற பெருவிருப்பம் மாறி மாறி ஏற்பட்டு அவரை நமக்குரியவராகவும் நம்மை அவருக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டிருக்கின்றன.

அண்ணனாய், தளபதியாய், தலைவனாய், வாழ்க்கை நெறி காட்டும் வழிகாட்டியாய்த் திகழ்ந்து தேம்பிக் கிடக்கும் திராவிட சமுதாயத்திற்குப் புத்துயிர் ஊட்டும் திருப்பணியில் தன்னை முழுக்க முழுக்க ஈடுபடுத்தி நீண்ட நாள் வாழ்ந்து, நெடுநாளையப் பழி துடைத்துப் புகழ்தேடி நம்மை வாழ்விக்கவேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள எனது பேராவலை அண்ணா அவர்களது ஐம்பதாண்டு நிறைவு விழாவின்போது கூறிக்கொள்கிறேன்.
(தென்னகம் - ஈ.வெ.கி. சம்பத் - 18.09.1959)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai